09/06/08
திடீரென எவனோ ஒருவன் அதிகாரம் செய்கிறான்.
திடீரென எவளோ ஒருத்தி, அரசவையில் வீற்றிருக்கிறாள்,
என்றெல்லாம் குழம்பி நிற்காமல், உடனே கதையின் போக்கு
புரிந்ததற்கு 'சரஸ்வதி சபதத்திற்கு' நன்றி சொல்லவேண்டும்.
வீரம் என்றாலே எங்கிருந்தோ சேர்ந்து தொத்திக்கொண்டு விடுகிறது
அதிகாரமும், ஆளுமையும். நம் அன்றாட வாழ்விலும் இதைக்
கண்டு வருகிறோம். எவன் ஒருவனுக்கு அல்லது எவள் ஒருத்திக்கு
எதிர்த்து நிற்கும் துணிவு இருக்கிறதோ, தன் சொல்லை செல்லுபடியாக்கும்
மனோதிடம் இருக்கிறதோ அவர்கள், மற்றவர்களை ஆட்டி வைக்கத்
தவறுவதில்லை.
இங்கும் வீரத்துடன் சேர்ந்த அதிகாரத்தைப் பயன்படுத்திறார் மலைமகளின் அருள் பெற்ற தளபதி மாமல்லன். மண்டபத்தில் கூடாரமிட்டுருக்கும் பிச்சைக்காரர்களை அவதூறு பேசி, விரட்டி விடுகிறார். தளபதி நகர்ந்த பிறகு, பிச்சைக்காரர்கள் சிலர், அரசியாரும் முன்னொரு நாளில் பிச்சைக்காரியாக இருந்ததால், இவர்களை சந்திக்க நேரிட்டால் தனக்கு களங்கம் உண்டாகுமோ என கருதி கடுமையாக நடந்து கொண்டுள்ளார் என்று புரளியைக் கிளப்புகின்றனர். அரசாட்சியையும் நாட்டையும் அவமரியாதையாகப் பேசுகின்றனர். இதைக் கேட்டுகொண்டிருந்த அமைசருக்கு மனம் சங்கடப்படுகிறது. அரசியிடம் நடந்ததைக் கூறி தகுந்த நடவெடிக்கை எடுக்குமாறு அறிவுரைக்கிறார் அமைச்சர். அரசியாரும்
தளபதியை வரவழைத்து, அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததை
சுட்டிக்காட்டி, தளபதியைக் கண்டிக்கிறார். அரசாட்சியில் திருட்டும்
கொள்ளையும் மிகுந்து விடாமல் தடுக்க, பிச்சைக்காரர்களையும் தடுக்கவேண்டுமென்றும், பிச்சைக்காரர்களின் ரூபத்தில் திருடனோ, அல்லது உளவாளியோ கூட உலவும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், தான் அத்தகைய கடுமையான நடவேடிக்கை எடுக்க நேர்ந்ததைக் கூறுகிறார். எதையும் தீர விசாரிக்காமல் செய்தது தவறு என்று அவரின் அதிகாரத்தை கத்தரிக்கிறார் அரசி.
புகைந்து கொண்டிருக்கும் தளபதியின் மனசை, மேலும் பற்றவைக்கிறார் பார்த்திபன் (இவர் முன்னாள் தளபதி என்றெண்ணுகிறேன் :? ). அமைச்சர், தளபதையைப் பற்றி தவறக அரசியிடம் புரளி கிளப்பிவிடுகிறார் என்று தளபதியின் கோபத்தை திசை திருப்புகிறார். இப்படியே வளைந்து கொடுத்து பழகிவிட்டால் தன்னால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் போய்விடும் என்று பொருமுகிறார் தளபதி. அவரே மன்னன் ஆவதற்கு ஒரு அருமையான யோசனை இருப்பதாகக்
கூறுகிறார் பார்த்திபன்.
அவரின் யோசனைப்படி, தனித்திருக்கும் அரசியிடம், எந்த வித ஒளிவு மறைவும் இன்றி, தனது இச்சையைத் தெரிவிக்கிறார்
தளபதி. அரசி தன் அதிகாரத்தை பயன் படுத்தி அவரை அப்புறப்படுத்த நினைக்கிறார். எந்தக் காவலாளியும் அவரின் குரலுக்கு செவிசாய்த்து துணைவராததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். லாவகமாக தளபதி அரசப் படைகளை தன் வசமாக்கியிருப்பதை உணர்கிறார். மீண்டுமொரு முறை
தன் இச்சையைத் தெரிவித்து, தான் அரசனாக மணிமுடி தரிக்க ஆசைப் படுவதைக் கூறி, தன்னை மணந்து கொள்ளும்படி கேட்கிறார் தளபதி.
அரசியாக கனிகாவின் நடிப்பு நன்று.
தளபதியாக நடிப்பவர் கொடூரம் முகத்தில் காட்டவேண்டும் என்பதற்காக, மூக்கை மட்டும் ஒரு பக்கமாய் இழுத்து கோபத்தை காட்டுவது ரசிக்கும்படி இல்லை. இவர் மூக்கை இழுப்பதற்கு பதில் சொல்வது போல் பார்த்திபனாக நடிப்பவர் புருவம் உயர்த்துகிறார். இது சற்றே மிகையாகத் தெரிந்தது. தளபதியாக நடிப்பவர் 'பிர்லாபோஸ்' என்று 'ஆனா' பதித்திருந்தார். அசப்பில் நடிகர் அஜித்குமாரின் சுமாரான கார்பன் காபி போல் இருக்கிறார்.
"அவர்கலிடம் வலைந்து கொடுத்து விடுவேன் என்று வீரத்தை
இலுக்காக எண்ணி கொல்லாதே" என்று நம்மை கொல்கிறார்கள்.
தளபதியாருக்கு 'ழ'கரமும் 'ள'கரமும் ததிங்கிணத்தோம்
போடுகிறது. கனிகாவிற்கும் கூர்ந்து கவனித்தால் சில இடங்களில்
அழகுத் தமிழின் 'ள' சற்று சறுக்குகிறது.
ராடன் க்ரியேஷன்ஸின் ராதிகாவிற்கே 'ள'கரம் 'ழ'கரம் தகராறு இருப்பதால்
இதற்கு கவனம் செலுத்தவில்லை போலும். செந்தமிழில் தொடர் வருவதால் சொல்வளமும் அதை சரியாய் உச்சரிக்கும் நா-வளமும் நன்கு தேவைப் படுகிறது. எந்த காலத்திலும்
சிலருக்கு 'ழ'கர 'ள'கர தகராறுகள் இருந்திருக்கலாம் என்று சாக்கு சொல்லி நம்மை சமாதானப்படுத்திக் கொள்வோம்.
கனிகா நீல நிறத்தில் ஜொலிக்கும் உடை அணிந்திருக்கிறார். அதற்கு பொருத்தமாய் காதணியும், கழுத்தில் அட்டிகையும் நீல நிறத்தில் ஜொலிக்கிறது. அழகே உருவாய் காட்சி தருகிறார். ஆனால் தலையை அலங்கரிக்கும் சுட்டி மட்டும் ஏன் தங்க நிறம்? நீலக் கற்கள் பதித்த தலை அலங்காரச் சுட்டிகள் கிடைக்கவில்லை போலும்!
அமைச்சரின் அதிகார பலத்தை காண்பிக்கவும், அரசியின் தலையீட்டை ஊர்ஜிதப்படுத்தவும், வேறு ஏதேனும் பலமான காரணத்தைக் கதையாக்கியிருக்கலாம் (பிச்சைக்காரர்களின் விரட்டலுக்காக பெரிய பதைபதைப்பும் அதனால் கதையில் மாற்றமும் ஜீரணிக்க முடியவில்லை)
(மீண்டும் நாளை)