எனக்கு தமிழ் படங்கள்,பாடல்கள் அளவு ஹிந்தி பரிச்சயம் இல்லை. அதனால் ,நான் குறிப்பிடும் இசையமைப்பாளர்களின் ,நல்ல படங்களோ,பாட்டோ தவறியிருந்தால் குறிப்பிடவும். நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்த நேரத்தில் எனது ஹிந்தி பாடல்களின் பரிச்சயத்திற்கு வழி வகுத்த ,தமிழின் மாபெரும் ஆளுமை ஒன்றை குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.
விஸ்வநாதன் -ராமமூர்த்தி இருவருக்கும் இணைத்து இசைக்காக பாரத் ரத்னா கொடுப்பது அவசியம்.
ஆனால் விஸ்வநாதன் அவர்களுக்கு தனியாக கொடுப்பதென்றால் ,தேசிய ஒருமைப்பாட்டு விருது கொடுக்க பட்டே ஆக வேண்டும். மத்திய அரசாலும் முடியாத சாதனையான , ஹிந்தி எதிர்ப்பாளர்களாகிய எங்களை போன்றவர்களை ஹிந்தி பட,பாடல் பிரியர்களாக மாற்றி ,ஹிந்தி பிரசார சபையை நோக்கி ஆரம்ப 70 களில் ஓட வைத்தவராயிற்றே?
ஒரு ஜி.ராமநாதன் முடிவு பெரும் காலத்தில் தக்க சமயத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன் எழுச்சி பெற்ற மாதிரியோ, இளையராஜா சற்றே stale ஆன போது முற்றிலும் புதுமையாய் ரகுமான் எழுச்சியுற்ற மாதிரியோ இல்லாமல் 71 முதல் 76 வரை ஒரு பெரிய வெற்றிடம், தமிழ் இசை தரை மட்டம் தொட்டது.
இதற்கு முழு பொறுப்பும் ,இரு திலகங்கள் மற்றும் அவர்களை தொங்கி கொண்டிருந்த ஒரு இசையமைப்பாளர், அவர்களால் ஆதரிக்க பட்ட ஒரு over -used நளினம் ,nuances அற்ற பாடகர். தமிழர்களின் தடித்த தோல்.அதில் ஒரு திலகமாவது கொஞ்சம் முழித்து, தன்னுடைய முனைவில் புதிய பாடலாசிரியர்கள்,பாடகர்கள் ,நடிகைகள் என்றாவது புது ரத்தம் பாய்ச்சினார். ஆனால் இன்னொரு திலகமோ, நடிப்பை தவிர வேறொன்றறியேன் பராபரமே ,என்று தனது 150 ஆவது படத்திற்கே டப்பிங் ரேஞ்சில் பாடல்கள் அமைந்ததை பொருட்படுத்தாமல் , தனது படங்கள் பாதிக்க பட விட்டார். மகாதேவன், முழு நேரம் தெலுங்குக்கு தாவ, சங்கர்-கணேஷ்,விஜய பாஸ்கர் என்று சில்லறைகளின் கொட்டம்.
இளைய ராஜா வந்து,தமிழ் பட உலகையும், தமிழையும் முழுதாக ஹிந்தி பக்கம் தாவ விடாமல் ரட்சித்தார். (ஆனால் matriculation பள்ளிகள் 80 களில் பல்கி பெருகி தமிழ் அழிப்பு புண்ணியம் தேடி கொண்டு விட்டன)

