Quote:
`நாயகன்' நாகேஷ்
தமிழ்த் திரையுலகில் பெயரும், புகழும் பெற்றெடுத்த சாதனையாளர்களைப் போற்றும் வகையில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `நாயகன்' தொடர், தொலைக்காட்சி நேயர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த நடிகர் நாகேஷின் வாழ்க்கை வரலாற்றை தற்போது இந்த தொடர் முழுமையாக வெளிப்படுத்தி வருகிறது.
இதுவரையில் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை காண வாய்ப்பு கிடைக்காத ரசிகர்களுக்கு ஏற்கனவே ஒளிபரப்பான `நாகேஷின் நாயகன்' தொடரின் சில முக்கிய பகுதிகள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன.
நாகேஷின் பிறப்பு, அவருடைய குடும்பத்தினர், பால்ய பருவம், இளமையில் அவர் கற்ற கல்வி, கல்லூரி படிப்பு, அவருடைய அழகிய முகம் சிதைந்தது எவ்வாறு, நடிப்புலகம் அவரை ஈர்த்தது எப்படி என்பது பற்றிய கேள்விகளுக்கு இந்த தொடரில் விடை கிடைக்கும்.
நாடக வாழ்க்கையில் அவருடைய முதல் அனுபவம், முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது, இயக்குனர்கள் கே.பாலசந்தர், ஸ்ரீதரின் இயக்கத்தில் நடித்தது, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது பற்றி நாகேஷே தனது அனுபவங்களை பட்டியலிட்டதும் காட்சியாகியிருக்கிறது.
தன்னை நேசித்தவர்களைப் பற்றி நாகேஷே சொல்லும் விஷயங்கள் இதில் முக்கியம். நடிகர் கமல்ஹாசனின் பிற்காலத்திய திரைப்படங்களில் தவறாமல் இடம் பெற்ற காரணத்தை நாகேஷ் வாயால் சொல்லக் கேட்டு ரசிக்க வேண்டும். இத்தனை வருட கால திரையுலக அனுபவத்தில் முதல் முறையாக ஜனாதிபதி பரிசு பெற்றது பற்றி அவர் விவரிக்கும் விதமும் அத்தனை அழகு.
தொடர்ந்து திரையுலக வாழ்க்கையில் தன்னை பாதித்த நிகழ்ச்சிகளையும், திரையுலக வாழ்க்கை தன்னை திருப்தியடைய வைத்துள்ளதா என்பதையும் நாகேஷே தெளிவுபடுத்தும் பகுதிகளும் வெளிவர இருக்கின்றன.
ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த நடிப்பு நாயகனை காணலாம்.