-
(31)
தாங்க முடியாத மன வேதனையுடன் அன்னை கலைவாணியின் முன் அமர்ந்து வேண்டுவார்.அன்னை
தோன்றுவாள். ஊனம் நீக்குவாள். உருவம் அழகாக்குவாள்.
மிக கம்பீரமான எழில் தோற்றம்
பெறும் நடிகர் திலகத்தை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கென்னவோ.. கம்பீரத் தோற்றம் பெறுவதற்கு முந்தைய விநாடியில், அன்னையை வியப்போடு வாய்
பிளந்து பார்த்திருக்கும் அந்தத்
தோற்றம் மிகப் பிடிக்கும்.
(32)
அன்னை அருள் வழங்கி, பேசும்
சக்தியையையும் தந்து விட்டாள்.பிறந்தது தொட்டு
அந்த நிமிடம் வரை பேச முடியாதிருந்தவருக்கு பேச்சு
படிப்படியாக வரும் அதிசயம்
நிகழ்கிறது.
அய்யன் தன் முதல் வார்த்தைக்காக நிரம்பவும்
பிரயத்தனப்பட்டு, கண்கள் சுருக்கி, உள்ளிருந்து வார்த்தைகள் தேடும் பாவனையைப் பார்க்க நேரும்
போதெல்லாம் உடனிருப்போர்
முகத்தைக் கவனிப்பேன்.
இதுவரை நான் பார்த்ததில் தானும் கண்கள் சுருக்காமல்
திடமாய் அமர்ந்து பார்ப்பவர்
எவரையும் நான் பார்த்ததில்லை. இனியும் பார்க்கப் போவதில்லை.
(33)
தனக்கு ஒலி தந்து, மொழி தந்த
அன்னையை வியந்து பாடும்
"அகர முதல எழுத்தெல்லாம்"
பாடலினூடே "ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்"
என்கிற வரியின் போது அன்னைக்குத் தன் கண்களில்
காட்டும் நன்றிப் பெருக்கு
அருமையானது. அரிதானது.
வேறு யாரிடத்தும் காணக்
கிடைக்காதது.
(34)
அன்பு மகனுக்காக அழுது விட்டுக் கிளம்பிப் போன அருமைத் தந்தை வீடு திரும்பினால்... அலங்காரத்
திருவடிவாய் மைந்தன்.
ஆச்சரியப்படும் தந்தையிடம்
தனக்கு பேச்சு வந்த கதையைச்
சொல்லி விட்டு, குரல் தழுதழுக்க "கலைமகளுக்குப்
பூமாலையே சூட்டி வந்த நான்
பாமாலை சூட்டி விட்டேனப்பா..
பாமாலை சூட்டி விட்டேன்"என்று நடிகர் திலகம்
சொல்லும் போது அவரது ஒளி
மிகுந்த கண்கள் கண்ணீரோடு
காட்டும் பெருமிதம்.. அவர்
நமக்குக் கிடைத்த பெருமிதம்
போல.
(35)
இறைவன் மீது நம்மவர் பாடும்
பாடல் கேட்டு அசந்து போகும்
அரசி, தான் கழுத்தில் அணிந்த
விலையுயர்ந்த முத்து மாலையை பரிசளிக்க எண்ணி,
"நானே அகமுவந்து கொடுக்கிறேனென்றால்..."
என்கிற கர்வமான வாக்கியத்தை உபயோகிப்பார்.
கல்விக்கன்றி எதற்கும் அடிபணியாத நம்மவர் இந்த
இடத்தில் காட்டுகிற வெகு
அலட்சியமான உடல் மொழிகளைக் கவனியுங்கள்...
நடிகர் திலகத்துள் வித்யாபதி
ஆழ இறங்கியிருப்பது புரியும்.
(36)
இதே காட்சியில்
இன்னொன்று...
அந்த மாலையைப் பரிசாகத்
தர எண்ணும் அரசி, "விலை
மதிப்பற்ற பரிசு" என்று ஒரு
முறை சொல்வார். நிறைய
வாக்குவாதங்களுக்குப் பிறகு
அதை வாங்க மறுத்து விடுவார்
நடிகர் திலகம். கடைசியில்
அரசி "பரிசு..?" என்று நீட்ட,
"விலை மதிப்பற்ற பொருள்..
தங்களிடமே இருக்கட்டும்.."
என்பார். பதிலாக இல்லாமல்
பதிலடியாக வார்த்தைகளை
மாற்றத் தெரிந்தவரன்றோ..
நம் வித்யாபதி..?
(37)
அரசியைப் பகைத்துக் கொண்டதற்காக அப்பா கண்டிப்பார்... அரசியால் பிள்ளைக்கு ஆபத்து வருமோ
என்ற பயத்தில்.
"செங்கோல் அவர்கள் கையில்
என்றால் எழுதுகோல் என் கையில்" என்று நடிகர் திலகம்
சொல்வார். அப்போது அவர்
அகல விரிக்கும் கண்களில்
காட்டும் பயமற்ற அலட்சிய பாவங்களில் இன்னும் நூறு தலைமுறைக் கலைஞர்களுக்கான பாடங்கள்..
(38)
அரசவைக்கு வித்யாபதியை
வரச் சொல்லி அழைப்பு வரும்.
வருவார்... அரசவைக்குள்.
கொஞ்ச நேரத்துக்கு முன்
நாரதராய் நடந்த பூனை நடையல்ல இது... புலி நடை.
(39)
அரசவையில் அரசியும், தளபதியும் மாற்றி, மாற்றி
கேள்வி கேட்பார்கள்.
தளபதி கேட்கிறார்..
" அழியாதிருப்பது..?"
வித்யாபதியின் பதில்..
"கலைஞனின் காவியம்."
அழியாதிருக்கும் காவியத்துக்கு
"சரஸ்வதி சபதம்" ஒரு சான்று.
(40)
கொண்ட கொள்கையில் உறுதியாயிருப்பவர்களின்
கோபம் பலமானதாகவே இருக்கும். அரசியைப் புகழ்ந்து
ஒரு கவி பாடச் சொல்லி திரும்பத் திரும்ப வலியுறுத்தப்
படும் கோபத்தில்" இந்த மனித
ஜென்மங்களைப் பாடுவதில்லை" என்று சொல்லும் உறுதியும், அந்தக்
கைவீச்சும் இதயக் குறிப்பேட்டில் அழுத்தமாகப்
பதிவானவை.
-
(41)
நடிகர் திலகத்தின் திரைப்படக்
கதையோடு ஒன்றி வருகிற
வசனங்கள், அவரது நற்பண்புகளையும் குறிப்பது
போல் ஒலிக்கும் தருணங்கள்..
ரசிகனுக்கு உற்சாகத் தருணங்கள்.
அந்த உற்சாகத் தருணம்
இந்தப் படத்திலும் உண்டு..
சிறைக்கு வந்து 'பழசை மறந்து
விட வேண்டாம்' என்று மிரட்டும் அரசியிடம் "பழசை
மறக்கும் பழக்கம் எனக்கில்லை" எனும் போது...
(42)
நாரதராக நடித்துதான் சுவாரஸ்யமான நகைச்சுவை
நடிப்பைத் தர முடியுமா? வித்யாபதியாக நடித்தும் தர முடியும் என்று நடிகர் திலகம்
காட்டிய இடம்...
சிறையில் அரசி, வித்யாபதியின் சவாலுக்குப்
பதிலாக "பார்க்கலாம்" என்று
சொல்லும் போது, "பாருங்கள்"
என்பது. "வருகிறேன்" எனும்
போது "நன்றி" என்பது..
(43)
மூன்று கடவுளருக்குள்ளும்
போட்டிப் புயலை உருவாக்கிய
நாரதர், மீண்டும் மூவரையும்
ஒரு சேரச் சந்திக்கும் இடம்.
கலைவாணி கோபமாய் மிரட்ட
ஏதோ புலம்பிக் கொண்டே சிணுங்குவார்... அன்னையிடத்தில் பிள்ளை கொள்கிற உரிமை, அந்தச் சிணுங்கலில் தெரியும்.
(44)
அரசியைக் கிண்டலடிக்கும்
"ராணி மகாராணி" பாடல்.
"அங்கமெங்கும்" என்ற வரியின் போது மேலேறிய
கர்வப் பார்வையோடும், முன்
நடப்பது போன்றே பின் நடக்கும் கம்பீர நடையோடும்
அய்யனைத் தரிசிப்பதற்காவது
மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை ஆண்டவன்
ஐந்தாறு மடங்கு அதிகரிக்க
வேண்டும்.
(45)
செல்வச் செருக்கு கொண்ட
ராணியும், வீரத்தால் திமிர் கொண்ட தளபதியும் சண்டையிடும் போது இடையில் நின்று சிரிப்பை அடக்க முடியாமல் காட்டும்
உடல் மொழிகள்.. பாவனைகள்.. அதைப் படம் பிடித்த அந்தக்
காமிரா, கொடுத்து வைத்தது.
(46)
தன்னையும், கல்வியையும்
அழித்து மண்ணோடு மண்ணாக்குவேன் என்று சபதமிடும் தளபதியிடம் கோபத்தில் உறுமும் உறுமல்...
தேவைப்படும் போதெல்லாம்
அடித்தொண்டையிலிருந்து வரும் அந்தக் கோபக் குரல்...
எனது வெகுகால ஆச்சரியம்.
(47)
தண்டனைக் களத்துக்கு அழைத்து வருகிறார்கள்.. வித்யாபதியை.
அங்கும் ஒரு அழகு நடை...
அந்த நடையை பார்க்கத் தவறியவர்களை யானையை
விட்டு மிதிக்க விடலாம்.
(48)
தன்னைப் போலவே வணங்கத்தக்கவராய், நல்லதைத் துவக்கி வைப்பவராய், எல்லோருக்கும்
பிரியமானவராயிருப்பதால் தான் கணேசப் பெருமான், கணேசப் பெருமானைப் பார்த்து
பின் சென்றாரோ?
(49)
எல்லாம் சுபமாய் முடிகிறது.
கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கைகோர்த்துச் சிரிக்கும் கடைசிக் காட்சி.
மீண்டும் நாரதராக நடிகர் திலகம்.
கல்வி, செல்வம், வீரம் மூன்றுமே அவசியமென்று
உணர்த்த வேண்டிய சூழல்
உணர்ந்த, நகைச்சுவை, நையாண்டிகள் விடுத்த
அந்தப் பக்குவமான நடிப்பில்
புரிதல்.
(50)
"இசையில்,
கலையில்,
கவியில்,
மழலை மொழியில்
இறைவன் உண்டு."
-இதே படத்தில் அய்யா நடிகர்
திலகம் பாடுவதாய் வரும் பாடல் வரிகள்.
இவற்றில் மட்டுமா.. இறைவன்?
அய்யனின் நடிப்பிலும்தானே?
*****
-
சிவாஜி பாட்டு-26
------------------
"என் மகன்" படத்தில் எனக்கு
மிகவும் பிடித்த காட்சி ஒன்று
உண்டு.
படத்தின் கடைசியில், திரையை
உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கெல்லாம் நடிகர் திலகம்
அழகாய் "டாட்டா" காட்டிக்
கொண்டிருக்கையில், "வணக்கம்" என்ற வார்த்தை
வண்ணமாய் வந்து குறுக்கே
நிற்கும்.
ஜெயிக்கிற விஷயத்தில் எனக்கு வணக்கமே கிடையாது
என்கிற கருத்தில் நடிகர் திலகம்
அந்த வணக்கத்தை நிறுத்திப்
பிடித்து வந்த வழியே தள்ளி விடுவார்.
ஆம்.
ஜெயிக்கிற விஷயத்தில் அவருக்கு வணக்கமே கிடையாது என்பதை இந்த "உத்தமன்'பாடலும் ஒரு முறை
நிரூபிக்கிறது.
ஒடுங்கிய வாசலோடு உசரத்தில் இருக்கும் கோயிலின் படிகளில் இருந்து
அழகுத் துணையோடு இறங்குவதில் துவங்கி, இன்னொரு அழகான இடத்தின்
படிகளில் ஏறுவதோடு முடியும்
இந்தப் பாடலும் முடியும் நிமிஷத்தை வெறுக்க வைக்கும்.
பின்னங்கை கட்டிக் கொண்டு
எந்தப் பிடிப்புமில்லாமல் அந்தரத்தில் ஒரு கால் உயர்த்தி நிற்பது அழகு.
கேமராவை நோக்கி சிரித்தபடி
திரும்புகையில் கொஞ்சம் கூட
செயற்கை சேர்க்காத அந்தப்
புன்னகை முகம் அழகு.
கொஞ்சம் பின் நகர்ந்தால் பாதாளம் காட்டுகிற உயரமான அந்த சதுரப் பரப்பில் காதலி
வெட்கத்தால் ஓடுகையில் குறுக்கே கால் நீட்டி மறித்து
அவள் வேகம் மட்டுப்படுத்துகிற குறும்பு அழகு.
"பூமியெங்கும் பச்சைச் சேலை"
பாடத் துவங்கும் போது தலை
சிலுப்புவது அழகு.
கழுத்து சுற்றிய வெளிர் நீல
நீள் துண்டு அழகுக்கு அழகு
சேர்க்க, ஒயிலாய் உடல் வளைத்துக் குனிந்து காதலியின் கால், கையென
தாளம் இசைப்பது அழகு.
வளைந்து, நெளிந்து நடந்து வந்து, தலை ஒருபுறமாய்ச்
சாய்த்து, ஆளை அப்படியே
தூக்கிக் கொண்டு போகிற ஒரு சிரிப்பைத் தனது இதழ்களிலே
தவழ விடுவதும்...
கழுத்துத் துண்டின் நீளமான ஒற்றை முனையைப் பற்றிச்
சுழற்றிக் கொண்டு வேக நடை
நடப்பது அழகு.
அழகென்ற சொல்லுக்கு இலக்கணமாக அய்யன் நடிகர் திலகத்தை ஆண்டவன் படைத்தது அழகு.
அந்த அழகு முகத்தை ஆயுசுக்கும் ரசிப்பதற்கு அந்த ஆண்டவனே நம்மைப் படைத்ததும் அழகு.
http://youtu.be/yvf6SCQQA3A
-
சிவாஜி பாட்டு- 27
------------------
முல்லா கதைகளில் படித்த ஞாபகம்.
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் மனைவி,
வேலை முடித்துத் தினமும்
மாலையில் வீடு திரும்பும்
கணவனுக்கும், வேறொரு
பெண்ணுக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகிக்கிறாள்.
அதற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்கக் கூடும் என்று தினமும் கணவன் கழற்றிப்
போடுகிற உடைகளைக் கவனமாக ஆய்வு செய்கிறாள்.
கணவனுக்கு முடி கொட்டும்
வியாதி உண்டு. அவனது வெள்ளைச் சட்டையில் விழும்
கறுப்பு நிற தலைமுடியை
வைத்து சந்தேகத்தை உறுதி
செய்து வசவு பாடத் துவங்கினாள்.
கணவன் ஜாக்கிரதையானான்.
தினமும் வேலை முடித்துக் கிளம்பும் போது சட்டையைக்
கழற்றி கறுப்பு முடி ஒட்டிக்
கிடக்கிறதா என்று நன்கு பரிசோதனை செய்த பிறகே
புறப்பட்டான்.
அவனுடைய போதாத வேளை,
ஒருநாள் அவனது நரைமுடி
ஒன்று அவனது வெள்ளைச்
சட்டையில் விழுந்து, அவனும்
கவனிக்காமல் வீடு வந்து சேர்ந்தான்.
மனைவிக்காரி பார்த்து விட்டுப்
பத்ரகாளியானாள்.
"போயும் போயும் ஒரு வயதான
பெண்மணியுடனா தொடர்பு
வைத்திருக்கிறாய்...?"
கணவன் நொந்து போனான்.
மறுநாள் மிகக் கவனமானான்.
வெள்ளைச் சட்டையைக் கழற்றி அங்குலம், அங்குலமாய்ப் பரிசோதித்து,
பத்து முறை சட்டையை உதறி,
சட்டையில் கறுப்பு முடியோ,
நரை முடியோ இல்லையென்று
உறுதி செய்த பிறகே வீடு திரும்பினான்.
மனைவி வழக்கம் போல சட்டையை ஆய்வு செய்தாள்.
அங்குலம், அங்குலமாக ஆராய்ந்தாள். உன்னிப்பாய்
உற்றுப் பார்த்தாள். சட்டையில்
எந்த முடியும் இல்லையென்று
அறிந்தாள்.
கண்களில் கனல் தேக்கி கணவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
கேட்டாள்.
"இப்போது ஒரு மொட்டைத்
தலைப் பெண்ணோடு உறவு
வைத்திருக்கிறாய்..இல்லையா?"
*******
சந்தேகம் மட்டுமல்ல, தவறான
புரிதல், பிடிவாதம், கர்வம்
என்று மோசமான குணமுள்ளவள் மனைவியாக
வாய்த்தால், அந்த ஆண்மகனின் வாழ்க்கை அவலப்பட்டுப் போகிறது.
பெய்த பெருமழையில் கரையுடைத்து ஓடும் வெள்ளமாய் வாழ்வோடு ஓடிக் கொண்டிருந்தனை கல்யாணம்
பண்ணிக் கொண்டு வந்தவள்
கதறக் கதறக் கலங்கடிக்கும்
போது, காயப்பட்ட மனசிலிருந்து பீறிட்டுப் பாயும்
கவலை ரத்தம் இந்தப் பாடல்.
ஏட்டுப் படிப்பில்லாத அப்பாவித்தனத்தையும், நற்குணங்களால் நல்லவற்றைப் படித்துத் தேர்ந்த
முதிர்ச்சியையும் ஒரே முகத்தில் பிரித்துக் காட்டுவதற்கு நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
"காட்டு மானை வேட்டையாடத்
தயங்கவில்லையே..
இந்த வீட்டு மானின் உள்ளம்
ஏனோ விளங்கவில்லையே."
ஏகப்பட்ட பயங்கரங்கள் பல்லிளிக்கும் காட்டுக்குள்ளேயே சாதித்து வந்தவன், வீட்டுக்குள் ஒரு அழகான பெண்ணிடம் பயந்து,
அவமானப்பட்டுக் கூனிக் குறுகிக் கிடக்கிற அவலத்தை
ஒரு நான்கு நிமிஷப் பாடலுக்குள் விளக்கி விடுவது,
நடிகர் திலகம் தவிர வேறு
யாராலும் சாத்தியமானதல்ல.
அந்த திறமை முகத்தில் மனைவியால் பட்ட அவமானத்தை அப்பட்டமாய்க்
காட்டும் வருத்தமும் தெரியும்.
"அவள் மேல்தான் தவறு. நான்
நல்லவன். கூனிக் குறுக எனக்கு அவசியமில்லை"- என்பதான ஒரு ஆண்பிள்ளைத்
திமிரும் தெரியும்.
பாடலின் இடையில் ஒரு முறை எழுந்து நின்று "ஆ..ஆ"
என்று சோம்பல் முறித்து, கைகள் நீட்டி வளைத்து, உடம்பை நெளித்து...
இது போன்ற பாவனைகளுக்கு
முற்றுப்புள்ளி வைப்பது போல்
பின்புறத்தை கேலியாக ஆட்டிச்
செல்வது...
அவரைப் பிடிக்காதவர்கள் அவர் மேல் வைக்கும் விமர்சனங்களுக்கு, அவர் காட்டும் பழிப்பு.
கலையுலகில் படிந்த இருட்டையெல்லாம் அவரது
திறமை வெளிச்சம் பாய்ந்து
செய்யும் அழிப்பு.
அய்யா நடிகர் திலகம் சார்ந்த
அத்தனை உன்னதங்களையும்
விளக்கி விட...
"நான் கவிஞனுமில்லை.
நல்ல ரசிகனுமில்லை."
http://youtu.be/o17JQ6TWP30
-
சிவாஜி பாட்டு-28
------------------
இதோ...
திருட்டுப் பயல் பிறக்கிறான்.
செப்பு வாய் திறந்து சிரிக்கிறான்.
கண்ணன் என்கிற கிருஷ்ணன்
என்கிற கோவிந்தன் என்கிற
கோபாலன் என்கிற மாதவன்
என்கிற முகுந்தன் என்கிற
ரமணன் என்கிற மதுசூதனன்
என்கிற...
அந்த மாயவன்-
யுகம் யுகமாய் நீண்டு கொண்டே போகும் கடவுளுக்கும்,மனிதருக்குமான
இடைவெளியை இல்லாதொழித்தவன்.
அவனது திருக்கரங்கள் சும்மா
மாய மந்திரம் செய்து கொண்டிராமல், தன் பாதத்தில்
விழுந்து வேண்டியவனின்
தோளில் சிநேகமாய் விழுந்தவை.
மற்ற கடவுளரெல்லாம் வேதப்
புத்தகம் போல்,பாடப் புத்தகம்
போல் மிரட்டலாய் நின்றிருந்து
பயங்காட்ட, இவன் சுவாரஸ்யமான கதைப் புத்தகம் போல் எல்லோருக்கும்
பிடித்துப் போனான்.
கண்ணன்-
குழந்தையாய்க் குறும்பு, வாலிபனாய்க் காதல் சேட்டைகள், அகம்பாவங்களை
அறிவாயுதம் கொண்டு சாய்க்கிற புத்திசாலித்தனம் என்று இயல்பு விலகாமல்,
யதார்த்தம் சிதையாமல், வித்தை காட்டாமல் நம் மனம்
நிறைந்த கடவுள்.
வாயெல்லாம் வெண்ணெய் வழிய தவழ்ந்த நிலையில்
இவன் சிரிக்கும் படம் பார்த்தால் கும்பிடக் கூடத்
தோணாது மனம் நிறையும்.
அவன் சிரிக்கிற சிரிப்பே நம்
மனக்கஷ்டங்களை "லபக்"
என்று விழுங்கி விடும்.
******
'தெய்வமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நாம் கண்ணனைக் கொண்டாட...
'நடிகனென்றால் இப்படித்தான்
இருக்க வேண்டும்' என்பதான
அடையாளமாயிருக்கிற நம் நடிகர் திலகம், கண்ணனைக்
கொண்டாட...
அழகான பாசுரம், அருமையான
பாடலாயிற்று.
நிமிர்ந்து அமர்ந்திருக்கிற அமர்வே கம்பீரந்தான். பலகையிட்டு அமர்ந்ததில்
இன்னும் கொஞ்சம் உயரப்படும் போது.. கம்பீரமும்
உயர்கிறது.
நடு நெஞ்சில் கைகள் குவியும் கும்பிடல், அய்யனுக்கொன்றும்
புதிதில்லை. "வெற்றி வடிவேலனே" பாடும் கட்டபொம்மன் கிட்டத்தட்ட
இப்படித்தான் கும்பிடுகிறார்.
ஒரே விதமான கும்பிடலை
கட்டபொம்மனுக்கு வீரமாகவும், விப்ர நாராயணருக்கு பக்தியாகவும்
வித்தியாசப்படுத்தி செய்வது
நடிகர் திலகத்தால் மட்டுமே
ஆகிற காரியம்.
அழகென்பது ஒப்பனையால் மட்டும் உண்டாவதா? இல்லை
என்கிறது அள்ளி முடித்த கொண்டைச் சிகை விட்டுத்
துள்ளி நெற்றியில் சுருளும்
ஒற்றைக் கொத்து முடி.
"ஆ..ஊ" என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினால்தான்
ஒரு நடிகன், பல கோடி ரசிகர்களைத் தன் வசம் ஈர்க்க
முடியுமா? இல்லை.. ஒரு ரெண்டு நிமிஷப் பாசுரத்துக்கு
அமைதியாக, அம்சமாக வாயசைத்தே ஈர்க்கலாம் என்கிறார் அய்யன்.
ஆண்டவன் அடியவர்களின்
நடையழகும் அழகு மங்கையரை வியந்து வணங்க வைக்குமா..? 'வைக்கும்' என்கிறது... "காரொளி வண்ணனே" என்று பாடி வருகையில் அய்யன் புரியும்
நளினத்தையும், ராஜம்பீரத்தையும் சமவிகிதத்தில் கலந்து செய்த
அந்த அழகு நடை.
******
இதோ..
திருட்டுப் பயல் பிறக்கிறான்.
செப்பு வாய் திறந்து சிரிக்கிறான்.
அன்பு தெய்வமவன், துணைக்கொரு கலை தெய்வத்தையும் கூட்டி வந்து,
பாடலென்கிற பேரில், வைகுண்ட ஏகாதசி இல்லாமலே சொர்க்க வாசல்
திறக்கிறான்.
http://youtu.be/Pfgfff_MZ00
-
சிவாஜி பாட்டு-29
-------------------
இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்கு "இனிப்புக் கடை"
என்றே பெயரிருப்பதை எங்கோ
பார்த்தேன்.
அழகான ஒரு திரைப்பாடல்
"அழகே வா" என்றே துவங்குவதை "ஆண்டவன் கட்டளை"யில் கேட்டேன்.
பார்த்தேன்.
******
ஒரு இளம் பெண், அந்த வயதிற்கே உரிய வேக, தாகங்களோடு பாடும் மென்பாடல்களென்றால் எழுபதுகளின் இறுதியில் உருவான இசைஞர்கள் உருவாக்கிய பாடல்கள்தாம்
என்கிற கருத்தே என் காலத்தில் ( வதந்தியாய் ) பரவியிருந்தது.
அதற்கு உதாரணமாக அவர்கள்
சுட்டிக்காட்டிய பாடல்களில்
மெட்டும்,இசையும் என்னவோ
பிரமாதப்பட்டாலும், பாடலின்
காட்சிகள் சகிக்க முடியாமலே
இருந்தன.
குளத்தோரமாய் ஒரு குடம்
தண்ணீர் மொள்ள வந்தவள்
காரணமே இல்லாமல் கவர்ச்சியாயிருந்த கண்றாவித்தனங்கள் ஒரு இனிமையான மெட்டைப் போர்த்தி மறைக்கப்பட்டன.
காற்றை விட மென்மையான
ஒரு சங்கீதக் குரல் பின்னொலித்த பாடலில், கணவனை விடுத்து கண்டவனோடு காட்டுக்குள்
அலையும் ஒரு அபத்தப் பெண்ணே காட்சிப்படுத்தப்பட்டாள்.
ஒரு திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக்காக, கதையும், காட்சிகளும் பாடலின்
போக்கில் திசைமாறி அலைந்த
கொடுமைகளும் நிகழ்ந்தன.
அப்படிப்பட்ட பாடல்களுக்கெல்லாம் பழிப்புக்
காட்டியது... இந்த "அழகே வா"
பாடல்.
******
பசித்த பின் உணவருந்துவது
போன்ற ஒரு முறையும், ஒழுங்கும்... கதைக்கேற்றபடி
பாடல் உருவாக்குகிற மெல்லிசை மன்னரிடமே இருந்ததென்பேன்.
கதாநாயகன் வாலிபன். என்றாலும் ஒழுக்கசீலன்.
கற்றறிந்த பண்டிதன். நிறைய மாணவர்களுக்கு பாடம் போதிக்கிற ஆசிரியன்.
கதாநாயகி இளம்பெண். கல்லூரி மாணவி. ஆசிரியராயிருக்கிற நாயகனிடமே பயில்கிறவள்.
ஒழுக்கக் கட்டுப்பாடுகளோடு
உயர்ந்த வாழ்க்கை வாழும்
நாயகன், தன்னிடம் பயிலும்
மாணவியின் வசம் தன்னை
கொஞ்சம், கொஞ்சமாய் இழப்பதை அழகாகச் சொல்கிறது இந்தப்
பாடல்.
கொஞ்சம் அசந்தால் நாயகியை
அலைகிறவளாகவும், நாயகனை வழிகிறவனாகவும்
காட்டி விடுகிற கதைச் சூழல்.
காட்சிச் சூழல்.
காவியமாக்குகிறார்கள்...நடிகர் திலகமும், தேவிகாவும்.
கடற்கரையைக் கல்லூரியாக்கி
மாணவி,ஆசிரியருக்குப் பாடம்
நடத்துகிறாள்.
"அழகே வா" என்று தேன் தடவி
நீளும் குரலில்தான் இறைவன்
வாழ்கிறான்.
வேறு விதமாய் கண்ணியமாய்
வாழ்ந்தவனை இன்றைய காதல் பாடாய்ப் படுத்துவதை
அப்பட்டமாய்க் காட்டுவதற்கு
நடிகர் திலகத்தின் கண்களைத்
தவிர வேறு கண்களுக்குச்
சக்தி கிடையாது.
ஒரு உயரமான பாறை. அதன்
பின்னே உயர்ந்து வளர்ந்த
தென்னை மரம். பாறையில்
இறுகிய, குழம்பிய நடிப்பு
பாவங்களுடன் நடிகர் திலகம்
நிற்கிறார். சட்டென்று தென்னை மரத்தை விட அவரே
உயர்ந்து தெரிகிறார்.
பழைய ஒழுக்கமான வாழ்க்கையா..? பாழாய்ப் போன
காதலா..? என்று மனம் கொள்ளும் தடுமாற்றமென்பது
பாவனைகளால் விளக்கி விட
முடியாத உணர்ச்சி.
பூதம் பார்த்து மிரண்ட ஒரு குழந்தையின் பயந்த பார்வை,
பின் திரும்பி நின்று முதுகு
காட்டி நிற்கையில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாததை வெளிப்படுத்தும்
விதமாய் வலது கையை மூடி
இறுக்கி தன் தொடையில் குத்திக் கொள்வது, அழகானவள்
அழகாய்ப் பாடிக் குளித்துக்
கொண்டிருக்க, விலகி நடக்க
முன் வைத்த காலும், தயங்கி
மீண்டும் பின் திரும்பும் காலுமாய் ஒரு பாவனை...
இப்படி சின்னச் சின்ன பாவனைகள் கொண்டே அந்த
உணர்ச்சியை விளக்கி விடுவது... நடிகர் திலகத்தின்
மூலமாக நமக்குக் கிடைக்க
வேண்டும், கிடைக்கும் என்பது..
ஆண்டவன் கட்டளை.
http://youtu.be/3lIpebdRTw0
-
சிவாஜி பாட்டு-30
-------------------
என்னை அழ வைத்த கவிதைகள் ஏராளமாயிருக்கின்றன.
என் கவிதை, நண்பரொருவரை
அழ வைத்தது.. எனக்கே வியப்பு.
என் தந்தை மறைந்து ஏழெட்டு
வருடங்களுக்குப் பிறகு, அவரது நினைவு நாளில் ஒரு
கவிதை எழுதியிருந்தேன்.
அவரைக் குறித்த என் நினைவுகளோடு நீண்ட அந்தக்
கவிதையை இப்படி முடித்திருந்தேன்...
"ஜென்மமெனும் பாத்திரத்தில்
ஒரு பிச்சையாய் விழுந்தது
உன் மரணத்தின் கௌரவமாயிருக்கலாம்.
ஆனாலும்..
அப்பா..!
இன்று... இப்போது
நீ
ஒரு விதவையின்
புருஷன்தானே..?"
-கவிதை எழுதிய காகிதத்தை
அந்த நண்பரிடம் வாசிக்கக்
கொடுத்த போது, உள்ளூர எனக்கு "திக் திக்".
காரணம்... அந்த நண்பர் நல்ல
கவிஞர்.மிகச் சிறந்த இலக்கியவாதி. தேர்ந்த விமர்சகர். என்னத்தையோ
எழுதி அவரிடம் பாராட்டெல்லாம் வாங்கவே
முடியாது.
நீண்ட நேரமாக கவிழ்ந்த தலையை நிமிர்த்தாமல் படித்துக் கொண்டிருந்தவரை
குனிந்து உற்றுப் பார்த்தேன்.
அதிர்ந்தேன். அவர் அழுது
கொண்டிருந்தார்.
அழுது முடித்து ஆசுவாசப்பட்ட
பிறகு அவரே அழுகைக்குக்
காரணம் சொன்னார்.
"உங்கள் கவிதையின் ஏக்கத்தில், கோபத்தில் இருக்கிற நிஜம்தான் என்னை
அழ வைத்தது."
நிஜமான கலைவடிவங்களுக்கு
கிடைக்கிற மரியாதை அலாதியானது.
நிஜத்தைப் பாடல் வடிவமாக்கிக் கொண்ட இந்த
"முத்துக்களோ கண்கள்" அதற்கு ஒரு உதாரணம்.
******
"டிங்.. டிங் டிங்..டிங்
டிங்.. டிங் டிங்..டிங்"
- ஒரு சின்ன எதிரொலியோடு
இனிமையாய் வந்து விழும்
துவக்க இசையே, காதலில்
வீழ்ந்த ஒரு ஆடவனின் கனவுத்
துவக்கம் என்று நிச்சயப்படுத்த
மெல்லிசை மாமன்னரால் முடிகிறது.
இரவில் இந்தப் பாடலோடு
தூங்கினால், காலைப் பொழுதும்
இந்தப் பாடலுடனேயே விடிகிறது.
*******
கனவு காணும் நாயகன், ஏழை. சாதாரணனுக்கும் கீழான சாதாரணன். வாழ்க்கை, வறுமைக் கரங்கள் கொண்டு
அவனது உடைகளைக் கிழித்தாலும், அவனது உடைக்
கிழிசல்களுக்கூடாக அவனது
நம்பிக்கை சிரித்தது.
அவன் நல்லவன். கனவிலும்
யாருக்கும் தீங்கு நினையாதவன். கனவில் வரும்
நாயகி இவனுக்கு மாலை சூட்டுகிறாள். அவள் தோளில்
கிடக்கும் மாலையை அவளேதான் சூடிக் கொண்டிருக்கிறாள்.
நாயகன் கண்ணியமானவன்.
கனவிலும் யாருக்கும் தீங்கு
நினையாதவன்.
******
சர்க்கரை டப்பா காலியாய்ச்
சிரிக்க, கசப்புக் காப்பி குடித்து
முடிக்கும் தருவாயில், தம்ளர்
விளிம்பில் ஒட்டிக் கிடந்த
ஒரு சீனித் துணுக்கு நாக்கில்
பட்டு கொடுக்கிற இனிப்பாய்..
நாயகனின் நீளமான கசப்பு வாழ்க்கைக்கூடே இந்தக் கனவுக் காதல்... கொஞ்சமாய்த்
தித்திப்பு.
******
வியர்வை மினுக்கும், யதார்த்த
வாழ்வின் அடையாளங்களாய்
நமக்குப் புலப்படும் இந்த இருவரின் ஒப்பனையற்ற
முகங்கள்... வழமையான தமிழ்
சினிமா கனவுப் பாடல்களை
விட்டு வெகுதூரம் தள்ளி நின்ற
அறுபதுகளின் ஆச்சரியம்.
******
ஒரு நல்ல நடிப்புக்கலைஞனின்
கலையொழுக்கத்திற்கு எல்லையோ, முடிவோ இல்லை என்பதற்கு இந்தப்
பாடலில் ஒரு உதாரணம் வைக்கிறார்... நடிகர் திலகம்.
பாடலின் துவக்கத்தில் ஒரு முறை மல்லாந்து படுத்துக் கொண்டு, புன்னகை அரசியின்
பக்கம் முகம் திருப்பி "முத்துக்களோ கண்கள்" என்று
பாடுகிறார்.
படுத்துக் கொண்டு பாடும் போதும் அத்தனை தத்ரூபமான
வாயசைப்பு.
******
பாடல் முழுதும் நடிகர் திலகம்
காட்டுகிற உற்சாக முகபாவங்கள், இதழ் விட்டு
நீங்காத அற்புதப் புன்னகை...
எல்லாமே, நம்மையும் ஒரு
காதல் உலகம் நோக்கி கைபிடித்து அழைத்துச் செல்பவை.
******
புன்னகை அரசியை முன் நிறுத்தி, இழுத்து அணைத்துத்
தன் நெஞ்சோடு இறுக்கிக்
கொள்கிற நடிகர் திலகத்தின்
நடிப்பு வெளிப்பாட்டில், வாராது
வந்த மாமணியான தன் காதலை நழுவ விடப் பிரியமில்லாத ஒரு எளியவன்
நமக்குக் காட்சிப்படுகிறான்.
******
கனவுக் காதலியின் தாவணி
உருவிய வெற்றி மதர்ப்புடன்
கூடிய நடிகர் திலகத்தின் புன்னகைக்கும், ஒரு தேர்ந்த
மீனவனின் லாவகத்துடன்
தாவணியை வலை போல் வீசுகையில் அவர் புரியும் ஆனந்தப் புன்னகைக்கும்..
குறைந்தபட்சம் நூறு வித்தியாசங்கள்.
******
பாடலின் நடுவே, தன் நெஞ்சோடு கவிழும் புன்னகை
அரசியின் பூவிருக்கும் கூந்தலில் அழுந்த ஒரு முத்தம்
தருகிறார்... நடிகர் திலகம்.
அந்த கூந்தல் பூ வாடியிருக்கலாம்.
ஆனால்... அந்த வாசனை முத்தம் மணத்திருக்கும்...
இந்தப் பாடல் போலப் பல நூற்றாண்டுகளுக்கு.
https://youtu.be/ED0bwUuSQMg
-
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கு உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
https://youtu.be/51GB5d0tWj4
-
சிவாஜி பாட்டு- 31
--------------------
ஆணுக்கு பெண் மீதான மோகமும், பெண்ணுக்கு ஆண்
மீதான அளவு கடந்த காதலும்..
கிட்டத்தட்ட விஷம் போலத்தான்.
அப்படியே உறைந்து போக
வைக்கிற விஷம்.
தன்னைத் தவிர அத்தனையும்
மறக்கடிக்கிற விஷம்.
ஆபத்து, அபாயங்களை எல்லாம் அலட்சியம் செய்யும்
இரண்டு அன்புள்ளங்களுக்குள்
ஒரு பாம்புக் கொத்தலுக்குப்
பிறகானது போல் "சுர்" என்று
ஏறுகிற விஷம்.
கொல்லாமல் கொல்லுகிற விஷம்.
அதனால்தானோ என்னவோ
விஷத்தோடு தொடர்புடைய
பாம்போடு தொடர்புடைய ஒரு
இசையின் சாயலோடு இந்தக்
காதல் பாடல் துவங்குகிறது.
*******
"இதை ஆனந்தன் கடைல குடுத்துடு. இந்தா.. இதை ஜாஹிர் உசேன் கடைல குடுத்துடு. பாக்கியில்லே.. முழுசாக் குடுத்தாச்சுன்னு அப்பா சொல்லச் சொன்னாருன்னு சொல்லிக் குடுத்துடு."- என்னுடைய சின்ன வயசில் வந்த சில முதல் தேதிகளில் பணத்தைக்
கட்டுக் கட்டாய்ப் பிரித்து, ரப்பர்
பேன்ட் போட்டு அப்பா என்னிடம் கொடுத்து விட்டதுண்டு.
சின்னதான சட்டை பணக்கற்றைகளால் நிரம்பி வழிய, கடைகளை நோக்கி தார்ச்சாலையில் நடந்து போக..
அத்தனை பெருமை..அந்த வயசில்.
பிறகு, வருஷங்கள் உருண்டோடி, நானும் வேலைக்குப் போய், முதல் சம்பளம் வாங்கின சாயங்காலம் வீடு திரும்பும் போது மனசில் வந்த கர்வமிகு சந்தோஷம்,சின்ன வயசுச் சந்தோஷத்தை சின்னதாக்கி விட்டது.
ஏதோ ஒரு ஈர்ப்பினால்
ஒரு ஆண், அழகான பெண்ணொருத்தியுடன் அறிமுகமான கையோடு அன்பு
கொண்டு காதலாவது... அப்பன்
காசோடு ஆனந்தமாய் நடப்பதைப் போல.
ஆசையாய் நேசித்தவள் தனக்கே தனக்கென்று வந்து
விட்ட பொழுதில், மகிழ்வான
மகிழ்வாய் காதலாகிக் கசிந்துருகும் சந்தோஷம்... சுயமாய் உழைத்துச் சம்பாதித்த
காசோடு கர்வமாய் நடப்பதைப்
போல.
இந்தப் பாடலில், சுய சம்பாத்தியத்தோடு நடந்து
போகிற சந்தோஷத்தைப் பார்க்கலாம்... நடிகர் திலகத்தின்
முகத்தில்.
******
பிரமிப்பாகத்தான் இருக்கிறது...
சோகப் பாடல்களென்றால், இரும்பாய்,பாறையாய் இறுகிப்
போகிற அதே முகத்தில், இந்த
மாதிரி காதல் பாடல்களுக்கு
நந்தவனத்தையே உருவாக்குகிற நடிகர் திலகத்தை.. நினைக்க, நினைக்க.
அய்யா நடிகர் திலகத்தின் புன்னகை ஒரு புது மொழி.
மரபுக் கவிதை போல் இலக்கணமாகவும், புதுக்கவிதையாய் கட்டுடைத்த
வடிவமாகவும் அந்த மொழி நம்மை இனிதே சேர்கிறது.
"பெண்ணே... நீ தலை முதல்
கால் வரை பரவ விட்ட அழகை,
நான் உதட்டின் மேலேயே உட்கார வைத்து விட்டேன்..பார்த்தாயா?" - என்று அந்தப்
புன்னகை மொழி, நாட்டியப்
பேரொளியிடம் கேலி பேசுகிறது.
அந்த மொழி மௌனப்படும் வேளையிலும் ஆயிரம் அற்புதங்களைப் பேசுகிறது.
******
நடிகர் திலகத்திற்காகப் பாடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவற்றை தெய்வீகப் பாடகர் அமரர் அய்யா டி.எம்.எஸ். அவர்களே
பாடி விட்டதால், வேறு குரலை
அய்யனுக்குப் பொருத்திப்
பார்க்க மறுப்போர் உண்டு.
அது,நியாயம்.
வேறு எந்தப் பாடகர் நடிகர் திலகத்துக்குப் பாடினாலும்,
அநியாயத்துக்கு மறுப்போர்
கூட்டமும் உண்டு.
அப்படிப்பட்டோரின் வாயடைத்த அற்புதப் பாடல்களின் பட்டியலில்
ஆரம்பத்திலேயே வருகிற பாடலிது.
பாடல் வரிகளுக்கு மிகச் சரியான உதட்டசைவு மட்டுமே
நடிப்புப் புலமையாகாது என்பதை நடிகர் திலகம் கற்றுக்கொடுக்கிறார்..இந்தப்
பாடலில்.
"பொன்னே சொல்..ஏன் த்யானம்?" என்று பாடினால்
வாயசைப்பில் ஒரு கேள்வி
வந்து நிற்கிறதே... அது புலமை.
நிலவடிக்கும் மொட்டை மாடியில் தன்னை விட்டு நழுவி ஓடும் மனைவியிடம்,
"வெட்கம் ஏனோ.. வா என் பக்கம்."-எனப் பாடுகையில்
ஒரு ஏக்கம் த்வனிக்கிறதே... அது புலமை.
தென்னங்கீற்றுகளை வகுந்து
கொண்டு, அந்த மொட்டை மாடியின் இன்னொரு நிலவு
போல புன்னகை முகம் நீட்டி,
"போனால் வராது... இது போலே காலமினி" என்று பாட..
'உண்மைதான்.உங்கள் காலம்
இனி வேறு யாராலும் வராது'
என்று எங்களை அந்த "தெய்வப் பிறவி" எதிர்ப் பாட்டு
பாட வைத்தாரே... அது புலமை.
https://youtu.be/shPRgjoiJhw
-
சிவாஜி பாட்டு-32
-------------------
கண்ணம்மாள் என்று பெயர் என் பாட்டிக்கு. என் அம்மாவின்
அம்மா. கண்ணுப் பாட்டி என்போம் நாங்கள்.பாசக்காரி.
பள்ளி விடுமுறையில் அவளிருந்த கிராமத்துக்குப் போனால் சற்றே பருமனாக்காமல் ஊர் திருப்ப
மாட்டாள். வயிற்றுக்கோ, பிற
மனிதர்களுக்கோ வஞ்சகம் நினைக்காத நல்ல மனசுக்காரி.
காது சுத்தமாகக் கேட்காது.
வாய்ப் பேச்சும் வராது.
மிகச் சிரமப்பட்டுப் பேசினாலும் வார்த்தைகள் சரியாக வந்து
விழாது.
ரொம்பவும் கஷ்டப்பட்டவள்.
அவள் கணவர், என் தாத்தா.. எங்கள் காலத்தில் என்னவோ
கண்ணுப் பாட்டியை சீரும், சிறப்புமாய் வைத்துக் காப்பாற்றினார்தான். ஆனால்,
என் அம்மா,சித்தி, மாமாக்கள்
எல்லோரும் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில்,
சொல்லாமல், கொள்ளாமல் சில
வருடங்கள் தன் பிழைப்பைப்
பார்த்துக் கொள்ள
ஒடி விட்டாராம். அந்தக் கால
கட்டத்தில் அவள் பட்ட வேதனையும், அவமானங்களும் தந்த நெருப்பு
கடைசி வரை அவளிடமிருந்தது.
அந்த நெருப்பில், தன்னிடம் எந்தக் குறைபாடுமில்லாமல், கணவன் என்ன தவறிழைத்தாலும் பொறுத்துப்
போகும் சராசரிப் பெண்களுக்கான சூடு இருக்கும்.
மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகளோடு அவள் வாழ்க்கையை ஜெயித்த
கதையை, அவளது தத்துப் பித்துப் பேச்சிலேயே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
"ச", "ர".. இப்படி என்ன எழுத்தானாலும் அவள் உச்சரிப்பில் "க" என்றே ஒலிக்கும்.
நான் கூட வேடிக்கையாகச் சொல்வதுண்டு. " நான் இப்ப
கொஞ்ச நாளாத்தான் கவிதைல்லாம் எழுதுறேன்.
ஆனா..நான் பொறந்ததுல இருந்தே என்னை "கவி"ன்னு
சொல்றது (ரவி -கவி) கண்ணுப்பாட்டிதான்".
அம்மா கண்ணில் நீர் வரச் சிரிப்பாள்.
உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட
உயர்ந்து நிற்பவர்களை எனக்கு
மிகவும் பிடிக்கும்.
******
ஒரு அலுவலகத்தில், ஒரு விண்ணப்பம் எழுத வேண்டிய
சூழலில் ஒரு வெள்ளைக் காகிதம் தேவையாயிருந்தது.
அருகிலிருந்த மேஜைக்குப் பின்னே இருந்தவரிடம் கேட்டேன். இரண்டு காகிதங்கள் இணைந்த ஷீட் ஆகக் கொடுத்தார்.
"ஒரு பேப்பர் போதும் சார்" என்றவுடன் அவர் சிரித்த போதுதான் கவனித்தேன்... அவரது இடது தோளுக்குக் கீழ்
கையே இல்லை என்பதை. ஒரு
கையே இல்லாதவர் காகிதத்தை எப்படி ஒற்றையாகக் கிழிப்பார்?
கேள்வியோடு நான் தவித்தேன். அவர் ஷீட்டை எடுத்து மேஜை மீது வைத்து,
வலது கை விரல்களால் அதன் மடிப்பில் கூராக நீவிய பின், வெள்ளை ஷீட்டை விரித்து,
கூராக நீவியதின் முனையில்
லேசாக கிழித்து விட்டுக் கொண்ட பின், இரண்டு விரல்களால் காகிதத்தை அழுத்தி நகர்த்திக் கொண்டே வந்தார்... தையல் இயந்திரத்தில் ஒரு துணி நகர்வதைப் போல.
மிகச் சில நொடிகள்...
அவர் என்னிடம் தந்த ஒற்றை
வெள்ளைத்தாளில் கிழிக்கப்பட்ட ஓரம் எது என
தேடுகிற மாதிரி அந்தக் காகிதக்
கிழிப்பில் ஒரு இயந்திர நேர்த்தி.
இரண்டு கைகள் கொண்ட நாமெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கவனமாய் காகிதம்
கிழித்தாலும் ஏதோ ஒரு இடத்தில் கோணலாய்க் கிழிகிறது.
இவரால் எப்படி முடிகிறது என்கிற என் அன்றைய ஆச்சரிய விழி விரிப்பு இன்னமும் நீடிக்கிறது.
உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட
உயர்ந்து நிற்பவர்களை எனக்கு
மிகவும் பிடிக்கும்.
******
கன்னையனை எனக்கு மிகவும்
பிடிக்கும்.
சிவகங்கையில் அமுதா என்றொரு திரையரங்கம் இருந்தது. மனித வாழ்க்கையை, அதன் இன்ப, துன்பங்களை
கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல எல்லோரையும் பார்த்துக் கொள்ள வைத்த நடிகர் திலகத்தின் படங்களையும் அந்த திரையரங்கம் காட்டியது.
அந்த வரிசையில் அது "பாகப்பிரிவினை"யைக் காட்டிய போதுதான் கன்னையன் என் கண்களின் வழியாக மனசுக்குள் வந்தான்.
நடிகர் திலகம் என்கிற மகாகலைஞனிடமிருந்து வெளிப்பட்டு, தனது தனித்தன்மையை இழந்து விடாமல் ரங்கனாய், ராமனாய்
நம் மனதில் சிரஞ்சீவியாய்
வாழ்பவர்களில் இதோ.. இந்த
கன்னையனும் ஒருவன்.
திறமையாளர்களால் கற்பிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம், காலத்தை மீறி ஏதோ நம் நெருக்கமான சொந்தக்காரன் போல் வாழ்நாள் முழுதும் நம்முடன் வரும் அதிசயம், நடிகர் திலகத்தால் மட்டுமே நிகழ்வது.
கன்னையன் தன் ஊனத்தை
நினைத்து வெகுவாக வருந்துகிற போதும், சூடான பானம் தரப்பட்ட ஒற்றைக் கையின் சூடு தாங்காமல் தவிக்கிற போதும், அவனுடைய வேகத்திற்கு அவனது ஊனமே தடை போட்டாலும், அதையெல்லாம்
தாண்டி அவனது நம்பிக்கை அவனை வேகமாக செலுத்துவதும், "நம்பிக்கையோடு இருங்கள்.
ஜெயிக்கலாம்" என்று கன்னையன் உணர்த்துவதும்
அந்தச் சின்ன வயதிலிருந்தே
எனக்கு புரிதலானது. பிடித்தமானது.
திருவிழா என்று ஆட்டமும்,
பாட்டமுமாய் ஊர் ரெண்டுபட,
இயலாமையை முன்னிறுத்தி
வீட்டோடு முடங்கி விடாது,
மடங்கிப் போன இடது கையும்,
இயங்காமல் விறைத்துப் போன
இடது காலும் ஒரு புது வித நடனம் உண்டு பண்ண, தானும்
களமிறங்குவதோடு மட்டுமல்லாமல், வழக்கம் போல் இந்தக் களத்தையும் தனதாக்கிக் கொள்கிற என்
கன்னையனை மிகவும் பிடிக்கும்.
உடலில் ஏதோ ஒன்று குறைந்து மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தினாலும்,
செயலால் மற்றவர்களை விட
உயர்ந்து நிற்பவர்களை எனக்கு
மிகவும் பிடிக்கும்.
http://youtu.be/0zGNRIswveM
-
சிவாஜி பாட்டு- 33
--------------------
கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், கலங்க கலங்க நம்மை அழ வைப்பவர்களை
நமக்குப் பிடிப்பதில்லை.
******
அருகிலிருந்த மாணவன் செய்த
குறும்பைக் கண்டித்த என்னை,
நான் தவறு செய்து விட்டதாகக்
கருதி, இரண்டு காதுகளையும்
பிடித்து தன் தலைக்கு மேலே
தூக்கிய என் இரண்டாம் வகுப்பு ஆசிரியரின் மேல் இன்று வரை கோபமிருக்கிறது எனக்கு.
அவர் உயரத்தில் தூக்கிய போது
நான் கீழே உணர்ந்த அவமானப்
பள்ளம், மிக ஆழமானது.அந்த
அவமானத்தில் உந்தப்பட்ட என்
கண்ணீர், வருஷங்கள் தாண்டி
நீளமானது.
கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில், கலங்க கலங்க நம்மை அழ வைப்பவர்களை
நமக்குப் பிடிப்பதில்லை.
******
ஆனால்...
திரைப்படம் என்கிற பெயரில்
ஒரு மகாகலைஞனின் மாசற்ற
திறமைகளை நமக்கு முன்
திரையிட்டுக் காட்டிய "தெய்வ மகன்" பார்த்த போது...
அதில் "கண்களால் பேசுதம்மா" என்கிற உன்னதப் பாடலைப்
பார்த்த போது...
"அழ வைப்பவர்களைப் பிடிக்காது" என்கிற எனக்குள்
திண்மையாய் இறுகிக் கிடந்த
அனுபவ தத்துவம், தூள் தூளாய் நொறுங்கிப் போனது.
ஒற்றை ஆள் ஒரு முறை அழ
வைத்தாலே ஜென்மத்துக்கும்
பிடிக்காமல் போகுமே..முன்பெல்லாம்? இங்கே... ஒருவரல்ல..இருவரல்ல..ஆறு
பேர் நம்மை கதறக் கதற அழ வைக்கிறார்கள்.
ஆனால்... அத்தனை பேரையும்
பிடிக்கிறது.
'காலம் சென்ற' அல்ல... 'காலம் வென்ற' நம் கவியரசர் தன் இதயப் பேனாவுக்குள் உண்மைப் பாசத்தை மையாய்
ஊற்றிக் கொண்டு எழுதி, எழுதி
அழ வைக்கிறார். பிடிக்கிறது.
பாடலில் காட்டப்படும் விரிந்து
பரந்த அந்த ஆலயத்தில் ஒரு
அன்னையின், ஒரு பிள்ளையின் மனசுகளை இசையால் பேச வைத்து, மெல்லிசை மன்னர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
"பெண்ணோடு பேசுதம்மா..பெற்றெடுத்த வயிறு.." -அந்த
"வயிறு" எனும் சொல்லைப் பாடும் போது நடுங்க விடும் குரலில், "இனம் புரியா.." என்று
உச்சஸ்தாயியில் உயர்த்தும்
குரலில் அமரர் சீர்காழியார்
அழ வைக்கிறார். பிடிக்கிறது.
இப்படி ஒரு உணர்ச்சிமயமான
உருக்கும் பாடலை, கற்பனை
செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைக் காட்சியாக நம் கண்களில் விரித்து இயக்குநர் அமரர் ஏ.சி.திருலோக்சந்தர் அழ வைக்கிறார். பிடிக்கிறது.
அம்மா வேஷமே போடுவதால்
"பண்டரிபாய்" இல்லை. " பண்டரித்தாய்" என்று நண்பர்கள் சிலர் கேலி செய்வார்கள். இந்தப் படம் பார்த்த பிறகு அவர்களைக்
கண்டித்திருக்கிறேன். சொல்லத்
தெரியாத பிள்ளைப் பாசத்தை,
நொண்டியடிக்கும் ஒரு தவிப்பு
நடையால் விளக்கி பண்டரிபாய் அம்மா அழ வைக்கிறார். பிடிக்கிறது.
ஊமையில்லை.. ஆனால் பேச,
பாட வார்த்தையில்லை. ஒரு
இயக்குநரின் சிந்தனையில் உதித்த பாத்திரத்தை அப்படியே
தன்னிலிருந்து வெளிக்காட்டும்
திறமைக்கு ஈடு இணையில்லை. நம் நடிகர் திலகம்- படத்தின் தலைப்பை
நிஜமாகவே நிரூபிக்கும் தெய்வ மகன்.
தெய்வ மகன்- பிறப்பிலிருந்தே
பெற்றவள் தாயைப் பிரிந்திருக்கிறவன் இவ்வாறுதானிருப்பான் என்று
காட்டுகிறார். பிடிக்கிறது.
அகல விரித்த கண்களின் வழியாக, அன்பே உருவான அன்னையை விழுங்கப் பார்க்கும் செயலால் அய்யன்
அழ வைக்கிறார். பிடிக்கிறது.
சுடர் மினுக்கும் தூணுக்குப் பின்னால் நின்று உதடு பிதுக்கி
அழுது அழ வைக்கிறார். பிடிக்கிறது.
அய்யன் தன் முகத்தை ஒரு
பாத்திரம் போலாக்கி, அன்பை
யாசித்து அழ வைக்கிறார்.
பிடிக்கிறது.
வரிசையில் கடைசியில் நின்று
கை நீட்டி யாசிக்கையில், அன்னை கை நிறைய அள்ளித்
தந்த நாணயங்களை சிதற விட்டு, அன்னையின் திருமுக
அழகை மனசுள் சேகரிக்கிற
பாச யதார்த்தத்தில் அய்யா அழ
வைக்கிறார். பிடிக்கிறது.
http://youtu.be/5Gflh-H2Mzc
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 149 – சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...;%20sivaji.jpg
ஒரு நடிகனுக்கு மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவை! நடை – உடை – பாவனை. உடைக்கேற்ற நடை--– நடைக்கேற்ற கம்பீரம் – கம்பீரத்துக்கேற்ற பேச்சு – பேச்சுக்கேற்ற முகபாவனை. இந்த மூன்றிலும் சிவாஜி அதிக கவனம் செலுத்துவார்.
1986ம் ஆண்டு ஜூனியர் விகடன் பத்திரிகைக்காக அவரை பேட்டி கண்ட போது அந்த பேட்டியில் சிவாஜி இதைச் சொல்லியிருப்பார்.
எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் சரி, அவர் ஏற்றுக்கொண்ட வேடத்தை முழுமையாக நியாயப்படுத்தி, மற்றவர்களை திருப்திபடுத்துவதுடன், தானும் திருப்தி அடைய முனைவார் சிவாஜி.
அந்தப் படம் ஓடுமா ஓடாதா? ஓடுவதற்கு வாய்ப்பில்லாத இந்த படத்திற்கு அதுவும் சாதாரண படத்திற்கு நாம் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு சிரமப்பட வேண்டுமா என்றெல்லாம் நினைக்கமாட்டார்.
எடுத்துக்காட்டாக, ஒரு நிகழ்ச்சியை ஆரூர்தாஸ் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒப்பனை அறையில் நான் அவரிடம் கேட்டேன்.
`ஏண்ணே! எழுதறதுக்கு எனக்கும், நடிக்கிறதுக்கு உங்களுக்கும் `ஸ்கோப்’ இல்லாத இந்த படத்தை ஒப்புக்கிட்டு நீங்க நடிக்கணுமா ?’
`நீ ஏன் எழுதறே?’
`நீங்க சொன்னதனால எழுதுறேன்.’
`இல்லேன்னா?’
`நிச்சயமாக எழுத மாட்டேன்.’ இது ஆக்*ஷன் ஓரியண்டட் பிலிம்.
எம்.ஜி.ஆர்., நடிக்க வேண்டிய படம். இந்த வேஷம் உங்களுக்கு `சூட்’ ஆகவே ஆகாது. அதனால்தான் சொன்னேன்! சிவாஜி தொடர்ந்து, `நீ சொல்றது எனக்குத் தெரியாதுன்னும் நினைக்கிறியா? நல்லா தெரியும். இந்த வேஷம் எனக்கு ஒரு நல்ல மாறுதலா இருக்கும்னு தயாரிப்பாளர் சொல்றாரு. அதோட அவர் எனக்கு எவ்வளவு வேண்டியவர்ன்னு உனக்கு தெரியும். அதனால ஒப்புக்கிட்டு நடிக்கிறேன்.
ஆரூரான்! ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சுக்க. இனிமே நான் நடிச்சு பேரு வாங்கணும்ங்கிற அவசியம் இல்லை. அந்த மாதிரி நீயும் எழுதி பேரு வாங்கணும்ங்கிற அவசியம் இல்லை. நம்மள வச்சு வெற்றி படம் பண்ணிக்கவேண்டியது தயாரிப்பாளர் பொறுப்பு. அவர் நமக்கு காசு கொடுக்கிறாரு. வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகம் இல்லாம கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியது நம்ம கடமை. அவ்வளவுதான். இதுதான் என் கொள்கை. நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்க. அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை’
சிவாஜியை அழைத்துக்கொண்டு ஜப்பானுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தியும் கூட அவருக்குச் சிறிதும் பொருந்தாத `கராத்தே வீரன்’ வேடத்தில் நடிக்க வைத்து, 1980ல் வெளிவந்த அந்தப் படம் `தர்மராஜா’. படம் தோல்வியுற்றது. அதன் தயாரிப்பாளர், சிவாஜி ரசிகர் மன்றத்தலைவரும் பதிப்பாளர்களின் முன்னோடியுமான சின்ன அண்ணாமலை. அதற்கு முன்னதாக அதே சின்ன அண்ணாமலை நல்ல குடும்பக் கதையைத் தேர்ந்தெடுத்து சிவாஜி – கே.ஆர். விஜயாவை நடிக்க வைத்து தயாரித்து 1978ம் ஆண்டு வெளியான `ஜெனரல் சக்ரவர்த்தி’ வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு நடிகனுக்கு நடை, உடை,பாவனை மிக முக்கிய அம்சம்.
ஆம், கயிலாயநாதரின் நடையை `திருவிளையாடல்’ படத்திலும், காஞ்சி முனிவரின் அந்தத் தளர் நடையை `திருவருட்செல்வர்’ படத்திலும், வீரபாண்டியனின் சிங்கநடையை `கட்டபொம்மன்’ படத்திலும் காவல்துறை அதிகாரியின் கம்பீர நடையை ` தங்கப்பதக்கம்’ படத்திலும் கைரிக்*ஷாக்கார முதியவரின் நடக்க இயலாத நடையை `பாபு’ படத்திலும் ஒரு பெரிய கோடீஸ்வர செல்வந்தரின் மிடுக்கான நடையை `தெய்வ மகன்’ படத்திலும் ரசித்துப் பார்க்கலாம்.
`தெய்வ மகன்’ படத்தில் மனைவி பண்டரிபாயுடன் பேசிக்கொண்டே மாடிப்படிகளில் அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்து வரும் அந்த அழகு– ஓர் அடிக்கும் இன்னொரு அடிக்கும் இடையில் `ஸ்கேல்’ எடுத்து வைத்து எடுத்தது போன்ற அந்த அளவு `டைமிங்.’
இந்த சிறப்புக்கள் எல்லாமே சிவாஜி கணேசன் என்கிற ஒரே ஒரு நடிகருக்கு மட்டுமே உரித்தானவை.
அடுத்தது உடை!
ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதில் எப்போதுமே மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்.
இந்த படத்துக்கு இந்த பாத்திரத்துக்கு இந்த உடைதான் என்று இயக்குநர், தையற்கலைஞர் உட்பட எவருமே அவருக்கு எடுத்துச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அனைத்துமே அவருக்கு அத்துப்படி.
மராட்டிய மன்னன் மாவீரன் ‘சிவாஜி’ முதல் அக்பரின் புதல்வர் `ஜஹாங்கீர்’ வரையில், நாதஸ்வர வித்வான் `ஷண்முகசுந்தர’த்திலிருந்து `மிருதங்க வித்வான்’ வரையில் `பாசமலர்’ படத்தின் கடைசி உச்சக்கட்ட காட்சியில் பழைய கறுப்புக் கோட்டு போட்டிருக்கும் ஏழை ராஜசேகரிலிருந்து ` வியட்நாம் வீடு’ படத்தில் வரும் `பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர்’ வரை, அத்தனை படங்களின் கதாபாத்திரங்கள் அணிந்திருக்கும் அவ்வளவு உடைகளும், அவருக்கு பொருத்தமான விதவிதமான `தலை’ விக்குகளும் சிவாஜியே தேர்ந்தெடுத்துக் கொண்டவை.
அவருடைய ரசனையையும், தேவையையும் முழுக்க முழுக்க நன்கு புரிந்துகொண்டு அவருடைய விருப்பத்திற்கு தகுந்தாற்போல் உடைகளை தைத்து கொடுப்பதில் கைதேர்ந்த நிபுணரான பி. ராம கிருஷ்ணன் என்பவர் இருந்தார். பழைய சிவாஜி பட `டைட்டில்களில்’ இவரது பெயரைப் பார்க்கலாம்.
இவர்தான் சிவாஜி நடித்து, ஆரூர்தாஸ் வசனம் எழுதி, ஏ. பீம்சிங் இயக்கிய `படித்தால் மட்டும் போதுமா?’ படத்தின் தயாரிப்பாளர். சில சமயங்களில் சிவாஜியிடம் நேரில் வாங்கிக் கட்டிக்கொண்டதை ஆரூர்தாஸ் நேரில் கண்டு எழுதியிருக்கிறார். அரை அங்குலம் `லூஸா’கவோ `டைட்’டாகவோ இருந்தால் அவ்வளவுதான்! கோபம் வந்து `ஏண்டா! நீயெல்லாம் துணி தைக்கிறவனா இல்லே தோல் தைக்கிறவனா?’ என்று திட்டுவார். அதையெல்லாம் கண்டு கொள்ளாத `கில்லாடி’ ராமகிருஷ்ணன்,
ஒரு நொடிப்பொழுதில் எப்போதுமே தன் சட்டையில் குத்தி வைத்திருக்கும் ஊசி நூலை எடுத்து அங்கேயே, அப்போதே ஒரு சிறு தையல் போட்டு சரிசெய்து சிவாஜியின் கோபத்தை போக்கிவிடுவார். படங்கள் அன்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்குப் பொருத்தமாகவும், ஒழுங்காகவும், தூய்மையாகவும் உடைகள் அணிவதை சிவாஜி வழக்கமாகக் கொண்டிருந்தார். நடிப்பில் மட்டுமல்ல, மடிப்பு கலையாமல் உடைகள் அணிவதிலும் அவருக்கு நிகர் அவரே! படப்பிடிப்புக்கு ஸ்டூடியோவிற்குள் வரும்போது சலவை செய்யப்பட்ட நான்கு முழ கதர்வேட்டி, கதர் அரைக்கைச் சட்டையுடன் எளிமையாக வருவார்.
அவற்றைப் பூப்போல அலுங்காமல் குலுங்காமல் கழற்றி மடிப்புக் குலையாமல் `ஹேங்கரில்’ மாட்டி வைத்துவிட்டு, லுங்கி கட்டிக்கொண்டு பனியன் கூட இல்லாத வெற்றுடம்புடன் ஒப்பனை செய்து கொள்வார்.
(தொடரும்)
-
'ஞானஒளி'
http://i1087.photobucket.com/albums/..._000236795.jpg
தமிழ் சினிமாவின் மானம் காத்த 'மான' ஒளி.
சென்ற வாரம் 'சன் லைஃப்' தொலைக்காட்சியில் மீண்டும் காணும் வாய்ப்பு. அமர்ந்த இடத்தை விட்டு எழ இயலவில்லை. நூறு முறைகள் பார்த்திருந்தாலும் அத்தனை காட்சிகளும் அன்றுதான் காண்பது போல அத்தனை ஆச்சர்யங்கள். எது சம்பந்தமான வர்ணிப்பும் அலுத்துப் போகும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் அல்லது சில மாதங்களில். ஆனால் 'ஒளி' அப்படியா? உலகிற்கு ஒளி தரும் சூரியன் மங்குவான். இரவில் ஒளி தரும் சந்திரன் மறைவான். ஆனால் 'ஞான ஒளி'யாய் பிரகாசிக்கும் என் ஆண்டனியும், அருணும் மங்குவதில்லை. ஒளிர, ஒளிர பிரகாசம் அதிகமாகுமே தவிர குறைவதில்லை.
இது எதிலும் சேராத தனி ஒரு அற்புதம். அதியற்புதம். இது சினிமாவா? இல்லை...இல்லை...இது வேதம். இது கீதை அல்ல...இது பைபிள் அல்ல...இது குர்-ஆன் அல்ல. ரிக், யஜுர், சாம, அதர்வணமும் அல்ல. இவையெல்லாம் ஒன்று சேர்ந்த ஒளி வேதம். ஒரே வேதம். இந்த வேதத்திற்கு ஒரே கடவுள். ஒரே இறைவன். நடிப்பின் இறைவன்.
என்ன காட்சிகள்! என்ன வசனங்கள்! என்ன கதையமைப்பு! என்ன நடிகர்கள்! என்ன இயக்கம்!. நம் எண்ணமெல்லாம் நிறைந்த இயக்கம். ஒவ்வொரு காட்சியும் செதுக்கி செதுக்கி எடுத்த சிற்பம்.
அந்த மூன்று மணி நேரமும் இரு கண்களின் ஓரமும் ஏன் என் கண்களில் நீர்த்திவலைகள் திரண்டு கொண்டே இருக்கின்றன? எதற்கும் கரையாத கல் நெஞ்சம் 'ஒளித்தேவனை'ப் பார்த்ததும் மெழுகாக உருகுகிறதே! என்ன காரணம்? புகை பிடிக்காமலேயே நெஞ்சடைப்பு ஏற்படுகிறதே! அது ஏன்? மனசெல்லாம் பாரமாய் ஒரு உருண்டை சோறு கூட உள்ளுக்குள் இறங்க மறுக்கிறதே! அது என்ன விந்தை!
இத்தனைக்கும் காரணம் பாவப்பட்ட அந்த மனிதன். ஆண்டனி..ஆழியளவு அல்லல் பட்டவன். நிம்மதி என்பதை கிஞ்சித்தும் அறியாதவன். அவன் நிம்மதி இல்லாத போது நான் மட்டும் எப்படி நிம்மதி கொள்வது?
தமிழ் சினிமா மட்டுமல்ல: இந்திய சினிமா மட்டுமல்ல: ஒட்டுமொத்த உலக சினிமாவும் இந்த நடிப்பின் தேவனைப் பார்த்து,
'தேவனே! எம்மைப் பாருங்கள்... எம் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்' என்று பாவ மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.
அந்த 'ஞான' நடிகனின் நடிப்புச் சிதறல்கள் இப்போது புதிதாய்ப் பட்டவை.... பகிர்ந்து கொள்கிறேன் உங்களுடன்.
இது கோபாலிற்கு.
பாதிரியாரிடம் சிறுவன் ஒருவன் இன்ஸ்பெக்டர் அவரைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்ல, தன் ஆண்டனி வழக்கம் போல எங்கோ வம்பு வளர்த்து வந்திருக்கிறான் என்று கருதி கீழே அமர்ந்து ஃபாதரின் கையை அமுக்கிக் கொண்டிருக்கும் என் தேவனைப் பார்த்து ஃபாதர்,
'இன்னைக்கு என்னடா வம்பு பண்ணே? இன்ஸ்பெக்டர் தேடிகிட்டு வந்திருக்காரே...இன்னைக்கு யார் கூட சண்டை பிடிச்சே?'
என்று கேட்க,
ஃபாதரின் கையை சின்ஸியராக பிடித்துக் கொண்டிருப்பவர் சிறுவனுக்கும், ஃபாதருக்கும் நடக்கும் சம்பாஷணை அறியாதவராக, அல்லது கண்டு கொள்ளாதவராக ஃபாதர் தன்னை அந்தக் கேள்வி கேட்டவுடன், ஃபாதர் தன்னைத்தான் கேட்கிறார் என்று 'திடு'மென உணர்ந்து, நிலைமைக்கு வந்து, அந்த சிறுவனை அப்போதுதான் பார்ப்பது போல ஒரு பார்வை வினாடியில் பார்த்துவிட்டு, ஃபாதரைப் பார்த்து,
'என்னை கேக்கிறீங்களா? நல்லா இருக்கே!'
என்று செய்யாத பழியை ஏற்றுக் கொள்ளாத பாவம் காட்டுவது பட்டையைக் கிளப்பும். சிறுவனுக்கும், ஃபாதருக்கும் நடக்கும் உரையாடலில் அது பற்றி பாதிரியார் மறைமுகமாக தன்னைத்தான் சந்தேகப்படுகிறார் என்பதை செய்யும் வேலையில் உணரத் தவறி, லேட்டாக கிரகித்துக் கொள்ளும் வினாடி நடிப்பை, அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் விதத்தை அள்ளி அள்ளிப் பருகலாம்.
இதுவும் கோபாலுக்கு.
இன்ஸ்பெக்டருக்காக சேர் கொண்டு வரச் சொல்லி ஃபாதர் இவரிடம் பணிக்க, இப்போது மேஜர் தன்னை பாதரிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள சர்ச் உள்ளே நுழைய, கையில் சேரைக் கொண்டு வரும் நடிகர் திலகம் மிக அழகாக மேஜர் அருகே நாற்காலியை வைத்து விட்டு ரூமிற்குள் செல்வார். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?
தனக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் ஃபாதரைப் பார்க்க வந்தவுன் ஃபாதரின் கட்டளைக்கேற்ப நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு விட்டு 'யாரோ ஒருவர் பாதிரியாருக்குத் தெரிந்தவர் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்... நமக்கு அங்கே இனி என்ன வேலை? அவர்கள் ஏதாவது பெர்சனலாக பேசிக் கொள்வார்கள்' என்பது போல நாற்காலியைப் போட்டுவிட்டு ஆண்டனி ஒதுங்கிப் போவது படுஇயல்பு. (கோபால்...நிச்சயம் இந்தக் காட்சியை சிலமுறைகள் பார்க்கவும். நம் திலகம் அவ்வளவு இயல்பாக இந்தக் காட்சியில் வந்து அழகு படுத்தியிருப்பார்.)
இது முரளி சாருக்காக.
பிரளயம் நிகழந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது. வாழ வேண்டிய மகள் கெட்டுப் போயாகி விட்டது. வாழை மரங்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டு விட்டன. ஆண்டனியும் மகளால் வெட்டாமலேயே சாய்க்கப்பட்டு விட்டான். இப்போது குடிசைக்குள் நிம்மதியற்ற அமைதி. தந்தையிடமும், மகளிடமும். குடிசையில் முழங்கால்களின் மேல் கை வைத்தபடி சிலை மாதிரி அமர்ந்திருப்பார்.
மகள் வந்து,
'அப்பா! கஞ்சி அப்படியே இருக்கு'
http://i1087.photobucket.com/albums/..._000027661.jpg
என்று சொல்ல, அப்படியே சைட் போஸில், க்ளோஸ் -அப்பில் திரும்பி, தன் மகளுக்காக ஆசையுடன் வாங்கி வந்த பூந்திப் பொட்டலம் கீழே விழுந்து சிதறி அதில் எறும்புகள் மொய்ப்பதை பார்ப்பார். மகளின் வாழ்வு அது போல சீரழிந்து விட்டதே என்று அர்த்தம் காட்டுவார். வலது கண்ணின் வழியாக ஒருதுளி நீர் கன்னத்தில் சொட்ட, அதை அப்படியே தோள்ப்பட்டையால் துடைத்துக் கொண்டு, எழுந்து, குடிசைக்கு வெளியே வேகமாக, அட்டகாசமாக நடந்து வருவார். இடது கை அந்தப் பழக்கம் உள்ளவர்கள் போல உடலை விட்டு சற்று தள்ளி தளர்வாக இருக்கும். (இப்படி சில பேரை அப்படியே கண்கூடாகக் கண்டிருக்கிறேன்) இடப் பக்க தோள்ப்பட்டையை விட வலப்பக்கத் தோள்பட்டை சற்று தாழ்ந்திருக்கும். சாரதா கூப்பிடும் போது சரியாக ஏழாவது ஸ்டெப்பில் அப்படியே நிற்பார்.
'அப்பா' என்று சாரதா மீண்டும் அங்கிருந்து கதறும் போது இடது கையை மார்பின் நடுவில் வைத்து, வார்த்தைகள் வெளிவராத நிலையில் உதடுகள் ஒன்று சேர்ந்து வெதும்பித் துடிக்க, பேச இயலாதவராய், பேசப் பிடிக்காதவராய் மார்பிலிருந்து கை எடுத்து 'இனி நான் உனக்கு அப்பனில்லை' என்ற அர்த்தத்தில் இடக்ககையால் பாவம் காட்டி, அப்படியே கையைப் பின்பக்கம் கொண்டு சென்று பின்னால் தூரத்தே தெரியும் சர்ச்சை சுட்டிக் காட்டுவார். மகளின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். உடல் நேராக நின்றபடி இருக்க, இடக்கை மட்டும் பின்னால் படுஅற்புதமாக நீண்டு ஆட்காட்டி விரல் சர்ச்சை சுட்டிக் காட்டும். 'இனி உனக்கு...இல்லை இல்லை... நமக்கு எல்லாம் அந்தப் ஃபாதர்தான்...அந்த சர்ச்தான்' என்பதை விரல் அற்புதமாக சுட்டிக் காட்டி உணர்த்தும். ஆத்திரம், கோபம், இயலாமை, முடியாமை, வெறுப்பு, அழுகை அத்தனையையும் துடிக்கும் அந்த உதடுகள் உணர்த்தும்.
அந்த அற்புத போஸ் முரளி சார் இதோ உங்களுக்காக.
http://i1087.photobucket.com/albums/..._000047150.jpg
ராகவேந்திரன் சார்,
நாளை உங்களுக்காக ஆண்டனி ஒரு காட்சியில் இன்னொரு கோணத்தில் அலசப்படுவா(ர்)ன்.
-
அனைத்து நண்பர்களுக்கும் பண்டிகைக்கால நல்வாழ்த்துக்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
-
வாசு சார்
சன் லைஃப் தொலைக்காட்சி மட்டுமல்ல, அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தினமும் ஒளிபரப்பினாலும் ஒளி குன்றாத ஞான ஒளியைப் பற்றிய தங்கள் பதிவு, நடிகர் திலகத்தைப் பற்றிய எங்கள் அறிவு ஒளியை சுடர் விட்டுப் பிரகாசித்து ஒளிரச்செய்கிறது. தங்களுக்கு உளமார்ந்த நன்றி.
-
-
உலகையே புரட்டிப் போட்ட ஒப்பற்ற கலைஞன் .. முதுகைக் காட்டியும் கம்பீரத்தை நிலைநாட்டும் எட்டாவது அதிசயம்...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...aa&oe=589C21A5
-
-
-
-
ராகவேந்திரா சார்
புகைப்படங்கள் ஆங்கிலப் பட முன்னோட்டம் போல் உள்ளது.
http://uploads.tapatalk-cdn.com/2016...e36043716e.jpgபோட்டோக்களுக்கு மிக்க நன்றி.
-
Quote:
Originally Posted by
RAGHAVENDRA
கொஞ்சம்
அப்படியே நில்லுங்கள்.
போனால் போகிறது...
அந்தப் பூக்களும் முகரட்டும்
உங்கள் திறமை வாசனையை!
(நன்றி : அந்த நல்லுள்ளத்திற்கு.)
Sent from my P01Y using Tapatalk
-
ஸ்டைலில் எவராலும் நெருங்க முடியாதவர்..
https://scontent-yyz1-1.xx.fbcdn.net...c5&oe=58D1301A
mohamed farook அவர்களின் முகநூலில் இருந்து
-
-