-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
அந்த நாள் ஞாபகம்
நண்பர் ஆதிராமிற்கு வேண்டி சஸ்பென்ஸை முதலிலேயே சொல்லி விடுகிறேன். acid test என்பது தொடர் ஹவுஸ்புல் காட்சிகளில் பட்டிக்காடா பட்டணமா ஒரு புதிய சாதனை படைக்குமா என்பதே ஆகும். இந்த தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற concept உருவெடுத்ததே 60-களின் இறுதிப் பகுதியில்தான். குறிப்பாக தில்லானா வெளிவந்த சமயம் நண்பர்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன் காரணம் நமது திரியில் கூட அந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1968 ஜூலையில் வெளியான தில்லானா சாந்தியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்டபோது தொடர்ந்து 100 கொட்டகை நிறைந்த காட்சிகள் என்ற விளம்பரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. இதுதான் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள என்ற கான்செப்ட் பிரபலமாவதற்கு வழி வகுத்தது. அதுவும் ஒரு சின்ன விஷயத்தில் கூட போட்டி என்று இரு தரப்பு ரசிகர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் என்பதால் இந்த விஷயம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.
சென்னை மாநகரில் 70-களில்தான் காலைக்காட்சி என்ற item சேர்க்கப்பட்டது. அதுவரை வாரத்தின் 7 நாட்களிலும் தினசரி 3 காட்சிகள்தான். ஆனால் தமிழகத்தின் மற்ற நகரங்களில் வழக்கம் என்னவென்றால் தினசரி 3, சனி ஞாயிறு 4 காட்சிகள். ஆக ஒரு வாரத்திற்கு மொத்தம் 23 காட்சிகள். மதுரையில் இது பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இன்றைய நாட்கள் போல் அல்லாமல் terms முறையில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் ஒவ்வொரு காட்சிக்கும் hold over என்ற முறையிலே படத்தின் ஓட்டம் தீர்மானிக்கப்பட்டது. விளக்கமாக சொல்வதென்றால் சனிக்கிழமை காலைக் காட்சி திரையிடப்படும்போது அந்த காட்சிக்கு குறைந்தபட்சம் ஒரு தொகை வசூலாக வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையைதான் hold over (இதை விநியோகஸ்தர்கள் பேச்சு தமிழில் holder என்று குறிப்பிடுவார்கள்) என்று சொல்லுவார்கள். அந்த தொகை வரவில்லையென்றால் அடுத்த வாரம் சனிக்கிழமை காலைக்காட்சி ஓடாது. விளம்பரத்திலேயே தினசரி 3, ஞாயிறு 4 காட்சிகள் என்று வந்து விடும். இது போன்றே ஞாயிறு காலைக்காட்சி, சாதாரண தினங்களில் பகல் காட்சிக்கு என்று தனி தனி hold over உண்டு.
இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம் அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரம் 23 காட்சிகள். நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 5வது வாரம் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறும் 8 காட்சிகளும் புல் ஆகிவிட்டால் 30-வது நாள் ஞாயிறு இரவு காட்சியுடன் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து விடும். இதே வெள்ளிக்கிழமை வெளியான படம் என்றால் நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 29-வது நாள் வெள்ளி அன்று 3 சேர்த்தால் 95, சனிக்கிழமை 4 சேர்த்து 99, பிறகு ஞாயிறு காலைக்காட்சிதான் 100 ஆகும். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று பார்ப்போம்.
இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.
(தொடரும்)
அன்புடன்
-
ஆஹா ஆஹா அருமை முரளி சார் அருமை நீண்ட நாட்கள் காக்க வைக்காதீர்கள் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடருங்கள் என கேட்டுகொள்கிறேன்
-
அந்த நாள் ஞாபகம்
சவாலே சமாளி வெளியானபோது அன்று நடந்தவை அனைத்தும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.
ஜனவரியில் 'கோட்டம்' வெளியான பின்னர் பொதுத்தேர்தலுக்குப்பின் மே 29 அன்றுதான் சைக்கிள் ரிக்ஷா ஓடத்துவங்கியது. இந்தப்பக்கம் புற்றீசல்கள் போல நான்கு மாதத்தில் ஆறுபடங்கள் வெளியாகி, நடிகர்திலகத்தின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். அதில் சுமதி என் சுந்தரி பெயரைத்தட்டிக்கொண்டு போனது. குடும்பக்கதையை விரும்பியவர்களுக்கு கே.எஸ்.ஜி.யின் படம் புகலிடமானது. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சாவித்திரியின் இயக்கத்தில் வந்த படம் பின் தங்கியது. 50 நாட்கள் கடந்த நிலையில் பிராப்தம் மாற்றப்பட்டு மிட்லண்டில் 'அவளுக்கென்று ஓர் மனம்' வெளியானது.
இந்நிலையில்தான் 150 வது படமாக ஜூலை 3 அன்று 'சவாலே சமாளி' வெளியானது. அண்ணாசாலையில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய 'தேவி சொர்க்க'த்துக்குப்பக்கத்திலேயே சாந்தியில் ரிலீஸானது. இருபக்கமும் ரசிகர்கள் கூட்டம் எதிரும் புதிருமாக, முறைப்புடன் இருந்தனர். தேர்தலின்போது கேலிபேசிய தறுக்கர்களின் கொட்டத்தை அண்ணனின் 150வது படம் போக்க வேண்டுமென்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தணியாத தாகம்.
சவாலே சமாளி பட வெளியீட்டையொட்டி 'மதி ஒளி' பத்திரிக்கை சிறப்பு மலர் வெளியிட்டது. முன்பக்க அட்டையில் நடிகர்திலகம் தீப்பந்தத்தை கையில் ஏந்தி நிற்பது போன்ற தோற்றமும் (கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகுமாரியிடமிருந்து பறித்த தீப்பந்தம்) மறுபக்க அட்டையில் மல்லியம் ராஜகோபாலின் அடுத்த படமான 'கிழக்கும் மேற்கும்' படத்தின் இரட்டைவேட தோற்றமும் இடம்பெற்றிருந்தன. (அப்படம் தயாரிக்கப்படவில்லை).
இந்நிலையில் இன்னொரு வேடிக்கை, அந்தப்பக்கம் தலைவருக்கும் தலைவிக்கும் கொஞ்சம் லடாய். 'கோட்டம்' வரையில் தான் தொடர்ந்து ஜோடியாக நடித்திருக்க, இப்போது தலைவர் ரிக்ஷா ஓட்ட புதிதாக 'மஞ்சள்' நாயகியைப் போட்டதோடு, அப்படம் ஓட்டத்திலும் வெற்றிமுகமாக இருக்கவே, தான் நாயகியாக நடித்திருக்கும் நடிகர்திலகத்தின் 150வது படம் மாபெரும் வெற்றியடைந்து தலைவரின் முகத்தில் கரி பூச வேண்டும் என்பதும் தலைவியின் ஆசையாக இருந்ததுதான்.
அண்ணாசாலையில் மட்டுமல்ல பதட்டம். வடசென்னை தங்கசாலைப்பகுதியிலும் ஸ்ரீகிருஷ்ணாவில் ரிக்ஷா ஓட, அருகாமை தியேட்டரான கிரௌனில் சவாலே சமாளி ரிலீஸ். (புரசைவாக்கத்தில் மட்டும் சரவணாவுக்கும் புவனேஸ்வரிக்கும் சற்று தொலைவு). வடசென்னை ஏழுகிணறு பகுதி 'கர்ணன் கணேசன் கலை மன்ற'த்தினர்தான் கிரௌனில் வெளியாகும் நடிகர்திலகத்தின் படங்களுக்கு, தியேட்டர் அலங்காரம் மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை பிரதானமாக நின்று செய்வார்கள்.
இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது. அப்போது எதிர் அணியினரின் பிரதான பத்திரிகையாக இருந்த 'திரை உலகம்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, (திருச்சி மாநாட்டை கிண்டல் செய்து) "சவாலே சமாளி படத்துக்கு சென்னையில் சமாதி, திருச்சியில் கருமாதி" என்று செய்தி வெளியிட்டு மிகவும் கேவலமாக எழுதியிருந்தனர். இதைப்பார்த்து கொதித்தெழுந்த வடசென்னை தங்கசாலைப்பகுதி ரசிகர்கள், குறிப்பாக 'கர்ணன் கணேசன் கலை மன்றத்தினர் எதிர் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அது வன்முறையாக மாறி பெரிய கலவரமாக வெடித்தது. இருபக்கங்களிலிருந்தும் சோடா பாட்டில்கள் பறந்தன அப்பகுதி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையம் வெறிச்சோடிப்போக காவல் துறையினர் வந்து இரு தரப்பிலும் சிலரைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். இப்போது அரசியலில் கீரியும் பாம்புமாக இருக்கும் இரு அணியினரும் அப்போது (பெருந்தலைவர் சொன்னது போல) ஒரே குட்டையில் ஊறிக்கொண்டிருந்த நேரம். நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கெதிராக காவல்துறை நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும் என்பதைச்சொல்லத் தேவையில்லை.
-
அந்த நாள் ஞாபகம்
'இதயம் பேசுகிறது' பத்திரிகை எரிப்புப் போராட்டம்
அப்போதைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் எதிர்ப்புப் பத்திரிகையாகவே விளங்கின. குமுதம், இதயம் பேசுகிறது, தினத்தந்தி, மாலைமுரசு, ராணி, பிலிமாலயா போன்ற பல பத்திரிகைகள் அவரைக் குறைசொல்லியே செய்திகளை வெளியிட்டு வந்தன. விகடன், கல்கி, பொம்மை, பேசும் படம், தினகரன் போன்றவை மட்டுமே நடுநிலையோடு எழுதி வந்தன. அதிலும் இதயம் பத்திரிகை மிகவும் மோசம்.
1978 இறுதியில், பைலட் பிரேம்நாத் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது 'இதயம்' பத்திரிகையில், "இனியும் சிவாஜி நடிக்கத்தான் வேண்டுமா?" என்ற தலைப்பில் மிகவும் மோசமாக அவரை விமர்சித்து கட்டுரை எழுதியதோடு, நடிகர்திலகத்தின் முகத்தை கோரமாக ஒரு கேலிச்சித்திரம் ஒன்றையும் அக்கட்டுரையின் மத்தியில் பிரசுரித்திருந்தது. இதைப்பார்த்து வெகுண்டெழுந்த கல்லூரி மாணவர்களாகிய நாங்களும், சாந்தி வளாக சிவாஜி ரசிகர்களும் சுமார் 150 பேர் கூடி, சென்னை அண்ணாசாலை பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தின் எதிரே, பெருந்தலைவர் காமராஜர் சிலையருகே, இதயம் பேசுகிறது வார இதழ் பிரதிகளை குவித்துப்போட்டு தீ வைத்துக் கொளுத்தினோம். அதோடு மணியனின் கொடும்பாவி எனப்படும் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. உடனே போலீஸார் வந்து தடியடி நடத்தி எங்களை விரட்டியடித்தனர்.
உண்ணாவிரதம்.....
பின்னர், 1981-ல் அமரகாவியம் படம் வெளியாக பத்து நாட்களுக்கு முன்னர், அப்போது தமிழக அமைச்சராக இருந்த கா.காளிமுத்து, பிரதமர் இந்திராகாந்தியை "வில்லி" என்று விமர்சித்திருந்ததை எதிர்த்து, சாந்தி வளாக ரசிகர்களும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ரசிகர்களும் காமராஜர் சிலையருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதிகேட்டோம். போலீஸ் அனுமதி மறுத்தது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி மறுநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினோம். சிறிது நேரத்தில் போலீஸ் எங்களைக் கைது செய்து வேனில் ஏற்றி எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக காம்பண்டுக்குள் வெட்டவெளியில் சுடுமணலில் உட்காரவைத்து, போலீஸார் காவலுக்கு நின்றனர்.
ரசிகர்கள் கைதான விஷயம் நடிகர்திலகத்துக்கு எட்டியதும், அவரும், அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் தளபது சண்முகம், செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். வரும் முன்பே குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தனர்.. நடிகர்திலகம் வந்ததும் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு மண்ணில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அவர் எங்களைப்பார்த்து “இந்த மாதிரி விஷயங்களை மேல்மட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போலீஸ் அனுமதி மறுத்திருக்கும்போது உண்ணாவிரதம் இருந்திருக்கக் கூடாது. எனக்காகவும் காங்கிரஸுக்காகவும் நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டார். சிறிது நேரத்தில் குளிர்பானம் வந்துவிட நடிகர்திலகம் தன் கையாலேயே எங்கள் ஒவ்வொருவருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
பின்னர் நடிகர்திலகம் உள்ளே சென்று கமிஷனரிடம் பேசி, சில தஸ்தாவேஜுகளில் நடிகர்திலகம் கையெழுத்திட்ட்பின், பிற்பகலில் நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.
-
கார்த்திக் சார்,
நாம் சந்தித்து உள்ளோம். 3 ஆம் வருட பீ.டெக் படித்து கொண்டிருந்த போது அந்த எரிப்பு போராட்டத்தில் நானும் இருந்தேன்.
மணியனிடம் விடுதலை பெற்ற விகடன் நடுநிலை. குமுதம் எப்போதுமே நடிகர்திலகம் பக்கமே. தின தந்தி நடுநிலை. மற்ற பத்திரிகைகள் பற்றி நீங்கள் சொன்னது சரி.
இதயம் படு மோசம். இறுதி காலங்களில் மணியன் வருந்தினார்.
-
I think Kumudam magazine was always pro-Sivaji. In one issue they published ' there is only a Nadigar Thilagam but no such thing as a Nadigaiyar thilagam'. In one of the recent issues too, there was a reference that 'Sivaji oru Suyambu.Yaaraiyum pin patri avar nadiththathillai'
-
Mr Sindhanur Karthik Sir,
Do come to our main thread and post about our acting god.
Solpa dhayai madi sir neevu baralendra namakku bejar agudhu.
Regards
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
பட்டிக்காடா பட்டணமாவின் acid test-ற்கு போவதற்கு முன் மதுரையில் 1969 முதல் இருவர் படங்களும் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற விஷயத்தில் எப்படி perform செய்தன என்பதை ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.
1969-ல் மே மாதம் 1-ந் தேதி வெளியான அடிமை பெண் மதுரை சிந்தாமணியில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது. சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை அந்த குழுவில் இருக்கக்கூடிய சில முதிர்ந்த ரசிகர்கள் 1961-லேயே இதே சிந்தாமணியில் தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்த சாதனை பாச மலர் திரைப்படத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொன்னார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் 1969-ல் நடந்தது பத்திரிக்கையில் விளம்பரங்கள் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 1961-ல் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதேயாகும்.
அதே 1969 நவம்பரில் தீபாவளிக்கு மதுரை சென்ட்ரலில் வெளியான சிவந்த மண் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய சாதனை படைத்தது. ஒன்றை ஒன்றை ஒன்று மிஞ்சும் போட்டியை அரங்கேற்றிடதானே இரு தரப்பும் விரும்பும்? சிவந்த மண் சாதனையை முறியடிக்க 1970 பொங்கலுக்கு மதுரை சிந்தாமணியில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தை நம்பினர் எம்ஜிஆர் ரசிகர்கள். அந்த படத்திற்கு வணிக ரீதியாக நல்ல response இருந்தும் 75 காட்சிகள் மட்டுமே தொடர் அரங்கு நிறைந்தது. சிந்தாமணி அரங்கம் அமைந்திருக்கும் கீழ வெளி வீதியில் அரங்கத்திற்கு மிக அருகிலே அமைந்திருக்கும் பிரபலமான அசைவ உணவகம் அம்சவல்லி பவன். அதன் உரிமையாளர் அன்றைய நாட்களில் திமுக ஆதரவாளர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர். சிந்தாமணியில் வெளியாகும் எம்ஜிஆர் படங்களை பெரிய அளவில் சப்போர்ட் செய்வது அவர் வழக்கம். அவர் போன்றோர் முயற்சித்தும் கூட மாட்டுக்கார வேலன் 75 காட்சிகள் மட்டுமே தொடர்ந்து அரங்கு நிறைந்தது.
1970 ஏப்ரல் 11-ந் தேதி சனிக்கிழமை மதுரை ஸ்ரீதேவியில் வெளியான நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு மிகப் பெரிய வெற்றி பெற்று முதல் 32 நாட்களில் அதாவது ஏப்ரல் 11 முதல் மே 12 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 106 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 106 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் [106 Continuous House Full Shows] என்ற சாதனையை புரிந்தது. பாச மலர் இந்த சாதனையை புரிந்தபோது ஆவணப்படுத்த தவறி விட்டதால் இம்முறை எச்சரிக்கையாக இருந்து இதை ஆவணப்படுத்தினார்கள். ஒரு கருப்பு வெள்ளை படம் செய்த சாதனை மாற்று முகாம் தரப்பை மேலும் உஷ்ணப்படுதியது.
அதே 1970 மே மாதம் 21-ந் தேதி வியாழக்கிழமை மதுரை சென்ட்ரலில் என் அண்ணன் ரிலீஸ் ஆனது. மாட்டுக்கார வேலனை compare செய்தால் என் அண்ணன் படத்தின் ரிப்போர்ட் அந்தளவிற்கு இல்லை. இருப்பினும் மாற்று முகாம் ரசிகர்கள் விடவில்லை. எப்படியும் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை காட்டிட வேண்டுமென்று முயற்சி செய்தார்கள். ஆனால் என் அண்ணனும் மாட்டுக்கார வேலன் போல் 75 காட்சிகளோடு ஹவுஸ் புல் விட்டுப் போனது. அதன் பிறகு அதே 1970-ம் வருடத்தில் எம்ஜிஆருக்கு மேலும் 3 படங்கள் வெளியாகின. என் அண்ணனுக்கு பின் ஜூலையில் வெளியான தலைவன் படமும் சரி ஆகஸ்ட் 28 வெளியான தேடி வந்த மாப்பிளை படமும் ரிப்போர்ட் பெரிதாக இல்லாததாலும் இரண்டுமே தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டதாலும் தொடர் ஹவுஸ் புல் வாய்ப்பே இல்லாமல் போனது. அதன் பிறகு 1970 அக்டோபர் 9-ந் தேதி சிந்தாமணியில் எங்கள் தங்கம் வெளியானது. ஆனால் அதுவும் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் வெற்றி பெற முடியவில்லை. ஆக மொத்தம் மதுரை மாநகரில் 1970-ம் ஆண்டில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற இலக்கை எந்த எம்ஜிஆர் படமும் எட்டவில்லை.
நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை வியட்நாம் வீடு 106 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த பின் அடுத்து வெளியானது எதிரொலி. அது 1970 ஜூன் 27 சனிக்கிழமை அன்று தங்கத்தில் வெளியானது. அதன் பிறகு 1970 ஆகஸ்ட் 15 சனிக்கிழமை நியூசினிமாவில் ராமன் எத்தனை ராமனடி ரிலீஸ். நல்ல ரிப்போர்ட் பிளஸ் நல்ல பப்ளிக் audience, ஆயினும் மூன்றாவது வாரம் ஹவுஸ் புல் விட்டுப் போனது. தீபாவளிக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள். இரண்டு படங்களின் வெற்றி பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் ஒரு படத்திற்கு மூன்றாம் வாரத்தின் தொடக்கத்திலும் மற்றொரு படம் 3 வது வாரம் நடுவிலும் வைத்து விட்டுப் போனது. போதாக்குறைக்கு நான்கே வார இடைவெளியில் பாதுகாப்பு ரிலீஸ். அதுவும் தங்கத்தில். 1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.
(தொடரும்)
அன்புடன்
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
1971-ல் எம்ஜிஆரின் முதல் படம் ஜனவரி 26 சிந்தாமணியில் வெளியான குமரிகோட்டம். இதுவும் அந்த இலக்கை எட்டவில்லை. இங்கே இரு துருவம் படம் ஜனவரி 14 அன்று நியூ சினிமாவில் வெளியானது. படத்தின் ரிப்போர்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தொடர் ஹவுஸ் புல் பற்றி யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. பிப்ரவரி 6 அன்று தங்கைக்காக ஸ்ரீதேவியில் ரிலீஸ். பெண்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு பிரமாதமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட, நமது ரசிக மன்ற கண்மணிகள் பெருந்தலைவரும் மூதறிஞர் அவர்களும் உருவாக்கிய கூட்டணிக்காக உழைக்க களம் புகுந்து விட்டனர். அதனால் தங்கைக்காக படமும் சரி மிக சரியாக தேர்தல் நாளான 1971 மார்ச் 5 அன்று நியூ சினிமாவில் வெளியான அருணோதயம் படமும் சரி [இந்த முக்தாவை என்ன சொல்லி திட்டுவது?] படத்தின் தரத்திற்கேற்ப வெற்றியை பெற முடியாமல் போனது. அருணோதயம் வெளியாகி 3 வாரத்தில் மார்ச் 26 அன்று குலமா குணமா ஸ்ரீதேவியில் ரிலீஸ். இந்த பக்கம் அருணோதயம் ஓடிகொண்டிருக்கிறது. அந்த பக்கம் 18 நாட்களில் ஏப்ரல் 14 அன்று சுமதி என் சுந்தரி அலங்காரிலும், பிராப்தம் சென்ட்ரலிலும் வெளியாகி விட்டது. 90 நாள் இடைவெளியில் 6 படங்கள் வெளியானால் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு ஏது வாய்ப்பு?
1971 மே 29 சனிக்கிழமை மதுரை நியூசினிமாவில் ரிக்ஷாகாரன் வெளியானது. வணிக ரீதியில் வெற்றி பெற்ற இந்த படம் 100 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளை கண்டது. ஐந்து வாரத்தில் 115 காட்சிகளும் அரங்கு நிறைந்த இந்த படம் 36வது நாள் சனிக்கிழமை காலைக்காட்சியில் ஹவுஸ்புல் விட்டுப் போனது.
இப்போது ball was in our court. அதற்கு நமக்கு வந்து அமைந்தது சவாலே சமாளி. ஜூலை 3 அன்று ஸ்ரீதேவியில் வெளியாகி மிக பிரமாதமான ரிப்போர்ட். படம் சர்வ சாதாரணமாக ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருந்தது. எந்தளவிற்கு என்றால் படம் வெளியான 8வது மற்றும் 9வது நாளில் அதாவது ஜூலை 10,11 தேதிகளில் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் 150-வது படவிழா நடைபெற்றது. பெரும்பாலான ரசிகர்கள் மாநாட்டிற்கு போய் விட்ட அந்த சூழலிலும் அந்த இரண்டு நாட்களிலும் சரி அதன் பிறகு 20-வது நாளன்று வெளியான, அதாவது ஜூலை 22-ந் தேதி சிந்தாமணி டாக்கீஸில் நடிகர் திலகத்தின் அடுத்த படமான தேனும் பாலும் வெளியான் போதும் just like that என்று சொல்வார்களே அது போல் அரங்கு நிறைந்தது. அதற்கு இரண்டு நாள் கழித்து வந்த 4-வது சனிக்கிழமை காலைக்காட்சியும் புல். ஞாயிறு திங்கள் எல்லா காட்சிகளும் ஹவுஸ் புல். 24 நாட்களில் நடைபெற்ற் 80 காட்சிகளும் ஹவுஸ் புல்.
சாதாரணமாக படம் ஓடும் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூட்டம் ஒன்று நிற்கும். சவாலே சமாளி போன வேகத்தை பார்த்து விட்டு சர்வ சாதாரணமாக இது இலக்கை அடைந்து விடும் என்று நினைத்தோ என்னமோ ரசிகர் கூட்டம் குறைந்தது. 25-வது நாள் செவ்வாய்க்கிழமை பகல் காட்சி மடமடவென்று அனைத்து வகுப்பு டிக்கெட்களும் விற்று தீர்ந்து கொண்டிருந்தது. கீழே பெண்கள் 40 பைசா, பெண்கள் மற்றும் ஆண்கள் 70 பைசா, ஆண்கள் 80 பைசா, பால்கனியில் 1.15, 1.70 என்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட, 2.50 டிக்கெட் மட்டும் கடைசி நிமிடத்தில் 4 டிக்கெட்கள் நின்று போயின. யாருமே எதிர்பார்க்காத வகையில் 80 காட்சிகளோடு தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.
இந்த எதிர்பாராத நிகழ்வினாலும் அப்போது ஓடிக் கொண்டிருந்த தேனும் பாலும் படமும் சரி ஆகஸ்ட் 14 அன்று ஸ்ரீமீனாட்சியில் வெளியான மூன்று தெய்வங்கள் படமும் சரி இந்த கான்செப்டில் வரவில்லை. படத்தின் ரிப்போர்ட் சுமார் என்பதாலும் சவாலே சமாளி இருக்கிறது என்ற காரணத்தினாலும் தேனும் பாலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் மூன்று தெய்வங்கள் படம் பற்றி அது வெளிவருவதற்கு முன் பரவியிருந்த தவறான கருத்து [சிவாஜி கௌரவ தோற்றமாம்] படத்தின் முதல் வாரத்தில் சற்று பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதை சமாளித்து படம் முன்னேறியபோதுதான் ஆகஸ்ட் 31 வந்தது.
மதுவிலக்கைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரோல் மாடல் மாநிலமாக தமிழகத்தை விளங்க வைத்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மூன்று தலைமுறை மனிதர்களை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் வைத்திருந்து ஆட்சி புரிந்த பெருந்தலைவரும் மூதறிஞரும் பெரியவர் பக்தவத்சலமும் கட்டிக் காத்த மதுவிலக்கு கொள்கை திராவிட தலைவர்களால் காற்றிலே பறக்க விடபப்ட்டு தமிழகமெங்கும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 31. தமிழக மக்களை நிரந்தரமாக "குடிமகன்களாக" ஆக்கிய அவலம் அன்றுதான் ஆரம்பித்தது. கொட்டும் மழையில் கோபாலபுரத்திற்கு ஓடோடி சென்று மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என்று மன்றாடிய மூதறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "என் எதிரி கூட குடிக்க கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று சினிமாவில் வசனம் பேசியவர்கள், சினிமாவில் மட்டும் வசனம் பேசி விட்டு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் கையில் வந்த போது 7 வருடங்களாக [1974 செப்டம்பர் 1 முதல் 1981 ஜூன் 30 வரை] மூடிக் கிடந்த மது கடைகளை எல்லாம் திறந்து விட்ட காட்சியையும் தமிழகம் வேதனையோடு வேடிக்கை பார்த்தது. ஆயிற்று, 1981 ஜூலை 1-ந் தேதி அன்று திறக்கப்பட்ட கடைகள் இந்த 2014 ஜூலை 1-ந் தேதியுடன் 33 வருடங்களை கடந்து, இன்னும் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. சமூக அக்கறை உள்ள எவரும் நாளைய சமுதாயத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எவரும் இன்றைய இளைஞர் நிலை கண்டு வேதனையும் வருத்தத்தையும் அடைவதுதான் மிச்சம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. மதுபானம்தான் ஆறாக ஓடுகிறது.
மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முன்னிரவு மற்றும் பின்னிரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர அச்சப்படும் சூழல் உருவானது. பெண்கள் திரையரங்கிற்கு இரவு காட்சிகளுக்கு வராத சூழல் ஏற்பட்டது. இது தொடர் ஹவுஸ் புல் நிகழ்வையும் படங்களின் ஓட்டத்தையும் பாதித்தது. மூன்று தெய்வங்கள் படமும் இந்த அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டது.
தீபாவளிக்கு பாபு ஸ்ரீதேவியிலும், நீரும் நெருப்பும் சென்ட்ரலிலும் ரிலீஸ். நீரும் நெருப்பும் ரிப்போர்ட் சுமார். ஆகவே அந்த படம் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு முயற்சிக்கப்படவில்லை. மேலும் ரிக்ஷாகாரன் படம் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற இலக்கை எட்டி விட்டதாலும் இந்த படம் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. பாபு படத்தை பொறுத்தவரை நல்ல ரிப்போர்ட். படம் நன்றாகவே போனது. ஆனாலும் தொடர் ஹவுஸ் புல் என்ற இலக்கை அடைய முடியவில்லை. எனக்கு அன்றும் இன்றும் தோன்றுகின்ற காரணம் என்னவென்றால் இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான படங்களுக்கு repeat audience சற்று குறைவாக் இருக்கும். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு repeat audience factor-ம் தேவை.
1971 டிசம்பரில் ஒரு தாய் மக்கள் நியூசினிமாவில் வெளியானது. 1966 முதல் தயாரிப்பில் இருந்த படம் என்பதனாலும் படத்தைப் பற்றிய அபிப்பிராயம் சரியான முறையில் அமையாததாலும் படம் முதல் வார சனிக்கிழமை காலைக்காட்சியே அரங்கு நிறையாமல் போனது. இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
(தொடரும்)
அன்புடன்
-
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
1972 பிறந்தது. முதல் படமாக ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா ஜனவரி 26 அன்று திரையரங்குகளுக்கு விஜயம் செய்தார். மதுரையில் சென்ட்ரலில் வெளியான படத்தின் ஓபனிங் ஷோ பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். இனி இந்த முதல் படமே 100 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் என்ற வெற்றி இலக்கை அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஜனவரி 26 புதன்கிழமை. அன்று 4 காட்சிகள். படத்தின் excellent ரிப்போர்ட் பார்த்ததும் வேலை நாட்களாக இருந்தும் 27 மற்றும் 28 வியாழன், வெள்ளி தினங்களிலும் காலைக் காட்சி சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இதற்கு பிறகு வந்த சனி ஞாயிறு இரண்டையும் சேர்த்தால் ஆக முதல் 5 நாட்களில் நடைபெற்ற 20 காட்சிகளும் புல். ப்ளாக் டிக்கெட் heavy rate-ல் போனது. முதல் 15 நாட்களில் நடைபெற்ற 52 காட்சிகளும் புல். அதே வேகத்தில் முதல் 23 நாட்களில் நடைபெற்ற 78 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 25-வது நாள் சனிக்கிழமை காலைக் காட்சிதான் சற்று கவலை தரக் கூடியதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க 24-வது நாள் வெள்ளியன்று மதியக் காட்சியில் சவாலே சமாளி படத்திற்கு ஏற்பட்டது போல் ஒரு ஷாக் ஏற்பட்டது. ஸ்ரீதேவியில் நடந்தது போலவே எண்ணிகையில் வெகு குறைவான டிக்கெட்டுகள் மட்டும் மீதம் இருக்க தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. இது ரசிகர்களை மிகவும் கோபத்துகுள்ளாகியது. மன்ற நிர்வாகிகள் அல்லது ரசிகர்கள் அரங்கின் வெளியே இருந்திருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
அந்த பக்கம் பிப்ரவரி 4 அன்று சிந்தாமணியில் சங்கே முழங்கு ரிலீஸ். 1972-ல் வெளியான எம்ஜிஆரின் முதல் மூன்று படங்களும் சிந்தாமணியில் வெளியாக இருந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.கடைசி நேரத்தில் நல்ல நேரம் படம் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸால் அரங்கு மாற்றப்பட்டதையும் குறித்திருக்கிறேன். இந்த சூழலில் வெளியான சங்கே முழங்கு ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். சொல்லப் போனால் 72-ல் வெளியான படத்தில் 1968-ல் நடைபெற்ற தென்காசி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்ற செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழை எம்ஜிஆர் படித்துக் கொண்டிருப்பது போல் காட்சி வரும். இந்த படம் தொடர் ஹவுஸ் புல் ஆகவில்லை.
மார்ச் 10 அன்று நல்ல நேரம் மார்ச் 11 அன்று ஞான ஒளி ரிலீஸ். இரண்டு படங்களின் ரிப்போர்ட் பற்றி ஏற்கனவே பேசினோம். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை பொறுத்தவரை ஞான ஒளி மற்றொரு பாபு என்றே சொல்லலாம். அதாவது உணர்வுபூர்வமான roller coaster ride. இதற்கு repeat ஆடியன்ஸ் factor ஒரு முக்கியமான காரணி. அதையும் தாண்டிய ஒரு ரெஸ்பான்ஸ் படத்திற்கு கிடைத்து தொடர் ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருக்கும் போது இரண்டாம் வாரம் என நினைக்கிறேன். வியாழன் அல்லது வெள்ளி ஏதோ ஒரு விசேஷ நாள் வரவே அதற்காக அன்றைய தினம் சிறப்புக் காட்சியாக காலைக் காட்சி போடப்பட்டது. அது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு வினையாக வந்தது. நல்ல நேரம் படத்தைப் பொறுத்தவரை அலங்கார் மற்றும் மூவிலாண்ட் திரையரங்குகளில் வெளியாகி இரண்டிலும் சேர்த்து 100 காட்சிகள் ஹவுஸ் புல் ஆனது என்று ஞாபகம்.
இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காட பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்.
(தொடரும்)
அன்புடன்