Lord Murugan's Deviation and Author's Devotion
இனிய உறக்கம்
இக் கதிர்காம மாலை எனும் நூலின் காணப்படுகின்ற இன்னொரு பாடலை இப்போது பாடி இன்புறுவோம்.
இன்னிமை யாகமனம் வேறுவைத்த நாள்முதலாய்
சொன்னதை மறந்து தோகைதனைக் கடிநீர்
மன்னீர் தனக்கு மல நீர் நிகராமோ?
கண்டீரோ சொல்லும் கதிர்காம வேலோனே.
இன் இமையாக = இனிய உறக்கமாக, வள்ளியை கனாக்கண்டுறங்கி ; அதனால்:
மனம் வேறு வைத்த = பக்தர்களை மறந்து, வேறு வழிச்சென்று, அவள்மேல் மனம் இட்டுவிட்ட;
நாள் முதலாய் = அந்த நாள் தொடங்கி;
சொன்னதை மறந்து = அடியார்களுக்குக் கூறிய உறுதிமொழிகளை மறந்து;
தோகைதனை = வள்ளியை;
கடிநீர் கண்டீரோ = மணம்செய்து கொண்டீரோ;
சொல்லும் = அடியேனுக்குக் கூறுங்கள்;
மன் நீர் தனக்கு = நிலை நிற்கும் உமது தன்மைக்கு;
மல நீர் நிகராமோ - நிலையற்ற, மணம் செய்துகொண்டு வாழும் இவ்வுலக இல்லற வாழ்வு
ஒப்பாகுமோ?
கதிர்காம வேலோனே = கதிர்காமத்தில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானே, என்றவாறு.
இமைத்தல் - உறங்குதல்; இமை - உறக்கம், முதனிலைத் தொழிற்பெயர்.
அன்றி, இனிமை -" இன்னிமை" என்று எதுகை நோக்கி விரிந்தது எனினுமாம்.
கடிநீர், மன்னீர், மலநீர் என்று முந் நீரோடும் விளையாடி யிருக்கின்றார் இப் பாவலர்.இச்சொல் விளையாட்டு இனிமையானது.
இவ்வுலக வாழ்வில்தானே ஆன்மா மலம் பற்றித் தூய்மை இழக்கிறது? ஆதலின் இறைவனாகிய முருகனுக்கு அது தரமன்று என அஞ்சி, நிகராகுமோ என்கிறார். யான் மனிதனாதலின் நீர் சொன்னாலன்றி யான் அறியேன் என்பதுதோன்ற "சொல்லும்" என்று முடித்து, பெருமானை விளிக்கின்றார்.
நிகராமோ, கண்டீரோ என்ற இரு வினாக்களும், "சொல்லும்" என்று இறைஞ்சியவாறு முடிந்தது.
இந்நூலுக்கு உரை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இது என் உரை.
Friend's god; enemy's god.?
(Ref to the above post)
வரிகள் : அன்னவர் பட, அல்லா .................................................. ................... அறிந்தனம் :
பொருள் :
அமரர்க்கு முதல்வன், திருமால். அப்படியாயின் அமரர் அல்லாத அசுரர்க்கு யார் முதல்வன்? அசுரர்க்கும் அவனே முதல்வன். இறைவன் யாவர்க்கும் பொதுவானவன்,
அன்னவர் =அத்தகையோர்; பட = வீழ, ஒழிய.
அல்லா = நட்புடையோர் அல்லாத,
அவுணர் = அசுரர்.
நட்டோர் = நட்பு உடையவர். பகைவர் என்பதன் எதிர்ச்சொல்,
இனைமை = ஒப்பீடு; இத்தன்மை.
நற்கு = நன்கு (நல்+கு).
அணர்தலை = மேலெழுந்ததலை.
அரவு = பாம்பு.
சேவல் ஊர்தி = சேவல் வாகனம்.
செங்கண் மாஅல்= சிவந்த கண்களையுடைய கரிய மால். அதாவது கண்கள் சிவப்பு, உடல் கருப்பு.
அறிந்தனம் = தெரிந்துகொண்டோம்
இறைவனை, நம் நண்பனின் ( நட்பு நாட்டானின் ) கடவுள் என்றும் பகைவனின் கடவுள் என்றும் சொல்வது சரியன்று. அது இறைமரபு அன்று.
தொடரும்..
commentary on thaayumaanavar stanza
தாயுமானவர் பாட்டுக்கு விளக்கம்.
(மேற்கண்ட...)
கடவுள் இல்லாத இடமில்லை; எனவே கடவுள் அங்கிருக்கிறான், இங்கிருக்கிறான் என்பதெல்லாம் அறிவு இன்னும் வளர வேண்டியுள்ள நிலையையே காட்டுகிறது. அவன் ஒளியாய் எங்கும் நிறைந்துள்ளான். இதை உணர்ந்து நிற்குங்காலை, மகிழ்வு அருளுடன் கலந்து நிறைவுதருகின்றது.
உலகின் எல்லா உயிர்களும் நிலைபெறுமாறு விழைந்து, தன் அருள்வெளியிலே உயிருக்கு உயிராய்த் தழைத்து நிற்கின்றான். மனத்திலும் வாக்கிலும் இடையறவின்றி நிற்கின்றான். பல சமயத்தோரும் அவனை "எங்கள் தெய்வம்", "தங்கள் தெய்வம்" என்று உரிமைகோரித் தம்முள் வாதிட்டுக்கொண்டு கொண்டாடுவர்.
அவனைப் பற்றிய மக்களிடையேயான பேச்சும் அவனிருப்ப தறிந்து நிகழ்த்தும் செயல்பாடுகளும் (மனித இனங்களிடையே) எண்ணிறந்து நீண்டு செல்வனவாகும். எல்லாப் பொருள்களிலும் அவன் நிற்கின்றான், ஆனால் அப்பொருள்களில் அவனே வலிமை மிக்க சித்துப் பொருளாய் உயர்ந்து மிளிர்கின்றான். இன்பமாய் என்றுமுள்ளவன்.
பகலும் இரவும் என்ற பகுப்பில் அவனை அடக்கிவிட முடியாது.அவன் எல்லை அற்றவன். இரு பக்கங்களும் அவன் வெளிப்பாடுகளே ஆகும். ஒளியில் இருப்பதால் இருளில் இல்லை யென்றோ, இருளில் இருப்பதால் ஒளியில் இல்லை என்றோ ஆகிவிடாது. அவனே என் கருத்திற் கிசைந்தவன்.
உருவெளியில் ( தோன்றும் வெட்டவெளியில்) காண்பதெல்லம் "மோன நிலை". உருத்தல் = தோன்றுதல். அவன் என்னிடம் மௌனமாகப் பேசுகின்றான் அல்லது தொடர்பு கொள்கின்றான்.
அவனை நினைத்து வணங்குவோம்.
Compare: [Yajurveda 40:9]
கடவுள் என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரை எழுதவேண்டுமென்றால், தாயுமானவரைப் பாடவிட்டு நாம் பகர்ப்பு (காப்பி) செய்துகொண்டால், முழு மதிப்பெண்களும் பெறலாம்!!
yearning for social changes - Bharathithaasan
இனி கைம்மைத் துயரடைந்த பெண்களின் நிலைக்கிரங்கிப் பாடிய
ஒரு பாடலையும் பார்ப்போம்.
ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்றம் உண்டோ?
பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட்கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தாற்பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?
காதலுணர்வு இயற்கையானதால் அகற்குக் கதவடைப்புக் கூடாதென்கிறார் கவி. பாடும் தேனீக்கள், உலவும் தென்றல், பசிக்கும் வயிறென்பன இயற்கையைக் காட்டுவன. மாற்றம் = வேறுபாடு.
வாடாத பூப்போன்ற =" இளமை மாறாத" எனற் பொருட்டு.
கைம்மையிலும் இயற்கை உணர்விற்கோர் வடிகால் (மறுமணம்) வலியுறுத்துவது இப்பாடல்.
From Thirumangkai Azvaar:
2034:
பாயிரும் பரவை தன்னுள்
பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங் கொண்ட
அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து
விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய
மைந்தனை வணங்கி னேனே. 3
அருஞ்சொற்பொருள்:
இரு(ம்)் = பெரிய. பாய் = படுக்கும் பாய். பரவை = பெருங்கடல். பருவரை = பெரிய மலை. திரித்து = சுருட்டி.
வேயிருஞ் சோலை = பெரிய மூங்கிற் சோலை. வேய் = மூங்கில்.
விரிகதிர் இரிய : கதிரவன் மறையும்படியாக.
மாயிருஞ் சோலை = இருண்ட பெரிய சோலை. மேய = மேவிய.
"இன்னா வைகல் வாரா முன்னே ......"
கடல் உடுத்த நிலம் அல்லது கடல் உடுத்த நிலமடந்தை என்பது தமிழ்ப் புலவர்கள் இயற்கையை வியந்து பாடுங்கால் வருந் தொடர்கள்.
சுந்தரனார் தம் பாடலில் " நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" என்று பாடுகின்றார் அல்லரோ?
புறம் ௩௯௩-லும் இந்த அழகிய தொடர் வருகின்றது.
"இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்" என்று தொடங்குகிறது அப்பாடல்.
நிலம்தான் கடலைத் தனக்கு உடைபோல் உடுத்திக் கொண்டுள்ளது என்பார் புலவர்.
பலர் என்று சொல்லவருமிடத்தில் "இடுதிரை மணலிலும் பலர்" என்கிறார். மணலை எண்ண முடியாது அன்றோ?
சாவா மனிதன் எங்குள்ளான்? " வீயாது உடம்போடு நின்ற உயிரும் இல்லை" என்கிறார். அவதார புருடர்களும் மறைந்துவிடுகின்றனர், அந்தோ!
"இன்னா வைகல் வாரா முன்னே
செய் நீ முன்னிய வினையே!"
மரணம் எனும் துன்பம் வருமுன், நன்மையைச் செய்துவிடு என்கிறது புறநானூறு.
அதுவே தமிழன் பண்பாடு ஆகும்.
"363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி
இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித், தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு.
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கல னாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.
வைகல் = நாள்.
Ref: above post dated:8th June 2011, 02:00 PM
மேற்படிப் பாடலின் பொருளைச் சற்று நுணுகி ஆராய்வோம்.
கோள் = கோள்களால் ; திக்கு = திசை அறிந்து; ஓடும் = செலுத்தப்-
படுகின்ற; கூம்புயர் = உயர்ந்த பாய்மரங்களையுடைய; நாவாய் =
மரக்கலம் (கப்பல்); நெடுமாடம் = நெடிய மாடிகளையுடைய
கட்டிடங்கள்; கோடிப் பட்டில் = புதிய பட்டுத் துணிகளால்;
கொள்கொடி கூடப் புனைவாரும் =கொள்ளும்படியாக கொடிகள்
சேரப் புனைவாரும்;
கோடித் தானை = எண்ணற்ற மறவர்கள் பணியாற்றும் சேனையை
உடைய; கொற்றவற் காண்பான் = மன்னர்பிரானைக்
காண்பதற்கு் ; இழை மின்ன = தம் உடைகளும் அவற்றின்மேல்
பதித்திருப்பவையும் ஒளிவீச; கோடி = வளைந்து; செம்பொன்
கொம்பரின் = செம்பொன்னால் ஆன கொம்பு போலும்;
முன் = திருமுன்பு; முன்= முந்திக்கொண்டு; தொழுவாரும் =
வணங்குவாரும் என்றவாறு.
குறிப்பு :-
கொள்ளும்படியாக எனில், நிறைவும் அழகும் அவண் அமையு-
ம் படியாக என்க. "வாளி கொள்ளுமளவு தண்ணீர் பிடி"
என்ற வழக்கு நோக்கின், கொள்ளுதல் - உள் நிறைதல் என்ப-
தறியலாம். "கொள்கலன்" என்ற சொல்லமைப்பும் காணவும்.
கொம்பர் = கொம்பு, மரக்கொம்பு.
புறநானூறு: மோசியாரின் அழகிய பாடல்.
மெல்லியல் விறலி நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் மாண்ட நின்
விரைவளர் கூந்தல் வரை வளி உளரக்
கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி
மாரி அன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே. புறநானூறு:133
வள்ளல்களில் ஒருவனாகிய புகழ் மிக்க ஆய் அண்டிரனை சங்கப் புலவர் முடமோசியார் பாடியது. பாடாண் திணை.
விறலியாற்றுப்படை.
விறலியே! ஆய் அண்டிரனின் வள்ளன்மைப் புகழ் அவன் ஆள்கின்ற மலையையும் கடந்து, யாங்கணும் வீசிக்கொண்டிருக்கிறதே! நீ அவ் வள்ளலின் புகழை மட்டுமே கேட்டிருக்கிறாய். அவனை நேரில் பார்த்ததில்லைதானே.... காணவேண்டுமெனில் உன் கூந்தல் அவன் மலையில் வீசும் மாருதத்தினால் மயிற்பீலி போலும் அலைவுறும்படியாக நடந்துசென்று அவனைக்காண்க!
.அவன் மழைபோலும் வாரி வழங்குபவன். தேர்(பல) உடைய-
வன். செல்வாயாக.
Will discuss this beautiful poem further.....
commentary on the last post (Mosiar's Puram stanza) continues.........
சங்கப் புலவர் மோசியார், பெண்ணியம் போற்றுபவர், பெண்டிருக்கு மதிப்பளிப்பவர் என்பது அவர் பாடலில் நன்கு தெரிகிறது. வெறுமனே "விறலியே" என்னாமல் "மெல்லியல் விறலி(யே) " என்று விளிக்கின்றார். மெல்லியல், மெல்லியலார் என்பது இவ் விருபத்தொன்றாம் நூற்றாண்டின் சொற்புழக்கம் (பதப்பிரயோகம்) என்று நீங்கள் நினைத்திருந்தால், அந்தக் கருத்தை இப்போது மாற்றிக்கொண்டுவிடுங்கள். சங்க
காலத்திலேயே அந்தச் சொல்லாட்சி இருந்தது. வேறு ஓர் ஆண்மகனை ஆற்றுப்படுத்தாமல் ஒரு பெண்ணை ஆற்றுப்படுத்தும் துறையில் பாடலை யமைத்ததும் கருதத்தக்கது.
ஆய் அண்டிரனின் மலையில் இனிய மென்காற்று வீசிக்கொண்டிருக்கும். அதிலே நெடிய முடியுடைய பெண் விரைந்து நடப்பதென்றால் அம் முடி கலைந்து காற்றில் பறக்கும், "அவள் ஒப்பனை கலைந்து, அழகு குறையும்" என்று மோசியார்
சொல்லவில்லை. மாறாக, முடி காற்றில் பரப்பிக்கொண்டு பறக்க, கலாப மயில் ஒன்று "மலைத்தென்றலில்" தோகை விரித்து நடந்ததுபோல நீ நடந்து செல் என்று சொல்வதிலிருந்து அவள் செல்லும்போதே அழகு மிகுந்து, காண்பாரும் மகிழ்வெய்தும் காட்சியாகுமென்கின்றார்,
இவ் விறலி, மோசியாருக்கு முன்னமே அறிமுகம் ஆனவளா என்று தெரியவில்லை. விரை வளர் கூந்தல் என்பதை. விரை = வாசனை யுள்ள; வளர் கூந்தல் =' வளர்ந்து கொண்டிருக்கிற கூந்தல்' என்னலாம். அங்ஙனமாயின், முன் சற்று நீட்டம் குறைந்திருந்து, இப்போது வளர்ந்துவிட்ட கூந்தல் என்றும் கொள்ளலாம்; "விரைவளர்" என்று எடுத்துக்கொண்டு, "வாசனை மிகுந்த" என்றும் கொள்்ளலாம். எங்ஙனமாயினும், அம் மலைக்காற்றில் கூந்தலின் நறு்மணம் பரவி மற்றோரை இன்புறுத்தியது என்பதே மோசியார் தரும் சொற்சித்திரம்.
முன் இடுகையின் தொடர்ச்சி.
நல்லிசை = ஈகையினால் வந்த பழுதற்ற புகழ்.
வரைவளி = மலையில் வீசும் காற்று. காண்டல் வேண்டினை = பார்க்க வேண்டுமென்றால்.
கலவ மஞ்ஞை = கலாப மயில்.
கூந்தல் உளர = நெடுந் தலைமுடி பரப்பிப்பறக்க
மாரி = மழை. அன்ன = போல.
ஆய் அண்டிரன்: அண்டிரன் என்ற சொல்லில் இருந்து ஆந்திரம் என்ற பெயர் வந்ததென்பர் ஆய்வாளர் சிலர்.ஆய் ஆண்ட மலை இப்போதையத் தமிழ் நாட்டிலில்லை என்று தெரிகிறது.
If you know about this part of Tamil history, please post some details. Thanks.
வாத்தியக் கருவிகளை மூட்டை கட்டிக்கொள்.......
சங்கப் புலவரிற் சிலர், பல்வேறு வாத்தியங்கள் வாசிக்கும் திறமுடையோராக விருந்தனர். அத்தகைய ஒரு புலவரே "நெடும்பல்லியத்தனார்". இயம் என்ற பழந்தமிழ்ச்சொல், வாத்தியத்தைக் குறிப்பது. மணவிழாக்கள் போன்றவற்றில் வாழ்த்தி இசைக்கப்படுவது : வாழ்த்தியம்> வாத்தியம். பல்வேறு இயங்கள் இயக்கப்படின், அது பல்லியம் ஆகும். பல்+ இயம் = பல்லியம். பல்+இயம்+அத்து +அன்+ஆர் = பல்லியத்தனார். அத்து என்பது சாரியை. அன், ஆர் என்பன விகுதிகள்.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை பல்லியத்தனார் பாடியுள்ளார். வா! நம் கோமான் வழுதியைக் கண்டுவரலாம்....என்று விறலியை அழைக்கின்றது இப்பாடல். தண்ணீரும் கஞ்சியும் உண்டு வாழும் இவ் ஏழை வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிடுவோம்.
உன் வாத்தியக் கருவிகளை மூட்டை கட்டிக்கொள். வா
என்கிறார் புலவர்.
விறலியின் ஏழ்மை, அவள் அணிந்துள்ள ஒன்றிரண்டு வளையல்களினால் நன்கு புலப்படுகின்றதே! "சில் வளை விறலி!" என்று விளிக்கின்றார் புலவர்.
புற நானூறு: பாடல் 64.
இனிப் பாடலைப் பார்ப்போம். தொடரும் ...
"பசுந்தடி தடுப்ப..............."
முன் இடுகைத் தொடர்ச்சி.
"விசும்புஆடு எருவை பசுந்தடி தடுப்ப"
இந்த வரியைச் சற்று உற்றுநோக்கி ஆராய்வோம்.
மாமன்னன் முதுகுடுமிப் பெருவழுதி, பெரும் படைபலத்துடன் போர்க்களத்துள் புகுந்தான். பகைவரை எதிர்கொண்டு,அவனும் அவன் படைவீரர்களும் அவர்களை வெட்டிவீழ்த்திக்கொண்டு முன்னேறுகின்றனர். அவர்களின் வாள்களினால் வெட்டுண்ட தசைத்துண்டுகள் வானோக்கி எழுகின்றன.அவ்வமயம் வானிலே பறவைகள் வட்டமிட்டுக்கொண்டுடிருக்கின்றன. அந்தப் பச்சைத் தசைத்துண்டுகள் போய், பறவைகளின் பறக்கும்பாதையில் குறுக்கிட்டுத் தடுக்கின்றன. பறவைகளும் தயங்கித் தடுமாறுகின்றன. இந்த நிகழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றார், பல்லியத்தனார்.
எதிரி பிழைத்தோடும் எந்த வாய்ப்புக்கும் வழியில்லாதபடி வெட்டிச்சாய்க்கிறான், முதுகுடுமிப் பெருவழுதி, அவன்றன் படைமறவர் துணையுடனே.
எதற்கும் அஞ்சாத, இரக்கமற்ற எம வாள்வீச்சு.
வழுதி போரிட்ட பகைவர் யார்? சிலவேளைகளில் அவர்கள் மற்ற தமிழரசரின் படைவீரர்கள். வேறு சமயங்களில் வேற்றுமொழியினர் (மொழிபெயர் தேஎத்தர்). தேஎம் - தேயம். தமிழராயின் ஒன்றுபடுவோமே என்று யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைக் கூறவும் வேண்டுமோ. தமிழரிடம் என்றும் ஒற்றுமை இருந்ததில்லை!!
போருக்குப்பின் வந்த அமைதி நாட்களில், முதுகுடுமி, புலவரையும் இரவலர் பிறரையும் புரந்த பெருவள்ளல் என்பதை இப்பாடல் சொல்லாமல் சொல்கிறது.
நீ இல்லாத பகற் பொழுதும் ஒரு பகலோ?
புறப்புண் என்பது போரிட்ட வேந்தன் அல்லது போர்மறவன் நெஞ்சும் முகமும் நீங்கிய பிறவிடங்களில் புண்படுவது. அங்ஙனம் புண்பட்டவர் வடக்கு நோக்கி இருந்து உணவு முதலிய கொள்ளாமல் உயிர்விடுவர். இதுவே வடக்கிருத்தல் எனப்படும். . இது தமிழர் மரபு ஆகும்.
சோழன் கரிகால் வளவனுடன் போரிட்ட சேரமான் பெருஞ்சேரலாதன் போரில் தோற்று இங்ஙனம் வடக்கிருந்தான். அது கண்டு பெருந்துயருற்றார் சங்கப் புலவர் கழாத்தலையார்.
தம் துயரினை எப்படி வெளிப்படுத்துகிறார்?
முழவுகள் (ஒரு வகைப் பறை) ஒலிக்க மறந்தன.
யாழ்கள் பண்பாடுதலை மறந்தன.
சுற்றத்தார் தேறலை (பானத்தை) மறந்தனர்.
உழவர் செய்யும் ஒலிகளும் ஊர்மக்கள் விழாக்களும் அடங்கிவிட்டன. கொடுமையிலும் கொடுமையாய் அன்றோ இருக்கிறது.
நீ இல்லாத பகற் பொழுதும் ஒரு பகலோ?
..................என்று அரற்றுகின்றார் புலவர்.
புறம் பாடல் 65. இனி, பாடலைப் பாடிமகிழ்வோம்.
commentary on kazAththalaiyaar poem:
எளிதாக்கும் பொருட்டு எச்சவினைகளை முற்றுகளாக்கிப் பொருள் கூறப்படும்.
மண் முழா மறப்ப = மண் பூசப்படாததால், முழவு ஒலி செய்யாமற் கிடந்தது; இங்கு மண் என்பது, முழவின் ஒலிசெய்யும் தோலில் பூசப்படும் குழம்பு.
பண் யாழ் மறப்ப = பண் பாடுவாரின்மையால் யாழ் வாசிக்கப்படாமல் கிடந்தது;
இருங்கண் குழிசி = உள்ளே அகலமுடைய பானை;
இரு - பெரிய; கண் = இடம்;
கவிழ்ந்து இழுது மறப்ப = தயிர் இன்றிக் குப்புறக் கிடக்க; இழுது, பல பொருளுடைய சொல். தேன், நெய் என்றெல்லாம் பொருளுண்டாயினும், தயிர் என்று கொள்க;
இழுது என்ற சொல் பின் சொல் ஆய்வில் கொணரப்படும்.
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப; (இதைச் சுற்றம் சுரும்பு ஆர் தேறல் மறப்ப என்று மாற்றுக )
சுரும்பு = வண்டு; சுரும்பு ஆர் தேறல் = வண்டுகள் வந்து குடிக்க விழையும் பானம். சுற்றம்= ஊர்மக்களாம் உறவினர்.
தொடரும்.
continuation of commentary on KazAththalaiyaar poem
continued from last post
உழவர் ஓதை மறப்ப- உழவில் ஈடுபடும் மக்கள் அதுபோது எழுப்பும் ஓசைகளைச் செய்யாதொழிந்தனர்;
விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப = நாட்டில் சிற்றூர்களின் மக்களும் விழாச் செய்தலை விட்டொழித்தனர்;
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து =புது நிலவு நிகழும் பெரு நாட் பொழுதிலே;
இருசுடர் தம்முள் நோக்கி = கதிரவனும் அந் நிலவும் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு;
ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்கு = அவற்றுள் ஒன்று துயர்தரும் மாலைப்பொழுதில் மலைக்கப்பால் சென்று மறைந்ததுபோல; புன்மை+கண் =புன்கண்,
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி = தன்னைப்போன்ற மன்னனுடன் போர்செய்கையில் உண்டான புறப்புண்ணுக்காக வெட்கி;
மறத்தகை மன்னன் வாள் வடக்கு இருந்தனன்; = வீரம் பொருந்திய இம்மன்னன் வாளுடன் வடக்கு நோக்கி உயிர்விட அமர்ந்தனன்;
ஈங்கு, நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே! = இனிக் கதிரோன் தோன்றிடும் பகற்பொழுது பகலாகக் கழியுமோ? கழியமாட்டாதே !
கரிகால் வளவன் நிலவென்றால், இங்கு சூரியன் ஆவான் சேரமான். சேரமான் (சூரியன்) மறைவதால் இனிப் பகல் இல்லை...இனி வரும் வெறும் பகல் ஒரு பகலாமோ?
தோற்றாலும் செங்கதிரோன் செங்கதிரோனே .....
நீங்கள் தோற்றால் உங்களுடைய கூட்டணியிலிருந்து உங்கள் நண்பர்கள் போய்விடுவர். கழாத்தலையார் அன்புறவு (விசுவாசம்)மாறாதவர் என்பது தெளிவு.
I have not had the benefit of reading the previous learned commentaries on this poem recently or at the time of writing my own commentary. If you have read any and would like to add, you are welcome to point out differences.