நான் சுவாசிக்கும் சிவாஜி! (11) - ஒய்.ஜி. மகேந்திரன்
http://img.dinamalar.com/data/uploads/E_1386924576.jpeg
பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013,00:00 IST
புகழ் பெற்ற, பரத நாட்டிய கலைஞர் தனஞ்செயன் பற்றி, அவருடைய சிஷ்யர்கள், ஒரு வீடியோ படம் எடுத்திருக்கின்றனர். அதைப் பார்க்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. தனக்கு, 'இன்ஸ்பிரேஷ'னாக இருந்த தன் குருமார்கள் குறித்து பேசும் போது, 'பரத நாட்டியத்தில், முக்கியமான அபிநயத்திற்கு, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சிவாஜி...' என்று, பெருமையோடு குறிப்பிட்டார் தனஞ்செயன்.
என் மகள் மதுவந்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு, சிவாஜியை அழைக்க, என் மகளுடன், அவர் வீட்டிற்கு சென்றிருந் தேன்.
அப்போது, 'எனக்கு பால சரஸ்வதி நடனம் தான் பிடிக்கும்...' என்றார் சிவாஜி.
'அவங்ககிட்ட போய் கத்துக்க முடியாது. (பால சரஸ்வதி முன்பே காலமாகி விட்டார். மதுவந்தி, பத்மா சுப்ரமணியத்திடம் தான், பரதநாட்டியப் பயிற்சி எடுத்திருக்கிறாள்...' என்றேன் கிண்டலாக.
'டேய், சரியாக சொல்ல வேண்டுமானால், பாலாவுக்கு அடுத்து, பத்மா சுப்ரமணியத்தின் நடனம் தான், எனக்கு ரொம்ப பிடிக்கும்; கண்டிப்பாக வரேன்...' என்று கூறியதோடு, பாலம்மாவின் நடன சிறப்பை புகழ்ந்து பேசினார்.
இன்று, இசையில் அசத்திக் கொண்டிருக்கும், அருணா சாய்ராமின் தாயார் ராஜம்மா, சிவாஜியின் ரசிகை. சிவாஜி படத்தை, ரிலீசாகும் முதல் நாள், முதல் காட்சியில் பார்த்து ரசிப்பவர்.
ராஜம்மாவிற்கும், பாலசரஸ்வதிக்கும் நெருங்கிய நட்பு உண்டு. பால சரஸ்வதி, பம்பாய்க்கு போனால், ராஜம்மா வீட்டில் தான் தங்குவார். அவர்களும், சென்னைக்கு வரும் போதெல்லாம், பாலசரஸ்வதியை சந்திப்பர்.
ராஜம்மா, ஒருமுறை சென்னை வந்திருந்த போது, சிவாஜி நடித்த படம் ஒன்று, சன் தியேட்டரில் ரிலீசாகியிருந்தது, ராஜம்மாவுக்கு சிவாஜி படத்தை பார்க்க ஆசை. அதே சமயம், பாலாவையும் பார்க்க போக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து, கடைசியில், பாலாவை, தொலைபேசியில் அழைத்து, நிலைமையை விளக்கினார். 'எனக்கும் அதே பிரச்னைதான். நானும், அதை தான் சொல்ல நினைத்தேன். தம்பி சிவாஜியின் படத்தை பார்க்க ஆசை...' என்றிருக்கிறார் பாலா.
பாலா, ராஜம்மா, சிறுமி அருணா சாய்ராம் மூவரும் சன் தியேட்டருக்கு போயுள்ளனர். படத்திற்கு, டிக்கெட் கிடைக்கவில்லை. ஹவுஸ் புல் ஆகிவிட்டது. வந்திருப்பது, பெரிய பரத நாட்டிய கலைஞர் என்று அறிந்த தியேட்டர் மானேஜர், அவர்களை திருப்பி அனுப்ப விரும்பாமல், தியேட்டர் முதலாளிக்கு இருக்கும், பிரத்யேக பாக்சில், அவர்களை உட்கார வைத்து, படம் பார்க்க வைத்தார்.
இச்சம்பவத்தை அருணா சாய்ராம் நினைவு கூர்கிறார்:
படத்தைப் பார்த்தேன். கூடவே, பாலா அம்மாவையும் ரசித்தேன்; படத்தில், சிவாஜி பாடினால், இவங்களும் பாடறாங்க, அவர் சிரித்தால், இவங்களும் சிரிக்கிறாங்க, அவர் அழுதால், அழறாங்க, நடனம் ஆடினால், பாலா அம்மாவும் தன் கால்களை, ஆட்டறாங்க... ஒவ்வொரு பிரேமிலும், சிவாஜியை முழுமையாக ரசித்தார் பாலா அம்மா, என்றார்.
பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியம், சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். பத்மாவும், சிவாஜி நடிப்பை ரசித்து, நிறைய பேசுவார். ஒருமுறை, பத்மா, என்னிடம் பகிர்ந்து கொண்ட, சுவையான தகவல் இது:
நாட்டிய சாஸ்திரத்தை, உருவாக்கியவர் பரதமுனி. அவர், நாட்டிய கலைஞரின் முகம் குறித்த சாமுத்ரிகா லட்சணங்களை விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு நாட்டிய கலைஞருக்கு, 'பர்பெக்ட்' முகம் என்றால், அது எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த இலக்கணப்படி, சிவாஜியின் முகத்தை அளந்து பார்த்தால், பரதமுனி சொன்ன அத்தனை லட்சணங்களும், சிவாஜியிடம் இருக்கின்றன, என்றார். பத்மாவிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது, நாட்டிய சாஸ்திரமும், நடிகர் திலகமும் என்ற பெயரில், ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய, ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கும்படி கேட்டேன். பத்மாவும், மகிழ்ச்சியோடு, ஒப்புக் கொண்டு, அதை தயாரித்தார்.
நாட்டிய சாஸ்திரத்தை, சிவாஜி எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறார் என்பதை, பல திரைப்படங்களின், 'க்ளிப்'பிங்களுடன் விளக்குவதாக, அந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருந்தது.
எங்கள், 'பாரத் கலாச்சார்' அமைப்பின் ஆதரவில், அதை திரையிட்ட போது, அமோக வரவேற்பு கிடைத்தது. கமலா அம்மாவும், அவரது குடும்பத்தினரும் மெய் மறந்து ரசித்தனர். என் மகள் மதுவந்தியும், நானும் அதற்கான, 'எடிட்டிங்' பணியை செய்திருந்தோம்.
ஒருமுறையாவது, சிவாஜியை, இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்க ஆசை. நீண்ட வற்புறுத்தலுக்கு பின், நிகழ்ச்சிக்கு வர ஒப்புக் கொண்டார். 'பாரத் கலாச்சார்' சார்பில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு, நடிகை லட்சுமியை தலைமை வகிக்க செய்தோம். அன்று மாலை, பலத்த மழை பெய்தும் கூட நிகழ்ச்சி, 'ஹவுஸ் புல்!'
பார்வையாளார்கள் அனைவரும் திரையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, நான் மட்டும் சிவாஜியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
மாபெரும் நடிகன் என்றாலும், தான் பாராட்டப்படும் போது, ஒரு வித கூச்சமும், மகிழ்ச்சியும் அவருடைய முகத்தில் பிரதிபலிப் பதை கண்டேன்..
சிவாஜியின் நடிப்பில் உள்ள எல்லா சிறந்த அம்சங்களைப் பற்றியும் பேசினார் நடிகை லட்சுமி. 'என்னை பேசச் சொல்லாதே...' என்று சிவாஜி, என்னிடம் சொல்லியிருந்தும், அந்த சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினால், அனைவரும் ரசிப்பர் என்று கருதி, கடைசியில், அவரையும் பேச அழைத்தேன். பொதுவாக, எந்த மேடையிலும், கையில், சிறு குறிப்பு கூட வைத்துக் கொள்ளாமல், நீண்ட நேரம் தங்கு தடையின்றி பேசும் சிவாஜி, அன்று, சற்று தயங்கி தயங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சொல்லப்பட்டதெல்லாம், சரி என்றால், அது, ஆணவமாக கருதப்படலாம். இல்லை என்றும் சொல்லி விட முடியாது. அது தான், அவரது தயக்கத்திற்கு காரணம்.
'இவங்க எல்லாரும், என் நலம் விரும்பிகள். என்னைப் பற்றி, என்னவோ செய்திருக்காங்க. நவரசம் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆனால், எனக்கு பிடித்தது மிளகு ரசம் தான். நீங்க எல்லாம் பாராட்டும் போது, நானும் ஏதோ செய்திருக்கிறேன் என்று தோன்றுகிறது...' என்றார். அவர் கண்கள் பனித்ததோ என்னவோ, பார்வையாளர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர்.
மிருதங்க சக்கர வர்த்தி'படத்தில் நடிப்பதற்கு முன், பிரபல மிருதங்க வித்வான், உமையாள்புரம் சிவராமனை, தனக்காக, தனியாக மிருதங்கம் வாசிக்க சொல்லி, அதை கவனித்து, மிருதங்க வாசிப்பின் நுணுக்கங்களை புரிந்து, அதை, படத்தில் செய்தார்.
-- தொடரும்.
தொகுப்பு: எஸ்.ரஜத்
dinamalar