Quote:
'நீதி' நினைவுகள்
ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.
1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).
இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.
வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.
நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).
கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.
பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.
முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).
அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.
காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.
படம் வெளியானது 1972 ஆச்சே.
பதிவிட்ட நாள் 7th December 2011, 02:10 PM