17-06-09
மனிதனின் வாழ்கை விசித்திரமானது. சில விஷயங்கள் நம் புலனறிவுக்கு எட்டாதது. ஏன் தனிமனிதனின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள்? ஒருவன் உயர்ந்து நிற்க, இன்னொருவன் தாழ்ந்து சீரழிகிறேனே? பணத்தின் செழிப்பில் சிலர் சுக ஜீவனம் செய்ய, வறுமையில் சிலர் வதுங்குகின்றனரே? ஏன்? எதனால்? எப்படி சாத்தியம்? முடிவில்லாக் கேள்விகளுக்கு ஒரே பதில் மட்டுமே இருக்க முடியும்.
சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்கள் ஏனைய, பிரபஞ்ச ரகஸ்யங்களாக எங்கும் நிரம்பிக் கிடக்கிறது என்பதை தன்னடக்கத்துடன் ஒப்புக்கொள்வது ஒன்று தான் சாத்தியம். அதை "விதி" என்று ஒதுக்கி வைத்து நொந்துக்கொள்ளலாம். அல்லது சிந்தைக்கெட்டாத ஷக்தி என்று உயர்த்தி வைத்து வணங்கலாம். இல்லையெனில் புரியாத பொருளின் செயல்பாட்டுமுறை என்று விவாதிக்கலாம்.
எதுவாக இருப்பினும், அதன் முன், மனிதன் பலமிழந்து நிற்கிறான் என்பது உண்மை. அவனால் அதை வெல்ல முடியவில்லை. விஞ்ஞானம் அதன் முன் தோற்றுவிடுகிறது. எத்தனை பலம் கொண்டு போராடினாலும் அதை தவிர்க்கமுடியவில்லை.
கௌதமி என்பவள் தர்ம நெறிப்படி வாழ்கை நடத்துபவள். அவள் புதல்வனை பாம்பு கடித்து விடுகிறது. அவள்பால் உயர்ந்த மரியாதையும் கொண்ட அர்ஜுனகா என்ற வேடனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிறது. 'நீ எப்பேற்பட்டவள்! உனக்கா இப்படி ஒரு கதி நேர வேண்டும். எல்லாம் பாம்பு செய்த வினை' என நொந்துக் கொள்கிறான். பாம்பைக் கொல்ல முற்படுகிறான். பாம்போ தான் எவ்வாறு காரண கர்த்தாவாக முடியும் என வாதிடுகிறது. 'யமனின் உத்தரவின் பேரிலல்லவா நான் இயங்கினேன். நான் எப்படி பொறுப்பாவேன்.' என மறுத்துரைக்கிறது. யமனோ 'இது காலதேவனின் ஆணையன்றோ?! அவர் இட்ட கட்டளையை கடமையாக்கிச் செய்பவனே நான்' என்கிறான். 'அவரவர் கர்ம வினைக்கேற்ப பலன் அமைகிறது. அவனவனே தன் விதியை, வாழ்வை, நிர்ணயித்துக்கொள்ள இதற்கு நான் எப்படி கர்தாவாக முடியும்' என்கிறானாம் காலதேவன்.
அவனவன் வாழ்வுக்கும், நடவுக்கும், இருப்புக்கும் அவனவனே பொறுப்பு, அவனவனே கர்த்தா. விதை விதைத்தவனே அதன் பலனை அனுபவிப்பான் என்பதே ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தாய் இருக்கிறது.
மஹாபாரத ச்லோகங்களில் அதன் முடிவில் வரும் ச்லோகம், ஜீவனின் சாரம்சத்தை விளக்குவதாய் அமைகிறது.
"ஆயிரமாயிரம் ஆடவரும், பெண்டிரும், பந்துக்களும், மித்ரர்களும், மாதாக்களும், புத்ரர்களும் இம்மண்ணில் இருந்தனர், இருக்கின்றனர், முடிவுறாத இழையாக தொடர்ந்த வண்ணம் இன்னும் வந்து கொண்டே இருப்பர். மனதுக்கு ஒவ்வாத வருத்தமுறச் செய்யும் சம்பவங்களும் நிகழ்வுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பயமுறுத்தும் நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இவற்றினுள் மூழ்கி தொலைந்து போகின்றவர்கள் அஞ்ஞானிகள். ஞானியோ சலனமற்றத் தெளிவுடன் தன் பயணத்தைத் தொடர்வான்."
கடவுள் நமக்கு நாமே வித்திட்டுக்கொண்ட கர்மங்களைக் கழிக்க பொறுமையை வழங்கியருள்கிறான். அவனை நொந்து கொள்வதில் என்ன பயன்!?
(வளரும்)