மருத்துவமனையில் ஆனந்தியின் அருகில் இருக்கும் கார்த்திக், அவளது 'தினசரி தீ' பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்காகஒரு எழுச்சி மிகு கட்டுரையொன்றை தயார் செய்து அவளிடம் வாசித்துக்காட்டுகிறான். ஒவ்வொரு வரியும் அவளது எண்ணங்களையும், செயல்பாடுகளையும் பிரதிபலிப்பதாக இருக்க, ஒவ்வொரு வரிக்கும் தலையாட்டி ஆமோத்தித்துக்கொண்டே வருகிறாள். அந்நேரம் தன் தாயாருடன் அங்கு நுழையும் தோழர், கார்த்திக் படிக்கும் கட்டுரையின் சாராம்சத்தில் கவரப்பட்டவராய் மெய்மறந்து நிற்கிறார். பின்னர் அவர்களைப்பாராட்டிக்கொண்டே நுழையும் அவர், தன் அம்மாவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். தேர்தல் நேரத்தில், தான் தோழருக்கு துணையாக களப்பணிகளில் ஈடுபட முடியவில்லையே என்று ஆனந்தி வருந்த, அவள் வருத்தப்படத் தேவையில்லை என்றும் களப்பணிகளை மற்ற தோழர்கள் செவ்வனே செய்து வருவதாகவும் கூறுகிறார்.
ஆனந்தியின் பேச்சில் கவரப்பட்ட அம்மா, 'பாலகிருஷணன் உன்னைப்பற்றிச்சொன்னதை விட நீ ரொமப்வே தீவிரமாய் இருக்கிறாய்' என்று ஆனந்தியைப்பாராட்டி ஆனந்திக்கும் கார்த்திக்கிற்கும் திருநீறு அணிவித்து வாழ்த்துகிறாள். பின்னர் இருவரிடமும் நெடுநேரம் ஏதோ பேசுகிறாள் அந்த மூதாட்டி. அது என்னவென்று நமக்கு சொல்லப்படாமல் (வழக்கம்போல) வெறும் வாயசைவு மட்டும் காண்பிக்கப்படுகிறது. ஆனால் அம்மாவின் வார்த்தைகளைக்கேட்டு தோழர் ரொம்பவே உணர்ச்சி வசப்படுகிறார். (அப்படீன்னா அது ஏதோ புரட்சிகரமான கருத்தாய் இருக்கக்கூடும்).
விவேக் - சித்ரா இருவரையும் திருவனந்தபுரம் அனுப்பும் முயற்சியில் இருக்கும் பாஸ், அங்குள்ள தன் நண்பருடைய நண்பரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக்கொடுத்து அவரிடம் சென்று இருவரும் பத்திரிக்கையாளர்கள் என்றும், சிறுவர் சிறைச்சாலை பற்றிய செய்தி சேகரிக்க வந்திருப்பதாகவும் சொன்னால் அவர் அதற்கான ஏற்பாடுகளைச்செய்வார் என்று சொல்லியனுப்புகிறார்.
திருவனந்தபுரத்தில் விமானம் தரையிறங்கி ஓடுபாதையில் ஓடுவது மட்டும் காண்பிக்கப்படுகிறது. பின்னர் இருவரும் நேராக சிறுவர் சிறைச்சாலைக் காப்பாளரை சென்று சந்திக்கின்றனர். பாஸுடைய நண்பரின் நண்பரை சந்திப்பதெல்லாம் காண்பிக்கப்படவில்லை. அங்கு சென்ற இருவரும் தங்களை பத்திரிகையாளர்கள் என அறிமுகம் செய்துகொண்டு, சிறுவர் சிறை பற்றிய விவரங்களைக்கேட்க அவர் இதை தமிழ்நாட்டின் சிறுவர் சிறைகளிலேயே பெற்றிருக்கலாமே என்று கூறுகிறார். தமிழ்நாட்டிலும் ஏற்கெனவே விவரங்களை சேகரித்திருப்பதாக இருவரும் சொல்ல, அவர் அங்குள்ள நிலவரங்களைக் கூறத்துவங்குகிறார்.
முதலில் மேலோட்டமாக பேசியவர்கள் பின்னர் மெல்ல தொல்காப்பியனைப்பற்றி விசாரிக்கத் துவங்குகின்றனர். சித்ரா, தொல்ஸை தன்னுடைய உறவினர் என்றும் விவேக்கின் நண்பர் எனவும், அவர் சிறையிலிருந்து வெளியான நாளாக அவரைப்பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் சொல்ல, சிறைக்காப்பாளர் 1984-ம் ஆண்டு ரெக்கார்டை வரழைத்து தேடிப்பார்த்து விவரங்கள் கூறுகிறார்.
தொல்காப்பியன் இரட்டைக்கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அவர் தன் அம்மாவையும் அவருடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரையும் கொன்று விட்டு சிறைக்கு வந்ததாகவும், 1984 முதல் 1989 வரை சிறையில் இருந்ததாகவும், அவருடைய நன்னடத்தை காரணமாக ஐந்து வருடங்களில் விடுதலை செய்யப்பட்டதாகவும், சிறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் வேலை என்ற அடிப்படையில் தொல்காப்பியனுக்கு கட்டிடம் கட்டும் துறையில் வேலை வழங்கப்பட்டதாகவும் சிறையதிகாரி, தஸ்தாவேஜைப்படித்து விவரம் கூறுகிறார்.
தங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைத்துவிட்ட போதிலும், பத்திரிகையாளர்கள் என்று பொய்யுரைத்து வந்ததால், சம்பிரதாயமாக சிறுவர் சிறையை சுற்றிப்பார்க்க அதிகாரியுடன் செல்கின்றனர்....
(ஆயிரத்தைந்நூறு எபிசோட்கள் கடந்தபின்னும், இன்னும் எந்த முடிச்சும் அவிழ்ந்தபாடில்லை என்பது மட்டுமல்ல, மேற்கொண்டு முடிச்சுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிக்கும் தொடரை 'சட்'டென்று முடித்துவிடாமல் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்தபின் முடிப்பதுதான் தொல்ஸுக்கு அழகு, அதற்கு இன்னும் எத்தனை நூறு எபிசோட்கள் ஆனாலும் சரி).