Quote:
அடுத்தது பனி லிங்கம்
பொதிகை சேனலில், தயாரிப்பாளர் நல்லம்மை ராமநாதன் வழங்கும் `நம்ம ஊரு சுற்றுலா வாங்க' தொடர் நூறு எபிசோடைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றலாத் தலங்கள் பற்றிய சிறப்பு அம்சங்களை இந்த தொடரில் காண்பிப்பதோடு, அவற்றுக்கே உரிய வரலாற்றுப் பின்னணியையும் தெள்ளத் தெளிவாக விவரிப்பதால் இந்த தொடர் நேயர்களின் விருப்பத் தொடராகியிருக்கிறது.
"எனக்கு தெய்வீக திருத்தலங்கள், சுற்றுலாத் தலங்களின் மீது ஈர்ப்பு அதிகம். பல திருத்தலங்களுக்கு போய் வந்திருக்கிறேன்.அதில் கிடைக்கும் மனநிறைவுக்கு வேறு எதுவும் ஈடில்லை. சுற்றுலாத் தலங்களை, தெய்வீக திருத்தலங்களை மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்த்து மகிழ வைக்கலாமே என ஒரு நாள் தோன்றியது. அந்த எண்ணம் செயல்பாடாக வெளிப்படத் தொடங்கியதில் வந்ததே பொதிகை சேனலில், `நம்ம ஊரு சுற்றுலா வாங்க' தொடர்'' என்கிறார், நல்லம்மை ராமநாதன்.
சுற்றுலாத்தொடர் இந்த அளவுக்கு சின்னத்திரை ரசிகர்களை சென்று சேரும் என்று எதிர்பார்த்தீர்களா?
"பொதுவாக தொலைக்காட்சித் தொடர் என்றாலே குடும்பக் கதையாக எடுப்பது வழக்கம். நான் இதில் இருந்து மாறுபட விரும்பினேன். சுற்றுலா மையங்களை அதன் சிறப்பு அம்சங்களுடன் மக்களுக்கு தரலாமே என்று எண்ணினேன். இப்போது இந்த சுற்றுலாத் தொடர் 100-வது வாரம் தாண்டிய போதுதான் தொடர் மீதான மக்கள் ஈர்ப்பு முழுமையாக புரிந்தது.
ஒவ்வொரு வாரமும் ஒரு ஊர் அல்லது ஒரு நகரம் அல்லது நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு நேரில் சென்று, அந்த இடங்களின் முக்கியத்துவம் குறித்தும், எந்தெந்த வழிகளில் எளிதாக அந்த இடங்களுக்கு சென்று வரலாம், பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்றும் தெளிவாக எடுத்துச்சொல்கிறோம். இந்தியாவில் உள்ள முக்கிய இடங்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், செசல்ஸ் தீவு, அந்தமான் தீவுகள், ஸ்ரீலங்கா, துபாய் ஆகிய இடங்கள் குறித்தும் புள்ளி விவரங்களோடு தொடரில் வழங்கியுள்ளோம்.''
இதில் அடுத்த கட்டம்?
"எனக்கு அமர்நாத்தில் உள்ள பனிலிங்கங்களை பக்திபூர்வமாக சின்னத்திரை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் அதையும் சின்னத்திரை ரசிகர்கள் பார்வைக்கு கொண்டு வருவேன்.''
உற்சாகமாகவே சொல்கிறார், நல்லம்மை ராமநாதன்.