Originally Posted by
esvee
ஜெனோவா திரைப்படம் கிருத்துவ புராணத்தின் அடிப்படையில் உருவான திரைப்படமாகும், இப்படத்தில் ராணி ஜெனோவாக "பி.எஸ்.சரோஜாவும்" யூதமன்னர் சிப்ரஸாக "எம்..ஜி. ஆர்." நடித்தனர். இயக்கம் எஃப்.நாகூர், இசை.எம்.எஸ்.விசுவநாதன்(முதல் மலையாள இசையமைப்பு).
கி.பி 1953 ஆம் ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று திரையிட திட்டமிடப்பட்டு , தயாரிப்பு சிக்கல்களால் 13 நாட்கள் தாமதமாக வெளியானாலும் ,அவ்வாண்டின் மிகப்பெரிய மலையாள வெற்றிப்படமாக "ஜெனோவா" அமைந்தது.பின்னர் இரு மாதங்களுக்கு பிறகு தமிழிலும் அதே பெயரிலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாயிற்று.
கதைப்படி மன்னர் சிப்ரசின் மனைவி ஜெனோவா, திருமணம் ஆகி சில நாட்களில் போருக்காக மன்னர் பரதேசம் சென்றுவிடுகிறார்,ஆனால் அப்பொழுதே ராணி "ஜெனோவா" கருவுற்றுவிடுகிறார். அது மன்னருக்கு தெரியாது.
சிப்ரஸ் போர்க்களத்தில் இருக்கையில் மந்திரி "கோலோ"(மலையாளத்தில் ஆலப்பி வின்சென்ட்,தமிழில் பி.எஸ்வீரப்பா)வுக்கு ராணி ஜெனோவா மீது மையல் உருவாகி அடைய முயற்சிக்கிறார்,அவ்வேளையில் நம்பிக்கையான வேலையாள் "கார்த்தோஸ்" குறுக்கிட்டு ராணியை காப்பாற்றுகிறார், வெளிப்படையாக தனது சதியை காட்டிக்கொள்ள இயலாத நயவஞ்சக "மந்திரி" ராணிக்கும் வேலைக்காரன் "கார்த்தோசுக்கும்" கள்ளத்தொடர்பு எனக்கதைக்கட்டி ,இருவரையும் சிறையில் அடைக்கிறார்.
யுத்தம் முடிந்து வரும் மன்னர் "சிப்ரசோவும்" மந்திரியின் பேச்சினை நம்பி ,ராணி ஜெனோவாவினை நாடுக்கடத்திவிட்டு, வேலையாள் "கார்த்தோசுக்கு" மரணதண்டனை விதிக்கிறார். கர்ப்பிணியாக காட்டில் திரியும் ராணி ஜெனோவாவினை காக்கும் பொருட்டு "மேரியம்மா" பிரசன்னம் ஆகி சுகப்பிரசவம் ஆக செய்து , தாயையும் சேயையும் காக்கிறார். அவர்கள் காட்டிலேயே வாழ்கிறார்கள்.
இதற்கிடையில் நயவஞ்சக மந்திரி "மன்னர் சிப்ரசோவை" சிறையில் அடைத்து ஆட்சியைப்பிடிக்கிறார்,ஆனால் படைத்தளபதிக்கும்(எம்.ஜி.சக்கரபாணி) மன்னராக ஆசை எனவே அவரும் கிளர்ச்சி செய்கிறார், இடையில் மன்னரின் விசுவாசிகள் ,மன்னரை மீட்கிறார்கள் , மூன்று தரப்பாக சண்டை நடக்கிறது, படைத்தளபதி மட்டும் இறக்கிறார், மந்திரி கோலோ தப்பிவிடுகிறார்.
பின்னர் ராணி ஜெனோவா நிரபராதி என அறிந்து தேடிச்செல்லும் மன்னர் சிப்ரசை ,மந்திரி கோலோ காட்டில் வழிமறித்து தாக்குகிறார்,சண்டையின் முடிவில் மந்திரி கொல்லப்படுகிறார்,ஆனால் காயமுற்ற மன்னர் சிப்ரசோ மயக்கமாகிவிடவே ,அப்பொழுது அங்கு வரும் அவரின் கானக புதல்வன் கண்டெடுத்து மீட்டு அன்னையுடன் சேர்க்கிறார், பின்னர் மனமாச்சரியங்கள் ஒழிந்து ,நாடு திரும்பி அனைவரும் மகிழ்வாக வாழ்வதாக "பாசிட்டிவ்" ஆக படத்தினை முடித்து மங்கலம் பாடுகிறார்கள்.
இப்படத்திற்கு மலையாளத்தில் எம்..ஜி. ஆர்.ருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது செபாஸ்தியன் குஞ்சு மற்றும் குஞ்சு பாகவதர் ஆகும். ஒரு மலையாளப்படத்தில் நாயகருக்கு முதன் முதலில் டப்பிங் கொடுக்கப்பட்டது இப்படத்தில் தானாம். பாடல்களை ஏ.எம்.ராஜா மற்றும் பி.லீலா பாடியுள்ளனர்.