மதுரையில் 04.01.2009 ஞாயிறன்று நடந்த சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு புத்தக வெளியிட்டு விழாவைப் பற்றி விழா அமைப்பாளர்கள் மற்றும் மதுரை பதிப்பு செய்தி தாள்களிருந்து திரட்டியவை.
விழா மிக சிறப்பாக நடைபெற்றது. புத்தகத்தை வெளியிட்டு பேசுவதாக இருந்த உள்துறை அமைச்சர் சிதம்பரம், அஸ்ஸாம் குண்டு வெடிப்பின் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போனது. அவர் கைப்பட வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். சிவாஜி சமூத நல பேரவை தலைவர் சந்திரசேகர் தொகுத்து எழுதிய புத்தகத்தை தங்கபாலு வெளியிட, இளங்கோவன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ-கள் கலந்து கொண்டனர். விழா நடைபெற்ற பி.டிஆர் மஹால் (மிக பெரிய அரங்கம்) முழுக்க ஆட்கள் நிறைந்திருந்தனர். அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற முன்னாள் பொது செயலாளரும் முன்னாள் எம். எல். ஏ-வும் ஆன வி. ராஜசேகரன் முன்னிலை வகிக்க, ராம.சுகந்தன் (வாழப்பாடியின் புதல்வர்) தலைமை தாங்கினார்.
மதுரை மாவட்டமே திருமங்கலம் இடைத்தேர்தலால் பரபரப்பாக இருக்க, அந்த நிலைமையிலும், விழா மதிய நேரத்தில் நடத்தப்பட்டிருந்த போதிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டார்கள். பத்திரிக்கையாளர்களும் பெருமளவில் வந்திருந்தனர்.
தங்கபாலு அரசியலை தொடாமல் நடிகர் திலகத்தை மட்டுமே மையப்படுத்தி தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும் என்று பேசினார். ஆனால் இளங்கோவன் பேச்சில் வழக்கம் போல் கிண்டல், காரம் எல்லாம் கலந்திருந்தது. நடிகர் திலகத்திடம் நெருங்கி பழகி அவரது அரசியல் இயக்கத்திலும் தன்னை இணைத்து கொண்ட இளங்கோவன் நடிகர் திலகமும் அவரது ரசிகர்களும் எப்படி காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வளம் சேர்த்தனர் என்பதை சொன்னார். பெருந்தலைவரின் மறைவிற்குப் பிறகு தமிழகமெங்கும் அவரது சிலைகளை நிறுவி காங்கிரஸ் இயக்கம் எப்படி இன்றும் உயிர்த்துடிப்போடு இருப்பதற்கு காரணமாக விளங்கினார் நடிகர் திலகம் என்பதை விளக்கினார். எப்படி வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் நடிகர் திலகம் நிஜ வாழ்க்கையிலும் கர்ணனாக விளங்கினார் என்பதை ஒரு சில ஒப்பிடு உதாரணங்களோடு ஈவிகேஎஸ் சொன்னபோது ரசிகர்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரமாயிற்று. தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிவாஜியின் சிலைகள் நிறுவப்பட வேண்டும் என்று சொன்ன ஈ.வி.கே.எஸ் அதற்கு காமராஜர் ஆட்சி மலர வேண்டும் என்று சொன்னார். இலங்கை பிரச்சனை பற்றியும் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
சிதம்பரம், இளங்கோவன் போன்றவர்கள் அன்றிரவே சென்னை திரும்ப வேண்டியிருந்ததால் விழா மாலை 4 மணிக்கு துவங்கப்பட்டது. விழாவின் தொடக்கத்தில் நடிகர் திலகம் நடித்த கிளிப்பிங்க்ஸ் திரையிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தலைவர்களை குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதற்காக கிளிப்பிங்க்ஸ் நேரம் மாற்றப்பட்டது. தலைவர்கள் சென்றவுடன் கூட்டம் அப்படியே இருந்தது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. இரவு உணவு தயாராக இருப்பதாக (இப்படி அளிக்கப்பட போவது விழாவில் கலந்து கொண்ட யாருக்குமே தெரியாது. இது ராஜசேகரனின் ஏற்பாடு) மேடையில் அறிவிக்கப்பட்டு அதே நேரத்தில் கிளிப்பிங்க்ஸ் திரையிடப்படும் என அறிவிப்பு வந்தவுடன் மொத்த கூட்டமும் அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டது. சுமார் 30 நிமிடங்கள் ஓடிய அந்த கிளிப்பிங்க்ஸ் பெற்ற வரவேற்பு, கைதட்டல், விசில் சத்தம் அந்த ஏரியாவையே உலுக்கியது. மதுரைக்கே உரித்தான அலப்பறை மற்றும் சூட,தீப ஆராதனை அங்கே வந்திருந்த நிருபர்களுக்கு (இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள்) பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. குறிப்பாக ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் நிருபர்கள் விழா அமைப்பாளர்களிடம் சொன்ன வார்த்தை இது. "பொதுவாக தலைவர்கள் கிளம்பி போனாலே கூட்டம் கலைந்து விடும். இங்கே அப்படியே இருந்தது. சாப்பாடு ரெடி என்று சொல்லியும் கூட கலையாமல் அந்த கிளிப்பிங்க்ஸ்-ஐ பார்க்க உட்கார்ந்ததுடன் இப்படி ஆரவாரமாக ரசித்தது அதுவும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் கூட என்று சொல்லும்போது நடிகர் திலகம் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது" என்று சொன்னார்கள்
நடிகர் திலகம் நடித்த பராசக்தி, உத்தம புத்திரன், கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பாசமலர், ரத்த திலகம், கைகொடுத்த தெய்வம், புதிய பறவை, சிவந்த மண், ராமன் எத்தனை ராமனடி, சொர்க்கம், ஞான ஒளி, வசந்த மாளிகை, பாரத விலாஸ், ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், அவன் ஒரு சரித்திரம், என்னை போல் ஒருவன் போன்ற படங்களிருந்து (குறிப்பாக தேசிய தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இடம் பெற்றன) தொகுப்பட்டிருந்தது.
விழா மண்டபத்திலேயே சென்னையிருந்து கொண்டு சென்ற புத்தகத்தின் 500 பிரதிகளும் விற்று தீர்ந்தன. திரையிடப்பட்ட கிளிப்பிங்க்ஸ் சிடி கிடைக்குமா என்று அலை பாய்ந்தவர்கள் எக்கச்சக்கம். மொத்தத்தில் ஒரு சிறப்பான விழா இனிதே நடைபெற்று முடிந்தது.
அன்புடன்
PS: சாரதா, நீங்கள் சொல்வதை அப்படியே ஆமோதிக்கிறேன்.
