Quote:
அன்புள்ள் ஜெ,
நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே யோசிக்க வேண்டும். அவருக்கு உங்களைப்போன்ற உயிர்நண்பரின் உதவி தேவைப்படுகிறது இப்போது. சாருவைப்பற்றி பயமில்லை. அது ஒரு சர்க்கஸ். ஒருவருடம் முன்பு இதே நந்தலாலாவை பார்த்துவிட்டு இளையராஜாவின் இசைமேதமையைப்பற்றி கண்ணீர்மல்க எழுதினார். கேட்டு அழுதேன் என்றார். இன்று அந்த இணைப்பையே எடுத்துவிட்டார். ஷாஜியை நீங்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல மனிதர் என்று நினைக்கிறேன்
நந்தகுமார், சென்னை
அன்புள்ள நந்தகுமார்
இந்த ஆட்டத்துக்கே நான் இல்லை. ஆளை விடுங்கள்.
ஷாஜி என்னிடம் இளையராஜாவின் பின்னணி இசை சர்வதேசத்தரம் கொண்டதாக, மனதை உலுக்குவதாக இருப்பதாகத்தான் சொன்னார். அதேசமயம் கடைசியில் பாடல் வருவதும், சில இடங்களில் இசை மேலே ஏறி ஒலிப்பதும் தனக்கு கொஞ்சம் மிகையாக தெரிவதாகச் சொன்னார்.
நான் அவருக்கு படத்தின் ஒலிக்கலவையின்போது இயக்குநர்தான் அதை முடிவுசெய்கிறார் என்று விளக்கினேன். பின்னணி இசை எந்த அளவுக்கு ஒலிக்கவேண்டும், எங்கே அமைதியாகவேண்டும், எங்கே ஒலிவிளைவுகள் மேலே எழ வேண்டும், எங்கே சூழல் ஒலிகள் கேட்கவேண்டும், எங்கே வசனம் ஒலிக்கவேண்டும் என்று இயக்குநரும் ஒலிநிபுணரும் சேர்ந்து தான் தீர்மானிக்கிறார்கள். பின்னணி இசை பல படிகள் முன்னரே அளிக்கப்பட்டுவிடும்.
ஷாஜி அதை தொலைக்காட்சியிலும் சொல்லியிருக்கிறார். அவர் எவரிடமும் மாற்றுக்கருத்து எதையும் சொல்லவில்லை என்றும், தவறான முறையில் தன் கூற்று கொடுக்கப்பட்டிருப்பதை விலக்கிக்கொள்ள கேட்டிருப்பதாகவும் சொன்னார்
ஜெ