காதலிக்க நேரமில்லை வயது 50
ஒரு திரைப்படம் 50 ஆண்டுகள் தாண்டியும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்றால் அது இந்த படம் தான் .. முழு நீள நகைச்சுவை திரைப்படம் எவ்வளவோ வந்துள்ளது ஆனாலும் ஒரு காதலிக்க நேரமில்லை மட்டும் தான் இன்றும் கலையை ரசிப்பவர்களையும் சரி நகைச்சுவை ரசிகர்களையும் சரி கட்டி இழுக்கத்தான் செய்கிறது .. அப்படிப்பட்ட படம் இது. இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் ஸ்ரீதரும் சித்ராலயா கோபுவும் தான்.
முழுக்க முழுக்க சீரியஸ் படங்களை எடுத்துக்கொண்டிருந்த ஸ்ரீதர் முழு நீள நகைச்சுவை சித்திரமாக ஒரு வெற்றியை கொடுக்க முடியும் என நிரூபித்தார்
படமா இது . இல்லை இல்லை காவியம் . எளிமையான கதை தான் . ஆனால் அதற்க்குள் மிகப்பிரமாதமான திரைக்கதை அமைத்து ஒரு நகைச்சுவை தோரணாமாக தொங்க விட்டார் என்றால் அது மிகையில்லை.
புது நாயக நாயகியரை வைத்து இப்படி ஒரு மாபெரும் வெற்றி கொடுத்தார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை .. இதற்கு முன்னால் முத்துராமன் சோகமான வேடங்களே செய்து வந்தார் .. அப்படி நடித்தவரை ஒரு வித்தியாசமான முழுக்க முழுக்க நகைச்சுவை நாயகனாக அதுவும் பெரும்பகுதியில் முதியவராகவும் வந்து நம்மை அசத்தியிருப்பார்.
மூன்று பெருமைக்குரிய அறிமுகமாக ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் ராஜஸ்ரீ .. ஆஹா இவர்களின் வளர்ச்சி பற்றி நான் சொல்லித்தெரியவேண்டுமா ..
இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் இருவர் .
ஆம நாகேஷ் மற்றும் டி.எஸ்.பாலய்யா .. தந்தை மகன் வேடமேற்று நகைச்சுவை காட்சிகளை இவர்கள் செய்தவிதம் வேறு எவரும் செய்ய இயலாத ஒன்று … இது போன்ற நடிகர்கள் கிடையாது.
கதை . மிகவும் எளிமையான கதைக்கரு .. ஒரு பெரிய பணக்காரர் விஸ்வ நாதன்(பாலய்யா) , அவருக்கு ஒரு மகன் செல்லப்பா, மகள்கள் ராஜி மற்றும் காஞ்சனா. இவருக்கு கவுரவம் மிகவும் முக்கியம், இவரது மில்லில் வேலை செய்யும் அசோக்(ரவி) இவரிடம் வம்பு செய்ய அவரை வேலையில் இருந்து நீக்கிவிடுகிறார். அதை தாங்கமுடியாத அசோக் அவரது வீட்டின் முன் கூடாரம் அமைத்து தர்ணா செய்கிறார். இதன் நடுவே கல்லூரி தேர்வு முடிந்து இரு மகள்களும் ஊர் திரும்புகின்றனர். இரு மகள்களிடமும் ரவி மோத அதில் ஒருவருடன் காதல் மலர .. அதை பெரியவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால் தன் ஆருயிர் நண்பனான வாசு(முத்துராமன்) வரவழைத்து தன் அப்பாவாக, விஸ்வநாதனைவிட பெரிய பணக்காரராக நடிக்க வேண்ட முதலில் மறுக்கும் வாசு பின் ஒப்புக்கொள்கிறான். இதனால் ஏற்படும் களேபரம் மீதி கதை
இதன் நடுவே வெட்டியாக சுத்தும் செல்லப்பா சினிமா படம் எடுக்கபோவதாக சொல்லிக்கொண்டு அப்பாவிடம் பணம் கேட்டு தொல்லை படுத்துகிறார்,பின் தன் அப்பாவின் மில்லில் மேனேஜர் வேலை செய்யும் தொழிலாளியின் மகளை நடிக்கவைக்கிறேன் பேர் வழி என்று அவர் அடிக்கும் லூட்டி அபாரம்…
ஒவ்வொரு வசனமும் நச்… இப்பொழுது பஞ்ச் டயலாக் பேசுகிறேன் என்று பலரும் கடித்து துப்புகிறார்களே ,..இதில் திரு சித்ராலயா கோபு அவர்கள் குறும்பாகவும் குசும்பாகவும் வசனம் எழுதியிருப்பது படத்திற்கு பெரிய பலம்
ஊரிலிருந்து வந்த தங்கைகள் தன் அண்ணாவிடம் பேசும்பொழுது நாகேஷ் சொல்கிறார் படம் எடுக்க போகிறேன் என்று … உடனே ராஜியும், காஞ்சனாவும் “ வீ டோண்ட் சி டமில் மூவீஸ் வி சீ ஒன்லி இங்லீஷ் முவீஸ்” என்று கூறுவதாகட்டும், ஓஹோ ஃப்ரொடக்ஷன்ஸ் என்று கூற உடனே இருவரும் ஓஹோ என்று சொல்ல இது வேற ஓஹோ என்று நாகேஷ் சொல்வது …. அடேயப்பா
நாகேஷ் சச்சுவை தன் சினிமாவில் நடிகையாக்குவதற்கு அவரது தந்தையிடம் சென்று பேசும் அந்த வசனங்கள் .. நச் நச்..
அதுவும் அவரை தன் அப்பா போல் பணக்காரர் ஆக வேண்டாமா, கார் வாங்க வேண்டாமா என ஆசை காட்ட அவரும் கார் வாங்கலாமா . என்று சொல்லிக்கொண்டே வர, நாகேஷ் அப்படியே கால் மேலே கால் போட்டு ஆட்டலாம் என்று சொல்ல உடனே அவர் “அது மரியதையில்ல அது மரியாதையில்ல” என்று சொல்வாரே .. அதெல்லாம் சொல்லி மாளாது ..
நாகேஷ் சச்சுவை புக் செய்துவிட்டு அவரிடம் கம்பெனி காண்ட்ராக்ட் பற்றி சொல்லுவாரே .. அதுவும் நடிப்பு அனுபவம் உண்டா என்று கேட்க சச்சுவோ ஒ பள்ளியில் ராணியாக நடித்தவருக்கு சாமரம் போடும் வேடமேற்றதை சொல்வாரே , நாகேஷின் முகத்தை பார்க்க வேண்டுமே
இந்த வசனம் தான் என்று இல்லை. படம் முழுக்க முழுக்க சிரிப்பு வசனங்கள்
இதற்கெல்லாம் மைல்க்கல்லாக அமைந்தது தந்தை மகன் கதை படலம்
ரொம்ப காஷுவலாக பாலய்யா டேய் செல்லப்பா ஏதோ படம் எடுக்கிறேன்னு சொல்லிக்கிட்டு திரியிரியே .. எங்க கத சொல்லு பார்ப்போம் என்று கூற .. உடனே நாகேஷ் பணம் கேட்க உடனே பாலய்யா நீ கதைய சொல்லுடா .. நல்லாருந்தா கண்டிப்பா பணம் தரேன் என்று சொல்லி ஆரம்பிக்கும் அந்த திகில் கதை. அப்பப்பா … நாகேஷ் சொல்லும் விதமும் சரி, பாலய்யாவின் முக பாவங்கள் , அந்த திடுக்கிடும் மர்ம கதையை சொல்ல சொல்ல முகமெல்லாம் வேர்த்து பாலய்யா படும் அவஸ்தை … அப்பா நடிப்பா அது … இருவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம்..
ஒவ்வொரு நடிகர்களையும் பார்ப்போம்
படத்தின் ஹீரோ திரு பாலய்யா…. இவர் பிறவிக்கலைஞனய்யா … நடிப்பா அது .. அந்த விஸ்வநாதனாகவே வாழ்ந்திருப்பார், அசோக்கிடம் காட்டும் கண்டிப்பு, பெண்களிடம் காட்டும் பாசம், நாகேஷிடம் குதர்க்கம், தன்னை விட பெரிய பணக்காரர் என்று தெரிந்த முத்துராமனிடம் குழைவதாகட்டும் .. அப்பப்பா ….. இதற்கு மேல் சொல்ல முடியவில்லை அப்படி ஒரு பட்டய கிளப்பும் நடிப்பு
அடுத்து நாகேஷ் … செல்லப்பா வேடத்திற்கு இவரைத்தவிர யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாது .. அந்த ஒல்லி வெட வெட உருவத்துடன் இவர் இந்த படம் முழுக்க நடத்தும் காமெடி ராஜாங்கம் சொல்லி மாளாது.. ஆங்கிலத்தில் சொல்வது போல் “viewer’s delight” அப்படித்தான் இந்த கதாப்பாத்திரம்.
அடுத்து வாசுவாகிய முத்துராமன்.. அதுவரை சீரியஸாகவே நடித்து வந்த இவர் இதில் அருமையான வேடம்.. படத்தின் முக்கால்வாசி வரை இவருக்கு வயதான வேடம்.. அதிலும் விஸ்வநாதனை எதிர்க்கும் அந்த முரட்டு கம்பீரம் மிடுக்கு என இவர் செய்யும் ரகளை அசத்தல் .
ரவி .. ஆஹா அழகன் அறிமுகம். இளம்பெண்களின் மனதை கவரும் வசீகர முகம்,,, குறும்பு, ரொமான்ஸ் என எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தும் முகம்… தூள் .. பெருமைக்குரிய அறிமுகம்..
ராஜஸ்ரீ… முதலில் பணக்கார அப்பாவின் பெண்ணுக்கே உரிய அகங்காரமும் அகம்பாவமும் பின் ரவியுடன் காதலுக்கு பின் நாணம் கலந்து வரும் இவரது நடிப்பு … அழகு
காஞ்சனா .. துடுக்கு திமிர் அழகு பின் நளினம் என எல்லாமும் கலந்த நடிப்பு.. மேலே விமானத்தில் பறந்து கொண்டிருந்த இவர் சினிமா வானில் பறக்க தொடங்கினார்.
சச்சு .. அப்பாவி மீனாவாக இவர் அடிக்கும் லூட்டி சொல்ல முடியாது.
நாகேஷ் என்ற ஜாடிக்கு ஏத்த மூடி ..
இவர்களுடன் வி.எஸ்.ராகவன், ராதாபாய், வீராச்சாமி என எல்லோரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தினார்கள்.
படத்தின் அடுத்த பலம் பாடல்கள் மற்றும் கண்ணுக்கு குளிர்ச்சியான படப்பிடிப்பு .. காரணம் மெல்லிசை மன்னர்கள் மற்றும் ஏ.வின்செண்ட்
படத்தின் ஓப்பனிங் சாங். சாந்தோம் பீச் ..”என்ன பார்வை உந்தன் பார்வை “
ஏசுதாஸ் இசையரசி குரல்களில் அருமையோ அருமை..
நாளாம் நாளாம் திரு நாளாம் … இதுவெல்லாம் பொக்கிஷ பாடல்
பி.பி.ஸ்ரீனிவாசும் இசைத்த காதல் காவிய்ப்பாடல்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா.. என யேசுதாஸ், இசையரசியுடன் ஈஸ்வரி ..
ஈஸ்வரி தனித்து பின்னி பெடலெடுத்த பாடல் . விப்ராட்டோவெல்லாம் வந்து விழும்… மல்ரென்ற முகம் இன்று சிரிக்கட்டும் .. என்ன பாட்டு என்ன நடனம்
இதையெல்லாம் விட .. வேலை போன அசோக் தன் குழுவினருடன் வேலையை திரும்ப கேட்டு பாடும் பாடலாக அமைந்த விஸ்வ நாதன் வேலை வேண்டும் பாடலாகட்டும் நடனமாகட்டும் .. இன்று வரை இது ஒரு Classic example of Song making “
மொத்தத்தில் காதலிக்க நேரமில்லை .. எத்தனை வருடங்களானானும் சோடை போவதில்லை . அப்படிப்பட்ட ஒரு காவிய படைப்பு..
இதன் 50’ஆண்டு நிறைவு விழாவை திரு ஒய்.ஜி. மகேந்திரன் ஏற்பாடு செய்து சித்ராலாயவில், இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரையும் அழைத்து கெளரவித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இன்றைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற விவேக்கின் வசனத்த்றிகேற்ப இன்று மறைந்தவர்களை இன்றே மறந்துவிடக்கூடிய சினிமா உலகமிது .. அப்படியிருக்கையில் இது போன்ற ஒரு சிலாரால் தான் தமிழ் சினிமா அங்கீகாரம் தர மறுத்த பல பிரம்மாண்ட கலைஞர்களும் படைப்பாளிகளும் நம்முள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றிகள் ஒய்.ஜி.எம்மிற்கு.,
ராஜேஷ்