ஏற்கெனவே போனில் மேனகாவைத் தொடர்புகொள்ள முயன்று தோற்ற ஆதி, நேரில் அவளைப்பார்க்க வருகிறான். அப்போது அவள் கார்த்திக்கிடம் பிஸினஸ் விஷயமாக முக்கிய டிஸ்கஷனில் இருக்க, ஆதியைக் கண்டுகொள்ளவில்லை. ஆதிக்கு நெருப்பின் மீது நிற்பதுபோலிருக்கிறது. போதாக்குறைக்கு கார்த்திக் போகும்போது தன் பங்குக்கு ஆதிக்கு அட்வைஸ் பண்ணி விட்டுப்போக, 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்ற நிலை ஆதிக்கு. ஒருவழியாக ஆதியிடம் முகம் கொடுத்துப்பேசும் மேனகாவிடம், ரொம்பவே பணிந்து பவ்யமாக மன்னிப்பு கேட்கிறான் ஆதி. என்ன செய்வது, சிங்கத்தின் வாயில் தலையைக்கொடுத்தாயிற்றே. இனிமேல் மேனகாவிடம் தன்னுடைய ப்ராஜக்ட் பற்றி எந்த ஒரு வார்த்தையும் கேட்கமாட்டேன் என்று சத்தியம் செய்கிறான். மேனகாவிடம் ஆதியின் பிடி வசமாக மாட்டிக்கொண்டது. இனி எந்தக்காலமும் அவன் மேனகாவிடம் எதுவும் கேட்க முடியாது. உடனடியாக ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யும்படி தன் எடுபிடிகளில் தலைமை எடுபிடியிடம் சொல்கிறாள். பின் என்ன அது அலுவலகமா, அல்லது அவன்தான் ஆபீஸரா..?. எப்போதும் மேனகாவுக்குப் பக்கத்தில் அடியாட்கள் போலவே நின்று கொண்டிருக்கின்றனர்.
தோழரின் பாசறை. ஆனந்தி மேனகாவின் பிரஸ் மீட்டுக்குப் போகப்போவதாகவும், அவளைப்பற்றியும், ஆதியைப்பற்றியும், தேவராஜ பாண்டியனைப் பற்றியும் ஏராளமான தகவல்கள் சேகரித்து வைத்திருப்பதாகவும் விரைவில் தன்னுடைய பத்திரிகையில் வெளியிடப்போவதாகவும் தோழரிடம் சொல்கிறாள்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக கடலோரப்பகுதியில் சிறிய வீடு எடுத்து தங்கியிருக்கும் தொல்காப்பியனைப் பார்க்க சித்ரா வருகிறாள். அங்கிருந்தவர்களிடம் விசாரித்துக்கொண்டு வீட்டை அடையும் அவள் உருப்படியாக எதுவும் பேசவில்லை. இரண்டு துண்டு பிரட் தின்றதோடு சரி. கிளம்பிப்போகும்போது, ஷேர் ஆட்டோவில் போக, அதில் ஏற்கெனவே வின்சென்ட் இருக்கிறான் (இப்போது புது அவதாரமான பிராமணர் வேடத்தில்..., விட்டால் இவரும் தசாவதாரம் எடுப்பாரோ). ஆட்டோவில் போகும்போது விவேக்கிடம் இருந்து போன் வர சித்ரா பேசுகிறாள் (தொல்காப்பியனின் பெயரைக் குறிப்பிடாமல்). ஒரு இடத்தில் வின்சென்ட் இறங்கிக்கொள்ள, ஆட்டோ புறப்படும் நேரத்தில் போனில் சித்ரா தொல்காப்பியன் பெயரைச்சொல்ல இவர் அதிர்கிறார். சுதாரிப்பதற்குள் ஆட்டோ போய்விடுகிறது. (வின்சென்ட் குடியிருக்கும் வீட்டு மாடியில்தான் சித்ரா குடியிருக்கிறாள். இப்போது சித்ராவை வின்சென்ட் பார்த்துவிட்டார். அவளுக்கும் தொல்ஸுக்கும் தொடர்பு இருப்பதும் தெரிந்து விட்டது).
தன்னுடைய ப்ராஜக்டுக்கு பார்த்த இடத்தை விலைபேச கிருஷ்ணனுடன், அந்த இடத்தின் சொந்தக்காரரைச் சந்திக்கப்போகிறாள் அபி. ஓனர் இப்போ வந்துவிடுவார் என்று அங்குள்ள ஒருவர், இவர்களை ஓனரின் அறைக்கு அழைத்துச்சென்று அமர வைக்கிறார். காத்திருக்கிறார்கள். ஓனர் வருகிறார், வேறு யாருமல்ல பாஸ்கர்தான். ஸ்டாஃப்களின் குட்மார்னிங்'களைப் பெற்றுக்கொண்டு (அபி அமர்ந்திருக்கும்) தன்னுடைய அறையின் கதவைத்திறக்க.... FREEZE.... (Freeze ஆனது அபியோ, பாஸ்கரோ அல்ல, காட்சி..)