Originally Posted by Murali Srinivas
வெகு நாட்களுக்குப் பிறகு உத்தமப் புத்திரன் பெரிய திரையில். என்னால் போக முடியாத சூழல். ஆனால் ராகவேந்தர் சார் ஊரில் இல்லை. சுவாமியாலும் வர முடியாது என்ற நிலையில் நான் மட்டும் தனியே போனேன்.
அந்த பகுதியில் மாலை 5.45 வரை மழையாம். அது நின்றவுடன் சர சரவென்று மக்கள் குழும, போஸ்டருக்கு மாலை மரியாதைகள் செய்யப்பட, அகல் விளக்குகள் சுவரின் மேல் வைக்கப்பட, இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட, 1000 வாலா சரம் பட படவென்று வெடித்து சிதற, சூட தீபாராதனைகள் காட்டப்பட தேங்காய் உடைக்கப்பட அனைத்து சடங்குகளும் குறைவின்றி நடந்தேறியது.
திரையரங்கினில் இரண்டு நேர்மறையான அனுபவங்கள். இந்த ஆறு மாதக் காலத்தில் நான் தியேட்டரில் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களெல்லாம் மிகுந்த ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டன. கண்களை குளமாக்கும் பாசமலர் உட்பட அனைத்துப் படங்களும் அப்படியே அமைந்தன. ஆனால் இன்று பாடல்களுக்கு மட்டுமே ஆரவாரம். அது வழக்கம் போல லிமிட்டை தாண்டியே இருந்தது. அதற்கு நேர்மாறாக மற்ற அனைத்துக் காட்சிகளும் [கைதட்டல்கள் ஆரவாரங்கள் இருந்தும் கூட] பார்வையாளர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ரசிக்கப்பட்டது.
ஆளப் பிறந்த என் கண்மணியே பாடலில் வரும் ஏழையாக வாழ்ந்தாலும் கவலையில்லை ஒரு கோழையாக மட்டும் வாழாதே என்ற வரிகளுக்கு பலத்த கைதட்டலை வெளிப்படுத்தி, உள்ளோம் அய்யா என்று ரசிகர்கள் தங்கள் வருகையை பதிவு செய்தனர்.
பார்த்திபன் அறிமுக காட்சிக்கு கைதட்டல்கள் என்றால் விக்கிரமனை கண்டவுடன் பூமாரி பொழிய ஆரத்தி. யாரடி நீ மோகினி பாடலில் அந்த நடை, டான்ஸ், அந்த ஸ்டைல், ஹ என்று சொல்லும் விதம், ஒரே ரகளை. பாட்டு முடியும் போது வரும் கைதட்டலோடு கூடிய டான்ஸ், இங்கே கைதட்டிக் கொண்டு ஆடிவிட்டார்கள்.
அடுத்து அதிகம் ரசிக்கப்பட்ட காட்சி விக்கிரமனுக்கு முடிசூட்டு விழா! அதில் அரசவைக்கு நடந்து வரும் ஸ்டைல் அங்கே பேசும் ஸ்டைல், தான் சொல்வதை கேட்டுவிட்டு பேசாமல் நிற்கும் அரசவை பிரதானிகளைப் பார்த்து சரிதானே என்று உறுமுவது போன்றவைக்கு நல்ல வரவேற்பு.
பாடல்களிலேயே அமைதியாக ரசிக்கப்பட்டது மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை பாடல் மட்டும்தான். பிறகு வந்த முல்லை மலர் மேலே பாடலுக்கு அதுவும் குறிப்பாக நடிகர் திலகத்தின் க்ளோஸ்-அப் காட்சிகளுக்கு செம ஆரவாரம் [திரையுலக பிரபல ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் குறிப்பிடும் " காமிராவின் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக தெரியக் கூடிய ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டுமே" என்ற வரிகள்தான் நினைவிற்கு வந்தன].
அடுத்து விக்கிரமன் பத்மினியை சந்திக்கும் காட்சி. அதற்கும், அடுத்த சில நிமிடங்களில் வரும் காத்திருப்பான் கமலக் கண்ணன் பாடலுக்கும் பெரிய வரவேற்பு. அதிலும் அந்த பாட்டில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போஸ் - அலப்பறை. அதே பாடலில் பார்த்திபன் அமர்ந்திருக்கும் விதம், இப்படி வித்தியாசம் காட்ட நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார் இருகிறார்கள். [அந்த பாடலில் குழலூதும் கிருஷ்ணனாக ராகினியும், கோபிகையாக பத்மினியும் அவ்வளவு அழகு]
எப்படி மாமா இவ்வளவு அரிய யோசனைகள் உங்கள் மூளையில் தோன்றுகிறது என்று விக்கிரமன் கேட்க அனுபவம் என்று நம்பியார் சொல்ல திரையை பார்த்து கண்ணடித்தபடியே இருக்கும் இருக்கும் என்று சொல்லும் விக்கிரமன் - பெரிதும் ரசிக்கப்பட்ட காட்சிகளில் ஒன்று.
அதே போல் வரவேற்பைப் பெற்ற காட்சி, அந்தப்புரத்தில் அமுதவல்லியை சந்தித்துவிட்டு மாட்டிக் கொள்ளும் பார்த்திபனை, விக்கிரமன் என நினைத்து உரையாடும் கண்ணாம்பா, அப்போது அங்கே வரும் விக்கிரமன், அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் பார்த்திபனை சுற்றி வரும் விக்கிரமன், இருவருக்கும் இடையே நடக்கும் சண்டை, என்ற இந்தக் காட்சியை கூறலாம்.
இங்கும் சரி, தறி கெட்டு ஓடும் ரதத்தை பிடித்து நிறுத்துவதற்காக குதிரையில் பாய்ந்து வரும் பார்த்திபன் இங்கெல்லாம் வின்சென்ட் மாஸ்டரின் காமிரா எத்துனை அழகாக அதை படம் பிடித்திருக்கிறது.
இடைவேளை விட, வழக்கம் போல் கிளம்ப வேண்டிய சூழல். கிளம்ப மனமில்லாமல் கிளம்பி வந்தேன். பார்த்தவரை பரம திருப்தி.
அன்புடன்
தியேட்டரில் கிடைத்த போனஸ் செய்தி - செவ்வாய் முதல் வியாழன் வரை [செப் 7 முதல் 9 வரை] சென்னை- ஸ்டார் திரையரங்கில் நமது அபிமான படங்களில் ஒன்றான ஆண்டவன் கட்டளை தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது. நேற்று சனிக்கிழமையன்று இப்போது ஓடிக் கொண்டிருக்கும் அங்காடித் தெரு படத்தின் இடைவேளையின் போது ஆறு மனமே ஆறு பாடல் திரையிடப்பட பெரிய ஆரவாரத்துடன் வரவேற்பாம்.
தெய்வ மகன் வெளியான நாளான இன்று [05.09.1969] உத்தமப் புத்திரனையும் ஆண்டவன் கட்டளையையும் காணவும் நினைக்கவும் கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி.