நடிகர் திலகத்தின் நினைவஞ்சலியை முன்னிட்டு நடந்தவற்றை சுருக்கமாக நேற்று எழுதினேன். இன்று ராகவேந்தர் அவர்களும் அதை பற்றி எழுதியுள்ளார். எனவே நாடகம் முடிந்ததும் பிரமுகர்கள் பேசிய பேச்சின் சாராம்சம் இதோ.
முதலில் வந்தவர் ராதாரவி. நடிகர் சங்க செயலாளர் என்ற முறையில் தான் வரவில்லை எனவும் நடிகர் திலகத்தின் குடும்பத்தில் ஒருவன் என்ற முறையில் வந்திருப்பதாக குறிப்பிட்டார். நடிகர் திலகம் அவருடைய பன்னிரெண்டாவது வயதில் தன்னுடைய தந்தை நடத்திய நாடக குழுவில் சேர்ந்து நடித்ததை சொல்லி விட்டு அதனால் எங்கள் குடும்பத்திற்கு மட்டுமே இந்த பெருமை உள்ளது என்றார். "ஆகவே தான் நான் எப்பவும் அவருடைய நடிப்பைதான் திருடுவேன். எங்க அப்பா நடிப்பை எடுக்க மாட்டேன்" என்று சொன்னார். 1986 ம் வருடம் தான் முதன் முதலாக நடிகர் சங்க தலைவர் தேர்தலில் நின்று ஜெயித்த போது முதலில் அன்னை இல்லம் சென்று ஆசி வாங்கியதை நினைவு கூர்ந்த ராதாரவி அப்போது அவர் சிவாஜியிடம் சொன்ன காரணத்தை மீண்டும் மேடையில் சொன்னார். "எங்க அப்பா இல்லை அதான் உங்கிட்டே வந்திருக்கேன்". நடிகர் சங்கம் சார்பாக நினைவலைகள் என்ற பெயரில் பழைய கலைஞர்களை நினைவு கூறும் நிகழ்ச்சி நடப்பதை எடுத்து சொல்லிக் கொண்டிருந்தவர் சட்டென்று உணர்ச்சி வசப்பட்டவராக பேச ஆரம்பித்தார்.
"நான் அண்மையில் ஒரு புதிய நடிகனிடம் உத்தம புத்திரன் பார்த்திருக்கியா தம்பி என்று கேட்டேன். அவர் இல்லை என்று சொல்ல நீ நடிகனாக உருப்பட மாட்டே என்று சொன்னேன். திகைத்து போய் என்னைப் பார்த்த அவரிடம், அந்த படத்தில் ஒரே விக், ஒரே மீசை, ஒரே குரல். ஆனால் நாம் படம் பார்க்கும் போது விக்ரமன் தனியாகவும் பார்த்திபன் தனியாகவும் தான் தெரிவார்களே தவிர இரண்டு பேரும் ஒன்று என்ற எண்ணமே நமக்கு தோன்றாது. அதனால் தான் படத்தின் வெற்றி விழாவில் தங்கவேலு அவர்கள் விக்ரமனுக்கு ஒன்று பார்த்திபனுக்கு ஒன்று என இரண்டு கேடயங்களை சிவாஜி சாருக்கு பரிசாக வழங்கினார். அந்தப் படத்தை பார்க்கவில்லை என்று சொல்கிறாயே என்று கோவித்துக் கொண்டேன்."
தொடர்ந்து பேசிய அவர் " நடிப்பை கத்துக்கணும்னா அன்னை இல்லம் என்ற புண்ணிய பூமிக்கு போய் வந்தாலே போதும். இது தெரியாத சிலர் அவரை ஓவர் ஆக்டிங் என்பான். அவர் ஓவர் ஆக்டிங் பண்ணார்னு சொல்ல எவனுக்கும் தகுதியில்லை. அது போல அவர் நல்ல நடிச்சார்னு சொல்லவும் யாருக்கும் தகுதியில்லை. அவர் காவிரி மாதிரி. வற்றாத ஜீவநதி. சில பேர் சொம்புலே மொண்டு எடுக்கிறாங்க. சில பேர் பக்கெட்-லே பிடிச்சிட்டு போறான். ஆனா அவர் இல்லாம எந்த நடிகனும் கிடையாது" என்று பலத்த கைதட்டலுக்கிடையே பேசி முடித்த ராதாரவி ஒய்.ஜி.எம்மின் நடிப்பை பாராட்டி பேசி விட்டு தன் உரையை முடித்தார்.
அடுத்து வந்தவர் எம்.என். ராஜம். பராசக்தி திரைப்படம் வெளி வந்த பிறகு படத்தின் திரைக்கதை அமைப்பிலேயே நாடகம் நடத்தப்பட்ட தகவலை [நாங்கள் உட்பட பலருக்கும் தெரியாத தகவல் இது] சொன்ன அவர் சேலம் நகரில் நாடகம் நடத்தப்பட்ட போதுதான் கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் சிவாஜி வசனம் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் மக்கள் அதை எழுந்து நின்று பேசியதையும் அதன் காரணமாக நாடகம் தடைப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். அந்த நாடகத்தில் தான் சினிமாவில் ஸ்ரீ ரஞ்சனி செய்த ரோலை செய்ததையும் குறிப்பிட்டார். டமுக்கு அடித்து விளம்பரம் செய்யப்பட்ட காலமது. அதில் மக்கள் வசனம் பேசாமல் அமைதியாக பார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதையும் சொன்னார்.
புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே பாடல் காட்சி நாடகத்தில் நடத்தப்பட்ட போது அந்த காட்சியில் அன்பு கொடி இது அறுகாத கொடி இது என்ற வரிகள் வரும். அதற்கேற்ப ஒரு கொடியை சிவாஜி கழுத்தில் போட்டு நடிக்கும் போது கொடி அறுந்து விட்டது. சிரிக்கும் மக்களை சமாளிக்க சிவாஜி பண்டரிபாய் வேடத்தில் நடித்த ரத்னமாலா தோள்களில் தான் இரண்டு கைகளையும் மாலையாக போட்டு அதே வரிகளை சத்தமாக பாடியதை [அந்த டைமிங் சென்ஸ்-ஐ] கூட்டம் கைத்தட்டி வரவேற்றதை சொன்னபோது ராஜம் அவர்கள் கண்ணில் நீர். 1953 ம் வருடம் நடந்த நிகழ்ச்சியை இப்போதும் நினைவில் வைத்திருப்பதை உணர்ச்சி வசப்பட்டவராக சொன்ன ராஜம், மகேந்திரனை வாழ்த்தி தன் உரையை முடித்தார்.
இதற்கு பிறகு மேடையில் சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் சிறப்பு செய்யப்பட்டன. நேரில் வராவிட்டாலும் நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்த கலைப்புலி தாணுவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடத்த உறுதுணையாக இருந்த ஈரோடு நகரை சேர்ந்த அருண் என்பவருக்கும் சிறப்பு செய்யப்பட்டன. இடை இடையே ஒய்.ஜி.எம் ஏற்புரை போல் சில விஷயங்கள் சொன்னார். இவை அனைத்தும் முடிந்த பிறகு நிறைவுரையாக மைக்கின் முன் வந்தார் கவிப்பேரரசு வைரமுத்து.
அது நாளை ---
அன்புடன்