http://uploads.tapatalk-cdn.com/2016...ad1dfb9be4.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...c46474c77d.jpg
Printable View
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 144 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
இந்த அத்தியாயத்தை நான் கதை – வசனகர்த்தா ஆரூர்தாஸுக்குத்தான் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
காரணம் அவர் தனது `சிவாஜி கண்ட சினிமா ராஜ்ஜியம்’ புத்தகத்தில் சிவாஜி – எம்.ஜி.ஆர் பற்றிய சில அரிய தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.
அதில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு ` நாடறியாத உண்மை.’
அதில் என்ன சொல்கிறார்?
சிவாஜியிடம் சிறந்த நடிப்பாற்றலுடன் சீரிய நற்பண்புகளும் குடிகொண்டிருந்தன என்பது, அவருடன் நெருங்கிப் பழகி அவரை நன்கு புரிந்து கொண்டிருப்பவர்களுத்தான் தெரியும்.
மனதார எவருக்கும் எந்தக் கெடுதலும் செய்யமாட்டார். தன்னால் ஒரு படமோ அந்தப் படத்தின் படப்பிடிப்போ பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்.
அவர் நடிக்கும் படங்களில், மனதளவுக்கு அவருக்கு ஒவ்வாத சக நடிகர்கள் இருப்பதை சிறிதும் பொருட்படுத்தமாட்டார். `இவர் வேண்டாம் – அவரைப் போடு’ என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து நான் கேட்டதேயில்லை.
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்து அந்நாட்களில் அவரோடு ஒரு சிறந்த `காம்பினேஷன் மவுஸ்’ ஏற்படுத்திக்கொண்டிருந்த சரோஜாதேவியை சிவாஜி பிலிம்ஸின் சொந்தப் படம் `புதிய பறவை’ படத்தில் கதாநாயகியாகப் போட்டுக்கொள்ளலாம் என்று தன் தம்பி சண்முகம் கூறியதற்கு சிவாஜி மறுப்புத் தெரிவிக்கவில்லை.
தான் நடிக்கும் படங்களில் `பாலிடிக்ஸ்’ பற்றி எந்த விவரத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல், தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று இருந்துவிடுவார்.
தனக்கு இந்த படத்தில் இவ்வளவு சம்பளம் என்பதே அவருக்கு நினைவிருக்காது. முன்பணத்தையும், படம் முடிந்ததும் தரப்ப்படும் முழுப்பணத்தையும் அவர் தன் கையால் தொட்டதே இல்லை.
சிவாஜி பிலிம்ஸில் இருந்து அவ்வப்போது கடிதங்கள் வரும். அவற்றில் கையெழுத்துப் போடுவார். அந்தச் சமயங்களில் அவர் அருகில் அமர்ந்திருக்கும் என்னிடம் குறும்பாகக் கூறுவார்.
`சிவாஜி பிலிம்ஸ் என்னைக் குத்தகைக்கு எடுத்திருக்கு. அந்தக் குத்தகைப் பத்திரத்தில்தான் இப்போ நான் கையெழுத்து போடறேன்.’
இதை நான் சிரித்துக்கொண்டே கேட்பேன், ` அண்ணே! இப்போ ஒரு லட்ச ரூபாயை ஒங்க கையில் கொடுத்தா நீங்க என்ன செய்வீங்க?’
`உடனே உன் கையில் கொடுத்திடுவேன்.’
`எதுக்கு?’
`சரியா இருக்கான்னு எண்ணிப் பாக்கறதுக்கு’
`ஏன் நீங்க எண்ணிப் பாக்கமாட்டீங்களா ?’
`ஊஹூம், எண்ணத் தெரிஞ்சாதானே? ஆமா.. ஒரு லட்சத்தில் எத்தனை ஆயிரம் இருக்கும்?’
`நூறு ஆயிரம் இருக்கும்’ என்று நான் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன், `அடேங்கப்பா! நூறு ஆயிரமா? ஆயிரமே ரொம்ப பெரிசாச்சே!’ சரி ஆருரான், நான் இப்படி கேட்டதை வெளியில யாருக்கும் சொல்லிடாதே.’
`ஏன்?’
`எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனச்சிடுவானுங்கன’
`உண்மைதானே! நடிப்பு ஒண்ணைத்தவிர, வேறு எதுவுமே உங்களுக்குத் தெரியாதுங்கிறது நாடறிஞ்சதுதானே! நீங்க என்னைக் கேக்குறீங்க, ஏன் சினிமாவுக்கு வந்தேன்னு?’
`ஆமா! தம் அடிக்க மாட்டேன்ங்கறே, தண்ணி அடிக்க மாட்டேன்ங்கறே, சீட்டாடத் தெரியாது. பெண்ணுங்க சகவாசம் கிடையாது. இப்படிப்பட்ட உன்னை எவன் சினிமாவுக்கு வரச்சொன்னான்?’
`தெரியாத்தனமா வந்து விழுந்துட்டேன். மன்னிச்சிடுங்க. இனிமே வரமாட்டேன்.’
`இனிமே என்னத்த வராம இருக்கிறது? அதான் வந்து என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கியே, அப்புறம் என்ன?’
`உயிரை வாங்கிக்கிட்டிருக்கியே’ என்று அவர் சொன்னது – வசனம் பேசுவது சம்பந்தமாக சில நேரங்களில் சிவாஜிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் எங்களுக்குள் உண்டாகும் வாய்ச்சண்டையை குறிக்கும் பொருட்டு.
அதே புத்தகத்தில் இன்னொரு அத்தியாயத்தில் ஆரூர்தாஸ் இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்கிறார்.
அன்றைக்கு பட உலகில் இருந்த சம்பள நிலவரத்தைப் பற்றிய இன்னொரு சுவையான தகவல்களை சொல்கிறேன்.
1952ல் `பராசக்தி’ படத்தில் நடித்ததற்காக சிவாஜி கணேசனுக்கு கொடுக்கப்பட்ட மாதத் சம்பளம் 250 ரூபாய்!
அதே சிவாஜி 16 ஆண்டுகளாக 124 படங்களில் நடித்த பிறகு, 125 படமாக, 1968ல் வெளியான ஏவி.எம்.மின் ` உயர்ந்த மனிதன்’ படத்துக்கு வாங்கிய சம்பளம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்!
அப்போது இயக்குநர் ஏ.பி. நாகராஜன் சிவாஜியை வைத்து `திருவிளையாடல்’ `திருவருட் செல்வர்’ ,`சரஸ்வதி சபதம்’, ` திருமால் பெருமை’, ` தில்லானா மோகனாம்பாள்’ போன்ற வெற்றிப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.
`அவர் இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறார். அதே சம்பளம் `உயர்ந்த மனிதன்’ படத்துக்கும் வேண்டும் என்று சிவாஜியின் தம்பி சண்முகம் கேட்டதற்கு ஏவி.மெய்யப்ப செட்டியார் மறுத்துவிட்டார்.
`அவை எல்லாம் கலரில், அதிக செலவில் எடுக்கப்பட்ட படங்கள். இது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்படும் சாதாரண குடும்பப்படம். இதற்கு இவ்வளவுதான் சம்பளம். இதற்கு மேல் கொடுப்பதற்கில்லை’ என்று கூறிவிட்டார்.
`சரி’ என்று சொன்ன சண்முகம், முன்பணம் எதுவும் வேண்டாம். முடிந்ததும் மொத்தமாக வாங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டார்.
கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, சில நாட்கள் நடைபெற்ற பிறகு, மேற்கொண்டு தொடராமல் நிறுத்தப்பட்டு விட்டது.
அதற்குக் காரணம் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற `குழந்தையும் தெய்வமும்’ தமிழ் படத்தை `தோ கலியான்’ (இரு மொட்டுக்கள்) என்ற பெயரில் இந்தியில் அதே இயக்குநர்கள் இயக்க ஏவி.எம். தயாரித்தது. அந்த சமயத்தில் `குழந்தையும் தெய்வமும்’ கதையில் ஆங்கில மூலப்படமான PARENT TRAP ஐ ` வாபஸ்’ என்ற தலைப்பில் வேறொரு மும்பை கம்பெனி படமாக தயாரித்துக்கொண்டிருந்தது.
அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தனது ` தோ கலியான்’ படத்தை ரிலீஸ் செய்துவிட முடிவு செய்த செட்டியார் அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு இயக்குநர்களையும் முடுக்கிவிட்டார்.
அதனால் எட்டு மாதங்களாகியும் `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு எதுவும் நடைபெறாததால் சந்தேகம் கொண்ட சிவாஜியும் அவரது தம்பி சண்முகமும், அதை சிவாஜி பிலிம்ஸ் சார்பில் சொந்தமாக தயாரிக்கலாம் என்று திட்டமிட்டனர்.
`உயர்ந்த மனிதன்’ கதை – வசனத்தை எழுத ஜாவர் சீதாராமன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். கதையை மட்டும் வைத்துக்கொண்டு வசனத்தை என்னை எழுதும்படி சிவாஜி சொன்னார்.
சண்முகம், ஏவி.எம்.மைச் சந்தித்து, `உயர்ந்த மனிதன்’ பற்றி கேட்டதற்கு, அவர் அதற்கான காரணத்தைச் சொன்னார். விரைவில் அந்த படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் சொன்னார். அதோடு நில்லாமல் அவர்களின் சந்தேகத்தைப் போக்குவதற்காக ஒரு காரியத்தை செய்தார் ஏவி.மெய்யப்ப செட்டியார்.
(தொடரும்)