-
கலி முற்றி தலை விரித்து ஆடுகிறது. இந்த சராசரிகளுக்கும், தற்பெருமைகளுக்கும், படித்தவர்களின் அறிவு -மனம் விரிவடையாமல் சிறுவயது மாயைகளில் உழன்று, பாலபிஷேகம் அமெரிக்கா வரை விரிவடைந்ததுதான் ஒரே பலன். இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில், வலை தளங்களில் வேண்டாதவை முக்கிய விவாதம் பெறுவதுடன்,வரலாறுகள் தப்பும் தவறுமாக திரிக்க படுகின்றன. பத்திரிகை துறையில் ,எழுத்து திறனோ ,பகுக்கும் திறனோ,இல்லாத கீழ்நிலை மக்கள் பிழைப்புக்காக ,பத்திரிகை தர்மம் புரியாமல் செயல் படுகின்றனர். புத்திசாலிகள்,படிப்பாளிகள்,பகுத்தறிவாளர்கள் வேறு துறைகளை நாடி சென்று விட , முக்கியமான துறைகள்,சராசரிக்கும் கீழானவர்களால் நிர்வகிக்க படுகின்றன.
நா.முத்துக்குமார் சமீபத்தில் வந்த நல்ல கவிஞர் என்பதை ஒப்பு கொள்வோம். அவர் சில வேண்டாத பழக்கங்களால் கஷ்டத்தை தருவித்து கொண்டு, தனது பொருளாதாரத்தை வளப்படுத்தி, குடும்பத்துக்கு திட்டமிடாததை, தேசிய பிரச்சினை போல பேசுவது மடமை. அவருக்கு சுருக்கமான இரங்கல் தெரிவித்து முடிக்க வேண்டியதை ,இவ்வளவு வளர்த்துவானேன் என்று சினிமா,பத்திரிகை மீது அருவருப்பே தோன்றுகிறது.
சமீபத்தில் விருதுகள் விரிவடைந்து,எல்லோருக்கும் ஒரு விருது நிச்சயம் என்ற நிலைமை. (வைக்க இடமில்லாமல் திருப்பி கொடுக்கும் நிலைமை)
இந்தியாவிலேயே உன்னதம் தொட்ட சிவாஜி,கண்ணதாசன்,விஸ்வநாதன் போன்றோருக்கு எந்த விருதும் தர வக்கில்லாத அரசு,இன்று எல்லோருக்கும் ஜனநாயக முறையில் வாரி வழங்கி அதன் மதிப்பை குறைத்து வருகிறது. மொத்தம் 28 நிறுவனங்கள் விருதுகளை வழங்கி ,குத்து பாட்டுக்கள் ஆடி தீர்க்கின்றன. இதில் துபாய்,மலேஷியா,அமெரிக்கா,கனடா என்று நிறைய அனாமதேயங்கள்.
தமிழர்கள் பிளவு பட்டு, ரசனை கெட்டு ,பாழ்பட்டு நிற்பது, நமது மண்ணுக்கு உரிய பெருமையை, உரிமையை மீட்டு கொடுப்பதாய் இல்லை.
படித்தவர்கள் நிறைந்த பூமி என்றால் ,ஏன் அன்பே சிவம், விருமாண்டி, நான் கடவுள்,அஞ்சாதே, குற்றம் கடிதல்,விசாரணை போன்ற படங்கள் உலக சாதனை புரியாமல் நிற்கின்றன?
என்றுமே, ரசனை கேடுகள் தலை விரித்து ஆடும் ,நாம்தான் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும் போல.
-
1985 இல் எனது மனைவியுடன் திருமணமான புதிதில் எனது சுதந்திர தினத்தை , இனிதாக்கிய (கோவை அர்ச்சனா) முதல் மரியாதை. நடிகர்திலகத்துக்கு எதிராக ஜெயா பச்சன் (m p விஷயம்)சதிசெய்து சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுத்த பிறகு மாற்றினார். (ஆதாரம்- இதில் தேர்வு உறுப்பினராக இருந்த கோமல் ஸ்வாமிநாதன் சுபமங்களாவில் எழுதியது)
முதல் மரியாதை- 1985-
திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை.
நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமு த்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாகி நெய்த அழகிய அதிசயம்.
நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.
மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.
மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணுவும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொன்னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.
ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo ஐ பொன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.
பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது பொன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயிர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.
பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து
அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப்புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புக ளை,சி தைவுகளை , இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.
Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உளவழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.
மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுய நலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியின் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறார்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)
படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து,கெட்டு போன வரலாற்றை சொல்லி உதைக்கும் அளவு செல்வது,பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustration ஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறார்.(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்பு க்கிழ த்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவருடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவர் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.
தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance வழங்கும் இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே?குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலைசாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை,அதனால் ஏற்படும் குற்ற உணர்வை,தியாகத்தால் மெழுகுகிறாள் .
பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை ,எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் சீறும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா?
இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.
கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன? அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.
தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூட கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பறி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சா த்திய படாது)
வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.
இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.
வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.
பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)
கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜ னரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோக முள் கதை போல)
பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.
-
தேசியவாதியாக நடிகர்திலகம் நேசிக்கும் சுதந்திர திருநாளில் வெளியான நடிகர்திலகத்தின் மற்ற காவியங்கள்.( முதல் மரியாதை தவிர)
சாரங்கதாரா.
ராமன் எத்தனை ராமனடி.
எழுதாத சட்டங்கள்.
ஒரு யாத்ரா மொழி.
-
http://www.easybusinesscardmaker.com...chievement.jpg
Great Achievement..
That too in Mayyam website.
Eleven Lakhs viewers and still going strong ... Nadigar Thilagam Sivaji Ganesan ... Part 9 ....
-
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 140 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
ஏவி.எம். சரவணன், புதிய கதாசிரியர் ஏ.சி. திருலோகசந்தர் சொன்ன கதையை அப்படியே அவரிடம் திருப்பி சொன்னார். அதற்குப் பிறகுதான் திருலோகசந்தருக்கு திருப்தி ஏற்பட்டது. அவர் சொன்ன கதையின் தலைப்பு `அவள் தந்த வாழ்வு.’ கதை ஏவி.எம். சரவணனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தன் தந்தையிடம் போனார்.
`அப்படியா!’ என்று கேட்டுவிட்டு அந்த கதை பைலை வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டார். சில நாட்கள் கழிந்தன. ஏவி.எம்.மின் தொழில் நண்பர் பசவராஜ் ஏவி.எம்.செட்டியாரை சந்திக்க வந்தார். ஏவி.எம்முடன் சேர்ந்து `பேடர் கண்ணப்பா’ படத்தை எடுத்தவர் பசவராஜ்.
இந்த படத்தின் மூலமாகத்தான் கன்னடத்தின் மிகப்பெரிய நடிகரான ராஜ்குமார் திரையுலகிற்கு அறிமுகமானார்.
`பேடர் கண்ணப்பா’ படத்தில் ஏவி. எம்முடன் இணைந்த பசவராஜ், அப்போது இன்னொரு படம் எடுக்கவே ஏவி.எம்.செட்டியாரை சந்திக்க வந்தார்.
திருலோகசந்தர் சொன்ன `அவள் தந்த வாழ்வு’ கதையை அவரிடம் கொடுத்தார் செட்டியார். அந்தக் கதை பசவராஜுக்கும், இயக்குநர் பீம்சிங்கிற்கும் மிகவும் பிடித்துப் போனது. அவர் சரவணனை சந்தித்து `அவள் தந்த வாழ்வு’ கதையை செட்டியார் சொன்னதால் தான் எடுக்கப்போவதாகச் சொன்னார். ஆனால், சரவணனுக்கு அதில் உடன்பாடில்லை. பங்குதாரர்களாக ஏவி.எம். இருந்தாலும், அப்படி எடுக்கும் படங்களில் ஏவி.எம். பேனரின் பெயர்கள் வராது. அதனாலேயே சரவணனுக்கு பிடிக்கவில்லை. தந்தையிடம் வாதாடியதால் `அவள் தந்த வாழ்வு’ ஏவி.எம். பேனரில் ‘பார்த்தால் பசி தீரும்’ படமாக வந்தது!
உண்மையில் அந்த படத்தை ஏ.சி. திருலோகசந்தர் இயக்க வேண்டுமென்பதுதான் சரவணனின் விருப்பம். ஆனால் பங்குதாரரின் விருப்பப்படி பீம்சிங் அந்த படத்தை இயக்கினார். பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் அது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சவுகார் ஜானகி, சரோஜாதேவி என்று அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் நடித்த படம் இது! படம் முடிந்து டைட்டில் போடும்போது யார் பெயரை முதலில் போடுவது என்பதில் பிரச்னை வந்தது!
`என் பேர்தானே மொதல்ல வரணும்?’ என்று கேட்பார் சரோஜாதேவி.
`நான்தானே சீனியர்? என் பெயர்தானே முதலில் வரவேண்டும்?’ என்பார் சாவித்திரி.
எல்லோருக்கும் சீனியர் நடிகை சவுகார் ஜானகி.
`எல்லோருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் நான் டைட்டில் போடுகிறேன்’ என்று சொல்லி பிரச்னையை தீர்த்து வைத்தவர் பீம்சிங்!
`என்ன செய்யப்போகிறார்?’ என்று எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் இயக்குநர் பீம்சிங் ஓர் அருமையான ஐடியா செய்தார்.
`உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும்’ என்று போட்டு எல்லோர் படத்தையும் ஒட்டிவிட்டார். `பார்த்தால் பசி தீரும்’ படத்தை பொறுத்தவரையில் சரவணனுக்கு ஒரு மனக்குறை இருந்தது. திருலோகசந்தர் மிக அருமையாக திரைக்கதை எழுதியிருந்தார். ஆனால், அந்த கதையை படமாக்கிய போது சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த மாற்றங்கள் சரியாக இல்லை. அதனால் சரவணனுக்கு அது பிடிக்கவில்லை. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் அந்தப் படம் ஓரளவு ஓடியது. இந்த தகவல்களை ஏவி.எம். சரவணன் தன்னுடைய `ஏவி.எம். 60’ என்ற புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதே போல் அடுத்து வந்த `பாவமன்னிப்பு’ படத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1960ம் வருடம் ஜனவரி மாதம் 20ம்தேதி `பாவமன்னிப்பு’ படத்திற்கு பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தை ஏவி.எம். நிறுவனம், பீம்சிங்கோடு சேர்ந்து தயாரித்தது. கோல்டன் ஸ்டூடியோவில் பீம்சிங் சந்திரபாபுவை வைத்து `அப்துல்லா’ என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி வரை படம் வளர்ந்திருந்தது. ஒரு நாள் பீம்சிங், ஏவி.எம். சரவணனை அழைத்து எடுத்த வரையில் படத்தை போட்டுக்காட்டினார். அந்தக் கதை சந்திரபாபு எழுதிய கதை. ஒருவன் இந்துவாக பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு, ஒரு கிறித்தவ பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல் கதை அமைந்திருந்தது.
`எவ்வளவு பண்ணியும் படம் சரியாக அமையலே. முழுவதையும் மறுபடியும் ரீ-டேக் பண்ணனும் போலிருக்கு’ என்று சற்று சலிப்பாகப் பேசினார் பீம்சிங்!
அந்தக் கதை ஏவி.எம். சரவணனுக்கு பிடித்திருந்தது.
`இந்த கதை புது விஷயமா இருக்கு. நாம பார்ட்னர்ஷிப்பில் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது’ என்று தன் தந்தையிடம் சொன்னார் சரவணன்.
`சரி! பீம்சிங்கை அழைத்து வா’ என்றார் அவருடைய தந்தையான செட்டியார். எல்லோரும் கலந்தாலோசித்தார்கள்.
` எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார் செட்டியார்.
`நாலரை லட்சம் ஆகும்’ என்றார் பீம்சிங்.
`சரி! நான் பைனான்ஸ் பண்றேன். வர்ற லாபத்தை பாதியா பிரிச்சுக்குவோம்’ என்றார் செட்டியார். ஒப்பந்தம் கையெழுத்தானது.
திரைக்கதை அமைக்கும் முயற்சியில் பீம்சிங் தீவிரமாக ஈடுபட்டார். எப்போதும் அவர் தன்னுடன் ஓர் எழுத்தாளர் குழுவையே வைத்திருப்பார். இறைமுடிமணி அரங்கண்ணல், வலம்புரி சோமநாதன் போன்றவர்கள் அவருடன் இருப்பார்கள்.
திரைக்கதையை அவரவர் பாணியில் ஒவ்வொருவரும் அலசுவார்கள்.
மொத்தக் கருத்தையும் திருமலை என்பவர் ஒரு ஷேப்புக்கு கொண்டு வருவார்.
இப்படி பலரது முயற்சிகள் திரைக்கதை, வசனம் எழுதி அது ` வசனம்– சோலமலை’ என்ற பெயரில் வெளிவரும்.
இதுதான் பீம்சிங்கின் வேலை பாணி!
‘அப்துல்லா’ கதையும் அப்படித்தான் விவாதிக்கப்பட்டது.
அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தம்பி சண்முகம் திருமணம் சென்னை ஆபட்ஸ்பரியில் நடந்தது (இந்த இடம் சென்னை அறிவாலயத்திற்கு பக்கத்தில் தற்போது இருக்கும் ஹயாத் ரெசிடென்சி ஓட்டல்).
அந்த திருமணத்திற்கு பீம்சிங்கும் வந்திருந்தார்.
`அப்துல்லா’ படத்தின் கதை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?’ என்று அந்த திருமணத்தில் பீம்சிங்கை சந்தித்த சரவணன் கேட்டார்.
`ரொம்ப அருமையாக வந்திருக்கிறது. ஹீரோ காரெக்டர் பிரமாதமாக ஷேப் ஆகியிருக்கு. ஆனால் அதை சந்திரபாபு தாங்கமாட்டார். நாம் சிவாஜி பாயைத்தான் வெச்சு எடுக்கணும்’ என்றார் பீம்சிங்.
அவர் எப்போதும் நடிகர் திலகத்தை ‘சிவாஜி பாய்’ என்றுதான் அழைப்பார்.
அதே போல் சிவாஜி இவரை `பீம்பாய்’ என்றுதான் அழைப்பார்.
`அதைப் பத்தி ஒண்ணுமில்லே!ஆனா கதை சந்திரபாபுவுடையது என்று சொன்னீங்க. ஆனால் அதிலே அவர் நடிக்கப்போறதில்லேங்கிற விஷயத்தை அவர் கிட்ட சொல்லணுமில்லே?’ என்று கேட்டார் சரவணன்.
`நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்’ என்றார் பீம்சிங்! ‘ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது’ என்றார் பீம்சிங்!
அது என்ன சிக்கல்?
(தொடரும்)
-
நடிகர் கமலஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செவாலிய விருதை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக இந்து விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
-
https://pbs.twimg.com/media/CKKP5fTUEAEkbos.jpg:large
Congratulations Kamal Hassan. Follow the footsteps of our Thalaivar NT and you are bound to reach more heights.
-
நான் ஏற்கெனெவே பலமுறை எழுதியது. கமலும் பலமுறை பல்வேறு சூழ்நிலைகளில் சொன்னது. இன்றைய முன்னணி கதாநாயகர்கள் இருவரும் பாலச்சந்தரால் அறிமுகம் செய்விக்க பட்டாலும் ,நடிகர்திலகத்தை குருவாக பாவித்து ,அவருடைய நடிப்பின் நிழலை தொடருபவர்கள்.நடிகர்திலகமும் ,தன சிஷ்யர்களுடன் இணைந்து நடித்து அவர்களை ஆரம்ப நிலையிலிருந்து ஊக்குவித்துள்ளார்.
நடிகர்திலகத்திடமிருந்து திரை ஆளுமை,ஆண்மை ,ஸ்டைல்,இவற்றை ரஜினி கவர, படத்துக்கு படம் வித்தியாச கதைக்களன்,பாத்திரங்கள்,ஒப்பனை மாற்றம்,சோதனை முயற்சி இவற்றை கமல் கவர, இருவரும் நமது ஒரே கடவுளின் இரு வடிவாக திகழ்கிறார்கள்.
கமல் ஒரு பன்முக திறமையாளர்.. புதுமை விரும்பி. அவருக்கு, நடிகர்திலத்தின் வழியில் chevaliar கிடைத்ததில் மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.
வாழ்த்தின் ஒரு பகுதியாக, P_R எழுதிய தேவர் மகன்.குரு சிவாஜி என்ற நடிகருக்கும், சிஷ்யன் கமல் என்ற creator இவர்களுக்கு அற்புதமான tribute .
-
தேவர் மகன்- 1992 (By P_R)
மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.
இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.
இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.
இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.
நடிப்பு என்பது என்ன ?
ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:
'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).
இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.
ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது
இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.
இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.
இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )
இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.
காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.
அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)
கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.
எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.
தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.
நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரேமை. ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது.
தேவர் மகன், இந்த எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வரையப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் கச்சிதமாக ஏழுதப்பட்ட திரைக்கதைகளில் தேவர் மகன் முன்னணி வகிக்கிறது. நம் அடையாளங்களை நாம் மறுக்க முடியுமா ? கல்வி, அன்னிய (உயர் ?) கலாசார பரிச்சயத்தால் நம் சூழலிலிருந்து விடுவித்து கொள்ள முடியுமா ? இல்லை நம் கலாசார அடையாளங்களை, அவற்றின் அழுக்குகளோடு ஏற்றுக்கொண்டு உள்ளிருந்து மட்டுமே மாற்ற முயல முடியுமா ? கடைசியில், மிக முக்கியமாக: நமது அடையாளங்கள் நமது இயல்புகளில் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருக்கின்றனவா ? (தேவர் மகன் தேவரா ?) இத்தகைய கேள்விகளை அழகாக எழுப்பும் படம். இந்தியச் சூழலில் இவை எல்லாம் மிக முக்கியமான சமூகக் கேள்விகள். காட்ஃபாதருக்கு இப்படி ஒரு (இந்திய) சமகோடு யோசித்ததே சாதனை தான்.
சூழ்நிலைகள் ஒப்பிடத்தக்கவை என்றாலும் விடோ கொர்லியோனும் பெரிய தேவரும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள். நியாய தர்மம் பற்றியா விவாதங்கள், கடமை/பொறுப்பு ஆகியவற்றை பற்றிய உரையாடல் எல்லாம் டான் விடொ செய்ய மாட்டார். மைக்கேலிடம்: " உன்னைத் தானே நம்பணும்..வேற யாரு இருக்கா நம்புறதுக்கு ?" என்ற உருக்கமான கேள்வியை கேட்க மாட்டார்.தேவர் மகனில் அந்த மையக் காட்சி தான் பெரிய தேவரின் முழு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இருந்தாலும்...அகர வரிசையில் வருவோம்.
படத்துவக்கத்தில் மகன் சக்தியை பற்றிய எதிர்பார்ப்பு, ஆனால் இளைக்காத தற்பெருமை ("எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி"). மகனைக் கண்டதும் அவர் காட்டும் பெருமிதம். அதன் பின் சக்தி காரை நோக்குவதால் 'அங்கு என்ன இருக்கிறது' என்ற ஆர்வப்பார்வை. பானுவைப் பார்த்ததும் வரும் இயல்பான தயக்கம் (கிட்டத்தட்ட வெறுப்பு). இதுவரை அந்தக் காட்சியில் வசனம் இல்லை என்பதே பார்ப்பவர்கள் உணர வாய்ப்பில்லை. "ஆரு இவுக ?" என்ற கேள்வியின் தொனியும் "வாங்க" என்பதில் உள்ள வரவேற்பின்மையுமே கதைகள் சொல்லும். நடிகனின் குரல் செய்ய வேண்டியவற்றை இதற்கு இணையாக சுறுக்கமாக காட்ட இயலாது.
பானுவைப் பற்றிய ஆவலை, மிடுக்கு குறையாமல் கேட்பது அடுத்த காட்சி.
"சீராலா""என்ன.......ளா ?" என்பதில் அந்த எள்ளலின் ஆரம்பம்.
வட்டார வழக்கையும், பேச்சு வழக்கங்களையும் பரிபூரணமாக உள்வாங்கிக்கொண்டு பேசப்பட்டது: "ங்கொண்ணேன் ஸ்டேஷ்னுக்கு வந்தாரா ?"
தனது ஃப்ரெடோ குடிகாரனாக இருப்பதைப் பற்றிய வருத்தத்தை இக்காட்சியிலேயே பதிவு செய்கிறார். சிரிப்பில் !
இதைப் பற்றிய கோபம் இரண்டு இடங்களில் வருகிறது, ஒரு இடத்தில் கிண்டலாக, ஒரு இடத்தில் உக்கிரமாக :
"ச்சாப்டர ஓட்டலா ....அட போடா....அம்மூர்ல எவன்டா ஓட்டல்ட ச்சப்டுவியான்.....ங்கொண்ணென் மாதிரி எவனாச்சும் இருந்தா அவன் ச்சப்டுவியான்"
"என்ன ஐயா, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள வேலியை போட்டுப்புட்டாய்ங்க"
"நீங்க ஏன் கண்ணை மூடுறீய ? திறந்துகிட்டே இருக்கணும்......நாம தான் கண்ணை திறந்திட்டிருக்க நேரம் ரொம்ப குறைச்சல் ஆச்சே"
இதுபோன்ற கலைஞர்களுக்காக நாம் கண்னை திறந்திருக்கும் நேரம் குறைச்சல் தான்
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.
'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.
படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.
புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.
பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.
ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.
தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:
"நீ எப்பிடி செய்வே ?"
"....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."
"ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.
தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.
"...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.
ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.
தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !
-
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி
என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )
இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.
பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.
அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.
அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)
அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.
"ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.
"கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.
பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
"பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....
"ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.
சக்தி:"என் தப்புத்தேன் யா"
கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.
இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
"அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
.....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"
முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).
"எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,
"எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.
பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.
பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.
உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.
பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.
வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.
கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.
உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.
பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.
கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?
இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.
சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.
"...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.
படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).
கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.
அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.
உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"
"டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.
அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.
"உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.
என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.
இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.
பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.
-
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி
இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.
ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.
கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
மகன் சாப்பிடவில்லை.
பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.
ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.
ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.
பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.
முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.
இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.
சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.
நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.
நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.
"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"
இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.
"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"
"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.
"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.
"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.
பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.
"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.
ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.
ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"
இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).
தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே
பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.
தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".
கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.
ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.
பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....
என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.
கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.
"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.
வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.
ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.
இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.
ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.
அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.
-
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.
சென்ற ஜூலை மாதம் 22-ந் தேதி முதல் நமது மய்யம் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலோனாரால் மய்யத்தை பார்வையிடவோ அல்லது பதிவுகள் இடவோ முடியாமல் போனது. அவர்களில் நானும் ஒருவன். சில தினங்கள் கழித்து Proxy Server மூலமாக இணையதளத்தை பார்வையிட முடிந்தபோதும் பதிவுகள் மேற்கொள்ளவோ அல்லது தரவேற்றப்பட்ட வீடியோ காட்சிகளை பார்க்க முடியாமல் போனது.
இத்தகைய சூழலில் திரியின் பயணத்தில் தொய்வு விழாத வண்ணம் அவ்வப்போது பதிவுகள் மேற்கொண்டு திரியை முன்னெடுத்து சென்ற கோபால் அவர்களுக்கும் சிவா அவர்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள்! இதற்கு உதவி செய்யும் வண்ணம் ஒரு சில பதிவுகள் இட்ட திரு சந்திரசேகர் அவர்களுக்கும் பரணி அவர்களுக்கும் நன்றிகள்!
விரைவில் தடை நீங்கி மீண்டும் மய்யம் இணையதளம் பழைய பொலிவோடு செயல்படும் நாளை விரைவில் எதிர்பார்க்கும்
அன்புடன்
-
அன்றும் இன்றும் என்றென்றும் நடிகர் திலகத்திற்கும் அவரது படங்களுக்கும் மாபெரும் ஆதரவு கொடுக்கும் மதுரை சிவாஜி அடியார்களுக்கு அடுத்த விருந்து படைக்க 20,000 acres of fertile land + மில் ஓனர் ராஜசேகர் அடுத்த மாதம் விஜயம் செய்கிறார்.
அனைத்து துறைகளிலும் உயர்ந்த மனிதனாக விளங்கிய நடிகர் திலகம் underplay நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த உயர்ந்த மனிதன் திரைக்காவியம் ஆகஸ்ட் 12 முதல் தினசரி 4 காட்சிகளாக மதுரை சென்ட்ரலில்!
மேலே காணப்படுவது சென்ற மாதம் நான் இட்ட பதிவு. இந்த மாதம் 12-ந் தேதி வெளியான உயர்ந்த மனிதன் ராஜசேகர் மதுரை சென்ட்ரலில் ஒரு புதிய சாதனை புரிந்திருக்கிறார். 4,5 புதிய படங்கள் அதே நாளில் வெளியானபோதும், கடைசி ஆடி வெள்ளி என்பதனால் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றபோதும் அதன் காரணமாகவே தாய்மார்கள் கூட்டம் அன்றைய தினம் திரையரங்கிற்கு வராமல் இருந்தபோதும் ஒரு வார மொத்த வசூல் Rs 93,000/- ஐ [ரூபாய் 93 ஆயிரத்தை] தொட்டிருக்கிறது.
இதன் சிறப்பு என்னவென்றால் நடைபெறும் இந்த 2016-ம் ஆண்டில் சென்ட்ரலில் வெளியான வேறு எந்த கருப்பு வெள்ளைப் படமும் Rs 90,000/- த்தை கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை எனும்போது mass மசாலா items எதுவும் இல்லாத high class படமான உயர்ந்த மனிதன் இப்படிப்பட்ட சாதனை வசூலை பெற்றிருக்கிறது என்று சொன்னால் அது ஒரு வரலாற்று நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும்.
இதே போல் சென்ற 2015-ம் வருடத்தில் அதிக வசூல் பெற்ற கருப்பு வெள்ளை படம் நமது நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு என்பதை வாசகர்கள் நினைவு வைத்திருக்க கூடும். அது மட்டுமல்ல இந்த 2016-ம் ஆண்டில் சென்ட்ரலில் வெளியான படங்களிலே ஒரு லட்சத்திற்கு மேல் வசூல் செய்த ஒரே படம் நமது வசந்த மாளிகை மட்டுமே!
என்றென்றும் நமது சாதனைகளுக்கு உறுதுணையாக விளங்கும் மதுரைக்கும் மதுரை வாழ் மக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
PS: இந்த வருடம் சென்ட்ரலில் வெளியான அனைத்து படங்களின் வசூல் விவரங்களை பெற்று அவற்றை அரங்க மேலாளர் திரு பாலமுருகன் அவர்களிடம் சரி பார்த்து இந்த தகவலை இங்கே பதிவு செய்கிறோம்
-
ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கமல், தான் சிவாஜி பாதி, நாகேஷ் பாதி கலந்து செய்த கலவை என்றும் ,மரபணு ஆராய்ச்சி செய்தால் ,சிவாஜியின் மரபணு தன்னில் இருப்பதை காண முடியும் என்று கூறியுள்ளார்.
சத்யஜித்ரே ,சிவாஜி வரிசையில் தனக்கும் கிடைத்த கௌரவத்தை பெருமையோடு ஏற்பதாக கூறியுள்ளார்.
-
-
-
-
-
-
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 141 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
பீம்சிங், ஒரு சிக்கல் என்று ஏவி.எம். சரவணனிடம் சொன்னார்.
அது என்ன சிக்கல்?
`நான் ஏற்கனவே இந்த படத்தில் நாலரை லட்சம் என்று உங்கள் தந்தையாரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது பெரிய நடிகர்கள் நடிப்பதால் படத்தின் பட்ஜெட் அதிகமாகும். நாம் போட்ட பட்ஜெட்டை ரீ – ஒர்க் பண்ணணும்’ என்றார் பீம்சிங்.
நாலரை லட்சமாக இருந்தது, இப்போது பத்தரை லட்சமானது.
ஏவி.எம். செட்டியாரும் அதை ஏற்றுக்கொண்டார்.
சிவாஜியை போட்டு எடுப்பதால் செலவில் நியாயமிருந்ததை அவர் உணர்ந்து கொண்டார்.
திட்டப்படி 1960 அக்டோபர் 26ம்தேதி ‘பாவ மன்னிப்பு’ ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.
ஆனால், படம் முடியும் வேளையில் படத்தில் தாயார் வேடத்தில் நடித்த கண்ணாம்பா இறந்துவிட்டார்.
மறுபடியும் எம்.வி. ராஜம்மாவை வைத்து படத்தை முடித்தோம்.
படத்தின் இசையமைப்பாளர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் திறமையை கண்டு ஏவி.எம். சரவணன் வியந்தே போனார்.
அவர்களும், கண்ணதாசனும் இணைந்தால் அங்கே வரிகளுக்கும் ஸ்வரங்களுக்கும் பஞ்சமே இருக்காது.
விஸ்வநாதன், கண்ணதாசன் இருவரையும் எப்போதுமே சரவணன் `மேதைக் குழந்தைகள்’ என்பார்.
இப்போதும் கூட ஏவி.எம். சரவணன், பல வருடங்கள் கழிந்தும் ஏவி.எம். ஸ்டூடியோவில் இருக்கும் ஆறாம் நம்பர் அறையைக் கடக்கும் போது, கண்ணதாசனும், விஸ்வநாதனும் அங்கே பேசிக்கொண்டிருப்பது மாதிரியான ஒரு பிரமை அவருக்கு ஏற்படுமாம்.
அவர்கள் இருவரும் ஓர் அற்புத காம்பினேஷன்!
பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவானதும், `மாதிரி இசைத்தட்டு’ வரும். அதை ` வொயிட் ரிகார்ட்’ என்பார்கள்.
`பாவமன்னிப்பு’ படத்தின் `வொயிட் ரிகார்ட்’ தயாரானவுடன், சரவணன், அதை அன்றைய ரேடியோ பிரபலம் எல்.ஆர். நாரயணன் மூலமாக இலங்கை வானொலியில் இருந்த மயில்வாகனனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த நாட்களில் வர்த்தக ஒலிபரப்பெல்லாம் கிடையாது.
மயில்வாகனன் `பாவமன்னிப்பு’ பாடல்களை இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டே வந்தார்.
படம் வெளியாவதற்கு முன்பே எல்லா பாடல்களுமே பிரபலமாகிவிட்டன.
`இப்படி பாடல்கள் முன்கூட்டியே நிறைய தடவை நேயர்கள் கேட்டுவிட்டால், அப்புறம் படம் வெளியாகும்போது அவை `ஸ்டேல்’ ஆகிவிடுமே! எனவே போதும், பாடல் ஒலிபரப்பு இனி வேண்டாம் என்று சொல்லி விடுவோமே’ என்றார் இயக்குநர் பீம்சிங்!
`அப்படி எந்த அபாயமும் இல்லை. நாம் ஒலிபரப்பை நிறுத்தச் சொல்ல வேண்டியதில்லை. அப்படியே போகட்டும்’ என்று உறுதியாக சொன்னார் ஏவி.எம். சரவணன்.
அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார் சரவணன்.
அந்த காலத்தில் நவுஷத் இசையமைத்த ‘கோஹினூர்’ போன்ற படப் பாடல்களை வருடக்கணக்கில் முன்கூட்டியே நேயர்கள் பலமுறை கேட்டும் அவர்களுக்கு சலித்ததில்லை என்றார்.
இவருடைய உறுதியில் அவருடைய தந்தைக்கும் உடன்பாடு இருந்தது.
படம் வெளியானதும் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார்கள்.
படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் நல்ல வரவேற்பு.
குறிப்பாக பாடல் காட்சியின்போது ரசிகர்களின் கையொலியும், சந்தோஷக் குரல்களும் உச்சத்தில் இருந்தன.
பல மாதங்களாக அந்த பாடல்களை ரேடியோவில் பல முறை கேட்டிருந்தும் ரசிகர்களின் காதுகளுக்கு அவை பழசாகிப் போய்விடவில்லை.
அப்படி அந்தப் பாடல்களில் கண்ணதாசனும், விஸ்வநாதனும் தேன் கலந்திருந்தார்கள்.
`பாவமன்னிப்பு’ படத்தை சித்ரா தியேட்டரில்தான் வெளியிடவேண்டும் என்று பீம்சிங்கும் மற்றவர்களும் கருதினார்கள்.
அப்போது சிவாஜி படங்கள் சித்ரா, சயானி, கிரவுன் தியேட்டர்களில்தான் ரிலீசாகும்.
ஆனால், இந்த படத்தை சாந்தி தியேட்டரில்தான் ரிலீஸ் செய்யவேண்டுமென்று செட்டியாருக்கு விருப்பமாக இருந்தது.
பெரிய தியேட்டரில் சிவாஜி படத்தை வெளியிட வேண்டும் என்பது மட்டுமல்ல.
அப்போது சாந்தி தியேட்டர் பால்கனிதான் தியேட்டர்களிலேயே பெரியதாக இருந்தது.
பால்கனியில் மட்டும் 421 சீட்டுகள் இருந்தன!
அதையும் சேர்த்து மொத்தம் 1212 சீட்டுகள்.
அதைவிட பெரிய சீட்டுகள் கொண்ட தியேட்டர் அதுதான்.
அதுவரையில் சாந்தி தியேட்டர் கட்டிய பிறகு அதில் எந்தவொரு படமும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.
`பாவமன்னிப்பு’ படத்தின் மீது செட்டியாருக்கும் மிகுந்த நம்பிக்கை இருந்தது.
அதனால் படத்தை சாந்தி தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அவர் நினைத்தார்.
சிவாஜியின் தம்பி சண்முகம் கூட படத்தை சின்ன தியேட்டரில் வெளியிடலாமே என்று சொல்லிப் பார்த்தார்!
`சித்ரா’வில் வெளியிட்டால் நூறு நாட்கள் நிச்சயம்’ என்று சிலர் சொல்லிப் பார்த்தார்கள்.
ஆனால் அதையெல்லாம் மீறி சாந்தி தியேட்டரில் `பாவமன்னிப்பு’ படம் வெளியானது.
அதற்காக விசேஷமான விளம்பரம் செய்யவும் முடிவு செய்தது ஏவி.எம். நிறுவனம்.
ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ‘மெகா’ சைஸ் பலுானை சாந்தி தியேட்டரின் மேலே பறக்க விட்டு, அந்தப் படத்திற்கான விளம்பரத்தில் ஒரு புதுமையை அறிமுகப்படுத்தினார்கள்.
அந்த பலூனில் ` ஏவி.எம்.’ என்ற எழுத்துக்கள் ஆங்கிலத்தில் பெரிதாகவும், வாலில் ` பாவமன்னிப்பு’ என்ற எழுத்துக்கள் ஒன்றன் கீழ் ஒன்றாக தமிழிலும் அமைக்கப்பட்டிருந்தன.
அன்றைய மவுண்ட் ரோட்டில் அந்தப் பலூனை அண்ணாந்து பார்த்து அதிசயிக்காதவர்கள் இல்லை.
சென்னை மாநகர மக்களுக்கு அந்த பலூன் ஒரு வித்தியாசமான அனுபவம்.
ஆனால், அந்த விளம்பரம் மக்களை ஈர்த்த அதே நேரம்–
மக்கள் தினமும் வந்து அதிசயமாக பார்த்து போன போதும்,
அதனாலும் தியேட்டருக்கு மக்கள் படம் பார்க்க வந்தபோதும்–
ஏவி.எம்.முக்கு அந்த விளம்பரத்தின் மூலமாக வேறொரு அனுபவம் கிடைத்தது!
(தொடரும்)
-
அண்மையில் ஏற்பட்ட எனது மிக நெருங்கிய உறவு ஒன்றின் மறைவால்
இத்திரிக்கு அதிகம் வரமுடியாமல் போய்விட்டது
மய்யம் இணையமும் இந்தியாவில் முடக்கத்தில் இருப்பதை
நண்பர் முரளியின் பதிவின்மூலம் அறியமுடிகிறது
இதன் காரணமாக தமிழ்நாட்டு நண்பர்களால் பதிவுகள் இடமுடியாமல்
நமது திரி தேக்கம் அடைந்திருப்பது தெரிகிறது
முடக்கத்தில் இருந்து மீண்டுவர மய்யம் நிர்வாகிகள்
மிகவிரைவாக நடவடிக்கை எடுப்பார்கள்என நினைக்கின்றேன்.
-
The best of Nadigarthilagam movie released in Sept (5th Sept 1969) which is a show piece of Acting Talent of NT, Commercially a Great Success and first ever south Indian movie to be chosen for Oscar .
தெய்வ மகன்.(1969).
மத்திய அரசு தனது தென்னிந்திய படங்களை பற்றிய மாற்றாந்தாய் பார்வையை மாற்றி கொண்டு, அன்றைய பாராமுக மாநில அரசையும் மீறி, உலக பட தர கோட்பாடுகளை தளர்த்தி,அத்தனை அறிவுஜீவிகளையும் நடிப்பு என்ற ஒரே அம்சத்தால் மட்டுமே அசர வைத்து, oscar போட்டிக்கு தேர்ந்தெடுக்க பட்ட முதல் தென்னிந்திய திரை படம் தெய்வ மகன்.(1969).
பலர் ரசித்த காட்சிகளில் என்றுமே முன்னணியில் நிற்கும் மூன்று சிவாஜி தோன்றும் காட்சியை ரசித்த கோடி கணக்கானோருக்கு,தாங்கள் ரசித்தது மூன்று வெவ்வேறு உலக நடிப்பு கல்லூரி பாணியில் அந்த உலத்திலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நடிகன் நடித்த ஒப்பில்லாத காட்சிதான் ,என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நாம் அலச போவது அந்த படத்தை பற்றி அல்ல.
நான் ஏற்கெனவே விளக்கிய மூன்று முக்கிய நடிப்பு பள்ளி/கோட்பாடுகளான method Acting school ,Chekhov school ,Oscar wilde concept என்ற மூன்றையும்தான் மூன்று பாத்திரங்களாக்கி அந்த மேதை மூன்று பாணிகளையும் மோத விட்டார். வேறு வேறு நடிகர்கள் அந்த மூன்று பாத்திரங்களில் மோதியிருந்தால், ஒவ்வொரு நடிகனுக்கும் உள்ள திறமையளவின் ஏற்ற தாழ்வால்,நமக்கு முடிவு தெரியாமலே போயிருக்கும். ஒரே நடிகர்,சம திறமை,சம அக்கறையுடன் மூன்று பாத்திரங்களையும் வார்த்ததால் ,போட்டிக்கு ஒரு மாதிரி தீர்ப்பு வந்தது. இரண்டு சம வலுவுள்ள சங்கர்(அப்பா), கண்ணன்(மூத்த மகன்) பத்திரங்களை method acting (அப்பா),Chekhov (மூத்த மகன்) முறைகளிலும், மிக casual ஆக உருவான light ஆன விஜய்(இளைய மகன்) பாத்திரத்தை oscar Wilde பாணியில் சுதந்திர கற்பனை திறத்துடன் கையாண்டிருந்தார்.
இங்கேதான் நமக்கு ஒரு பாடமே நடத்த பட்டுள்ளது. உலக திறமையாளனான ஒரு versatile நடிகன்,தன் கற்பனை வளத்தை பயன் படுத்தி,சராசரி வாழ்க்கையில் பார்க்கவே முடியாத ஒரு பாத்திரத்தை தன் அழகுணர்ச்சியில் வடித்தால்?
எந்த கொம்பனி டம் வேண்டுமானாலும் இன்று கூட கேளுங்கள். தெய்வமகனில் உன்னை கவர்ந்த பாத்திரம் எதுவென்று? நூற்றுக்கு நூறு பேரின் விடை விஜய்தான்.இப்போது அந்த பள்ளிகளுக்கு போட்டி வைத்தால், சமமான பாத்திர வார்ப்பாக இல்லாவிடினும்,
Method Acting , Chekhov என்ற வலுவான பள்ளிகளை புறம் தள்ளி,Oscar Wilde சுதந்திர கற்பனை கோட்பாட்டில் ஜெயித்த அந்த ஒப்பற்ற கலைஞன்,மற்ற எல்லோரையும் விட எங்கு வேறு பட்டு நின்றார் என்பது உங்களுக்கு புரிந்திருக்குமே?இருந்தாலும் விளக்கத்தான் போகிறேன்,இந்த படங்களின் பாத்திரங்களையே பாடமாக்கி.
எந்த பள்ளிகளையும் முறையாக கல்லாமல், அந்தந்த பாத்திரங்களுக்கு , இன்னின்ன முறையில்தான் வடிவமைக்க வேண்டும், இந்த பாணியில்தான் நடிக்க வேண்டும் என்று அந்த மேதைக்கு எப்படி தெரிந்தது? பிறவி மேதை என்ற பிறகு இந்த ஆராய்ச்சியே தேவையில்லை.
தெய்வமகன் சங்கர், கண்ணன் பாத்திரங்களை எடுத்து கொள்வோம்.இரண்டுமே, தன் முகத்தின் அழகு கெட்டு ,விகாரமாகி, அதனால் மற்றவர்களின் கேலிக்கும், சீண்டலுக்கும் பாத்திரமாகி , inferiority complex இனால் அவதி படும் பாத்திரங்களே. தந்தை-மகன் என்ற உறவு முறை வேறு. நடிகர்திலகம் நினைத்திருந்தால், இரண்டையுமே, ஒரே பாணியில் வடிவமைத்து சில நு ட்பங்களை மட்டுமே மாற்றியிருக்கலாம். ஆனால் பாத்திரங்களை அவர் பார்த்த முறையே வேறு.
சங்கர், சிறு வயதில் அவமானங்களை சுமந்து அவதி பட்டிருந்தாலும் ,அது அவன் வாழ்வில் ஒரு பகுதியே. Trauma என்ற சொல்லோடு கடந்து போகும். அவன் வாழ்வில், அப்பா,அம்மா, அன்பான மனைவி,பிள்ளை,நண்பர்கள் மற்றும் கஷ்ட பட்டு முன்னேறி அடைந்த தொழில் செல்வாக்கு எல்லாமே, ப்ரம்மாண்டமாகி அவன் குறையை சிறிதாக்குகிறது.தன் குறையை தினம் தினம் ஞாபக படுத்தி சித்திரவதை படுத்த வாய்ப்புள்ள ஒருவனை ,பிறவியிலேயே அழிக்க சொன்னது தனக்காக கூட இருக்கலாம்.
ஆனால் கண்ணனோ, அனாதை விடுதியில், அனுதினமும் குறையை மட்டுமே பார்க்கும் சக மனிதர்களுடன் கூட்டு புழுவாக வாழ்பவன்.மொழியறிவு, சிறிது இசை, சிறிது பாபாவின் அன்பு இவை தவிர வேறு வெளிச்சமே இல்லாத வாழ்க்கை. Herzog எடுத்த ஒரு ஜெர்மன் படத்தில், இருபது வயது வரை மோசமான நிலையில், captivity யில் இருந்த ஒரு மனிதனை, திடீரென்று ஒரு நகரத்தில் விட்டு விட்டு போய் விடுவார்கள்.(உண்மை கதை).கண்ணன் நிலை கிட்ட தட்ட அப்படித்தான்.டாக்டர் வீட்டிலும் இருட்டறை சிறை வாழ்வே. அப்போது கண்ணனின் வாழ்வே அவன் முகதழும்பு, அவமானம், சார்ந்தே சிறுது இசையுடன் பயணிக்கிறது. உள்ள போராட்டம் சங்கரை விட கண்ணனுக்கு ஏராளம்.
அதனால் சங்கருக்கு, inferiority காம்ப்ளெக்ஸ் கொண்ட ஒரு normal மனிதனை சித்தரிக்கும் method Acting .ஆனால் கண்ணனுக்கோ, முழுதும் ஆதி மனிதனின் impulsive basic instincts மட்டுமே தலை தூக்கும் பதுங்குதல்,பாய்தல்,அன்புக்கு உருகுதல் (இசை) என்ற அடிப்படை உணர்வு மட்டுமே கொண்ட,தந்தையின் தாக்கம் சிறிதளவே கொண்ட ,உளவியல் தாக்கம் நிறைந்த chekhov பாணி.
விஜய்க்கு, இப்படி எந்த சிக்கலும் இல்லாததால், சாதாரணமாக ஓயவெடுத்திருக்கலாம். ஆனால் மேதைகளுக்கு ஏது ஓய்வு? P _R சிலாகித்த அற்புத ராஜின் மேம்பட்ட பிரதியாக சிறிதே effeminacy கலந்த ஒரு spoilt lover boy .ஆக realism பாணியில் இன்றி, முழுக்க synthetic ஆக,ஒரு கலவையான கற்பனை கலந்த அழகுணர்ச்சியில் வடிவமைக்க பட்டு....
இப்போது கண்ணனை மிக நுணுக்கமாக ஆராய்வோம். ஆஸ்கார் பரிசு பெற்ற Robert de Niro போன்ற நடிகர்கள்,தங்கள் நடிப்பில் இயற்கையின் ,மிருகங்களின் சாயலில் தங்கள் பாத்திரங்களை வடிவமைத்து வெற்றி கரமாக தங்களது பாத்திரங்களை கையாண்டுள்ளனர்.
"He based the movement of his character Travis Bickle in Taxi Driver (1976) on that of a crab. He thought the character was indirect and tended to shift from side to side."
நடிகர்திலகம் 1954 இலிருந்தே இதனை கையாண்டுள்ளார். நடைகளில், சிரிப்பில்,உறுமலில், mannerism என்று சொல்லப்படும் mood related gesture இல்.பின்னாட்களில் பாலா பிதாமகன் பாத்திரத்தில் இதனை புகுத்தி வெற்றி கண்டார்.தெய்வ மகன் கண்ணன் , body language சில சமயம், மானின் மருளல், அடிபட்ட வேங்கையின் சீற்றம்,எலியின் survival ஒடுக்கம் ,நாயின் உருகும் அன்பு என்று.
இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்றால் , திருடன் பட்டம் சுமந்து ,பெண்ணுடன் அவள் hand bag திருப்பி கொடுக்கும் காட்சி, ஜெயலலிதாவிடம் தன்னை மறைத்து ஒடுக்கும் காட்சி, மற்ற படி அவர் hyper ecstacy ,( அ ) extreme emotions like anger நிறைந்த காட்சிகள்,ஜெயலலிதா தன் காதலை வெளியிட்டதும் காட்டும் சுய வெறுப்பு காட்சிகளில் கவனித்து பாருங்கள்.(கர்ணனின் உறுமல் ,சாமுண்டியின் சீற்றம் obvious )
டாக்டர் தன்னை நிலை கண்ணாடியில் காட்டும் போது அலட்சியம் செய்யும் விகார முகம் , ஒரு பெண் தன்னை காதலிப்பதாய் கற்பனை செய்து (ஒதெல்லோ பற்றி சொன்னதும் டாக்டரின் கையை உடையும் அளவு இறுக்கும் வெறி கலந்த எதிர்பார்ப்பு),அது தன கற்பனையே என்றவுடன் சுய வெறுப்பின் உச்சமாய் கண்ணாடியில் தன் உருவத்தை தானே காறி உமிழ்ந்து, கண்ணாடியை உடைக்கும் மூர்க்க சுய வெறுப்பு.அந்த காட்சியில் அவர் காட்டும் subtle change in tempo and body position , தன் வீட்டுக்கு வந்து தாய்,தந்தை, தம்பியை கண்டு காட்டும் உருக்கம் கலந்த, euphoric ecstacy, டாக்டரிடம் அதை கொட்டி விட்டு, பசித்து சோர்ந்த நாய் குட்டி போல் மடி மேல் சோரும் கட்டம்.
கண்ணனை, விஜய் வெல்வதாவது என்று தோன்றுகிறதல்லவா?
சங்கர் பாத்திரத்தை method acting பாணியில் அந்த மேதை முடிவு செய்ததற்கு, இரண்டு காரணங்கள். முதல் காரணம் , குறையை பெரிதாக நினைக்க வேண்டாத நிலையில் நிகழ்காலத்தில் இருப்பவன்.அவன் இறந்த காலத்தை நினைக்க வேண்டிய மூன்று இடங்கள் முதல் பிள்ளை பிறந்த போது, மூத்த பிள்ளை உயிரோடு இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி கலந்த குற்றவுணர்ச்சி. டாக்டரை சந்திக்கும் போது. இந்த கட்டங்கள் எல்லாமே sense memory யில் அமைய வேண்டியவை. இரண்டாவது காரணம், method acting முறையில் மற்ற நடிகர்களின் performance தூக்கலாகும். கண்ணனும் விஜய்யும் ஓங்கி தெரிய ,சங்கரின் method acting முறையில் அமைந்த பாணி யாலும், இந்த முறையில் scene stealing என்பது முடியாதென்பதும் ஒரு காரணம்.(சமீபத்தில் Lincoln படத்தில் Daniel Day Lewis இதே முறையில் method Acting செய்திருக்கிறார்.now now now என்று சொல்லும் போது சங்கர் ,ராஜுவிடம் you you சொல்லும் அதே gesture )
முதல் காட்சியில்,புற முதுகு காட்டியே , குழந்தை பிறந்த மகிழ்ச்சிக்கு expansive hand ,gesture ,ராஜு சமாதான படுத்த வரும் போது elbowing gesture ...அடடா, எத்தனை மேதைமை!!! ராஜுவுடன், தான் சிறு வயது trauma வை விவரித்து, குழந்தையை கொன்று விட சொல்லி ,குற்ற உணர்ச்சியேயின்றி உலர்ந்த மனதோடு ஆணையிடுவது போல், சிறு வயதின் உணர்ச்சியின் பால் பட்டு maturity இன்றி பேசும் விதம், ஒரு method acting ஸ்கூலில் பாடமாக வைக்க வேண்டும்.sense memory அடிப்படையில் நடிக்க விரும்புவோருக்கு பாடம்.
விஜய் உடன் அவர் கண்டிப்பு காட்ட நினைத்து இளகி சிரிப்பது, மனைவியின் வற்புறுத்தல் பேரில் இணங்குவது போல் தன கனிவை,செல்லத்தை மறைப்பது, மனைவியிடன் காட்டும் romance கலந்த நன்றியுணர்வுடன் கூடிய அன்பு இவை பார்த்து அனுபவிக்க வேண்டியவை.
டாக்டருடன் பல வருடங்களுக்கு பிறகான சந்திப்பு காட்சி ஒரு கல்வெட்டு. தயக்கம் கலந்த anxiety உடன் நுழைவது ஓர கண்ணால் சிறி து தயக்கம்,சங்கடம், curiousity கலந்த eye follow up என்று ஆரம்பித்து, formal ஆக தொடங்கி,கேட்க விரும்புவதை கேட்டு, நட்பை re -assert செய்து விட்டு,முடிவில் சிதார் ஓசை கேட்டு அலையும் மனதுடன், restless ஆக ,மகனை பார்க்க விழைந்து ,அரை மனுதுடன் ,திரும்பி செல்லும் கட்டம்.சுந்தர்ராஜன்,சிவாஜி இருவருமே உணர்ந்து, அருமையாய் நிமிர்த் தியிருப்பார்கள் . இந்த காட்சி எதை உரைக்க வேண்டுமோ, அதை உரைத்து , எதை உயிர்ப்பிக்க வேண்டுமோ அதை உயிர்ப்பித்து, எதை அடைய வேண்டுமோ அதை அடைகிறது. perfect sub text for method acting .
கண்ணன் சந்திக்க வரும் காட்சியில், உணர்வுகளை காட்டும் அளவே காட்டி, மிகை குற்றவுணர்வு இன்றி, ஆனால் கண்ணன் அநாதையாக்க பட்டு வாழ்ந்ததன் வலிகளை மட்டுமே, ,ஒரு தந்தையாக empathise செய்வார். இந்த காட்சி ,இன்றளவும் பேச படுவதற்கு காரணமே,மற்றவர்களை தூக்கி காண்பிக்கும் அளவு perform செய்த சங்கரே.
காணாமல் போன விஜய் பற்றி வரும் டெலிபோன் காட்சியில் , பதற்றம் ,எச்சரிக்கை, பதைபதைப்பு,மகனுக்கு எதுவும் நேர கூடாது என்று அவர் விடும் இயலாமை கலந்த வெற்று மிரட்டல் என்று ,ஒரு சராசரி காட்சியில் கூட நடிப்பு கொடி பறக்கும்.
ஆயிற்று. இத்தனை மேம்பட்ட கண்ணன் பாத்திரத்தை,சங்கர் பத்திரத்தை, ஒரு மேதை தன் வாழ்நாளின் one of the best என்று சொல்லும் அளவு பண்ணி விட்ட பிறகு, to lighten the proceedings என்று filler பாத்திரமான விஜய் என்ன செய்து ,இவர்களை சமாளிக்க போகிறது?
விஜய் என்னதான் செய்யவில்லை?ஒரு உலகத்திலேயே சிறந்த மகா கலைஞன், தன் சுதந்திர கற்பனைகளோடு, எந்த realism சார்ந்த விஷயங்களோடும் சமரசம் செய்து கொள்ளாமல், முழுதும் தன் திறமை மற்றும் creativity ஐ நம்பி மட்டும் ஒரு பாத்திரத்தை conceptualise செய்து execute செய்தால்? தங்கத்தை போன்று ஜொலித்தன நெல் மணிகள் என்று கவிஞன் எழுதும் சுதந்திரத்தால் தான் கலைகள் ஜீவிக்கின்றன. மொக்கை தனமாக, நெல் மணிகள் நெல் போல தானே இருக்க வேண்டும் என்போருக்கு, கலைகளை ரசிக்கும் பக்குவமோ,அறிவோ இல்லை என்று பொருள். சரோஜா தேவியின் புத்தகம் கூட realism தான். அதை படிப்பதும் சுலபம். ஆனால் ஒரு காளிதாசன் ,கம்பனை பயில பயிற்சி தேவை. அல்லது என் போல ஒரு பொழிப்புரையாளன் தேவை.அப்படித்தான் அந்த உலக கலைஞனின் பாத்திர வார்ப்புகளும்.
விஜய் முதல் shot இலேயே ஈர்த்து விடுகிறான். பிறகு ஈர்க்க பட்டவர்களை தன்னிடையே தக்க வைக்கிறான். scene stealing செய்கிறான்.Antics செய்கிறான்.. பக்கத்திலிருக்கும் ,காமெடியன் ஒருவனை அவன் விளையாட்டிலேயே ஜெயிக்கிறான்.(beating bull in its game ). வேறு படுத்தி கொள்கிறான், நடை ,உடை,பாவனைகளில்.முக்கியமாய் இது வரை காணாத புதுமை ஆக்குகிறான். அதே நேரத்தில் ஒரு பாத்திரமாகவும் establish செய்கிறான்.ஜனங்களை ஆசுவாச படுத்துகிறான்.(heavy emotion ridden proceeding இல் இருந்து) .இன்னும் நிறைய காட்சிகளில் வர மாட்டானா என்று ஏங்கவே வைத்து விடுகிறான்.
கூர்ந்து கவனித்தால் , விஜய் much more than a spoilt mother 's virgin boy and a rich brat . பணத்தின் சௌகரியங்கள் கிடைத்தும், ஒரு identity crisis and false start உள்ள vested interest கொண்ட நண்பர்களால் சூழ பட்டவன். அம்மா, அப்பாவின் அதீத அரவணைப்பில் இருந்தாலும், முழு அப்பாவியும் அல்ல.அதீத பாதுகாப்பே ,அவன் ஆபத்துகளை உணர முடியாமல் செய்து விடுகிறது.தன்னால் தன்னை காத்து கொள்ள முடியும் என்ற அசட்டு நம்பிக்கை வேறு.ஆனால் விஜய்யை புன்னகையோடு தொடர முடியும்.
நண்பன் என்று சூழ்ந்தவனின் அதீத gimmick ஐ எள்ளுகிறான். (அதான் நான் வரை வரைக்கும் கயிறு கூட மாட்டிக்காமே???), விஜய் உனக்குன்னு கேளு என்றதும், இல்லை,இல்லை உனக்குன்னு கேட்கிறேன், அப்பத்தான் குகுளுன்னு என் daddy கொடுக்கும் என்று சொல்லும் அழகு.(நாகேஷ் வேடிக்கை தான் பார்ப்பார் என்ன பண்ணி புகுரலாம் என்று. ம்ஹும் chance இல்லவே இல்லை). மழலையான ஆங்கிலம் கலந்த தமிழ் உச்சரிப்பிலிருந்து , சுருட்டி கொண்டு சோம்பேறி கோழி தூக்கம் போடுவதாகட்டும்,அம்மா வை ice வைப்பதாகட்டும் (first class Tamil Picture கூட்டிட்டு போறேன் )உன் மேலதான் daddy க்கு எவ்ளோ லவ்வு என்று லொள் விடுவது என்று. (பின்னாடி மௌன ராகம் கார்த்திக் character இதிலிருந்து inspire ஆனதே.சந்திரமௌலி போன்ற antics .அந்த character உம் ஈர்ப்பு கொண்ட synthetic கற்பனையே ).
தன் ரூமில் யாரோ இருப்பதை தெரிந்து, அப்பா அம்மா இல்லை என்று உறுதியானதும், thief என்று மிரட்டல் ,பயம் கலந்த மெல்லிய மிரட்டல், anxiety யுடன் தேய்ந்த குரலில் மூன்றாவது thief என்று விஜய் என்னை முழுவதும் ஆட்கொண்ட பிறகு, சங்கராவது,
கண்ணனாவது?
தன்னிடம் வீட்டிலிருக்கும் கண்ணனை பற்றி பேசும் நிம்மியிடம், அவள் மடியில் உறங்குவது போல் disinterest காட்டி பின் சகிப்பு தன்மை இருக்கிறது. யாரோ புல்புல்தாரா வாசிப்பான் அவன் ரூமுக்கு போறேன் என்று என் கிட்டேயே என்று cute ஆக காதலன் possessiveness குழந்தை தனமாக வெளியிடும் அழகு.(முந்திய வருடம் 80 வயது அப்பரான மனிதன், அடுத்த வருடம் retire ஆக போகும் ஒரு பிராமணன், 20 வயது lover boy ஆக எல்லோர் மனதையும் அள்ளும் அழகு ). அப்பா அமாவிடம் அவர் காதலியை அறிமுக படுத்தும் அழகே அழகு.(certainly not .அதனால்தான் மம்மியை கட்டிக்கிட்டீங்களா, இது செய்யனும்....போன்ற one liner ).
அது மட்டுமல்ல, விஜய்யின் entry தான் அந்த மூன்று சிவாஜி தோன்றும் காட்சிக்கே, epic cult status கொடுக்கிறது. தன் தம்பியே ,தன் பெற்றோர்களுக்கு போதும் என்று கண்ணனை convince செய்து விடுகிறது. அதற்கு முன்னாள் நடந்த அத்தனை உணர்ச்சி மிகு encounter செய்யாத அதிசயம். பார்வையாளர்களும் convince ஆகி விடுகிறோம்.(கண்ணன் cheque ஐ நிராகரிக்கும் நிர்தாட்சண்யம் , விஜய் அதை உரிமை நிறைந்த ஆவலுடன் எடுக்கும் அழகு-- இந்த காட்சியையே அர்த்த படுத்தி விடவில்லையா)
கடைசி காட்சியிலும், அவ்வளவு பெரிய வில்லன் கும்பலிடம், அசட்டு மிரட்டலுடன் போராட்டம். டே... head லியா அடிச்சே என்று மயங்கி சாய்வது.
எனக்கு தெரிந்து character identity establish செய்து சாதாரண one liners ஐ அதீத ரசிக்கும் காமெடி ஆக்கிய அதிசயம் இந்த படத்தில்தான் நிகழ்ந்தது. ஒரு சாதாரண வலுவில்லாத பாத்திர படைப்பு, உலகத்திலேயே அதிக வலுவுள்ள நடிகனின் கற்பனையால் மட்டும் அமர துவம் பெற்று, அவரே நடித்த வலுவுள்ள மற்ற பாத்திரங்களை இரண்டு, மூன்று என்று வரிசை படுத்தும் உலக அதிசயம் நிகழ்ந்த ஒரே காரணம்---தெய்வ மகன் விஜய்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Ganesh Pooja around - He was primely responsible for triggering Tamil God into rage of Fury ,thus revelaling Thiruvilayadal, showing prowess of our Acting God,setting Benchmark for Lord Shiva.
திருவிளையாடல்- 1965.
சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.
1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.
திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)
முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).
இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)
இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.
உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.
"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).
இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )
நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.
கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.
இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.
முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.
அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.
அடுத்த episode love teasing பிரச்சினை.
அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.
இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.
இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )
முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.
என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.
சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.
சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)
குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).
மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.
அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.
கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.
நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?
ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.
இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
-
இங்குள்ள பிரச்சினைதான் என்ன?
-
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
ஏவி.எம்முக்கு பலூன் விளம்பரம் மூலமாக கிடைத்த அனுபவம் என்ன?
சென்னையில் உயரத்தில் எந்த விளம்பரம் செய்வதாக இருந்தாலும் விமான நிலைய நிர்வாகத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. அப்படி இருப்பது ஏவி.எம். நிறுவனத்திற்கு தெரியாது.
அதே போல ஹைட்ரஜன் சிலிண்டரின் உதவியால் பறக்கும் அந்த பலூனுக்காக சிலிண்டர் வைக்கவும் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஏவி.எம். இரண்டையும் செய்யவில்லை.
விமான நிலைய அதிகாரிகளிடமிருந்தும், `இன்ஸ்பெக்டர் ஆப் எக்ஸ்புளோஸிவ்ஸ்’ அலுவலகங்களிலிருந்தும் தனித்தனியாக ஏவி.எம்முக்கு நோட்டிஸ்கள் போயின.
அதை ஒரு வழியாக தீர்த்தார்கள்.
`பாவமன்னிப்பு’ வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது.
பாடல்களுக்கு இருந்த வரவேற்பை பார்த்த ஏவி.எம். செட்டியார் ஒரு புதிய உத்தியை கையாண்டார்.
அதன்படி `பாவமன்னிப்பு’ பாடல்கள் போட்டி ஒன்றை நடத்தினார்.
படத்தின் பாடல்களை நேயர்கள் தங்கள் ரசனைப்படி வரிசைப்படுத்தி எழுத வேண்டும், பின்னர் நீதிபதிகள் வரிசைபடுத்தியிருப்பதற்கு எது ஒத்திருக்கிறதோ அதற்குப் பரிசு. பெருமளவில் ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.
பெரிய நோட்டுப் புத்தகங்கள், லெட்ஜர்களிலெல்லாம் பல்வேறு காம்பினேஷன்களில் பாடல்களை வரிசைப்படுத்தி அவர்கள் எழுதியனுப்பியவை ஏவி.எம்மில் ஓர் அறை முழுவதும் குவிந்தது. யாரும், எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். இதனால் ரசிகர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டார்கள்.
கவிதாயினி சவுந்தரா கைலாசம் (முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மாமியார், மறைந்த நீதிபதி கைலாசத்தின் மனைவி) உள்ளிட்ட பெருமக்கள் நீதிபதிகளாக இருந்தார்கள்.
ஸ்டூடியோ வளாகத்தில் திறந்தவெளியில் ஒரு (கரும்பலகையில் `தீர்மானிக்கப்பட்ட பாடல் வரிசை’ காலம் பல கடந்த – அத்தான் – என்னத்தான், வந்த நாள்முதல் – காலங்களில் அவள் வசந்தம் – பாலிருக்கும் பழமிருக்கும் – ஓவியம் கலைந்ததென்று – எல்லோரும் கொண்டாடுவோம் – சாயவேட்டி) சாக்பீஸில் எழுதிப் போட்டு எங்கள் ஊழியர்களிடம் நேயர்களின் கடிதங்களை பிரித்துத் தந்து சரிபார்க்கச் சொன்னோம். ஏதோ பெரிய தேர்வு ஒன்றில் கலந்து கொள்வது போல எங்கள் ஊழியர்கள் அமர்ந்து ஈடுபட்டார்கள். ஒரு திரைப்படத்தின் பாடல்களையும், ரசிகர்களையும் சம்பந்தபடுத்தி ஒரு போட்டி நடத்தப்பட்டது, அதுதான் தமிழில் முதல் தடவை என்று அனைவரும் ஏவி.எம். நிறுவனத்தை பாராட்டினார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், வெற்றி பெற்றவர்கள் பரிசு தொகையான பத்தாயிரம் ரூபாயை பகிர்ந்து கொண்ட போது தபாலுக்குச் செய்த செலவு கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர்களுக்கு ஒரு `த்ரில்’ இருந்தது.
`பாவமன்னிப்பு படத்தைப் பார்த்தார் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். அவர் நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகை. அதேபோல் சிவாஜியும் லதாவின் ரசிகர்.
படத்தை பார்த்த லதா மங்கேஷ்கர் `எனக்கு இந்தப் படத்தில் 16 எம்.எம். பிரிண்ட் ஒன்று வேண்டும்’ என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.
அந்த அளவுக்கு அவர் `பாவமன்னிப்பு’ படத்தை ரசித்தார்.
அவர் அப்படிக் கேட்டபோது ஏவி.எம். பெருமை கொண்டது.
சிவாஜியின் `பா’ வரிசையில் வந்த அடுத்த படம் ‘பச்சை விளக்கு’.
ராம. அரங்கண்ணல் மற்றும் இரு நண்பர்களோடு சேர்ந்து ஏவி.எம். எடுத்த இந்த படம் 3.4.1964 அன்று வெளியானது.
இந்த படத்தில் சிவாஜி ஒரு இன்ஜின் டிரைவர். நாகேஷ் அவரது நண்பர்.
இந்த அடிப்படையை வைத்து ஒரு கதையை உருவாக்கினார்கள்.
படம் பாதியளவு வளர்ந்துவிட்டது. ஆனால், படத்துக்கு பெயர் முடிவாகாமலேயே இருந்தது.
ஏவி.எம். சரவணன் வழக்கமாக ஸ்டூடியோவுக்கு காரில் போகும் போது தி.நகரில் கிருஷ்ண கான சபா அருகே திரும்பினால் சிறிய ரயில்வே கேட் இருக்கும். அதைத் தாண்டித்தான் அவர் போக வேண்டும்.
ஒரு நாள் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
“இன்ஜின் டிரைவரை மையமாக வைத்து எடுக்கப்போகும் படத்துக்கு என்ன பெயர் வைப்பது என்பது முடிவாகாமல் இருந்த நிலையில், ரசிகர்களுக்கு ஒரு யூகமாக அந்தப் படத்தை பற்றிச் சொல்லலாம் என்று நினைத்தேன்”.
அப்போது தனக்கு சட்டென்று தோன்றிய யோசனையை செயல்படுத்தினார் சரவணன்.
ரயில்வே கேட் அருகில் மூன்று ` பேனல்’ களை வாடகைக்கு எடுத்து அவற்றில்` சிவாஜி நடிக்கும்’ என்று போட்டு வெறுமனே ஒரு பச்சை விளக்கின் படத்தை – சிக்னலில் பச்சை விழுமே அல்லது கார்டு கையில் வைத்திருப்பாரே அது போன்ற படத்தை வரைந்து அதன் கீழ் `வருகிறது’ என்ற வார்த்தைகளுடன் விளம்பரப்படுத்தினார்கள்.
படத்தின் பெயர் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டபோது பல பெயர்கள் அலசப்பட்டன.
ஆனால் இயக்குநர் பீம்சிங் போன்றவர்கள் `இதில் விவாதிக்க என்ன இருக்கிறது? அதுதான் நீங்கள் `பச்சை விளக்கைப் போட்டு வருகிறது வருகிறது என்று பேச வைத்துவிட்டீர்களே!
படத்தின் பெயர் ‘பச்சை விளக்கு’த்தான் வேறென்ன ?’ என்று முடிவுக்கு வர, `பச்சை விளக்கு’ என்ற பெயர் அப்படித்தான் அந்த படத்திற்கு வந்தது.
இந்த படத்திலும் கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஜோடி கலக்கியிருந்தார்கள்.
‘பாவமன்னிப்பு’ படத்தை போலவே இந்த படத்திற்கும் ஏவி.எம். நிறுவனம் போட்டி வைத்திருக்கலாம்.
அந்த அளவுக்கு பாடலில் புகுந்து விளையாடியிருந்தார்கள்.
இன்றைக்கு ‘பச்சை விளக்கு’ படம் என்றால் மக்களுக்கு அதன் பாடல்கள் தான் நினைவுக்கு வரும்.
`ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது,’ `கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று’ ‘குத்து விளக்கு எரிய’ ‘தூது சொல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தோழி’ இன்றைக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடல்கள்.
இந்த படத்தில் நாகேஷின் நடிப்பு மிக அருமை.
அதுவும் அந்த படத்தில் மிகவும் பிரபலமான ` கேள்வி பிறந்தது அன்று’ பாடலை பாடிக்கொண்டே சிவாஜி ரயில்வே டிராக்கில் நடந்து கொண்டே வருவார்.
அவர் கூட நாகேஷ் நடந்து வருவார்.
பாடலை காதால் கேட்ட ரசிகர்கள், சிவாஜியை விட நாகேஷின் அங்க அசைவுகளுக்காக கைதட்டினார்கள்.
இந்த படமும் ஒரு வகையில் அண்ணன்– தங்கை பாசப்பிணைப்பு கதைதான். ஆனால் தன்னை வளர்த்தவரின் அனாதையான மகளை தன் தங்கையாக சிவாஜி ஏற்றுக்கொள்வார்.
பாடலும், கதையும் படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால் இந்த படத்திற்கும் ஒரு சிக்கல் வந்தது!
(தொடரும்)
-
What happened before it was Page no. 214, now it is page no. 212.
-
-
சிவாஜியின் நகைச் சுவை நடிப்புக்கு, எல்லோரும் சபாஷ் மீனா,பலே பாண்டியா,கலாட்டா கல்யாணம் ,ஊட்டி வரை உறவு இவற்றையே உதாரணம் காட்டுவர். அவர் முழு நீள நகைசுவை பட பட்டியல் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)தொடங்கி அன்பே ஆருயிரே (1975) வரை நீளும். நடிகர்திலகம், விரும்பி பண்ணியவை நகைச் சுவை
பாத்திரங்களே.
ஆனால் என்னுடைய பார்வையில் ,அவர் நகைச்சுவையின் முழு வீச்சு சூழ்நிலை காமெடி(situational ) என்ற சூழலில் ,பகுதி நகைச்சுவையாக வந்த படங்களில் அமைந்தவை. வசன காமெடி,ஸ்லாப்ஸ்டிக் என படும் கொனஷ்டைகள் ,அதற்கேற்ப உடல் வாகு,குரல் வாகு கொண்டவர்களுக்கே மிக பொருத்தம். (சந்திரபாபு,நாகேஷ்,சுருளி,வடிவேலு) ஓரளவு ஸ்லாப்ஸ்டிக் செய்வார்.(புன்னகை மன்னன்,பேசும் படம்)சிவாஜியின் தோரணை மிகுந்த ஆண்மைக்கு ,சூழ்நிலை நகைசுவை காட்சிகளே பிரதான தீனி போட்டன.இதிலும் நான் தேர்ந்தெடுக்கும் படங்கள் உங்களுக்கு அவ்வளவாக பரிச்சயம் உள்ளவையா(நகைச்சுவைக்கு) யானறியேன்.
1)நீல வானம்.
2)இருவர் உள்ளம்.
3)தெய்வ மகன்.
4)செல்வம்.
5)சபாஷ் மீனா.
6)சுமதி என் சுந்தரி.
7)கை கொடுத்த தெய்வம்.
8)நவராத்திரி.
9)ராஜா
10)பாரத விலாஸ்
இதில் எனக்கு பிடித்த காட்சிகளை,நடிகர்திலகத்தின் உன்னத நகைச்சுவை வெளியீட்டை அலச போகிறேன்.
-
-