Quote:
Originally Posted by RAGHAVENDRA
தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழனான நடிகர் திலகத்தை தமிழ்த் திரையுலகினரும் ஆள்வோரும் புறக்கணிக்கின்றனர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தமிழகத் தலைநகராம் சென்னையில் அவர் படங்களைத் திரையிடுவதில்லை என்பதே ஆகும். குறிப்பிட்ட சில திரைப்படங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மாயையை சித்தரித்து வேறு நடிகர் யாரையும் மக்கள் பார்க்க விரும்பாததைப் போலவும் ஒரு குறிப்பிட்ட நடிகரின் படங்களைப்பார்க்க மட்டுமே தமிழர்கள் அவதாரம் எடுத்து தவம் கிடப்பதாகவும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சித்தரித்து வருவதைப் பார்த்து உண்மையிலேயே மனம் மிகவும் வேதனைப் படுகிறது. நடிகர் திலகத்தின் படங்களைத் திரையரங்குகளில் திரையிட்டு அவை அனைத்தும் வினியோகஸ்த்ர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என்றால் அப்போது இவர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அன்றாடம் நாம் சந்திக்கும் அனைத்து சிவாஜி ரசிகர்களும் ஏக்கத்துடன் கேட்பது நாம் சிவாஜி படத்தை தியேட்டரில் பார்க்க முடியாதா என்பதே ஆகும். தமிழ் தமிழ் என்று கூறுவோர் கூட அவர்கள் சம்பந்தப்பட்ட மீடியாக்களில் நடிகர் திலகத்தை இருட்டடிப்புத் தான் செய்கிறார்கள். இது எப்படி முடிவுக்கு வரும். இந்த நிலை எப்போது தீரும்.
ராகவேந்திரன்
ராகவேந்தர் சார்,
தங்களின் ஆதங்கம் எண்ணற்ற சிவாஜி ரசிகர்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. சென்னையில் நடிகர்திலகத்தின் படங்களை திரையரங்குகளில் காண முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது, பழைய படங்களின் புகலிடங்களாக விளங்கி வந்த பழம்பெரும் திரையரங்குகள் பெரும்பாலானவை (கிட்டத்தட்ட அனைத்துமே கூட) மூடப்பட்டு, இடிக்கப்பட்டு அவை குடியிருப்பு வளாகங்களாகவோ, வணிக வளாகங்களாகவோ, வர்த்தக நிறுவனங்களின் அலுவலகங்களாகவோ மாறிப்போனதுதான் என்பது என் எண்ணம். பழைய திரைப்படங்களைக் காண விரும்புவோர்க்கு, அவர்கள் வசதிக்கேற்றாற்போன்ற கட்டணத்தில் இயங்கி வந்த அத்திரையரங்குகள் மறைந்து, தற்போது ஏகப்பட்ட நவீன வசதிகளுடன் பழைய படங்களால் எட்ட முடியாத அபரிமிதமான கட்டணங்களோடு கூடிய அரங்குகள் மட்டுமே காணப்படுகின்றன. அவையனைத்தும் புதிய திரைப்படங்களால் ஆக்ரமித்துக்கொள்ளப்படுவதுடன், கட்டணங்களோ பழைய படங்களைக்காண விரும்புவோரால் தாக்குப்பிடிக்க முடியாதவையாக இருக்கின்றன.
வீடியோ, சி.டி.க்கள், டி.வி.டி.க்கள் இவை போக ஏகப்பட்ட தொலைக்காட்சி சேனலகளில் மாறி மாறி பழைய படங்கள் என்று காட்டப்படும் இக்காலத்தில், மக்களால் எட்ட முடியாத கட்டணத்தில் புதிய அரங்குகளில் பழைய படங்களைத் திரையிடுவது என்பது பிரம்ம பிரயத்தனம். (நம் மக்களை நம்பி எந்த பரீட்சாத்த முயற்சியிலும் இறங்க முடியாது). உதாரணமாக சென்னை அண்ணாசாலை ஏரியாவில் பழைய படங்களைத் திரையிட்டு வந்த பாரகன், சித்ரா, வெலிங்டன், பிளாசா போன்ற எண்ணற்ற திரையரங்குகள் காணாமல் போய்விட்டன. சென்னை முழுக்கவும் இதே நிலைதான்.
சின்னஞ்சிறிய விநியோகஸ்தர்கள், காஸினோ தியேட்டர் அருகேயுள்ள மீரான்சாகிப் தெருவிலிருந்து பழைய படச்சுருள் பெட்டிகளை வாங்கி, சைக்கிள் கேரியர்களில் வைத்துக்கட்டி தியேட்டர்களுக்கு எடுத்துச்சென்று திரையிட்டு மகிழ்ந்த அந்த 'பொற்காலம்' எல்லாம் கனவாகிவிட்டது. வீடுகளே மினி தியேட்டர்களாக மாறி விட்ட இக்காலத்தில் பழைய நிலைக்கு மனம் ஏங்குதென்னவோ உண்மைதான்.
ஏக்கம் வெறும் கனவாகவே போய்விடாமல் மாற்றம் நிகழும் என நம்புவோம்.