செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 148 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...%20paravai.jpg
புதிய பறவை’ படத்தின் கிளைமாக்ஸ். இப்போது சிவாஜி வீட்டிற்கு வந்திருக்கும் சவுகார் ஜானகி தனது மனைவி அல்ல என்ற உண்மையை பொருட்டு, உணர்ச்சிவசப்பட்டுத் தன்னை மறந்த நிலையில் சிங்கப்பூரில் சவுகார் ஜானகியை ஆத்திரத்தில் அடித்ததன் காரணமாக அவர் இறந்த ரகசியத்தை கக்கிவிடுகிறார். அதன் பின்னர்தான் அவருக்குத் தெரிகிறது, தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் காவல் துறையினர் என்பதும், அவர்கள் ஆடிய நாடகத்திலும் தந்திரமாக விரித்த வலையிலும் தான் வீழ்ந்துவிட்ட விஷயம்.
இப்போது அவருடைய கவனம் முழுவதும் சரோஜாதேவி ஒருவர் மீதே செல்கிறது. காரணம் அவரை முழுமனதுடன் நம்பி, தன் உள்ளத்தை பறிகொடுத்து உண்மையாகக் காதலித்ததுதான். அதனால் அனைவரையும் விட்டுவிட்டுக் கை தட்டிய வண்ணம் சரோஜாதேவியின் அருகில் வந்து அவரைப் பார்த்துக் கூறுகிறார்.
`ஆகா! எவ்வளவு அற்புதமான அமைப்பு! என்ன அருமையான நடிப்பு!
லதா… பலகீனமான என் மேல படை எடுத்து என்னை வீழ்த்தறதுக்கு உன் கைக்குக் கிடைச்ச ஆயுதம், காதல்ங்கற மென்மையான மலர்தானா? அதை வச்சா நீ என்னை அடிச்சுட்டே?’
இந்த வசனத்தைக் கேட்டு கண்கலங்கும் சரோஜாதேவி, `இல்லே இல்லே.ஒங்ககிட்டேயிருந்து உண்மையை வரவழைக்க காதலிக்கிற மாதிரி நடிச்சு கடைசியில் ஒங்களை கைது செய்யத்தான் நான் இங்க வந்தேன். ஆனா. என்னையறியாம ஒங்கே மேலே ஒரு அன்பு ஏற்பட்டு, உங்களை உண்மையா நான் காதலிச்சேன். என்னை நம்புங்க கோபால் – என்னை நம்புங்க’ என்று குமுறி குமுறி அழுது சிவாஜியின் காலில் விழுவார். கைது செய்யப்பட்ட சிவாஜி, கடைசியாக சரோஜாதேவியை அர்த்தமுள்ள ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வார். இதுவரை பறந்த `புதிய பறவை’ இத்துடன் தன் சிறகுகளை மூடிகொண்டுவிட்டது.
ஆரூர்தாஸும் கோப்பை மூடிவிட்டு, சிவாஜியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். உணர்ச்சிவசத்தினால் சிவந்த அவரது அகன்ற விழிகளில் நீர் தேங்கி இருப்பதை பார்த்தார் ஆரூர்தாஸ்.
`எப்படி இருக்கிறது?’ என்று தான் ஏன் கேட்க வேண்டும்? அவராகச் சொல்லட்டுமே என்று மவுனமாக இருந்தார் ஆரூர்தாஸ்.
அந்த மவுன நிலையில் தனது வலது கரத்தை நீட்டி ஆரூர்தாஸின் வலது கையைப் பற்றி குலுக்கிவிட்டு சொன்னார்.
`ஒங்கிட்ட நான் என்ன எதிர்பார்த்தேனோ – அதே மாதிரி – ஏன் அதுக்கு மேலேயும் ரொம்ப நல்லா எழுதி இருக்கே. `கங்கிராட்ஸ்’. இதுக்குத்தான் உன்னை வற்புறுத்தி எழுத வெச்சேன். ஒன்னோட முழு ஒத்துழைப்போட இந்த அண்ணனுக்காக சீக்கிரமாகவும் சிறப்பாகவும் எழுதி முடிச்சு கொடுத்திட்டே.தேங்க்ஸ். இதோடு கழண்டுக்கலாம்னு நினைக்காதே, நீ ராத்திரியெல்லாம் கண்ணு முழிச்சு கஷ்டப்பட்டு எழுதின இந்த வசனங்களை நீதான் ஷூட்டிங்குக்கு வந்து சொல்லிக் கொடுக்கணும். இல்லேன்னா நீ எழுதியும் பிரயோஜனமில்லாம போயிடும். டைரக்டர் தாதாமிராசிக்கு தமிழ் தெரியாது. நீ அப்பப்போ செட்டுக்கு வந்து அவருக்கு இங்கிலீஷ்ல சொல்லி புரிய வைக்கணும். பிள்ளையை பெத்துப் போட்டுட்டா மட்டும் போதுமா? அதை வளத்து நல்லா ஆளாக்கணும்ல. இது எனக்கு மட்டும் இல்லே. உனக்கும் ஒரு ‘பிரஸ்டிஜ்பிலிம்’. உன் சொந்தப்படம் மாதிரி நினைச்சுக்க. இதுக்கு மேலே நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லே.
இடைமறித்து எதுவும் பேசாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் ஆரூர்தாஸ். இரண்டே எழுத்துக்களில் பதில் சொன்னார், `சரி’.
இதைக் கேட்டு சிவாஜி மகிழ்ந்தார். ஆரூர்தாஸ் நெகிழ்ந்தார்.
அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவிலும், கோடம்பாக்கத்தில் விஜயா (வாஹினி) ஸ்டூடியோவிலும் `புதிய பறவை’க்கான செட் போடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
சிவாஜி விரும்பியவாறே ஆரூர்தாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வசனம் சொல்லிக்கொடுத்தார்.
01.03.1964 அன்று விஜயா ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலை 5 மணி ….. ஆரூர்தாஸின் மனைவி அவரை போனில் அழைத்தார். திருத்துறைப்பூண்டியில் அவருடைய அப்பா – அதாவது ஆரூர்தாஸின் மாமனார் காலமாகிவிட்ட துயரச் செய்தியைத் தெரிவித்தார்.
முக்கியமான காட்சிகள் படமாகிக்கொண்டிருந்தன. வேறு வழியின்றி, ‘காரியங்கள் நடந்து முடிந்தவுடன் உடனே தாமதிக்காமல் சென்னை திரும்பிவிடு. நீ வந்த பிறகு, மற்ற முக்கிய காட்சிகளை எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறி ஆரூர்தாஸை ஊருக்கு அனுப்பி வைத்தார் சிவாஜி. ஊரிலிருந்து திரும்பி வந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ஆரூர்தாஸ்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அன்றைக்கு உச்சக்கட்ட காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் ஷூட்டிங் முடிந்து இயக்குநர் ` பேக் –அப்’ சொல்லி விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டன.
அந்தத் தருணத்தில் திடீரென்று ஆரூர்தாஸின் மூளையில் ஒரு மின்னல் மின்னிற்று.
`அண்ணே! ஒரு நிமிஷம்’ என்று அவர் அழைத்ததும் செட்டை விட்டு நடந்து போய்க்கொண்டிருந்த சிவாஜி ` என்னப்பா?’ என்று கேட்டார்.
` சரோஜாதேவி, ` என்னை நம்புங்க கோபால், என்னை நம்புங்க’ ன்னு சொல்லி உங்க கால்ல விழுந்து குமுறி அழறதைப் பாத்துட்டு நீங்க பேசாம போறீங்களே, அது சரியா இல்லே. உங்க கேரக்டர் நினைவு பெற்றதா எனக்கு தோணலை. அந்த இடத்திலே நீங்க இரண்டு வார்த்தை பேசினா நல்லாயிருக்கும்’ என்றார் ஆரூர்தாஸ்.
`நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே?’
`அதாவது `பெண்மையே! நீ வாழ்க ! உள்ளமே உனக்கு ஒரு நன்றி–’ இதை சொன்னீங்கன்னாத்தான் சரோஜாதேவி உங்களைக் காதலிச்சது உண்மை அப்படீங்றதை நீங்க ஒப்புக்கொண்டதா அர்த்தமாகும். அப்பத்தான் உங்க கதாபாத்திரம் நியாயப்படுத்தப்பட்டு உங்க மேலே ஒரு அனுதாபம் பிறக்கும்.
இதை ஆரூர்தாஸ் சொன்னவுடனே சிவாஜியின் முகபாவனை மாறி, ‘அடப்பாவி! ஷூட்டிங் `பேக்- அப்’ ஆனதுக்கப்பறம் இப்ப வந்து சொல்றியே?’
`இப்போதான் எனக்கு தோணுச்சு.’
இதற்குள் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர்கள் வெளியில் சென்றுவிட்டார்கள். சிவாஜி தன் கைகளைத் தட்டி உரத்த குரலில் ` ஏ தாதா, பிரசாத் எல்லோரும் உள்ளே வாங்க’ என்றதும், அவர்கள் `என்னமோ ஏதோ’ என்று எண்ணி உடனே உள்ளே நுழைந்தனர். சிவாஜி சொன்னதன் பேரில் மீண்டும் `லைட் ஆன்’ ஆகி, ஆரூர்தாஸ் சிவாஜிக்கு சொன்ன வசனத்தை சொல்லி இன்னொரு ` டேக்’ எடுக்கப்பட்டது.
`பெண்மையே… நீ வாழ்க ! உள்ளமே உனக்கு என் நன்றி!’
இந்த மின்னல் வசனத்தை இன்றைக்கும் `புதிய பறவை’ படத்தில் கேட்கலாம்.
(தொடரும்)