நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சி தொடர்-15
நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சி தொடர்-15
http://i1087.photobucket.com/albums/..._000020089.jpghttp://i1087.photobucket.com/albums/..._000103987.jpg
நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சி தொடரை சற்று நீண்ட இடைவெளிக்குப் பின் தொடருகிறேன். இடையில் வேலைப்பளுவினால் தொடர் தாமதமானதற்கு வருந்துகிறேன்.
இந்தத் தொடரில் இப்போது மிக மிக வித்தியாசமான நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சியை கண்டு ரசிக்கலாம். நிஜமாகவே நிரம்ப வித்தியாசம்.
http://i1087.photobucket.com/albums/..._002988502.jpghttp://i1087.photobucket.com/albums/..._002956141.jpg
பொதுவாக கண்பார்வையுள்ள நாயகனும், வில்லனும் மோதி பல படங்கள் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கண்பார்வையற்ற நாயகனும், கண் பார்வையுள்ள வில்லனும் மோதினால் எப்படி இருக்கும்? இது வித்தியாசம்தானே! அதுவும் கண்பார்வையற்ற மாலைக்கண் நோயால் அவதியுறும் பாடகர் நாயகன் நிர்மல் என்ற நம் 'தவப்புதலவர்' இந்த ஸ்டன்ட் சீனில் எனும்போது ஆச்சர்யங்களுக்குப் பஞ்சமென்ன? வழக்கத்தைவிடவும் அதிகமாக வாய் பிளக்க வைக்கிறார் இந்த சண்டைக்காட்சியில் நம் அருமை நடிகர் திலகம்.
பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம், மோதல், அடிதடி, கும்மாங்குத்துக்களுக்கு பஞ்சமிருக்காது. சண்டைக்காட்சிகளில் அடி வாங்குவது, ஆக்ரோஷப்படுவது, திருப்பி அடிப்பது போன்ற சம்பவங்களே ஜாஸ்தி. ஆனால் நம் தவப்புதல்வனின் இந்த சண்டைக் காட்சியில் அவருக்கே உரித்தான நடிப்பும் சண்டையோடு சேர்த்து வெளிப்படும் தத்ரூபமாக. இது மிகவும் வியக்கத்தக்க ஒன்று. அது மட்டுமல்ல....இந்தக் காட்சியில் அருமையான நடிப்பு, சண்டையோடு புத்திசாலித்தனமும் இணைந்து ஜொலிப்பதைக் காணலாம்.
http://i1087.photobucket.com/albums/..._002891406.jpghttp://i1087.photobucket.com/albums/..._003106772.jpg
பாடகர் நிர்மலான நம் நடிகர் திலகத்திற்கு மாலைக்கண் வியாதி. இரவானால் கண் பார்வை போய்விடும். பகலில் பிரச்னை இல்லை. ஹோட்டலில் பாடி சம்பாதித்த பணத்தை ஹோட்டல் ரூமில் நடிகர் திலகம் பர்ஸில் வைத்து தலையணையின் அடியில் வைக்க, அதை வில்லன் எம்.ஆர்.ஆர்.வாசு வெளியே இருந்து கவனித்து விடுவார். 'சரி! இரவு வேளையில் அந்தப் பணத்தை அபேஸ் பண்ணிவிடலாம்' என்று முடிவு செய்து இரவு நடிகர் திலகத்தின் ரூமை கம்பி போட்டு திறந்து உள்ளே நுழைவார். ஆனால் வாசுவிற்கு நடிகர் திலகத்திற்கு மாலைக்கண் நோய் இருப்பது தெரியாது. உள்ளே நடிகர் திலகம் கட்டிலில் உறங்கிக் கொண்டிருப்பார். ரூமின் உள்ளே ஷூ கால்களுடன் 'சரக் சரக்' என மெதுவாக வரும் வாசு தலையணையின் அடியில் உள்ள நடிகர் திலகத்தின் பர்ஸை நைசாக எடுக்க முற்படும்போது கட்டிலின் அருகே உள்ள மேஜை டிராயர் மீது இருக்கும் தண்ணீர் டம்ளரை தெரியாமல் தட்டிவிட்டுவிட, அந்த சப்தத்தில் 'திடு'மென எழுந்திருக்கும் நடிகர் திலகம் 'யாரது?' என்று குரல் கொடுத்து அதே டேபிளின் மீது இருக்கும் பெட் ஸ்விட்ச்சைப் போட, அறையில் பாதியில் லைட் வெளிச்சம் பரவ, வாசு அறையை ஒட்டிய சுவற்றில் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டு மறைந்து நிற்க, நடிகர் திலகம் கைநீட்டி தடவியபடி, கண் தெரியாமல் வந்த நபரைத் தேட முயற்சித்து வாசு அருகே வர, நடிகர் திலகத்திற்கு தான் தெரிவதாக நினைத்துக் கொண்டிருக்கும் வாசு 'மாட்டினோம்' என்று முடிவெடுத்து அப்படியே பயந்து கீழே அமர்ந்து கொள்ள, இந்த சண்டைக்காட்சிக்கான ஆரம்பக் காட்சி படுபயங்கரமாக சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். அனைவரையும் நிமிர்ந்து உட்காரவும் செய்துவிடும்.
சுவற்றைத் தடவியபடியே வாசல் கதவின் பக்கம் வரும் நடிகர் திலகம் கதவு சாத்தியிருப்பதை உணர்வால் கண்டுபிடித்து சிறு திருப்தியை முகத்தில் காட்டுவார். அச்சு அசலாக கண் தெரியாதவர்கள் போலவே அவரது ஒவ்வொரு செய்கையும், பார்வையும், முகபாவங்களும் முத்திரைகள் படைத்தபடி இருக்கும்.
கீழே உட்கார்ந்து 'ஏன் லைட் போட்டும் இவன் நம்மை பிடிக்கவில்லை? என்று ஆழ்ந்து யோசிக்கும் வாசு திரும்ப கட்டிலுக்குச் சென்று படுக்கும் நடிகர் திலகத்தை வாட்ச் செய்வார். நடிகர் திலகமோ மிகவும் உஷார் நிலையில் கண்களை தீர்க்கமாக விழித்தபடி படுத்திருப்பார். (படுக்கும்போது கூட கட்டிலில் எவ்வளவு அழகாகப் படுப்பார் தெரியுமா? கட்டிலில் அமர்ந்து தலையணையை செக் செய்து பார்த்துவிட்டு, முதலில் வலது காலை மெத்தையின் மேல் வைத்து நீட்டி, பின் மிக அழகாக இடது காலையும் சேர்த்து வைத்து, அப்படியே வலது பக்கமாக ஒருக்களித்து வலது கையை தலையில் தாங்கியபடி படுப்பார். அவ்வளவு அழகாக இருக்கும். இந்த மனுஷர் எது செஞ்சாலும் அது ஒரு தனி அழகுதான்)
இப்போது வெறும் நிசப்தம். மியூஸிக் இருக்காது. வாசு நடிகர் திலகம் அருகே நடந்து வந்து தலைமாட்டின் அருகே நிற்பார். 'ஷூ' வின் சப்தம் மட்டுமே கேட்கும். நடிகர் திலகம் விழித்தபடி அந்த சப்தத்தை உன்னிப்பாக கவனிப்பார். வாசு விழித்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் முகத்தருகே தனது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள தனது கையை அப்படி இப்படி ஆட்டுவார். ஆனால் நடிகர் திலகத்திடம் எந்த எக்ஸ்பிரஷனும் இருக்காது. (ஆனால் எக்ஸ்பிரஷன் இல்லாத கண் தெரியாத எக்ஸ்பிரஷன் சும்மா அமர்க்களப்படுத்தும்). வாசு அதை வைத்து நடிகர் திலகத்திற்கு கண் தெரியாததை முழுமையாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்வார். எனவே பயம் போய் தைரியமாக நடிகர் திலகத்தின் தலையணையின் அடியில் கைவைத்து வாசு பர்ஸை எடுக்க முயற்சிக்க, உணர்வில் அதை அதை புரிந்து கொள்ளும் நடிகர் திலகம் 'சட்'டென வாசுவின் இரு கைகளையும் பிடித்துவிடுவார். படுத்தபடியே பிடியை விடாமல் நடிகர் திலகம் வாசுவுடன் போராடுவார். வாசு தன் கழுத்தை நெறிக்க முயற்சிக்கையில் தடுமாறும் நடிகர் திலகம் திடுமென்று தனது கால்களை மடக்கி வாசுவின் கழுத்தில் கால்களால் பிடி போட்டு விடுவார். பிடித்தபடியே அப்படியே வாசுவைப் புரட்டி தன் முன்னுக்கு கொண்டு வந்து விடுவார். இப்போது நடிகர் திலகம் வாசுவுக்கு முன்னால் அமர்ந்த நிலையில். உட்கார்ந்தபடியே நடிகர் திலகம் வாசுவை கால்களால் கிடுக்கிப்பிடி போட்டு மடியில் வைத்து வாசுவின் நெஞ்சை கைகளால் (கண் தெரியாத ஒருவன் தன்னிடம் மாட்டிய ஒருவனை தோராயமாக சரியாகத் தெரியாத நிலையில் எப்படி ஒரு குத்துமதிப்பாகக் குத்துவானோ அப்படியே நடிகர் திலகம் வாசுவைக் கைகளால் குத்துவார். பார்வையையும் எங்கேயோ மேல்நோக்கிய நிலையில் வைத்தது குத்துவார்...வாவ்!) நெஞ்சுக் குத்தில் நிலைதடுமாறும் வாசு நடிகர் திலகத்தின் கால்களை கஷ்டப்பட்டு விலக்கி நடிகர் திலகத்தை கட்டிலிலிருந்து உருட்டிவிட்டு விடுவார்.
நடிகர் திலகம் வாசுவின் கைகளை பிடித்தவுடன் 'மெல்லிசை மன்ன'ரின் அற்புதமான பின்னணி இசை பிரித்து மேய ஆரம்பிக்கும். இதை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். சும்மா அந்த திகில் பின்னணி சண்டைக் காட்சிக்கேற்ப 'பரபர'வென 'மெல்லிசை மன்னர்' பிரமாத ரீரிக்கார்டிங் தர, (பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல் அபாரம்) இக்காட்சியைப் பார்ப்பவர் அனைவரையும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.
கீழே உருண்டு விழும் நடிகர் திலகம் அருகிலிருக்கும் ஈஸிசேர் போனற சோபாவை பிடித்து எழுந்து, 'பரபர'வென பதறியபடி சுவற்றைக் கண்டுபிடித்து, அப்படியே கதவின் பக்கம் வந்து ரூம் வாசலை மறைத்தபடி நின்றுவிடுவார்.
'என்கிட்டே இருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காதே.. யார் நீ?'
இப்போதுதான் வசனம் (தூயவன்) கேட்கும். அதுவரை திகில் நிசப்தமும், மிரட்டும் மியூஸிக்கும் மாறி மாறி இக்காட்சிக்கு வலு சேர்க்கும்.
இடமிருந்து வலமாக சடுதியில் இடுப்பை மாற்றிப் போடும் அற்புத காட்சி
http://i1087.photobucket.com/albums/..._003033028.jpghttp://i1087.photobucket.com/albums/..._003029544.jpg
வாசு வியப்புடன் நடிகர் திலகத்தை பார்ப்பார். கீழே கிடைக்கும் பர்ஸை, சிதறிக் கிடைக்கும் பணத்தை எடுப்பதுடன் வாசு அங்கே கிடைக்கும் சில்லறை நாணயத்தைக் கூடவா மனிதர் எடுத்து வைப்பார்! வாசுவும் சூப்பராக பண்ணியிருப்பார். இப்போது இசையே இல்லாமல் மீண்டும் மயான அமைதி. ஷூ சப்தத்துடன் வாசு நடந்து வந்து அங்கே இருக்கும் டீப்பாயின் மீது தெரியாமல் மோதிவிட, மிக கவனமாக அதை நடிகர் திலகம் தனது அறிவால் உள்வாங்கி 'சட்'டென்று அந்த ஈஸிசேரை பிடித்து வாசுவின் மேல் தூக்கி அடிக்க, வாசு நிலைதடுமாறிக் கீழே விழ, நடிகர் திலகமும் அந்த ஈஸிசேரிலேயே உருண்டு எதிர்த்திசையில் கீழே விழுவார். அற்புதமான காட்சி இது. கைகளைத் தரையில் ஊன்றியபடி கீழே விழும் நடிகர் திலகம் அப்படியே இடுப்பை ஒரு செகண்டில் இடமிருந்து வலமாக மாற்றி பிரட்டிப் போடுவார் பாருங்கள். அடடா! ஒரு வினாடிக் காட்சிதான் அய்யா அது! சும்மா பிச்சி உதறி விடும் இல்லையோ! (மேலே உள்ள இரண்டு படங்களையும் பாருங்கள்) அதியற்புதமான இருக்கும்.
ஷூ ஓசை கேட்டு கைகால்கள் பதறும். அப்படியே பாய்ந்து வாசுவின் கால்களை ஷூவுடன் இறுக்கமாக பிடித்துவிடுவார். இருவரும் படுத்து புரண்டபடி போராட, வாசு நடிகர் திலகத்திடம் இருந்து நழுவி கதவைத் திறந்து வெளியே செல்ல எத்தனிக்க, நடிகர் திலகம் வாசுவை போக விடாமல் கட்டிப் பிடித்தபடி கழுத்தை இறுக்கி ஜன்னலருகே கொண்டு செல்ல, ஜன்னலில் தொங்கும் திரைச்சீலை நழுவி வாசுவின் தலையில் விழுந்து வாசுவின் பார்வையை மறைக்க, இப்போது இருவருக்குமே கண்தெரியாத சூழலில் அற்புதமான சண்டைக் காட்சி அமைப்பு.
போராட்டம்... போராட்டம். இருவருக்கும் அப்படி ஒரு போராட்டம். இருவரும் இடைவிடாமல் போராட, முகத்தில் துணியுடன் தத்தளிக்கும் வாசு நடிகர் திலகத்தை மூர்க்கத்தனமாகப் பிடித்து தள்ளிவிட, நடிகர் திலகம் 'விறுவிறு'வென தவழ்ந்து, ஈஸிசேரை கண்டு பிடித்து, அதைத் தடவி எழுந்து, அதன் மூலம் கதவிருக்கும் இடத்தை மனத்தால் உணர்ந்து, 'டக்'கென்று வாசலை அடைத்தவாறு நின்றுவிடுவார். கதவு திறந்த நிலையில் இருக்கும். வாசு நடந்து வாசல் பக்கம் வர, ஷூ சப்தத்தை நடிகர் திலகம் உன்னிப்பாகக் கேட்பதை வாசு பார்த்து உஷாராகி விடுவார்.
http://i1087.photobucket.com/albums/..._003135989.jpghttp://i1087.photobucket.com/albums/..._003143906.jpg
இப்போது செம காமெடி ஷூவை வைத்துதானே இவன் கண்டு பிடிக்கிறான் என்று வாசு ஷூக்களைக் கழற்றி லேஸால் இணைத்து முடி போட்டு, அப்படியே கழுத்தில் தொங்கவிட்டு, குழந்தை போல முட்டி போட்டு மெதுவாக தவழ்ந்து நடிகர் திலகத்தை நோக்கி நகர ஆரம்பிப்பார். (நிஜமாகவே வாசு இந்தக் காட்சியில் அனைவரையும் அவ்வளவு சீரியஸ் காட்சியிலும் சிரிக்க வைத்து விடுவார்) கால்களை அகலவைத்து வாசலில் நிலைக்கால்களை மேல்நோக்கிப் பிடித்தபடி வழி மறித்து நிற்கும் நடிகர் திலகம் வந்த திருடன் தப்பி விடக்கூடாது என்பதற்காக வலதுகையை அப்படியும் இப்படியுமாக அசைத்து அவனைத் தப்பவிடாதவாறு தேடியபடி இருப்பார். கழுத்தில் ஷூவுடன் நடிகர் திலகத்தின் கால்களின் இடைவெளியில் தவழ்ந்து புகுந்து தப்பிக்க வாசு முயல, அதில் பாதிக் கிணறும் தாண்டிவிட, பின் உடல் நுழையும்போது நடிகர் திலகத்தின் கால்களில் வசமாகப்பட்டுவிட, நடிகர் திலகம் வாட்டமாக வாசுவைப் பிடித்து வாசுவின் பின்புறங்களில் பதம் பார்க்க, எப்படியோ நடிகர் திலகத்தைத் தள்ளிவிட்டு வாசு தப்பித்தோம்...பிழைத்தோம் என்று ஓடிவிட....
ஒரு அற்புதமான, அறிவார்த்தமான, நடிப்போடு கூடிய, நகைச்சுவையும் கலந்த, நம்பத்தகுந்த தூள் சண்டைக் காட்சி. முக்தாவின் படங்களில் பொதுவாக வியாபார ரீதிக்காக சண்டைக்காட்சிகள் ஒன்றிரெண்டு இடம் பெறும். ஆனால் 'தவப்புதல்வனி'ன் இந்த சண்டைக்காட்சி அமர்க்களம். உலகப்பெரு நடிகரும், உன்னத இசையமைப்பாளரும், சண்டைப் பயிற்சியாளர் மாதவனும் (மாதவனின் விறுவிறுப்பான சண்டைப் பயிற்சிக்கும், முக்தாவின் கற்பனைக்கும் ஒரு சலாம்) இந்த சண்டைக் காட்சியில் ஜொலிக்கிறார்கள். வில்லனும் சூப்பர். சண்டைக் காட்சியிலேயே தன்னுடைய கண் தெரியாத, உன்னத நடிப்பை சண்டை போட்டு சமாளித்தபடி வாரி வழங்கும் உத்தமரின் திறமையை எப்படிப் பாராட்ட!
சிறுவயதிலேயே என் ஆழ் மனதில் மனதில் பதிந்து புதைந்துவிட்ட அற்புதமான இந்த சண்டைக்காட்சியை நீங்கள் மட்டுமென்ன ரசிக்காமலா இருந்திருப்பீர்கள்? இப்போது மீண்டும் பார்த்து அனுபவியுங்கள்.
(http://anonymouse.org/ வழியே பதிவுகள் இடுவதால் youtube விடியோக்கள் இட முடியவில்லை. எனவே இன்று நான் அப்-லோட் செய்த 'தவப்புதல்வன்' பட சண்டைக்காட்சியின் வீடியோ லிங்க் கீழே)
https://youtu.be/GVSdB6D9t9o