எம்ஜிஆர் இல்லம்
http://i60.tinypic.com/2ijkf9s.jpg
நண்பனின் ஹோண்டா அமேஸ் காரை ஓட்டிப் பார்க்க என்று ஆரம்பித்தது ஒரு சிறு பயணத்திட்டமாக மாறியது. மூன்று நண்பர்கள் காலை கிளம்பி வழியில் சிற்றுண்டி முடித்து பூண்டி நீர்த்தேக்கத்தை அடைந்தோம். தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. மரங்கள் யாரோ தீ வைத்து எரித்தவை போல் இருந்தன. வறண்டு கிடந்த பூமிக்கு தெலுங்கு கங்கை மட்டுமே சன்னமாக உயிரூட்டிக் கொண்டிருந்தது. இத்தகைய திட்டத்தை சாதகமாக்கிய எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோரின் நினைவு வந்தது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் இது போன்ற இன்னொரு திட்டம் சாத்தியமா என்ற கேள்வியும் வந்தது.
அப்படியான சிந்தனைக்குப் பிறகு திரும்பி வரும் வழியில் ராமாவரம் தோட்டம் கண்ணில் பட்டதும் கார் தானாக உள்ளே நுழைந்தது. என் அண்ணன் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர். வீடு முழுக்க எம்ஜிஆர் படங்களும் பாடல்களும் நிறைந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் எந்த ஒரு தலைவரை விடவும் அவரைப் பற்றிய ஒரு பிரமாண்ட பிம்பம் எனக்குள் இருந்தது. அந்த வீட்டைச் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் சென்னை வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தே நிறைவேறி இருக்கிறது. அந்த வழியை ஒரு நூறு முறையாவது கடந்து சென்றிருப்பேன்.
வீடு ஒரு அருங்காட்சியமாக இருக்கும் என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தால் அங்கே கார்கள் நின்றன, ஒருவர் செய்தித்தாள் படித்தபடி சோபாவில் அமர்ந்து இருந்தார். காவலாளி ஓடி வந்தார். காரை எடுத்து ஓரமாக நிறுத்தும்படி சொன்ன அவர் பிறகு எங்களுக்கு அங்கே இருந்த இடங்களை சுற்றிக்காட்டினார். ஜானகி எம்ஜிஆர் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சொன்னார். அது தவிர எம்ஜிஆர், அவரது தாயார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோருக்கு சிறு நினைவிடங்கள் உள்ளன. அன்னையை வணங்காமல் எங்கும் கிளம்பமாட்டார் என்பது போன்ற தகவல்களைச் சொன்னார் பீமாராவ் என்ற பெயருடைய அந்த காவலாளி. அவர் முப்பத்தாறு வருடங்கள் இங்கேதான் இருப்பதாக சொன்னார்.
நினைவிடத்தை திநகரில் உள்ள இடத்திற்கு மாற்றி விட்டதாகவும் இப்போது வீட்டில் ஜானகி எம்ஜிஆர் அவர்களின் தம்பி பிள்ளைகள் வசிப்பதாகவும் கூறினார். எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டின் முகப்பு தாழ்வாரம் மட்டும் ஒரு பிரமாண்டமான கதவு அருகே சில இருக்கைகளுடன் காட்சிக்காக இருக்கிறது. இந்த இடம் மட்டும் நன்றாக இருக்கிறது. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அந்த இடம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். ஜேப்பியார், ஆர் எம் வீ, உடையார் போன்றவர்கள் எங்கே எம்ஜிஆரின் அழைப்புக்குக் காத்து நிற்பார்கள் என்றும் அவர்களில் பெரும்பான்மையானோர் இன்று மிகப்பெரும் செல்வந்தர்கள் என்றும் சொன்னார் பீமாராவ். வேலையாட்கள் மூவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருப்பதாக சொன்னார்.
மூன்று சமையல்காரர்கள் முழுநேரம் வேலை பார்த்ததாகவும் யார் வந்தாலும் முதலில் சாப்பிட்டார்களா என்று விசாரித்து விட்டுத்தான் வந்த வேலையைப் பற்றிக் கேட்பார் என்றும் சொன்னார். அதிமுகவைச் சேர்ந்தவர்கள் நினைவுநாள் அல்லது பிறந்தநாள் சமயங்களில் வருவார்கள் என்றார். ஜெ. அங்கே வருவதில்லை எனவும் அது ஜானகி குடும்பத்தாருக்குப் பிடிக்காது எனவும் கூறினார். வேறு சில கதைகளும் சொன்னார். அதன் உண்மைத்தன்மை குறித்து எனக்கு சந்தேகம் இருப்பதால் இங்கே பகிரவில்லை.
மாடுகள் காட்டி இருந்த கொட்டகைகள் இடிந்து கிடக்கின்றன. வேலையாட்கள் தங்குவதற்கு இருந்த தனியான ஒரு சிறு கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. வீட்டின் பின்புறம் விவசாய பூமியாக இருந்த இடம் இப்போது காது கேளாத குழந்தைகள் பள்ளியாக இருக்கிறது. கூட்டமாக நாய்கள் திரிகின்றன. அவரது வாகனம் நின்ற இடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அந்த வீட்டில் கடந்த சில வருடங்களாக எந்த சீரமைப்புப் பணிகளும் நடந்தனவா என்று தெரியவில்லை.
http://i58.tinypic.com/ixuz9d.jpg
அங்கே எம்ஜிஆர் தனது திரைப்படத் தயாரிப்புகளுக்கு வாங்கி உபயோகித்த காமெரா டிராலி புழுதி படிந்து நிற்கிறது. அதில் அவர் பெயரும் எழுதப்பட்டிருக்கிறது. அதை எடுத்துச் சென்று பெயிண்ட் அடித்து குறைந்தபட்சம் எங்காவது காட்சிக்கு வைக்கலாம். சார்லஸ் டிக்கன்ஸ் அமர்ந்து எழுதிய மேசை ஒன்று 35 லட்சம் ரூபாய்களுக்கு 2008ல் ஏலம் போனதாகப் படித்தேன். அப்படியாவது வீட்டைச் சீரமைக்க ஒரு வழி கிடைக்குமே.
தமிழகத்தின் திரையுலகையும் அரசியலையும் தான் வாழ்ந்தவரை தன் விரல் அசைவில் வைத்திருந்த ஒருவர் வாழ்ந்த வீடு இருந்த நிலையைப் பார்த்ததும் இங்கே எதுவும் நிலை இல்லை என்று தோன்றியது. இது அவருக்கும் தெரிந்தே இருந்ததோ என்றும் அதனாலேயே வந்ததை எல்லாம் வாரி வழங்கிவிட்டாரோ என்றும் தோன்றியது. இன்று கட்சி நடத்துபவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் குடும்ப நலத்தை முன்னிறுத்துவதும் பத்து தலைமுறைகளுக்கு சேர்த்துக் கொள்வதும் இங்கே இருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்கலாமோ?
- ஷான்
kanavu desam - net