‘தலைவரைப் பார்த்தோம்!’ – சிங்கப்பூர் ரசிகர
சிங்கப்பூர்: தலைவர் ரஜினியை பெரும் கட்டுப்பாடுகள், காவல்களுக்கிடையிலும் நேரில் பார்த்து பரவசப்பட்டுள்ளார் நமது ரசிகர் ஒருவர்.
அவர் பெயர் ரஜினிபாபு. சிங்கப்பூரில் பணியாற்றும் பாபு, தலைவர் வருகிறார் என்பது தெரிந்ததும், நேராக விமானநிலையத்துக்கு அதிகாலையிலேயே போய் காத்திருந்தாராம். ஆனால் தலைவரை மாற்று வழியில் விமான நிலைய ஊழியர்கள் அழைத்துச் சென்றுவிடவே, அவர் சிகிச்சைப் பெற்றுவரும் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர் பாபுவும் அவரது நண்பர்களும்.
ரஜினியை இன்று காலை நேரில் பார்த்த தன் அனுபவத்தை ரஜினி பாபு இப்படிக் கூறினார்:
“மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினியைப் பார்க்க ஏற்கெனவே ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். கூட்டம் கூடினால் உடனடியாக சிங்கப்பூர் போலீசார் அப்புறப்படுத்திவிடுவார்கள் என்பதால், அருகாமையில் உள்ள கடைகளில் நின்றபடி, கூல்டிரிங்ஸ் குடிக்கும் சாக்கில் மருத்துவமனையையே பார்த்துக் கொண்டிருந்தோம். மருத்துவமனையைப் பார்த்தால் எனக்கு தலைவர் முகம்தான் தெரிந்தது.
ஆனாலும் நேற்று முழுக்க தலைவரைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை சீக்கிரமே வந்துவிட்டோம். எப்படியோ அங்கிருந்த காவலர்கள், செவிலியர்கள் உதவியுடன் தலைவர் சிகிச்சைப் பெறும் 6 வது மாடிக்குச் சென்றோம். அங்கு ராயல் சூட்டில் தங்கியுள்ளார் தலைவர்.
நாங்கள் போனபோது, அவர் படுக்கையில் இருந்தார். முகத்தில் கொஞ்சம் தாடி வளர்ந்திருந்தது. அவர் நலமாக உள்ளதை நேரில் பார்த்தபிறகுதான் நிம்மதியடைந்தோம். இதனை சக ரசிகர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
நாங்கள் தலைவரைப் புகைப்படம் எடுக்க முயன்றோம். ஆனால் சௌந்தர்யா அந்த நேரத்தில் வந்துவிட்டார். புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், அப்பா நல்லபடியாக வருவார். அதுவரை பொறுமையாக இருங்கள். அவருக்கு தொந்தரவு தரக்கூடாது என்றும் கூறினார்.
எனவே உடனே நாங்கள் இறங்கி வந்துவிட்டோம். தலைவர் இப்போது ஐசியுவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து வெளியில் வந்ததும், நாங்கள் மீண்டும் அவரை நிச்சயம் பார்ப்போம். முடிந்தால் புகைப்படம் எடுப்போம்”, என்றார்.
அங்கு தான் எடுத்த இரு வீடியோக்களை அனுப்பி வைத்திருந்தார் பாபு. ஆனால் அவற்றில் தலைவர் இல்லை. லதா ரஜினி புகைப்படம் எடுக்க வேண்டாம் என எச்சரிப்பது போன்ற காட்சி இருந்தது. இன்னொரு வீடியோவில் அப்பா நலமாக இருக்கார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என சௌந்தர்யா கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.
-என்வழி ஸ்பெஷல்