Quote:
ரஹ்மானை சிறபித்து பாராட்ட வேண்டிய இந்த நேரத்தில் நீங்கள் அவரை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியுட்டுகிறது. அனால் அதே நேரத்தில் அவரை பாராட்டும் நோக்கில் சற்றே அதீதமாய் சென்று "தமிழ் சினிமா நவீனத்துவத்துக்கே வராமலிருந்த காலத்தில் இசையை பின்நவீனத்துவ காலகட்டத்துக்குக் கொண்டு சென்றதே ரஹ்மானின் சாதனை." என எழுதியிருப்பது தமிழ் சினிமாவையோ அதன் இசை மரபையோ சரியாக உள்வாங்காமல் அவசரத்தில் எழுதி விட்ட த்வனி வருகிறது. தமிழ் சினிமாவின் இசை மரபில் மெல்லிசை மன்னர் MSV காலம் தொட்டே நவீன இசை ஒலிக்க துவங்கியத்தையும், அதன் தொடர்ச்சியாக இளையராஜா அவர்கள் அந்த நவீனத்தை முன்னெடுத்து சென்று, பின் சீறி பாய்ந்து பின் நவீனத்துவ இசை மரபை உருவாக்கியதையோ மறந்து, எப்படி நீங்கள் ரஹ்மானுக்கு மட்டும் அந்த புகழாரம் சூட்டுகிறீர்கள்?
"இது ஒரு பின்நவீனத்துவ இயல்பு. நவீனத்துவ இசை அந்த ஆளுமையின் தனிப்பட்ட இயல்பின் வெளிப்பாடு. ரஹ்மானுக்கென உறுதியான சட்டகம் ஏதுமில்லை. அவரது ஆளுமைக்குப் பதிலாக ஒரு கூட்டுவெளிப்பாடு அவர் வழியாக நிகழ்கிறது. அவ்வாறு பல்வேறு திறமைகள் முயங்க உயர்தொழிநுட்பம் உதவுகிறது." - இதுதான் நீங்கள் உள்வாங்கியுள்ள இசை பற்றிய புரிதலா? கூட்டு செயல்பாடு என்பது 'செயல்' மட்டுமே சார்ந்த ஒரு புரிதல். இசையின் இறுதி வடிவம் மட்டுமே அது பின்நவீனத்துவ பிரதியா அல்லது நவீனத்துவ பிரதியா என்பதை தீர்மானிக்கும். உதாரணமாக 'நிறைய பேர் சேர்ந்து கூடி விவாதித்து சினிமா எடுப்பதால்' எல்லா சினிமாவும் பின்நவீனத்துவ பிரதியில் அடங்குமா என்பதை யோசித்து பார்க்க வேண்டுகிறேன். அது அல்ல என்பது புரிய வரும்.
ராஜாவின் இசையோ ரஹ்மானின் இசையோ முழுக்க பின் நவீனத்துவ பிரதி ஆகிறது எப்படி என்றால் அதன் இறுதி வடிவம் ஒற்றை இசை மரபை சார்ந்து இல்லாமல், பல்வேறு இசை மரபுகளையும் அதன் கூறுகளையும் கூட்டி நெய்வதினால். ராஜாவின் பல்வேறு பாடல்களில், பின்னணி இசையினில் கூர்ந்து கவனித்தால் அப்பிரிக்க, ஜாஸ் , ராக், பாப், டிஸ்கோ, மாண்டரின், செல்டிக், ஸ்பானிஷ்/ மெக்சிகன்/ லத்தீன், மேற்கத்திய செவ்வியல், கர்நாடக, இந்துஸ்தானி, நாட்டார்...என நீளும் பல்வேறு இசை வடிவங்களை கையாண்டு இருப்பது தெரிய வரும். ரஹ்மானின் இசையிலும் அவ்வாறே. இருவரும் வேறுபடும் புள்ளி எதுவெனில் ராஜாவின் இசையில் இந்த எல்லா மரபும் தங்கள் வேர்களை இழந்து, அவரது இசை பற்றிய ஆழமான அறிவினாலும், புரிதலினாலும் மற்றும் ஆளுமையினாலும் தனியாக ஒலிக்காமல், முழு பாடலின் அல்லது இசை கோர்வையின் உணர்வுக்கு தங்களை உருமாற்றம் செய்து கொள்கின்றன. (தேர்ந்த இசை வல்லுனர்கள் கூட அவரது சில பாடல்களில் வரும் பல்வேறு இசை வடிவங்களை அறுதியிட்டு முத்திரை குத்த முடியாமல் அது 'ராஜமுத்திரை' என முடித்து கொள்கிறார்கள்.)
ரஹ்மானின் இசையில் இந்த பல்வேறு இசை மரபுகளும் தங்கள் வேர்களை அப்படியே தக்க வைத்து கொள்கின்றன. மேலும் அவரது இசை உலகமயமாக்கலின் பின்விளைவான ஒற்றை உலகு, ஒற்றை கலாசாரம், ஒற்றை இசை எனும் திசையில் பயணிக்கிறது. இதில் எது சரி எது தவறு என்னும் விவாதங்களுக்கு செல்லாமல் இசை ரசிகர்கள் தங்களின் தேர்வுகளை செய்யலாம்.
...மற்றும் சர்வதேச அங்கீகாரம் என்பதெல்லாம் டூ மச். அது அந்த தேசத்து சினிமா எக்ஸ்பிரஸ், பிலிம் பேர் விருது போல்தான். என்ன இன்று அமெரிக்கா உலகளாவிய ரீதியில் ஆதிக்கம் செலுத்தி வருவதால் இது நமக்கு மிக பெரிய விருது போல் தோற்றம் வருகிறது. நாம் இந்த விருதை அடிமை நிலையில் இருந்து 'அவன் அங்கிகரித்து' விட்டானே என்று பார்க்காமல், அவன் விளையாட்டில் அவனை வெற்றி கொண்டுள்ளோம் என கர்வம் கொள்ளும் நேரத்தில் தான் இந்த விருதுக்கான முழு மதிப்பு நமக்கு புரிய வரும். கொஞ்சமே கொஞ்சம் கமலின் வார்த்தைகள் அந்த கர்வத்தை பகிர்ந்து கொண்டது, மற்றவரெல்லாம்...!