Originally Posted by
kaveri kannan
ஆலமரம் ஆலமரம் ....
அன்னை இறந்தது தெரியா பிறழ்ந்த மனநிலை..
அவர் உறங்குவதாய் எண்ணி மடியில் வைத்துத் தாலாட்டும் மகனாய் நடிகர்திலகம்..
விடிந்தால் தன் பாதி உயிர் காதலிக்கும் தன் ஆருயிர் நண்பனுக்கும் திருமணம்..
ஜீவ்னா யஹான்... மேராநாம் ஜோக்கர் பாடலை இசைத்தபடி தூரத்தில் ஊர்வலம்..
வெளிச்சமும் இருட்டும் மாறி மாறி பிரதிபலிக்கும் நாயகனின் முகம்...
ரோஜாவின் ராஜா படத்தில் மனம் பேதலிப்பதைப் படிப்படியாய்ச் சித்தரித்த நடிப்பரசரின் அழகு முகபாவங்கள் ஆழமாய் என் மனதில்..
அந்த ஆலமரம் எனும் குறும்பாடல் இணையத்தில் தேடினேன் .. கிடைக்கவில்லை..
ஏன் அப்பாடலை இப்போது தேடினேன்? தெரியவில்லை.
கடலூரில் ( நியூசினிமா) பொங்கலுக்கு வந்து குடியரசு தினத்துக்கு போய்விட்ட இந்த ராஜாவை அந்த 13 நாளில் 14 தடவை பார்த்தேன்.
பெயர்கள் போடும்போது வரும் பின்னணி இசை முதல் சோ வரும் நகைச்சுவைக் காட்சிகள் வரை கோர்வையாய் எல்லாமே மனப்பாடம்..
அந்த நினைவலைகளை மீட்டத் தேடினேனா?
சிவாஜி ரசிகன் என்பது ஒரு நுட்பமான உன்னதமான வரம்..
அந்த புனித உணர்வைப் புனருத்தாரணம் செய்ய, சக உணர்வாளர்களுடன் அளவளாவி இன்னும் ஊக்கிக்கொள்ள வரும் எனக்கு ஏன் அந்த சோகக்காட்சி தேடல்?
ஆலமரம் ...
நம் நடிகர்திலகம்..
அந்த ஆலமரத்தின் புகழைப்பாட ஆயிரம் வழிகள் உண்டு..
நிழலில் இருக்கும் ஆயிரம் பறவைகளுக்கும் ஆலமரத்தின் அத்தனை கிளைகளுக்குமான கிளைக்கதைகள் ஆயிரமாயிரம் உண்டு..
என் ரோஜாவின் ராஜா கதை போல..
கிளிகள் கீறிக்கொள்ளாமல் மரப்பேச்சு மட்டுமே ஒரே மூச்சாய் இருக்கட்டும்..
இரு நாளாய் என் மனம் கொஞ்சம் வலித்ததால்தான் அந்த ஆலமரப் பாடல் தேடினேனோ?