Quote:
Sivaji Ganesan - Definition of Style 10
நடிகர் திலகம் என்னும் அட்சய பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் மட்டுமல்ல அந்த உணவு நம் விருப்பத்தையும் நிறைவேற்ற வல்லதாகத் தருவதும் கூட என்ற உண்மையை யார் உணர்ந்திருந்தார்களோ இல்லையோ, அமரர் எஸ்.எஸ்.வாசன் மிக நன்றாக உணர்ந்திருந்தார். பரஸ்பரம் இணக்கமான சூழல் அல்லாதிருந்தாலும் நடிகர் திலகம் அதனைத் தொழிலில் புகுத்தாமல் வேறு படுத்தும் பண்பைக் கொண்டிருந்ததால் மேலும் மேலும் உயரப் பறந்து கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் உருவானதே இரும்புத் திரை, திரைக்காவியம்.
ஒவ்வொரு காட்சியிலும் அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார் நடிகர் திலகம். ஒரு படித்த தொழிலாளிக்கும் படிக்காத தொழிலாளிக்கும் வேறுபாட்டைக் காட்ட அவரால் முடிந்தது. இந்த முதலாம் வகைத் தொழிலாளியை இரும்புத் திரை திரைப்படத்தில் மிகச் சிறப்பாக வடித்திருப்பார்.
காதல் காட்சிகளைக் காமமாக சித்தரிக்கும் படங்களிலிருந்து மாறுபட்டு மிக இயல்பான ஒரு காதல் காட்சியை இரும்புத் திரை திரைப்படத்தில் வடித்திருப்பார்கள் நடிகர் திலகம்-வாசன்-வைஜெயந்திமாலா கூட்டணி.
இந்தக் கூட்டணியின் இந்தக் காட்சி இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாய் நிழலாடுகிறது என்றால் அதற்கு பெரும் பங்கு நடிகர் திலகத்திற்கும், உடன் நடித்த வைஜெந்திமாலா அவர்களுக்கும், மிகச் சிறப்பான பின்னணி இசையை வழங்கிய எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் ஒளிப்பதிவாளருக்கும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு காவியமாய் நிறைவடையச் செய்த வாசன் அவர்களுக்கும் சாரும்.
இனி காட்சிக்கு வருவோம்.
துவக்கத்தில் வரும் பின்னணி இசையே பாடலின் Moodஐ அருமையாய்க் கொண்டு வரும். ஒரு சிறிய கல் மேல் அமர்ந்தவாறு ஒவ்வொரு கல்லாய் தண்ணீரில் வீசும் போதே, தான் வெகு நேரமாய் காத்திருக்கிறோம் என்பதை விளக்கி விடுகிறார் நடிகர் திலகம். மேற்சட்டையின் கைகளில் பாதிக்கு மடித்து வைத்திருக்கும் போதே அவர் ஒரு தொழிலாளி என்பதை உணர்த்தி விடுகிறார். வைஜெயந்தி வந்தவுடன் பதில் வணக்கம் தரும் போது கைகளைக் கூப்பிச் செலுத்தும் நேர்த்தி கண்களைக் கவர்கிறது, பெண்மைக்குத் தரும் மரியாதையை நிலைநிறுத்துகிறது.
அமர்ந்தவுடன் ஒரு சில விநாடிகள் மௌனம். கதைகளில் கதாசிரியர் மௌனம் என்று சுலபமாக எழுதி விடுவார். அதைத் திரையில் வடிக்கும் போது அதற்கு ஒரு நடிகன் எப்படி உயிர் தரவேண்டும்.
இங்கே மௌனமே மொழி பேசுகிறது..
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல சிரிப்பது...
பின்னணியில் புல்லாங்குழலை வாசித்தபடி ஒரு மேய்ப்பன் வருகிறான்.
நாயகன் அந்தப் புல்லாங்குழல் வரும் திசையைப் பார்க்க, நாயகியோ அவனைப் பார்க்கிறாள்.
அவன் அந்தப் புல்லாங்குழல் ஓசையை ரசித்துக் கொண்டிருக்க, இவளோ அவனை ரசித்துக் கொண்டிருக்கிறாள்.
அவன் அந்தப் புல்லாங்குழல் ஓசையை சிலாகிக்க, இவளோ எது என வினவுகிறாள் ஒன்றுமே தெரியாதவளைப் போன்ற குறும்புமிக்க புன்னகையுடன்..
அவன் சங்கீதத்தைப் பற்றி அவள் கூற அவனோ ஒன்றுமே தெரியாததைப் போல கூற, ஒரு குறும்பு செய்யவேண்டி அந்தப் புல்லாங்குழலை மேய்ப்பனிடமிருந்து வாங்கி முதலில் வாசிக்கிறான். ஒலி எதுவும் வரவில்லை. காற்று மட்டுமே ...
ஒரு சிறிய குறும்பிற்குப் பின்னர் இனிமையான இசை இவன் வாசிப்பில் அப்புல்லாங்குழலிலிருந்து வெளிப்படுகிறது.
இந்த இடத்தில் "ம்ம்.. ஏதாவது ராகம் " என அவள் சொன்னதை வேண்டுமென்றே குறும்பாக கிண்டல் செய்து இரண்டு முறை சொல்வது ஒரு உரிமை அவர்களுக்குள் இருப்பதை நிலைநாட்டுகிறது.
அந்த ஏதாவது என்ற வார்த்தைக்குள்ளும் இசையைக் கொண்டு வரும் நேர்த்தி..
இந்த இசை முடிந்தவுடனும் அதிலிருந்து அவளால் மீளமுடியவில்லை..
அவளால் மட்டுமா..
நம்மாலும் தான்.
இந்தக் காட்சியில் வெளிப்பட்டிருக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு..
வேறு யாராலும் பின்பற்ற முடியாத கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புத ஸ்டைல்...
இது இவரால் மட்டுமே முடிந்த ஒன்றாகும்..
....
இந்தக் காட்சியில் காதல் வசனங்கள் ஏதுமில்லை... ஆனால் அதற்கான Buildup இருக்கிறது. இதுவே இப்படத்திற்கு உயிர்நாடியான காட்சி.
இக்காட்சியைத் தரவேற்றிய நம் அன்புமிக்க வாசு சாருக்கும் யூட்யூப் இணையதளத்திற்கும் உளமார்ந்த நன்றி
ஒரு காதல் பாடல் எப்படிப் படமாக்கப் படவேண்டும், அதில் நாயக நாயகியின் நடிப்பு எப்படி இருக்க வேண்டும்.. இதோ ஓர் இலக்கண நூல்..
ஆஹா.. அந்த மந்தகாசப்புன்னகை வீசும் அந்த திராவிட மன்மதனின் முகம்... பெண்மையின் இலக்கணமாய் ஒளிவீசும் கண்களுடன் வைஜெயந்தி... நாடி நரம்புகளையெல்லாம் மீட்டும் மென்மையான இசை, காதல் உணர்வை அற்புதமாய் சித்தரிக்கும் பாடகர் திலகம் மற்றும் பி.லீலாவின் குரல்கள்...
...
அமரராகி தந்தையுடன் சேர்ந்து விட்ட பாலு சாருக்கு இப்பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன்.
Posted on : 20.12.2014 as a tribute to Sri S. Balasubramanian