-
டியர் ராகவேந்தர்,
நடிகர்திலகம் இணையதள முகப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள, 'நடிப்புப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை' (Emblom) மிக மிக அருமை. அற்புத சிந்தனை மற்றும் வடிவமைப்பு.
டியர் முரளி & ராகவேந்தர்,
வடசென்னை 'பாரத்' திரையரங்கத்தில் புதிய பறவை அலப்பறை பற்றிய ரிப்போர்ட்டுக்கு நன்றி. அதெப்படி, இவ்வளவு கோலாகலங்களைப்பார்த்தபின்னும், 'எங்கே நிம்மதி'யைப்பார்க்காமல் அந்த இடத்தை விட்டகல உங்களுக்கு மனம் வந்தது?. ஆச்சரியம்தான். மறுவெளியீடுகளின் பரிசீலனையில் 'சவாலே சமாளி'யும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
-
சகோதரி சாரதா அவர்களுக்கு,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. இந்த எண்ணம் தற்செயலாகத் தோன்றியது. நடிகர் திலகத்தை நடிப்புப் பல்க்லைக்கழகம் என்று நாம் விளம்புகிறோம். அதனை உருவகப் படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆவலின் விளைவே இந்த வடிவம். தங்களுடைய உளமாரந்த பாராட்டுக்களுக்கு மீண்டும் என் நன்றி.
நிச்சயம் எங்கே நிம்மதியைப் பார்க்காமல் போக எங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே வராது. சொல்லப் போனால் நாங்கள் ஆரவாரங்களைப் பார்த்து விட்டு வெளியேறும் எண்ணத்துடன் தான் அரங்கிற்கே வந்தோம். அங்கே போனால் எங்களால் அப்படியே சென்று விட மனம் வரவில்லை. அதனால் அரங்கினுள் சற்று நேரம் இருந்து விட்டுப் போகலாம், உள்ளே அளப்பரைகளைப் பார்க்கலாம் என்ற ஆவலுடன் உள்ளே சென்று அமர்ந்தோம். இருந்தாலும் தவிர்க்க இயலாத மற்ற காரணங்களால் நாங்கள் வெளியேற வேண்டி வந்தது.
இதிலே ஒரு சுவையான சம்பவத்தை சொல்ல வேண்டும். அரங்கினுள் ஒரு சிறுவன் தன் தந்தையுடன் வந்திருந்தான். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை சட்டை செய்யாமல் அந்த சிறுவன் வந்திருந்ததே வியப்பிற்குரியது. தந்தையும் மகனும் பொன்னேரியிலிருந்து வந்திருந்தார்கள். அந்த சிறுவனிடம் அவனது தாயார் அலைபேசியில் வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். அதற்கு அந்த சிறுவன் சொன்ன பதில் - இருங்க மம்மி, எங்கே நிம்மதி பாடலைப் பார்த்து விட்டு உடனே கிளம்பி விடுகிறோம்.
அந்த சிறுவனுக்கே அந்தப் பாடலின் மீது அவ்வளவு ஆர்வம் என்றால் அரங்கிலுள்ள மற்றவர்களைக் கேட்கவேண்டுமா என்ன. அதிலும் மற்றொரு ரசிகர் சொல்கிறார், இவ்வளவு நேரம் நீங்கள் பார்த்தது ஒன்றுமில்லை, எங்கே நிம்மதி பாடலைப் பாருங்கள் என்று நம் ஆவலை மேலும் கிண்டி விட்டுப் போய் விட்டார். அவர் சொன்னதற்கப்புறம் எங்கள் உள்ளம் அந்த இடத்தைவிட்டு நகருமா என்ன. வெளியே போனதென்னவோ எங்கள் தேகம் மட்டும் தான்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
Pardon me for the belated wishes.
Pammalar sir, congratulations for signing off NT-Part 6 in style :
Kelvi Pirandhadhu - 100th post
NT's 100th film
NT-Part 6 - 100th page
A rare feat.
All the best to you Saradha mam. As always, looking forward to many interesting informations about NT, from you.
-
நடிகர் திலகத்தின் நடிப்பு சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தாத பிரிவே கிடையாது என்பதற்கு மற்றொரு சான்று. சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் தம்முடைய பிரிவுபசார விழாவின் போது ஆற்றிய உரையில் வியட்நாம் வீடு படத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அப்படத்தின் கதாநாயகன் ஓய்வு பெறும் போது ஏன் சோகமாக இருக்கிறார் என்று எண்ணியதாகவும் ஆனால் தாம் ஓய்வு பெறும் போது அதனுடைய தாக்கத்தை உணர்ந்ததாகவும் தம்முடைய உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
http://www.nadigarthilagam.com/psrid.html
அன்புடன்
ராகவேந்திரன்
-
'பாரத்'தில் பூகம்பம்
[புதிய பறவை : 8.8.2010 : ஞாயிறு மாலை]
"எங்க ராஜா சிவாஜி!
எங்க ஊர் ராஜா சிவாஜி!
எங்கள் தங்க ராஜா சிவாஜி!
எங்கள் தலைவர் சிவாஜி!
எங்கள் கடவுள் சிவாஜி!
எங்கள் இறைவன் சிவாஜி!
எங்கள் தெய்வம் சிவாஜி!
எங்கள் உயிர் சிவாஜி!
...................................
..................................."
சிவாஜி கணேச பூஜைக்கான அஷ்டோத்திரம் போல் இருக்கிறதல்லவா! ஆம், அப்படித் தான் இருந்தது, இந்த கோஷங்களைக் கேட்ட அனைவருக்கும், நேற்று மாலை பாரத்தில். அடியேன் ஐந்தே முக்கால் மணிக்கு அரங்கத்தை அடையும் போது, அரங்க நுழைவாயிலில் ஆரவாரங்களின் ஆரம்பமாக, அடியார்கள் இதயதெய்வத்தை வணங்கி தீபாவளி கொண்டாடினர். வாலாக்கள் என்ன, வாணவேடிக்கைகள் என்ன, அந்த வண்ணாரப்பேட்டை ஏரியாவே ஸ்தம்பித்து விட்டது. மேம்பாலத்தை ஒட்டிய பிரதான சாலையான தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையை ஒட்டிய தியேட்டர் பாரத். இந்த கோலாகலக் கொண்டாட்டங்களினால், அந்நெடுஞ்சாலையில், போக்குவரத்து இரு புறமும் சில நிமிடங்கள் ஸ்தம்பித்தது. பேருந்துகளில் செல்வோரும் ஏனைய வாகனங்களில் பயணிப்போரும் இந்த அலப்பறையை மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர். பாதசாரிகளும் நின்று நிதானமாக இதைப் பார்த்து விட்டு செல்லத் தவறவில்லை. கலையுலக கணேசருக்கு சரமாரியாக சிதறு தேங்காய்கள் காணிக்கையாக்கப்பட்டன. பேண்ட் வாத்தியம் முழங்க, பக்தர்கள் டான்ஸ் களை கட்டியது. பின்னர் "எங்கே நிம்மதி" பாடல் ஆடியோ ஸ்பீக்கர் செட்டில் ஒலிக்கப்பட, அடியார்கள் ஒவ்வொருவரும் அண்ணலைப் போலவே அப்பாடலுக்கு அங்க அசைவுகளைக் கொடுத்து அசத்தினர். முடிவில், மூன்றாம் தமிழின் மஹா பெரியவருக்கு மஹா தீபாராதனை திவ்யமாகக் காட்டப்பட்டது. பக்தர்கள் பக்திப் பரவசத்தில் மூழ்கினர். வெள்ளித்திரை தரிசனத்திற்கு, அலப்பறையை ஆரம்பிக்க, தியேட்டருக்குள் பிரவேசித்தனர். 'சாந்தி'யை விட இங்கே சற்று கூட்டம் குறைவு என்றாலும் ஆரவார அலப்பறைகள் 'சாந்தி'யை மிஞ்சியது. ஆம், நேற்று மாலை 'பாரத்'தில் "புதிய பறவை" நிஜமாகவே அலப்பறை பூகம்பம்!
[இரு ரசிக திலகங்கள் - ராகவேந்திரன் சாரும், முரளி சாரும் - இரு புறமும் அமர்ந்திருக்க, அவர்களுடன் அளவளாவிக் கொண்டே படம் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்]
பக்தியுடன்,
பம்மலார்.
-
முரளி அண்ணா, ராகவேந்திரா அண்ணா , பம்மலர் அண்ணா, பாரத் தியேட்டர் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
புதிய பறவை ரசிகர்களிடையே பெற்றிருக்கும் வரவேற்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.அந்த பொன்னான தருணத்தில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை என நினைக்கும் பொது மிகவும் வருத்தமாக உள்ளது.
-
Thanks Shiv for your comments.
Yes, regarding NT's political innings there has only been back stabbing and nothing else. NT was used and exploited to the hilt by the politicians. Could not proceed with that political episoded due to the circumstances that prevailed here.
Regarding the incident what you have mentioned, it is absolutely true. Indira Gandhi was aware of the work Sivaji undertook for Congress and what Sivaji is capable of and gave him the due respect but Rajiv was not aware of anything regarding NT. The problem was compounded by the bitterness Rajiv developed over the Rajya Sabha seat that was given to NT by Indira much against the wishes of Rajiv who wanted his classmate and close friend Amithabh to be nominated. In fact this mistrust grew and culminated in NT quitting Congress in 1988.
சாரதா,
எங்கே நிம்மதி பார்க்காமல் போவது எங்களுக்கு மட்டும் பிடித்த விஷயமா என்ன? எங்கள் மூவருக்குமே சில தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்ததால் அப்படி செய்ய வேண்டிய சூழ்நிலை. சவாலே சமாளி படத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அரங்குகளில் மட்டுமே வெளியிட இயலும் என்ற நிதர்சனத்தை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நன்றி தம்பி கோபால். நீங்கள் அடுத்த முறை இந்தியா/சென்னை வரும் போது சந்திக்கலாம். அப்போது நடிகர் திலகத்தின் படங்கள் வெளியிடப்பட்டால் பார்க்கவும் செய்யலாம்.
அன்புடன்
-
சகோதரி சாரதா,
தங்களது பாராட்டுக்கு நன்றி! தங்களின் கூற்று உண்மை. கதாநாயகனுக்கு கைத்தட்டல் பாராட்டு என்றால், வில்லனுக்கு, வில்லன் போல கதையின் போக்கில் சித்தரிக்கப்படுபவர்களுக்கு வசவு தான் பாராட்டு. நடிகவேளுக்கும் இந்த ரங்கன் ரோல் அவரது கேரியரிலேயே அவர் ஏற்று நடித்த ரொம்ப வித்தியாசமானதொரு குணச்சித்ர வேடம். அவரை ஸ்டீரியோடைப் நடிகர் என நையாண்டி செய்வோர் "புதிய பறவை"யையும், "இருவர் உள்ள"த்தையும் அவசியம் பார்க்க வேண்டும். "புத்திசிகாமணி பெற்ற பிள்ளை" பாடல் என் கற்பனைத்திரையில் ஓடுகிறது!
அன்புடன்,
பம்மலார்.
-
சாரதா,
பாட்டும் பரதமும் படத்தை அழகாக எழுதியிருகிறீர்கள். அது உங்களுக்கு கை வந்த கலை. முதல் நாட்டியத்தை பார்க்க வரும் நடிகர் திலகம் அருகில் அமர்ந்திருக்கும் விஜயகுமாரிடம் சொல்லும் வசனம் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று. அண்மையில் கூட அந்த வசனத்தை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
பாடல்கள் தேனாறு என்றால் மிகையாகாது. எங்கள் வீட்டில் இந்த படத்தின் எல்.பி. ரெகார்ட் வாங்கி போட்டுக் கேட்டுக் கொண்டே இருந்த நினைவுகள் எல்லாம் இன்றும் பசுமையாக இருக்கின்றன. மாந்தோரண வீதியில் பாடல் கவியரசு கொஞ்சம் இலக்கியமாகவே எழுதியிருப்பார். அதாவது அவரது எளிய நடையை விட்டு விட்டு,உறவு நிலையை கவிஞர் விளக்கும் இரண்டாவது சரணம் இலக்கியம் பேசும்.
ஆதித்யன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்த பூந்தென்றல் மோகனம் பாட
வசந்தத்தில் பாற்குடம் ஊர்வலம் போக
வந்து விட்டேன் கண்ணா மணமகளாக
[இந்த பாடல் இப்போது தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புகிறார்கள்]
தெய்வத்தின் தேரெடுத்து தேவியை தேடு பாடல் டி.எம்.எஸ் அற்புதம் காட்டியிருப்பார். அதிலும் அவர் ஹை பிட்சில் போகும்
ஆவிக்குள் ஆவி ஆனந்த ஏடு
அவள் இல்லையென்றால் நான் வெறும் கூடு
பாவைக்கு போட்டு வைத்தேன் நான் ஒரு கோடு
பாடி பறந்ததம்மா இளங்குயில் பேடு
அப்படியே சிலிர்க்க வைக்கும். கவியரசுவின் தமிழ் விளையாட்டையும் ["மாமழை மேகமொன்று கண்களில் இருப்பு"] இந்த பாடலில் தரிசிக்கலாம்.
இனி அரசியல் உள்ளே புகுந்த கதை. நீங்கள் சொன்ன நாட்டியமும் நாதஸ்வரமும் எனக்கு புதிய செய்தி. ஆக, தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களே படத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கின்றனர்.
பெருந்தலைவர் மறைந்து இரண்டு மாதங்களே ஆன சூழ்நிலையில் படம் வெளி வந்தது என்றாலும் கூட அந்நேரத்தில் நடிகர் திலகம் தன் அரசியல் முடிவை அறிவிக்கவில்லை. நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேரப் போகிறார் என்றும் இல்லையென்றும் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம். [அதற்குள் சென்னையில் போஸ்டர் அடித்த செய்திகள் ஆச்சரியமளிக்கின்றன].
பெரும்பான்மையான ரசிகர்களுக்கு நடிகர் திலகம் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே அவா. இந்த நேரத்தில் அன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பா.ரா. மற்றும் குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றார் ஸ்தாபன காங்கிரஸ் தன் நிலையில் தொடர வேண்டும் என்று நினைத்த போது, நெடுமாறன், தஞ்சை ராமமூர்த்தி, குடந்தை ராமலிங்கம் போன்றவர்கள் இந்திரா காங்கிரஸில் சேர வேண்டும் என்று பிரசாரம் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த மகாதேவன் பிள்ளையை தலைவர் போலக் கொண்டு வந்தனர் [இணைப்பு நடந்த பிறகு இவர் கழட்டி விடப்பட்டது வேறு விஷயம்].
இந்நிலையில் வேறு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நெடுமாறன் அந்த காலக்கட்டத்தில் தினசரி என்று ஒரு நாளிதழ் நடத்திக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை நெடுமாறனுக்கு நடிகர் திலகத்தின் மீதும் அவரது ரசிகர் மன்றத்தின் மீதும் கோவம். அவர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அது கூடாது என்றும் கட்டுரைகள் எழுதினார். இவருக்கு ஒத்து ஊதினார் தஞ்சை ராமமூர்த்தி. இது நடப்பது 1975-ம் ஆண்டு ஜனவரியில். அந்நேரம் நடிகர் திலகம் மொரிஷியஸ் தீவுகளுக்கு சென்றிருந்தார். ரசிகர்கள் கொந்தளித்து பதில் அறிக்கை கொடுக்க காங்கிரசிலும் ஒரு 1972 புரட்சி ஏற்படுமோ என்று யூகங்கள்கிடையில் நடிகர் திலகம் திரும்பி வந்தவுடன் பெருந்தலைவரை சந்திக்க சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி விழுந்தது. [இன்னும் சொல்லப் போனால் 1972 -ம் ஆண்டு அக்டோபரில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கூட நடிகர் திலகமும் ரசிகர்களும் ஓரம் கட்டப்பட்டது நெடுமாறனால்தான் என்ற குற்றசாட்டு கூட உண்டு].
இப்போது மீண்டும் 1975 நவம்பர், டிசம்பருக்கு வருவோம். நடிகர் திலகத்தை தாக்கி எழுதிய நெடுமாறன் தன் செய்தி தினசரியில் அவரை உயர்த்தி எழுத ஆரம்பித்தனர். பல இடங்களிலும் நடிகர் திலகத்தின் மன்றங்கள் இந்திரா காங்கிரஸில் சேருவதாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவும் இவர்களே செய்திகள் வெளியிட ஆரம்பித்தார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் கேள்வி பதில் பகுதியில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை வெளியிட்டார்கள். எப்படி என்றால்
கேள்வி: நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேர விரும்புகிறாரா?
பதில்: சேர விரும்புவது மட்டுமல்ல, அதுதான் நாட்டிற்கு நன்மை பயக்கும் என உளமார நம்புகிறார்.
எந்த நெடுமாறன் நடிகர் திலகத்தை வசை பாடினாரோ அந்த நெடுமாறன் பேச்சை கேட்டு நடிகர் திலகம் நடக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. நடிகர் திலகமும் வாயே திறக்கவில்லை. பேசிய ஒரு கூட்டத்தில் [அன்று அவசர நிலை அமலில் இருந்ததால் பொதுக் கூட்டங்கள் கிடையாது. ஏதோ கல்யாணம் அல்லது ஊழியர் கூட்டம் என நினைவு] ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க போவது போல பேசினார்.
இந்த நேரத்தில் சபரி மலை செல்வதற்காக மாலை போட்டிருந்த அவர் கொல்லம் எக்ஸ்ப்ரஸில் மதுரை வழியாக வந்த போது வெள்ளமென ரசிகர் கூட்டம் அவரை ரயில்வே நிலையத்தில் சந்தித்து தங்கள் உள்ளக்குமுறலை சொன்ன போது உங்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று உறுதி கூறினார். கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடமும் இதையே சொன்னார். அந்த நேரத்தில் ரசிகர்களில் ஒரு பிரிவினர் நடிகர் திலகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடப்பதாக ரத்தக் கையெழுத்து இட்டு மனுக் கொடுத்தனர்.
இவையெல்லாம் பாட்டும் பரதமும் வருவதற்கு ஒரு பத்து நாட்கள் முன்பு நடந்தது. ஆனால் சபரி மலை சென்று விட்டு வந்த பிறகு அவர் எதுவுமே சொல்லவில்லை என்பதுடன் செய்தி நாளிதழில் வெளியான செய்திகளுக்கு மறுப்பும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த கோவத்தை கொடுத்தது. அதுவே படம் வெளியான போது அதற்கு வினையாக மாறியது. படம் வெளியான 15 நாட்களில் படப்பிடிப்பில் அவருக்கு காலில் அடிப்பட்டுவிட்டது. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் [டிசம்பர் கடைசி] டெல்லியிலிருந்து இந்திராவின் சிறப்பு தூதுவராக வந்த மரகதம் சந்திரசேகர் அவர்கள் அன்னை இல்லத்திற்கு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விஜயம் செய்து நடிகர் திலகத்தையும், வி.சி.சண்முகம் அவர்களையும் மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்தார். இவர் வந்ததும் பேசியதும் வெளியில் வராமல் பாதுகாக்கப்பட்டன.[எமர்ஜென்சி வேறு]. தன்னோடு நடிகர் திலகத்தையும் டெல்லி அழைத்து சென்ற மரகதம்மாள் ஜனவரி 1 அன்று இந்திராவிடம் அழைத்து செல்கிறார். அந்த சந்திப்பும் புகைப் படமும் வெளி வரும் போதுதான் அனைவருக்கும் நிலவரம் புரிகிறது. ஏற்கனவே நொண்டிக் கொண்டிருந்த பாட்டும் பரதமும் படம் ரசிகர்களால் அடியோடு கைவிடப்படுகிறது.
ஆனால் மதுரையில் தியேட்டர் முன்பு மறியல் எதுவும் நடைபெறவில்லை. சினிப்ரியா, மினிப்ரியா இரண்டு அரங்குகளிலும் அதற்கு முன்பு வெளியான மன்னவன் வந்தானடி படம் போலவே வெளியிடப்பட்டது. அக்டோபர் 31 அன்று வெளியான பல்லாண்டு வாழ்க படத்தை மாற்றி விட்டுதான் பாட்டும் பரதமும் வெளியிடப்பட்டது.[ப.வா. அலங்காரில் ஓடிக் கொண்டிருந்தது].
ஆனால் பெருந்தலைவரின் மீதும் ஸ்தாபன காங்கிரஸ் மீதும் பெறும் பற்றுக் கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு படத்தை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுக்க படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு ஒன்பது வாரப் படமாக மாறிப் போனது.
அன்புடன்
-
சகோதரி சாரதா,
"பாட்டும் பரதமும்" படத்துக்கு போட்டியாக திருச்சி-தஞ்சை ஏனைய சுற்றுவட்டார ஏரியாக்களில் "நாட்டியமும் நாதஸ்வரமுமா?". அடியேன் இதுவரை கேட்டிராத தகவல். அறிந்திராத அரிய தகவலை அறியாதோர் அறியும் வண்ணம் அள்ளி அளித்தமைக்கு அற்புத நன்றிகள்!
[அப்படியென்றால் அதே சமயத்தில் மறுவெளியீடாக வெளிவந்த "தில்லானா மோகனாம்பாள்" எப்படிப் போனது? அந்தப் படம் பெற்ற வரவேற்பைப் பற்றி அவசியம் கூறுங்கள்]
அன்புடன்,
பம்மலார்.