தாராசுரத்தில் ஹரிச்சந்திரா அசுர சாதனை
கும்பகோணத்திற்கு அருகாமையில், தாராசுரம் என்னும் ஊரில் உள்ள சூரியகாந்தி டூரிங் டாக்கீஸில், நமது சத்திய சீலரின் "ஹரிச்சந்திரா" சிகர சாதனை புரிந்துள்ளது. 23.4.2010 வெள்ளி முதல், இங்கே தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], இக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிநடை போட்டு வருவதையும், வெள்ளியன்று மாலைக் காட்சி மட்டும் ரூபாய் இரண்டாயிரத்துக்கும் மேல் வசூல் அளித்ததையும், யாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
மேலும், "ஹரிச்சந்திரா" திரைக்காவியத்தை, வெள்ளி (23.4.2010) இரவுக்காட்சி, சனி (24.4.2010) மாலை மற்றும் இரவுக்காட்சிகள் ஆகிய 3 காட்சிகளில் மொத்தம் 400 நபர்களுக்கும் மேல் கண்டு களித்துள்ளனர். இந்த 3 காட்சிகளிலும் மொத்தம் ரூ.4,000/-த்துக்கும் மேல் (ரூபாய் நான்காயிரத்துக்கும் மேல்) வசூல் கிடைத்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல், நேற்று (25.4.2010) ஞாயிறன்று மாலைக் காட்சியை மட்டும், 300 மக்களுக்கும் மேல் கண்டு களித்து ரசித்துள்ளனர். இந்த ஒரு காட்சி மட்டும் ரூ.3,000/-த்துக்கும் மேல் (ரூபாய் மூவாயிரத்துக்கும் மேல்) வசூல் அளித்துள்ளது. ஆக, ஞாயிறு (25.4.2010) மாலைக் காட்சி வரை, நமது சத்தியசுந்தரத்தின் "ஹரிச்சந்திரா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.9,000/-த்துக்கும் மேல் (ரூபாய் ஒன்பதாயிரத்துக்கும் மேல்).
"வெள்ளி,சனி,ஞாயிறு - மூன்று நாட்களுக்கு மட்டும்" என்ற அறிவிப்புடன் வெளியான இக்காவியம் உருவாக்கிய வசூல் பிரளையத்தால், இன்று 26.4.2010 திங்களன்று நான்காவது நாளாக வெற்றி பவனி வருகிறது. ஏ, பி, சி சென்டர்கள் மட்டுமல்லாது, ரிமோட் சி சென்ட்ர்களான டூரிங் டாக்கீஸுகளிலும் , பராசக்தி காலம் தொடங்கி இன்று வரை ஈடு, இணையற்ற சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவை நமது நடிகர் திலகத்தின் காவியங்களே என்பதற்கு இதை விட வேறென்ன கட்டியம் கூற வேண்டும். சினிமா சாதனைகளின் நிரந்தர சக்கரவர்த்தி நமது நடிகர் திலகமே.
போனஸ் நியூஸ்:
தமிழ்த் திரைப்பட வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு டூரிங் டாக்கீஸில், 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய, முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும், பார் போற்றும் பாரத ஜோதியின் "பாவமன்னிப்பு" திரைக்காவியமே. இராமநாதபுரத்தில் உள்ள சிவாஜி டூரிங் டாக்கீஸில், "பாவமன்னிப்பு" 16.3.1961 வியாழன் முதல் 23.6.1961 வெள்ளி வரை, 100 நாட்கள் ஓடி, விண்ணை முட்டும் வெற்றியைப் பெற்றது.
"ஹரிச்சந்திரா" தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் குடந்தை ராமலிங்கம் அவர்களுக்கு குதூகலமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.