Feb - 17th
_________
புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்ற கருத்து நெடுங்காலமாய் நிலவிவருகிறது. அதாவது, நம் ஹிந்து மதத்தில் பல புத்திமதிகளை வாழைப்பழ ஊசி போல், இலைமறை காய்மறைவாய், பூடகமாய், சொல்லப்பட்ட கருத்துக்கள் நிறைய. அவற்றைச் சொல்வதற்கு புராணக் கதைகள் நிறையவே உதவியிருக்கின்றன.
அஷோக்-கிடம் நீலகண்டன் "புராணக்கதைகள் எல்லாம் புருடா, கட்டுக்கதைகள்" என்று சொல்ல, அவனும் "நம் மூளைக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் எல்லாமே கட்டுகதை என்று சொல்வது நம் முட்டாள்தனத்தை குறிக்கும்" என்று காரசாரமாய் விவாதிக்கிறான்.
நீலகண்டனை அவமதிப்பது போல் அவன் பேச்சு இருப்பதால், நாதன் மிகவும் கூனிக்குறுகி மனம் வருந்தி, அஷோக்கை கண்டிக்கிறார். "உங்கள் பையனின் மதிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்றால் நானும் பாகவதர் போல் இருந்தால் தான் முடியும். அப்படி என்னதான் பாகவதர் வசியம் செய்தாரோ" என்று அஷோக் அவமதித்ததை இலகுவாக எடுத்துக்கொண்டு விடுகிறார் நீலகண்டன்.
சோ தன் கருத்தை இவ்விடத்தில் வைக்கிறார். புராணங்கள் எல்லாம் நம் மனம் புத்திக்கு அப்பாற்பட்டவையாய் இருப்பதாலேயே அது பொய் என ஆகிவிடுவதில்லை என்று ஆணித்திரமாய் வாதிட்டார். சில காலம் முன்பு பசி, தாகம் இன்றி ஒரு பெண் உயிர்வாழ்வதாய் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, அதிசயங்களாய் பேசப்பட்ட போது அதை நம்பும் மக்கள், விஷ்வாமித்ரர் இராமருக்கு "பலா-அதிபலா" என இரண்டு மந்திரங்கள் உபதேசித்ததன் பேரில், அவர்கள் பசி தாககமற்று தம் வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது என்பதை ஏன் நம்ப மறுக்கிறார்கள்" என்கிறார்.
எதுவொன்றும் விஞ்ஞானத்தின் முத்திரையுடன், அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் ஒப்புக்கொள்ளும் நம் அறிவு, மனம் மனத்திற்கு அப்பாற்பட்ட ஆன்மாவைச் சார்ந்த விஷயத்திற்கு பகுத்தறிவு என்ற பெயரில் ஆராய முற்படுகிறது. அது விஞ்ஞான ரீதியில் இன்னும் நிரூபணம் ஆகவில்லை என்றால் அது பொய் என்று அலட்சியமாய் தள்ளிவிடுகிறது.
தயாரிப்பாளர் உடனே "எனக்கு அந்த மந்திரத்தை சொல்லிக்கொடுங்களேன்! நானும் பசி தாகமற்று இருந்துவிட்டுப்போகிறேன்" என்று புத்திசாலித்தனமாய் கேள்வி வினவுகிறார். அதற்குச் சோ "அந்த மந்திரங்களை கேட்பவனும் சொன்னவனும் எப்பேர்பட்டவர்கள். சொன்னவனோ பிரம்மரிஷி "விஷ்வாமித்ரர்" கேட்டவனோ "இராமன்" புருஷர்களில் உத்தமன். அப்படிப்பட்டவன் சொல்லி இப்படிப்பட்டவன் கேட்டதை, சாமன்யமான நானும் நீங்களும் சொல்லிக் கேட்டுக்கொண்டால் எப்படி அய்யா பலிக்கும்" என்று பதிலுரைத்தார். இதையே தன் கதாகாலேட்சியபத்தின் போது வினவிய ஒருவனிடம் பதிலாக உரைத்தாராம் க்ருபானந்தவாரியார்.
நாசா ஷட்டில் இந்திய இலங்கைக்கு நடுவே உள்ள இராமர் பாலத்தை படமெடுத்துக்காட்டியிருக்கிறது. அதை நம்மால் மறுக்க முடியுமா? இராமரும் க்ருஷ்ணரும் வாழ்ந்ததற்கு archeological evidences நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் எப்படி மறுக்க முடியும். கதையாய் கட்டுக்கதையாய் எழுதிய பின், அதற்கேற்றாற் போல் பாலத்தை கட்டியிருக்கவா முடியும். இதெல்லாம் இருந்ததால் தானே கதை (சரித்திரம்) உருவானது. மேலும் இதிஹாசங்களைப் பற்றி பேசும் போது, நாயகர்களாம் இராமனையும், க்ருஷ்ணனையும் ஹீரோ வர்ஷிப் மட்டும் செய்யவில்லை.
வால்மீகியோ, வியாசரோ உண்மைகளை புட்டு வைக்கின்றனர். இராவணனைப் புகழ வேண்டிய இடத்தில் அவனை உயர்த்திப் பேசியிருக்கின்றனர். எப்பேர்பட்ட சிவபக்தன் இராவணன் என்பதற்கு பல இடங்களில் அவனை புகழ்ந்திருக்கின்றனர். அவனின் தேஜஸைப் பற்றி சிலாகித்திருக்கின்றனர்.
அதே போல் க்ரிஷ்ணனிடம் துரியோதனன் மஹாபாரதப்போர் முடிந்ததும் "சீ இதெல்லாம் ஒரு வெற்றியா?! யாரையாவது முறையாய் வென்றாயா? எப்பேர்பட்ட பித்தலாக்காரன் நீ. பித்தலாட்டம் செய்தல்லவா பீஷ்மர் முதல் துரோணர் வரை வீழ்த்தியிருக்கிறாய். இதோ இப்பொழுது என்னையும், தொடையில் அடித்து பீமன் வீழ்த்த அதை அங்கீகாரம் செய்தது நீ தானே. வெட்கமாக இல்லையா " என்று காரி உமிழ்வதும், உடனே க்ருஷ்ணன் வெட்கி தலைக்குனிவதும், மேலிருந்து தேவர்கள் பூமாரி துரியோதனன் மேல் பொழிந்ததாய் இதிஹாசம் கூறுகிறது.
ஆகையால், இதிஹாசங்கள், தெய்வம் என்பதால் உயர்த்தியும், மற்றோரைத் தாழ்த்தியும் பேசப்பட்டதல்ல. They stated mere facts irrespective of the characters involved, இதை எப்படி அண்டப்புளுகு, ஆதாரமில்லை என்று தள்ளி வைக்க முடியும், என்று பெரிய விளக்கமே கொடுத்துவிட்டார் சோ.
__
இதற்கிடையே அஷோக்கிடம் பாரதி என்ற கவிஞன் மட்டும் எப்படி உயர்ந்து போனான் என்று நீலகண்டன் மகள் (பெயர் தெரியவில்லை) கேட்க, பாரதியின் பெருமையை, அவன் கவிஞன் என்பதைத் தாண்டிய ஞானியாய் மிளிர்வதை, அவன் கவிதைகளின் தாக்கங்கள் எல்லா தரப்பிற்கும் முழுமையாய் சென்றடைந்ததை அப்படி மின்னிய அவன் பல பரிமாணம் பெற்ற ஞானி என்பதே சரி, என்று தன் எண்ணத்தை விளக்குகிறான் அஷோக். அதைக்கெட்டு திகைத்து, அவனின் சொல்லாளுமையும், திறமையையும் கண்டு வியந்து போகிறாள் அவள்.
எந்நேரமும் பாகவதருடன் சந்தேகம் நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறானே இதை வளரவிடுவது சரியா என்று அங்கலாய்க்கிறா என்று அஷோக்கின் தாய்.
சென்ற இரு தினங்கள் முன்பு சாஸ்திரிகள் மகனும் ஜட்ஜின் மகளுக்கும் நட்பு கலந்த காதல் மலர்வது போல் இருக்கிறது என்று எழுதியிருந்தேனல்லவா. அதை திருத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கும் காதல் மலர்ந்து குலுங்குகிறது. சாஸ்த்ரிகள் மகனுக்கு அந்த பெண் ஏதோ கடிதம் எழுத, அதைப் படித்து நன்கு அசடு வழிந்தான். டன் டன்னாய் அவனிடம் வழிந்த அசட்டை பார்த்து நமக்கும் புன்னகை தொற்றிக்கொள்கிறது.
(வளரும்)
__
நம் மனம் கேட்கும் கேள்விகள் : புரணங்கள் கட்டுக்கதைகள் என்று கூறுவதற்கு இதிஹாசங்களை மட்டுமே விளக்குகிறாரே சோ. புராணக்கதைகள் நடந்ததற்கு சான்று மிகக்குறைவு. அவை மிக மிக பழமை வாய்ந்த கதைகள். இதிஹாசங்களை ஒப்புக்கொள்ளும் பலரும் கூட புராணங்களும் அதனைச் சார்ந்த கிளைக்கதைகளும் நம்ப மறுக்கிறார்கள். (இங்கே புராணம் என்பது பிரம்ம புராணம், விஷ்ணுபுரணம் உட்பட்ட வியாசரால் தொகுக்கப்பட்ட 18 புராணங்கள். இவற்றிற்கு ஆதாரங்கள் எனக்குத் தெரிந்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை. )