-
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள என்னை அறிந்தால் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் ரிலீஸாகும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் உலகெங்கும் உள்ள அஜீத் ரசிகர்கள் இப்பொழுதே படத்தை வரவேற்க கட் அவுட் வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் அஜீத் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய கட் அவுட்டை தமிழர்கள் பகுதியில் வைத்துள்ளனர். ஒரு இந்திய நடிகருக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இலங்கையில் வைப்பது இதுதான் முதல் முறை. இந்த கட் அவுட் மிகப்பிரமாண்டமாக 59 அடிகளில் அமைக்கபட்டுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தபோது அவருக்கு 35 அடியில் கட் அவுட் வைத்ததே இலங்கையில் இதுவரை இந்திய நடிகர்களுக்கு வைத்த மிகப்பெரிய கட் அவுட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
courtesy india glitz
-
-
-
-
-
Great work Muthaiyan Sir, and congrats on completing 1000 posts in short time.
-
-
நேற்று சன் லைப் - தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் ''பணம் படைத்தவன் '' படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது விளயாட்டு வீரராக மக்கள் திலகம் அறிமுக காட்சியில் அவருடைய விளையாட்டு காட்சிகளில் எம்ஜிஆர்
சாகசங்கள் பிரமாதமாக இருந்தது .மக்கள் திலகம் - சௌகார் ஜானகி சந்திக்கும் காட்சிகள் - எம்ஜிஆரின் யதார்த்தமான கிண்டல்கள் -பிறந்த நாள் விழாவில் பாடும் கண் போன போக்கிலே - சமுதாய சிந்தனையை தந்த பாடல் காட்சியில் இசைக்கருவிகளுடன் எம்ஜிஆர் பாடும் பாடல் காட்சியில் நடிப்பு - மேல் நாட்டு நாகரீகம் நமக்கு ஒத்து வராது என்பதை விளக்கும் விதம் - கே.ஆர் - விஜயாவுடன் பாடும் அந்த மாப்பிள்ளை காதலிச்சான் ... பாடல் , பவளக்கொடியிலே ..கனவு பாடல் - எனக்கொரு மகன் பிறப்பான் மற்றும் மாணிக்க தொட்டில் இங்கிருக்க பாடல்கள் எல்லாமே சூப்பர் . நாகேஷ்
காமெடி சிறப்பாக இருந்தது .எம்ஜிஆரின் நடிப்பு - பாடல்கள் மிகவும் மனதை கவர்ந்தது .மீண்டும் பல முறைஇந்த படத்தை பார்க்க மனம் விரும்புகிறது
-
கற்பகம் படத்தில் முதலில் எம்ஜிஆர் தான் நடிப்பதாக இருந்தது. எஸ்.வி. ரங்கராவ் பாத்திரத்திற்கு டி.எஸ். பாலையாவை போடும்படி எம்ஜிஆர் கேட்க அதை கே.எஸ் கோபாலகிருஸ்ணன் மறுக்க, அப்படியானால் என்னால் நடிக்க முடியாது என எம்ஜிஆர் விலகிக் கொள்ள, அந்த வாய்ப்பு ஜெமினிகணேசனுக்குப் போனது. ஜெமினி கணேசனுடன் சாவித்திரி, எஸ்.வி. ரங்கராவ், கே.ஆர்.விஜயா, எம்.ஆர்.ராதா ஆகியோரும் நடித்திருந்தனர்.
கற்பகம் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான வருத்தம் எம்ஜிஆரிடம் இருந்ததோ என்னவோ, அதைப்போன்ற கதை அமைப்புக் கொண்ட ஒரு குடும்பப் படத்தில் நடித்திருக்கிறார். அது பணம் படைத்தவன். டி.ராமண்ணா படத்தை இயக்கித் தயாரித்திருந்தார். பணம் படைத்தவனில் எம்ஜிஆர், சௌகார்ஜானகி, கே.ஆர். விஜயா, டி.எஸ். பாலையா, நாகேஸ் நடித்திருந்தார்கள்.
கற்பகம் படத்தில் வருவது போல் பணம் படைத்தவனில் முதல் மனைவி இறந்து விடுகிறார். அதில் மனைவியை இழந்து தவிக்கும் கணவன். இதில் பிள்ளையை தம்பி வீட்டில் கொடுத்து விட்டு தவிக்கும் அண்ணன் என கதைகளில் மாற்றங்கள் இருக்கும். ஆனாலும் எம்ஜிஆர் படத்தில் ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம் பணம் படைத்தவன்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற கண்போன போக்கிலே கால் போகலாமா.. பாடலை கண்ணதாசன் எழுதினார் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.
கண்போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
என்று அந்தாதியாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வாலி.
அலுங்காமல் குலுங்காமல், துள்ளாமல், துடிக்காமல் எம்ஜிஆர் அமைதியாகப் பாடுவதாகக் காட்சி இருக்கும். இதே போன்ற நடன அமைப்புகளோடு சொர்க்கம் படத்தில் சுசிலா பாடும் „ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன்..' பாடல் காட்சி இருக்கும். அந்தப் பாடல் வண்ணத்தில் இருந்தாலும் கறுப்பு வெள்ளையில் வரும் „கண்போன போக்கிலே கால் போகலாமா..' பாடல் காட்சி நன்றாக அமைந்து இருந்தது.
கற்பகம் படத்தில் பி.சுசிலா பாடும் பாடல், அன்று பலரால் முணு முணுக்கப் பட்ட பாடல் அது „பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் பிடிச்சான்..“ என்ற பாடல். பணம் படைத்தவனில் „அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்…“ என்ற பாடல் இருக்கிறது. அங்கே மச்சான். இங்கே மாப்பிள்ளை.
பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.
„அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்...'
இந்தப் பாடல் காட்சியை நடனக் கலைஞர் தங்கப்பன் நன்றாக அமைத்திருப்பார். கட்டிலில் படுத்திருக்கும் எம்ஜிஆர் எழுந்து ஆடும் பொழுது, அவரிடம் இருக்கும் குதூகலத்தை அவரின் கால்களில் அவர் காட்டும் முத்திரைகளில் பிரதி பட வைத்திருப்பார். நாயகனும் நாயகியும் தொடாமலே காதலைத் தெரிவிக்கும் இந்தக் காட்சிஅழகாக இருக்கும். இப் பாடலில் „அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' என்ற வரிகள் இசைத் தட்டில் இருக்கும். ஆனால் இந்த „கன்னி சுகம்' என்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதால், „அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று படத்தில் மாற்றி இருப்பார்கள்.
டி.ராமண்ணாவின் படத்தில் பாடல் காட்சிகளில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும். நாயகனும், நாயகியும் வெறுமனே பூங்காக்களை ச் சுற்றி, மரங்களைச் சுற்றி ஓடி ஓடி பாட்டுப் பாடாமல் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துப் பாடலை அமைத்திருப்பார்.
பறக்கும் பாவை படத்தில் குளியலறைக்குள் வைத்து „உன்னைத்தானே ஏய் உன்னைத் தானே உறவென்று நான் நினைத்தது..“, பணக்காரக் குடும்பம் படத்தில் மாட்டு வண்டியின் கீழே „இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா?...“ நான் படத்தில் காருக்குள் இருந்து „போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்…“, தங்கச் சுரங்கம் படத்தில் கிணற்றுக்குள் இருந்து „சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் இரண்டு வந்து விளையாடுது…“ என்று படத்துக்குப் படம் பாடல் காட்சிகளில் புதுமை சேர்த்திருப்பார். பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில் „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ பாடலை எடுத்திருக்கிறார்.
நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
„பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'
„எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
பாடல் காட்சியில் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும். சோகங்கள் என்றால் கறுப்புதானா?
பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்று கூட்டணி அமைத்து ஏ.பீம்சிங் சிவாஜி கணேசனை வைத்து „ப' வரிசையில் பதிபக்தி, பாகப்பிரிவினை, படிக்காதமேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் படங்களை இயக்கினார். (ராஜாராணி விதிவிலக்கு) அதே போல் டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார் (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.
courtesy
ஆழ்வாப்பிள்ளை- net
-
பால் அருந்தும் பிள்ளைப் பிராயத்திலிருந்து பள்ளி செல்லும் பையனாகிற பருவம் வரை ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முதல் கதாநாயகனாக இருப்பார்கள். அப்பாவின் நடை, உடை, பாவனைகள் ஆகியவற்றை ரசிப்பது முதல் ரசனைகள் வரை அப்பாவைச் சார்ந்தே இருக்கும் பள்ளி செல்லும் பருவத்தில். இவனுக்கும் அப்படித்தான். அதிலும் சில விசித்திரங்கள் உண்டு. இவன் தந்தையிடமிருந்த கன்னாபின்னாவென்ற வாசிக்கும் வழக்கம் கல்லூரிப் பருவத்தில்தான் இவனை ஆட்கொண்டது. ஆனால் அப்பாவுக்குப் பிடித்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். பள்ளிப் பருவத்திலேயே இவனை ஆட்கொண்டார்.
இவனுக்கு ஆறு வயதாக இருந்த சமயம் இவர்கள் இருந்தது மதுரையில் கிருஷ்ணாராவ் தெப்பக்குளத் தெருவில். தெரு முனை திரும்பினால் தேவி தியேட்டர் இருந்தது. அந்தத் தியேட்டரில் வாத்யார் படம் எதுவும் ரிலீஸாகக் கூடாதே என்பதுதான் இவன் பெருவிருப்பமாக இருந்தது. காரணம்... அப்பா சொந்த பிசினஸ் செய்து வந்தவராக இருந்ததால், கடையை அடைத்துவிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க அழைத்துச் செல்வது பெரும்பாலும் இரவுக் காட்சிகளாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்து தியேட்டர் செல்வதற்கு குதிரை வண்டி வைப்பார் அப்பா. குதிரை வண்டி சவாரி என்றால் இவனுக்கு கொள்ளைப் பிரியம். லொடக் லொடக்கென்று இதமான ஆட்டத்துடன் செல்லும் அந்த வண்டியில் முந்தி ஏறி, வண்டிக்காரரின் அருகில் உட்கார்ந்து கொண்டு குதிரையைக் கவனிப்பதும், (முடிந்தால்) அதன் வாலைப் பிடிப்பதும் இவனுக்கு சுவாரஸ்யமான, ரசனையான விஷயங்கள். அதற்காகவே அப்பாவுடன் சினிமாவுக்குச் செல்லும் தருணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பான் இவன்.
அம்மாவுக்கு சிவாஜி என்றால் பிடிக்கும். அண்ணன் நடுநிலை - எவரென்றாலும் ஓ.கே. படம் போனால் சரி - அப்பாவுடன் சேர்ந்து இவனுககும் எம்.ஜி.ஆர். என்றால் மிகமிகப் பிடிக்கும். வீட்டில் எந்தப் படம் போவது என்பது பற்றிய உரையாடல் நடைபெற்றால்... பெரும்பாலும் மதியம் அப்பா சாப்பிட வீட்டுக்கு வரும் சமயங்களில் நடைபெறும்... அப்போது இவன் முந்திக் கொண்டு வாத்யார் படத்தை முன்மொழிவான். அதுவும் எப்படி...? ‘ல்தகாசைஆ' என்று விஜய் சொல்வது போல... ‘‘அப்பா! கைளிமாதந்சவ வேண்டாம்ப்பா... நாம ணைவீயதஇ போலாம்ப்பா..." என்பான். (இவனெல்லாம் அப்பவே அப்புடி!) இந்த வகைப் பேச்சை கிரகித்துக் கொள்ள முதலில் ரொம்பவே சிரமப்பட்ட அப்பா, விரைவில் அதற்குப் பழகி விட்டார். ஹால் அதிரும் வண்ணம் உரக்கச் சிரித்து, ‘‘சரிடா... போலாம்" என்பார். ஆஹா... நம்ம வீட்லருந்து சிந்தாமணி தியேட்டர் ரொம்பத் தூரமாச்சே... இன்னிக்கு குதிரை வண்டி சவாரி நிச்சயம் என்று இவன் இரவை எதிர்பார்த்திருப்பான்.
இன்றைய தேதியில் வளரும் பிள்ளைகளுக்கும்... ஏன்... சில வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் கூட குதிரை வண்டி சவாரி அனுபவம் வாய்த்திராது என நினைக்கிறேன். இயந்திரக் குதிரைகள் பரவலாகி, போக்குவரத்து விழிபிதுங்கத் துவங்கியிருக்கும் இன்றைய நகர நாகரீகத்தில் குதிரை வண்டிகள் வழக்கொழிந்து போய் விட்டன. இதேபோல வழக்கொழிந்துபோன மற்றொரு விஷயமும் உண்டு. மதுரையில் அப்போதெல்லாம் இடைவேளைக்கு முன்னும், இடைவேளைக்குப் பின்னும் ஒரு ட்ரேயில் பிஸ்கட், சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வந்து விற்பதற்கு சிறு மற்றும் வாலிபப் பையன்களை நியமித்திருப்பார்கள். அவர்கள் சத்தமில்லாமல் ஊடாடி, விற்பனையையும் கவனிப்பார்கள். ஆக... எப்போது வேண்டுமானாலும் (கையில் சில்லறை இருந்தால்) ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டு ஆனந்தமாகப் படம் பார்க்கலாம். சிந்தாமணி தியேட்டரில் பால்கனியில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த சீட்டில் இவன் அமர்ந்திருக்க, இவனுககு அடுத்த சீட்டில் இருந்த கனவான் ஒருவர் ட்ரே சுமந்து வந்தவனிடம சாக்லெட்டோ, பிஸ்கட்டோ வாங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து திரையில் சண்டைக் காட்சி வந்திருக்க, வாத்யார் சிலம்பத்தைச் சுழற்றி 20 பேரை சமாளிக்க, சண்டை தந்த உற்சாகத்தில் இவனும் ‘‘அப்புடி அடி’’ என்று கத்தி, வாத்யார் மாதிரி கையை வீசி துள்ளிக் குதிக்க, இவன் கை ட்ரேயில் சாடி அதிலிருந்த மிட்டாய், பிஸ்கட் வகைகள் அனைத்தும் பூமித்தாய்க்கு அர்ப்பணமாயின. அப்புறமென்ன... தியேட்டர் ஸ்பீக்கரை விடப் பெரியதான ட்ரேவாலாவின் வாயை அடைக்க இவன் அப்பா சில பண நோட்டுகளைத் திணிக்க வேண்டியிருந்தது.
இப்படியெல்லாம் இளமையில் மனதில் பதிந்து மனதைக் கவர்ந்த வாத்யாரை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பது இவனுக்குப் பெருவிருப்பமாக இருந்தது. 7வது வயதில் அப்பா இறந்து, வேறு வேறு ஊர்கள் மாறி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்கும் சமயம் மதுரைக்கு மீண்டும் வந்து மதுரை ‘சேதுபதி பள்ளி’யில் படித்துக் கொண்டிருந்த சமயம் இவன் ஆசை நிறைவேறியது. நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பிய இவன் முதல்வர் எம்.ஜி.ஆரை இரண்டு முறை அருகில் பார்த்தான். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். நான்கு மாசி வீதிகளிலும் தமிழின் பெருமை பேசிய வண்டிகளின் ஊர்வலமும், கலைஞர்களின் ஆட்டபாட்டமுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததை ரசித்ததும், தமுக்கம் மைதானத்தில் போடப்பட்டிருந்த தமிழ் அரங்குகளில் நுழைந்து வேடிக்கை (மட்டுமே... இன்றுள்ள தமிழறிவு அன்றில்லை) பார்த்ததும் இன்றும் இவன் நினைவில் பசுமையாய். சரிசரி.... அதிகம் ஜல்லியடிக்காமல் இவன் வாத்யாரைப் பார்த்த அந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கு வந்துவிடலாம்.
தமுக்கம் மைதானத்தில் ஒரு விழா மேடை அமைக்கப்பட்டு அன்று முதல்வர் பேசுவதாக இருந்தது. சித்தியுடன் போயிருந்த இவன் அரங்கின் வலதுபக்க ஓரமாக முன் வரிசைகளில் இருந்தான். அருகாமையில்தான் வாசல் இருந்தது. அதன் வழியே வந்து நான்கைந்து வரிசைகளைக் கடந்துதான் அனைவரும் மேடையேற வேண்டும். இவன் கண்கள் வாசலையே பார்த்தபடி இருக்க... அதோ பெருங்கூட்டம் புடைசூழ வாத்யார்! இவன் நன்றிருந்த வரிசைக்கு அருகில் ஒரு சிறு மரக்கட்டை போட்டு, மேடை செல்லும் வழி உயர்த்தப்பட்டிருக்க அது ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்திருந்தது. வாத்யாருக்கு முன்னே நடந்து வந்த நாவலர் அதைக் கவனிக்காமல் நடந்ததில் கால் இடறி, சற்றே தடுமாறி விழப் போக, பின்னால் வந்த வாத்யார் இரண்டடிகள் தாவிக் குதித்து அவரைப் பிடித்து நிற்க வைத்தார். வாத்யாரின் வெள்ளைத் தொப்பியும் கண்ணாடியும் தந்த பிரமிப்பைவிட, அந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் பிரமித்துப் போய் பார்த்தான் இவன். வாத்யார் மேடையில் பேசியது இன்று இவனுக்கு நினைவில் இல்லையென்றாலும் வரிக்கு வரி கைதட்டல் வாங்கியது மட்டும் நினைவில் நிழலாடுகிறது.
இர்ணடாவது சந்தர்ப்பம் சற்றும் எதிர்பாராமல் அவரை மிகமிக அருகில் பார்க்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்கள் டிக்கெட் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் வாத்யார். ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்' நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனான் இவன். (நாடகம் என்ற வடிவத்தை இவன் கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை). அதற்கடுத்த தினம் மதுரைக் கல்லூரியில் மேடை அமைத்து மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்' நாடகம் நடந்தது. இவனும் இவன் சித்தப்பாவும் (சித்தி அங்கே வேலை பார்த்ததால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆமாம்... சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்த்தது. நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்... வாத்யார் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.
அவர் முதல் வரிசையில் இவனுக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே வாத்யார் அமர... அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான் அவன். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் இவனைக் கவர்ந்தது அவரின் நிறம். ‘‘என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே" என்கிற எண்ணத்தை இவனில் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம். அதன்பிறகு நாடகத்தை எங்கே பார்த்தான்...? வாத்யாரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தான். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக இவன் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.
நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து வாத்யாரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட வாத்யார் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனான் இவன். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும, பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் இவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேடையில் தான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் இவனுக்கு. நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல வாத்யாரைப் பார்த்த மகிழ்வு இவனிடம் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல... உதை வேணுமான்னு பசங்க சீர்ற அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டான் இவன்.
இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இதை நினைத்துப் பார்க்கையில் இவன் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். ‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியே... ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரை கை குலுக்கியாவது பார்த்திருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!" ஹும்...! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்...!
courtesy - Balaganesh-NET