Quote:
ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், `ஆளுக்கு ஆயிரம் ஆசைகள்'
கல்யாணசுந்தரம் ஒரு கல்யாண புரோக்கர், திருமணம் நடக்காது என கைவிட்ட வரன்களுக்கு கூட ஏதாவது தகிடுதத்தம் செய்து திருமணத்தை நடத்தி வைத்து விடுவார். அவருக்கு பவளக்கொடி, அன்னக்கொடி, பூங்கொடி என 3 மகள்கள். இந்த மூவரும் அவரது முதல் மனைவிக்கு பிறந்தவர்கள்.
இரண்டாவது மனைவி அலங்காரவள்ளிக்கு அழகுசுந்தரம் என்ற ஏழாவது படிக்கும் பையன் மட்டும்.
மகள்கள் மூவரில் பவளக்கொடி கலெக்டராகவும், அன்னக்கொடி டாக்டராகவும், பூங்கொடி சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகவும் ஆசைப்பட்டனர். ஆனால் அது நடக்கவில்லை.
மூன்று மகள்களும் கல்யாணசுந்தரத்திடம் "நாங்கள் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அதே துறையில் உள்ளவர்களைத்தான் திருமணம் செய்து கொள்வோம்'' என உறுதி படக் கூறுகிறார்கள்.
அதற்கும் ஒரு வாய்ப்பு திரிபுர சுந்தரி என்ற பேராசை படைத்த பெண்மணி மூலம் வருகிறது. அவளுக்குத் திருமண வயதில் 3 மகன்கள். தனது 3 மகன்களையும் டாக்டர், என்ஜினீயர், கலெக்டர் என்று பொய் சொல்லி அதிக வரதட்சணையோடு பெண்களை ஏற்பாடு செய்யும்படி புரோக்கர் கல்யாணசுந்தரத்திடம் கூறுகிறாள். கல்யாணசுந்தரம் குறுக்கு வழியில் தனது 3 மகள்களுக்கும் அவர்களை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
கல்யாணசுந்தரத்தின் மகள்கள் தங்கள் கணவர்கள் சாதாரண பணியில் இருப்பவர்கள் என்ற உண்மை உணர்ந்து தந்தையிடம் கண்ணீர் விட, கல்யாணசுந்தரம் தனக்கே உரிய சாமர்த்தியத்தில் மகள்களை எப்படி வாழவைக்கிறார் என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.
நடிகர்கள்: டெல்லிகுமார், அனுமோகன், குமரேசன், மாஸ்டர் கணேஷ், சுரேஷ், மாஸ்டர் சுஜித், சுலக்ஷனா, குயிலி, ஆர்த்தி, `ஊர்வம்பு' லட்சுமி, சவுந்தர்யா.
பாடல்: பிறைசூடன். இசை தேவா.
தயாரிப்பு: வசந்த் டிவி.