எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்
To day - malai malar news
எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருகிறது
எம்.ஜி.ஆரின் பழைய படங்கள் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. 1965–ல் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சங்கம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களை தாண்டி ஓடியது.
இதையடுத்து எம்.ஜி.ஆர் நடித்து, இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒலி, ஒளி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தரமானதாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்த படம் 1973–ல் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இரு வேடங்களில நடித்து இருந்தார். நாயகிகளாக லதா, சந்திர கலா, மஞ்சுளா நடித்து இருந்தனர். அசோகன், ஆர்.எஸ். மனோகர், நம்பியார் ஆகியோர் வில்லன் கேரக்டரில் வந்தார்கள். நாகேஷ் காமெடி வேடத்தில் நடித்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘அவள் ஒரு நவரச நாடகம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ’, ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிர்க்க வாழ்ந்திடாதே’, ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே’, ‘உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்‘, ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்’, ‘உன்னை பார்க்கையிலே பன்சாயி’ போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.
உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டலில் வருவதால் படத்தை பார்க்க எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.