http://i60.tinypic.com/2l887s6.png
‘என்னோட திறமையை நீ பாரு...’
ராபின்சன் வீடு காட்சியை எழுதுவேன் என்று கடந்த வாரம் சொன்னேன். வேலை சுமை காரணமாக உடனடியாக எழுத முடியவில்லை. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஆர்டராக நான் எழுதவில்லை. கதையையும் எழுதப் போவதில்லை. கதை நம் எல்லாருக்கும் தெரியும். புதிதாக யாராவது படித்தாலும் இங்கே விளக்கப்படும் காட்சிகளை ரசித்து விட்டு படத்தை பார்த்தால் சுவையாக இருக்கும். இதுவரை பார்க்காதவர்கள், கதையை தெரிந்து கொண்டால் படம் பார்க்கும்போது டெம்போ போய்விடும். எனவே, தலைவரின் எந்தப் படத்துக்கும் நான் கதையை எழுதுவதில்லை.
ஆர்டராக நான் எழுதாததற்கு காரணம், வேலை சுமை மற்றும் பட வெளியீட்டு நாட்கள், நாட்டு நடப்புகளுடன் தலைவரின் படங்களுக்கு பொருத்தமாக உள்ள காட்சிகள் போன்றவற்றை இடையிடையே எழுதுவதால் கன்டினியூடி இருக்காது. மேலும், தொடர்ச்சியாக எழுதாவிட்டால் என்ன? கற்கண்டு மலையை எந்தப் பக்கம் சுவைத்தால் என்ன? எல்லா பகுதியும் இனிக்கத்தானே செய்யும்? சரி, காட்சிக்கு செல்வோம்.
----
தங்கத்தோணியிலே பாடல் முடிந்ததும் ஹாங்காங்கில் உள்ள ராபின்சன் வீட்டில்தான் அடுத்த காட்சி தொடங்கும். ராபின்சனாக வருபவர் பெயர் தெரியவில்லை. நல்ல தோற்றம். அவரது வீட்டில்தான் அணுசக்தி ஆராய்ச்சி குறிப்பின் ஒரு பகுதி இருக்கும். தன்னிடம் விஞ்ஞானியாக உள்ள தலைவர் கொடுத்து வைத்திருந்த குறிப்பை அவர் ஒரு டைம்பீசில் பாதுகாப்பாக வைத்திருப்பார். அதைப் பெற்றுக் கொள்ள ஒயிட் & ஒயிட் சூட்டில் அட்டகாச தலைவர். இளஞ்சிவப்பு நிறத்தில் அணிந்திருக்கும் டை மேலும் எடுப்பு.
குறிப்பு வைக்கப்பட்டிருக்கும் டைம் பீசை தலைவரிடம் கொடுத்து , ‘இதுதான் முருகன் என்கிட்ட கொடுத்தது’ என்று தலைவரிடம் ராபின்சன் கூறுவார். ஹாங்காங்கில் வசிப்பவர் என்பதால் கொஞ்சம் திக்கி, திக்கி தமிழ் பேசுவார்.
அதற்கு தலைவர் ‘ஆபத்தில் இருந்து என் அண்ணனையும் அழிவிலிருந்து உலகத்தையும் காப்பாத்தியிருக்கீங்க. ரொம்ப நன்றி’’ என்று கூறுவார்.
‘இதை பத்ரமா வெச்சுக்கணும்’ என்று ராபின்சன் சொல்லி முடிக்கும்போது ‘வவ் வவ்’ என்ற நாய்களின் ஆவேச குரைப்பு. சவுண்ட் எபெக்டில் திடீரென கேட்டால் வயிறு கலங்கும். நாய்களை கிட்டே காட்டுவார்கள். ஆக்ரோஷ விழிகளுடன் அரை முழத்துக்கு நாக்கை தொங்க விட்டபடி ராஜபாளையம் வகையை போல இரண்டு நாய்கள். மனிதனைக் கடித்தால் அரை கிலோ கறி அதன் வாயில் நிச்சயம். படம் 3D யில் எடுக்கப்பட்டால் இந்த நாய்கள் நம்மையே குதற வருவது போல இருக்கும். ‘சினிமாஸ்கோப்’ பார்த்து விட்டோம். டிஜிட்டல் பார்த்து விட்டோம். நாடோடி மன்னனை கலரில் பார்க்கப் போகிறோம். 3D யும் பார்த்துவிட்டுப் போவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.பார்ப்போம்.
நாய்களை கையில் பிடித்தபடி திரு.மனோகரும் கூட இன்னொருவரும். வழக்கமான ஸ்டைலில் திரு.மனோகர். அதோடு, கூட வலதுபக்கம் வாயை கோணியபடி வெட்டி இழுப்பது இதில் கூடுதல் மேனரிசம்.
அவர்களைப் பார்த்தவுடன் தலைவருக்கு குளோசப் காட்சி. ஒரு விநாடி புருவத்தை தூக்கி, அவர்கள் வந்திருப்பதன் நோக்கத்தை புரிந்து கொண்டு லேசாக தலையை சாய்த்து, உதட்டை லேசாக விரித்து மூச்சை உள்ளிழுத்து ஒரு புன்முறுவல் செய்வார் பாருங்கள். ‘ நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். அதே நேரம், உனக்கு தண்ணி காட்டி தப்பிச் செல்லும் ஆற்றல் எனக்கு உண்டு’ என்பதை பயப்படாத (எந்த சூழ்நிலையிலும் அவருக்கு பயமேது?) அந்த அலட்சியப் புன்முறுவலிலேயே காட்டியிருப்பார். அவர் அவர்தான்.
உடனே, ராபின்சன் ,‘who are you?’ நீங்க யாரு?’ என்பார். நாடோடி மன்னனில் ‘நான் மக்களிடம் இருந்து மாளிகையை பார்க்கிறேன்’ என்று தலைவர் கூறுவார். தலைவர் எப்போதுமே சாதாரண மக்களைப் பற்றியே சிந்திப்பார். படத்தின் வசனங்கள் எல்லா மக்களுக்கும் சேர வேண்டும் என்று நினைப்பார். அதனால், ராபின்சான் ‘who are you?’ என்று கேட்டாலும் உடனேயே ‘நீங்க யாரு?’ என்று அவரை விட்டே தமிழிலும் கேட்க வைத்து விடுவார்.
‘நாங்க நாய் வியாபாரிங்க சார், விக்க வந்திருக்கோம்’ என்று மனோகர் கூறும்போது டைம் பீசை பிடுங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் விழிகளில் மின்னும். ‘வித்அவுட் மை பெர்மிஷன் எப்படி உள்ள வந்தீங்க?’ என்று ராபின்சன் கேட்க,
‘என்ன இப்படி கேக்கறீங்க? திறந்த வீட்டில் நாய் நுழையறதுன்னு கேள்விப்பட்டதில்லை நீங்க. நாய்களுக்கு விவஸ்தை ஏது? எங்கேயும் நுழையும், எப்படியும் வரும்’ என்பார் தலைவர். அப்போது அவரது குரலிலும் மாடுலேஷனிலும் தொனிக்கும் ஏளனம் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.
அதற்கு விட்டுக் கொடுக்காமல் மனோகர், ‘‘ரொம்ப நன்றி உள்ளது . பழகின நாய்கள் சார்’ என்பார் ..
இப்போது தலைவர் சொல்லும் பதிலும் அவரது செயலும் உடல் மொழியும் கவனித்து ரசிக்கத்தக்க அற்புதம்.
‘ஆமாம் மிஸ்டர் ராபின்சன். எச்சிலை போடறவங்கள்ளாம் இதற்கு எஜமானர்கள். யார் என்ன சொன்னாலும் கேட்கும். அடின்னா அடிக்கும், கடின்னா கடிக்கும், சுடுன்னா சுடும். என்ன பாக்கறீங்க? நான் 2 கால் நாய்கள சொல்லல. 4 கால் நாய்களத்தான் சொல்றேன்’... இது தலைவரின் பதில். இதில் எச்சிலை போடறவங்கள்ளாம்.... என்று சொல்லிக் கொண்டே ராபின்சன் அருகிலிருந்து திரும்பி மூலையில் உள்ள கண்ணாடி பொருத்தப்பட்ட ஜன்னலை பார்த்து நடப்பார். ‘இதற்கு எஜமானர்கள்....’ என்று சொல்லும்போது நடந்து கொண்டே வலது கையை சைடில் காதருகே உயர்த்தி பின்னால் நிற்கும் நாய்களை காட்டும் ஸ்டைல் அவருக்குத்தான் வரும்.
சரி, நடந்து கொண்டே போய் ஜன்னலை பார்ப்பது எதற்காக? அந்த அறை ஒரு மாடியில் அமைந்துளளது. அங்கிருந்து கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு குதித்தால் கீழே இடம் எப்படி இருக்கிறது என்பதை ஜன்னல் அருகே பேசிக் கொண்டே சென்று நோட்டமிடுவார். சினிமாவில் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் மிகவும் ராஜதந்திரம் மிக்கவர் தலைவர். எந்த நிலையிலும் உஷாராக இருப்பார். திட்டமிடலும் மிகச் சரியாக இருக்கும். அவர் குவித்த வெற்றிகளுக்கு இந்த பண்பு நலன்களும் காரணம். அதை உணர்த்துவது போல இந்தக் காட்சி பிரமாதம். வெறுமனே ஓடிச் சென்று குதித்தாலும் நாம் என்ன கேட்கவா போகிறோம்? படம்தான் ஓடாமல் போய்விடப் போகிறதா? இருந்தாலும் ரசிகனை ஒன்ற வைக்கும் நுணுக்கமான காட்சி இது. அவர் ஜன்னலை நோட்டம் விட நடக்கும்போதே விசில் சத்தம் காதைக் கிழிக்கும்.
கீழே குதிப்பதற்கு இடம் தோதாகத்தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மீண்டும் ராபின்சனை நோக்கி தலைவர் நடந்து வருவார். ஓடிச் சென்று வேகமாக மோதினால்தானே கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே குதிக்க முடியும்?
இந்த சூட்சுமம் புரியாத மனோகர், ‘10 பயில்வானும் சரி, ஒரு நாயும் சரி’ என்பார்.
தலைவரின் கிண்டல் பதிலால் தியேட்டரே சிரிப்பால் குலுங்கும். ‘ஓஹோ, அதனால்தான் அடிபட்டு ஓடினவங்கள்ளால் நாய் கால்ல போய் விழறாங்க போலிருக்கு’ என்ற பதில்தான் காரணம். ஆரம்ப காட்சியிலேயே மனோகர் தலைவரிடம் அடிபட்டு தப்பிச் செல்வார். தலைவரின் குத்தல்தான் சிரிப்பலைக்கு காரணம்.
வாக்குவாதத்தை தடுக்க நினைக்கும் ராபின்சனிடம் மனோகர், ‘சார், (கையை சொடுக்கி) அப்டீங்கறத்துக்குள்ளே, அவர் (தலைவர்) கையில் உள்ள டைம்பீசை இது (நாய்)கொண்டு வந்துடும். பார்க்கறீங்களா?’ என்பார்.
இது தலைவர் எதிர்பார்த்ததுதானே. அதனால்தானே, தப்பிக்க ஜன்னலை நோட்டம் விட்டார். மனோகரின் நோக்கத்தை புரிந்து கொண்டு இனி தாமதிக்கக் கூடாது என்றபடி ஓடிச் சென்று ஜன்னலை உடைத்துக் கொண்டு குதிக்கும் முன் தலைவர் சொல்லும் வசனத்தை குத்து மதிப்பாகத்தான் புரிந்து கொள்ள முடியும். நம் ஆட்களின் உற்சாக வெறிக் கூச்சலால் அந்த வசனத்தை முழுமையாக கேட்க முடியாது.
அந்த வசனம்..
‘நாய்களோட திறமையை அவர் பார்க்கட்டும். என்னோட திறமையை நீ பாரு..’
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்