செந்தில் மேவும் தேவ தேவா - வர்ணம்
	
	
		பாடல்: செந்தில் மேவும் தேவ தேவா
 ராகம்: நீலாம்பரி
 தாளம்: ஆதி
 
செந்தில் மேவும் தேவ தேவா சிவ பாலா
 சிந்தை இரங்கி என்னை ஆளவா வேலவா
 எந்த வேளையும் உனையன்றி வேறோர் எண்ணமுண்டோ?
 எந்தன் உள்ளம் நீ அறியாயோ? ஏன் இந்த மாயம்?
 இது தகுமோ? தருமம் தானோ? வராதிருந்திட வருமம் ஏனோ?
 கனிந்து வந்திடாவிடில் நான் என் செய்குவேன்? ஏதும் புகலிடம் அறியேன்
 ஒரு கணமேனும் மறந்தறியா இவ்விளம் பேதை மகிழ 
முழுமதி முகமதில் குறுநகையொடு கருணை பொழிய வா
 அருளே தருக வா, திருமால் மருகா
 வா வா ஆடும் மயில் மீது வா அழகா முருகா நீ
 உன் வடிவழகைக் காண என் முன் நீ
 என் முறை கேட்டிலையோ? வர மனமில்லையோ?
 செவி புகவில்லையோ? இனியாகிலும்
 உருகி உருகி உளம் ஊண் உறக்கமும் இன்றி
 பெருகி பெருகி விழி உடலது சோர்ந்திட
 ஆவலோடு உனை நாடி எங்கும் தேடினேன்
 மனம் வாடினேன் துயர் ஓடிடவே வா
 அன்றே ஒரு நாளும் உனை கைவிடேன் என அன்புடனே ஆதரவாய் 
சொன்னதும் மகிழ்வுடன் கலந்ததும் விந்தை சிறிதும் நினைவில்லையா?
 பரம தயையும், பரிவும், உறவும் மறையுமோ? இன்று இனி தாளேன்
 தணிகை வளரும் அருமணியே! எனது கண்மணியே! என்னுயிரின் துணை!