Quote:
ஆனால் ஒரு சில நாட்களில் அதுவும் சிரமம் என்றுத் தெரிந்தது. பிறகு மறுபடியும் அவருக்கு போன் செய்து 'மன்னிக்கனும் ஆயிரம் வெள்ளிதான் என்னால் கொடுக்க முடியும், என்னால் பணம் புரட்ட முடியவில்லை' என்றேன். சிரித்துக் கொண்டே 'சரி, வாங்க பார்த்துக்கலாம்' என்றார். மறுநாள் பெரிய சந்தேகத்தினால் திரும்பவும் அழைத்தேன். 'சரி, வாங்க பார்த்துக்கலாம் என்றால் என்ன அர்த்தம், எனக்கு பயமா இருக்கு, வந்த பிறகு, பத்தாயிரம் வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு குறைத்து என்னை கேவலப்படுத்துகிறீர்களா, இதெல்லாம் சரிவராது என்று கூறி வெறும் கையோடு அனுப்பி விடுவீர்களா? பயண செலவுகள் நட்டமாகிவிடும் என்று பயமாய் இருக்கிறது' என்று தயங்கியபடி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, 'வர சொல்லி விட்டு, காரணம் சொல்லி உங்களை திருப்பி அனுப்புவது, அவமானப்படுத்துவது போன்றது. நான் அதை செய்ய மாட்டேன், பயப்படாமல் வரவும்' என்றார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கிளம்பினேன். அகி மியூஸிக் என்ற பெயரை திடீரென முடிவு செய்தேன். என்னுடைய வியாபாரத்திட்டதில் நான் தொடங்கப் போகும் நிறுவனத்திற்கு யாழ் ரெக்கார்ட் என்றுதான் பெயரிட்டு இருந்தேன். நிறுவனம் தொடங்க ஏற்பாடு ஆனதும் அகி மியூசிக் என்று சிந்தையில் தோன்றியது. பதிவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவரை சந்தித்தேன். அகி மியூசிக்கின் திட்டத்தையும் எவ்வளவு ராயல்டி வரும் சாத்தியங்கள் உள்ளது என்பதையும் நான் தயாரித்திருந்த வியாபார திட்டத்தைக்காட்டி விளக்கினேன். எனக்கு வியாபாரம் தெரியாது, நீங்கள் சொல்வதுபோல் நடந்துக்கொண்டால் போதும் என்றார். பணத்தை ரமணாஸ்ரமத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து மாஸ்டர் ஆடியோ கேசட்டை வாங்கிக்கொள்ளும்படியும், இது ரமணருக்காக செய்தது தனக்கு பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். நிறுவனத்தில் பங்குதாரராக நீங்கள் ஆவதென்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன். அதையும் மறுத்துவிட்டார்.
நான் ரமணாஸ்ரமம் சென்றேன். எனக்கு திருவண்ணாமலைப் பற்றித் தெரியாது, ரமணரைப் பற்றித் தெரியாது. இப்பொழுது நினைத்தால் இளையராஜாவின் 'அண்ணாமலையெனை தன்னால் அழைத்தது, சொன்னால் அதிசயம் அம்மா அம்மா' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திருவண்ணாமலை சேர்ந்ததும் ரமணாஸ்ரமத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான சில நிமிடங்களில் ரமணாஸ்ரம தலைவருக்கு இளையராஜா போன் செய்து, 'அந்த கேசட்டை ரமணர் சமாதியில் வைத்து பூஜை செய்து அகிலனிடம் கொடுங்கள்' என்று கூறிவிட்டு, என்னிடம் 'ரமணரிடம் ஆசீர்வாதம் பெற்று இதை நீங்கள் தொடங்குங்கள்' என்று கூறிவிட்டார். ரமணாஸ்ரமம் எனக்கு வேறு சில அனுபவங்களைத் தந்தது. இங்கு அதை சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன்.
சென்னை திரும்பியதும், சினிமாக்காரர்களைப் பற்றி பரவியிருந்த ஒரு மோசமான கருத்து எனது மனதிலிருந்து விலகியிருந்தது. அந்த நம்பிக்கையில் இளைய*ராஜாவிட*ம், வர்னர் மியூசிக்கில் இருந்து நாங்கள் வந்தபோது நீங்கள் போட்டு காண்பித்த இசையையும் தர முடியுமா என்று கேட்டு வேறு ஒரு திட்டத்தைக் காட்டினேன். 'இரவு வீட்டுக்கு வாங்க, தருகிறேன்' என்று வழியனுப்பி விட்டார். 5 நிமிடம் மட்டுமே இருந்தது அந்த சந்திப்பு. பெரும்பாலான அவருடனான எனது சந்திப்பு அதிக பட்சம் 15 நிமிடங்கள் தான்.
இரவு அவரது வீட்டில் நவராத்திரி பூஜை. 10.30 மணி வரை அவர் வரவில்லை. எனக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. திடீரென்று வந்தவர் என்னை பார்த்து எதுவும் பேசவோ, புன்னகைக்கவோ இல்லை. நேரே மாடிக்கு சென்றார். கொஞ்ச நேரத்தில் கையில் ஒரு கேசட்டுடன் கீழ் இறங்கி, பூஜை அறை நுழைந்தவர், ஆராத்தி காட்டி என் கையில் கொடுத்தார். நான் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அதை வாங்கிக் கொண்டேன். எனது முதல் வெற்றி என்று மனம் கொண்டாடியது.
அவரைப் பலர் ஆணவக்காரர், கோபக்காரர் என்று பலவாறு என்னிடம் குறைக்கூறியிருக்கிறார்கள். உங்களின் மூலம் இப்பொழுது பணம் பண்ணப் பார்க்கிறார், என்றெல்லாம் நகைத்திருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் சென்ற, அவருடன் எந்த நெருங்கிய உறவோ, நட்போ இல்லாத எனக்கு, யாரிடமிருந்தும் சிபாரிசோ, அறிமுகமோ இல்லாத எனக்கு நம்பிக்கைத் தந்து, ஆல்பம் தந்து என் கனவுகளுக்கு வழியமைத்துக் கொடுத்த அந்த இளையராஜா, நான் கேள்விப்படாத, படித்திராத, இளையராஜா.
ooo
மார்ச், 2005 இல் நான் மீண்டும் சென்னை சென்றேன். ரமணாஸ்ரமத்திற்கு ராயல்டி தரவும், கொஞ்சம் சீடிகள் தரவும். அதுவரையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் நான் நுழைந்ததில்லை. முதல் முறை சென்ற போதுக்கூட அவசரமாக ரமணாஸ்ரமம் சென்று அவசரமாக சென்னை திரும்பி விட்டேன். அன்று ஏழுமலை என்ற ரமணாஸ்ரம நண்பர் என்னை வற்புறுத்தி திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்தார். இவ்வளவு தூரம் வந்து தமிழ் நாட்டின் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலையை தரிசிக்காது செல்வது பெரிய இழப்பு என்றார்.
அப்பொழுது நான் வைணவத்தில் அதிக நம்பிக்கையும் பிடிப்பும் உள்ளவன். மறந்தும் பிற தெய்வம் தொழாதவன். எனக்கு வர மனமில்லை என்று சொல்ல மனம் வரவில்லை. அவரின் அன்பு வற்புறுத்தல் அத்தகையது. முதல் முறைவந்தபோதும் அவர் இதுபோல் வற்புறுத்தி, பிறகு மலையை சுற்றிப் பார்க்க ஒப்புக்கொண்டேன். காரிலேயே சுற்றிவிட்டு வந்துவிட்டேன். இன்றோ முதல் முறையாக திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்கிறேன். எனக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. உள்ளே அழைத்து பெரிய லிங்கத்தின் முன் அமர சொன்னார்கள். அனைத்தும் எனக்கு வேடிக்கையாகவும் பொருளியலாகவும் தெரிந்தது. ஆனால் சிவ லிங்கத்தின் முன் அமர்ந்தவுடன், காரணம் தெரியாமல் கண்கள் நனைந்தன. இதுவரை எங்கெல்லாமோ, யார் யாரிடமோ நான் தேடிய அன்பு இங்கே கல்லாய் இறுகிப் போய், இத்தனை நாள் என் வரவிற்காக காத்திருப்பது போல் இருந்தது. என்னால் விளங்கிக் கொள்ள* முடியாத உணர்வு. எல்லாவற்றுக்கும் காரணம் தேடும் மனம், என் கண்ணீருக்கு அறிவியல் அல்லது உளவியல் காரணம் காண முடியாமல் திணறியது.
இத்தனை உணர்வுகளையும் நான் முன்னமே அனுபவித்திருக்கிறேன், இதே போல் கண்ணீர் விட்டிருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயமாக என்னால் உணர முடிந்தது. சட்டென்று என் சிந்தை முழுவதும் பரவியது ஹவ் டு நேம் இட் என்ற இசையின் நாதம். திருவண்ணாமலையில் நான் உணர்ந்தது 10 வருடங்களுக்கு முன் ஹவ் டூ நேம் இட் என்ற இசையை நான் முதல் முறை கேட்ட போது எழுந்த அதே உணர்வு நிலை. அது ஏன் என்ற காரணம் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் இளையராஜாவின் மீதான விளக்கமுடியாது சில நம்பிக்கைகளையும் மரியாதையையும் என்னுள் உருவாக்கியது. மதம், கடவுள் என்று நான் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் கட்டுடைத்து விட்டது. ஏதோ ஒரு சக்தி என்னிலிருந்து இந்த இசையை வெளிக்கொண்டுவருகிறது என்று அவர் எப்பொழுதும் கூறுவது அர்த்தம் நிறைந்ததாய் நான் உணர்ந்த நாள் அது.
பிதற்றத் தொடங்கியிருக்கிறான் அகிலன் என்று பலர் நினைக்ககூடும். ஆனால் இன்னமும் இந்த அனுபவம் என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. முற்பிறவி தொடர்பு, ஆன்மீகம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்கள் மறந்துபோன இசை ஏன் என் நினைவிற்கு வரவேண்டும்? பரீட்சயம் இல்லாத சைவ தள*த்தில் நான் ஏன் அளவிட முடியா அன்பால் அரவணைக்கப்பட வேண்டும்? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் ஆன்மீகம் போலியல்ல, அவரின் திருவண்ணாமலை பயணமும் அவர் ஏற்றுக்கொண்ட தோற்றமும் நாடகமல்ல என்பதை நான் நம்பத் தொடங்கிய, எனக்கு விளங்கத்தொடங்கிய நாட்கள் அவை.
ooo
இளையராஜாவின் குரு ரமண கீதம், இத்தாலி இசைப் பயணம், திருவாசகம், மியூசிக் மெசய்யா, அம்மா பாமாலை என்று 3 வருடத்தில் மொத்தம் 6 ஆல்பங்கள் மட்டுமே வெளியிட்டிருந்தேன். காரணம், பெரிய முதலீடு இல்லாமல் வரும் பணத்தை அலுவலக நிர்வாகத்திற்கு செலவு செய்வதும், வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்துவதிலும், மீதப் பணத்தில் ஆல்பம் வெளியிடுவதும், இப்படிதான் எனது தொழில் போய் கொண்டிருந்தது. திருவாசகத்தைக் கூட மிக சொற்ப முன்பணத்திற்குதான் இளையராஜா தந்தார். தமிழ் மையத்தின் அனுமதியோடு, அகிலன் தான் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையோடு. அதற்கும் டாக்டர் சண்முகசிவாதான் எனக்கு உதவி செய்தார். 2006ல் ஏ.ஆரின் காட்பாதரையும் ரிலீஸ் செய்திருந்தேன்.
2007க்குள் வியாபாரத்தை விஸ்தாரமாக்க இயலாமல், முதலீடும் இல்லாமல், குடும்பம் நடத்த போதிய வருமானமும் இல்லாம், பொருளாதாரம் மோசமாகி, கடனாகி, மீண்டு வர முடியாத அளவு நான் நிலைகுலைந்து போனேன். தன்முனைப்பு அற்று, விரக்தியடைந்திருந்தேன். எனது வாழ்வின் இருண்ட காலங்கள் அவை. குடும்பத்திலிருந்து தனித்து விட்டேன். உறவினர்கள் கூடி அவமானப்படுத்தினார்கள். மனைவியுடன் விவாகரத்துக்கும் முயற்சி செய்தேன். எல்லோராலும் நம்பிக்கை இழக்கப்பட்டு கைவிடப்பட்டவனாகவே இருந்தேன். ஒன்றரை வருடங்கள் இளையராஜாவிற்கு ராயல்டி எதுவும் தரவில்லை. காரணம் சொல்லி வந்தேன். மே மாதம் சிங்கப்பூர் வந்திருந்தவர் என்னை தொடர்புக்கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள அவருடைய சில தொடர்புகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, கோபித்து கொண்டு, உடனே என்னை சிங்கப்பூர் வந்து அவரைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அவரிடம் என் நிலையை விளக்க மனமில்லை.
சிங்கப்பூர் போகும் போது எனது போதாத நேரம் அவரை பார்ப்பதாக இருந்த நேரத்தைவிட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றேன். அவரைச் சந்தித்து, என்னால் இந்த சில காலமாக ராயல்டி தர முடியவில்லை, காரணம் சில பணப் பிரச்சனைகள் என்றேன். அவர் என் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது இயலாமையை முடிந்தளவு மறைத்தேன். முடிந்த அளவு அகி மியூசிகின் நம்பகமான சில திட்டங்களை விளக்கி அது நமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்று விளக்கினேன். எனது தோல்வி அவரை என் மீது நம்பிக்கை இழக்க செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஏதும் பேசாமல் என்னையே பார்த்திருந்தவர், பிறகு வழியனுப்பிவிட்டார். அன்று அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.
பிறகு மலேசியாவில் ஜொகூருக்கு கிளம்பி இரவு அங்கு தங்கினேன். சிங்கப்பூரில் தங்க பணமில்லை. முடிந்தது எனக்கும் அவருக்குமான உறவு என்று நினைத்தேன். மறுநாள் காலையில் என்னை அழைத்து, மீண்டும் ஹோட்டலுக்கு வரும்படி கூறினார். எனக்கு விளங்கவில்லை. போனேன். மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதம். எனக்கும் இளையராஜாவிற்கும் இருக்கும் உறவு இன்றோடு முடிந்தது என்பது உறுதியானது போல் இருந்தது. எனது கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது. நான் அவரை சந்தித்தபோது, அவர் மதியம் சாப்பிடாமல் காத்திருந்தார். கூட இருந்த இரண்டு பேர் என்னை ஏதோபோல் பார்த்தார்கள். உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறேன் என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு போனார். வழியில் காரில் வந்த அவருடைய நண்பரிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு இவரிடம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். உங்கள் தொழிலில் இவர் முதலீடு செய்வார் என்று கூறினார். அந்த நண்பரும் பல கேள்விகள் கேட்டு இறுதியில் முதலீடு செய்ய சம்மதித்தார். உணவு முடிந்து ஹோட்டலுக்கு சென்றபின், 'உங்களுக்கு என்னால் ஆன உதவி, நீங்கள் முன்னுக்கு வருவதை பார்க்கனும்' என்று சுருக்கமாக சொல்லி கிளம்பிட்டார். என் கண்கள் ஈரமாகியது. நான் சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்திருந்தேன். எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்திருந்தேன். குடும்பமும் என்னை கைவிட்டிருந்தது. எந்த நம்பிக்கையில் இளையராஜா எனக்கு இந்த உதவியை செய்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இன்னும் என்னிடம் அவர் எந்த காரணத்தால் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் நான் எனது நிலைப் பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. என்னிடம் ஏன் இந்த தனிப்பட்ட அக்கறை என்று மனம் பலமிழந்து நின்றிருந்தேன்.
Contd...