இந்த வாரம் ஐந்து படங்கள்
இந்த வாரம் ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. ஐந்தில் மூன்று எதிர்பார்ப்புக்குரியவை. இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு பொருளாதாராரீதியாக சிறப்பாக தொடங்கியது. ஜில்லா, வீரம் இரண்டும் சூப்பர்ஹிட். அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்தன. படத்தின் தரம்... அந்த கழிசடை பற்றி நமக்கு என்ன கவலை.
இந்த மாதத்திலேயே இன்னொரு வெற்றியையும் தமிழ் சினிமா ருசித்திருக்கிறது. விஜய் மில்டனின் கோலிசோடா. இதுவும் லாபம்தான். ஒரே மாதத்தில் 3 ஹிட்கள். நம்மை நாமே கிள்ளி பார்த்துக் கொள்ள வேண்டிய அதிசயம்.
வரும் வியாழக்கிழமை விடிவி கணேஷின் இங்க என்ன சொல்லுது ரிலீஸ். விடிவி, சந்தானம் மேஜிக் லட்டு மாதிரி இன்னொருமுறை வொர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை விஜய் சேதுபதியின் ரம்மி வெளியாகிறது. அவர் பெயருக்கு இருக்கும் மேஜிக் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துவரும். இந்தப் படம்தான் ஐந்து ரிலீஸ்களில் அதிகம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதுவொரு ரொமான்டிக் த்ரில்லர்.
இன்னொன்று விக்ரமனின் நினைத்தது யாரோ. உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று இதே பெயர் சாயலிலேயே பல படங்கள் எடுத்திருக்கிறார் விக்ரமன். போஸ்டரும் அப்படியே பழமை வாசம். போதாதுக்கு நினைவில் நின்றவள் என்ற படமும் இதே வெள்ளி வெளியாகிறது.
வெள்ளிக்கிழமை வெளியாகும் இன்னொரு படம் எதிர்வீச்சு.
ஐந்தில் இரண்டு தேறும் என்பது கோடம்பாக்க கணக்கு.