இன்றெப்படியும் "சரஸ்வதி சப்தம்" முடிந்து விடும் என்ற எண்ணதுடனேயே நாமும் திருவிளையாடல் பார்க்கத் துவங்குகிறோம். நம் எண்ணமும் வீண்போகவில்லை.
பார்த்திபனும், மாமல்லனும், கைது செய்யப் படுகின்றனர். ஒட்டுமொத்த நகரமும் சேர்ந்து, எஞ்சியிருக்கும் மாமல்லனின் காவலர்களை அடித்து விரட்டுகின்றனர்.மாமல்லனை மட்டும் தூக்கிலிட உத்தரவிடுகிறாள் அம்பிகை.
தன்னருள் பெற்றவனை சதி செய்து தூக்கிலிடப் போகிறார்கள் என்றதும் உமையவளுக்கு வருத்தம் மேலிடுகிறது. கலைமகளருள் பெற்றவனும் அம்பிகையும் தனித்தனியே இயங்காமல், கூட்டணி அமைத்து தனியொருவனாய் மாமல்லனை தூக்கிலிடுவது எப்படி சரியாகும் என்று அவள் வாதிடுகிறாள். நாரதரும் அங்கு வந்து சேர்ந்து, உமையவளுக்கு பரிந்து பேசுகிறார். வித்யாதரனை சிறையிலடைக்க எப்படி மாமல்லனும் அம்பிகையும் கூட வேறு சமயம் கூட்டாய்ச் செயல் பட்டதை இறைவன் நினைவுறுத்துகிறார். தேவியர் மூவரின் சபதத்தில் ஒரு உயிரல்லவோ பலியாகவிருக்கிறது, அதைக் காப்பது இறைவன் கடமை என்று நாரதரின் வலியுறுத்தலின் பேரில், இறைவன் வசந்தபுரத்தில் திருவெழுகிறார். இறைவன் சென்றதும் மற்ற தெய்வங்களும் அங்கு எழுந்தருளுகின்றனர்.
அதன் பின்னரும் கூட, சரஸ்வதிதேவியோ நிலைத்திருக்கும் கல்வியறிவும் ஞானமுமே என்றும் சிறந்தது என்று வாதிட, திருமகளோ இம்மைக்கு செல்வங்களிருந்தாலேயொழிய வாழ்வின் இலக்கை எட்டுவது கடினம் என்கிறாள். இத்துணை செல்வமும், கல்வியறிவும் இருந்தாலும் கூட அதைக் கட்டிக் காக்கும் வீரமும் தைரியமும் இன்றியமையாதது என்று உமையவள் அழுத்தம்திருத்தமாய்க் கூற, இறைவன்...
"இம்மூன்றும் ஒருங்கே பெற்ற ஒரு தனிமனிதனோ, நாடோ இருந்தால் அதற்கு இணை இருக்கவும் முடியுமா? மூன்றின் பெருமையும் ஒருங்கே செயல்படும் போது தான் அதன் வலிமை அதிக்கரிக்கிறது" என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். வீண்தர்க்கத்தின் விளைவாக மூவரும் தனித்தனியே மூவருக்கு அருளி இறுமாந்திருந்ததை விட, ஒருங்கே தங்கள் கருணையை ஒரு தனி மனிதனுக்கு வழங்கினால் அவனால் நாடும் வீடும் சுற்றமும் பெறும் நன்மைக்கு ஈடாகுமா என்று முடிக்கிறார். தேவியர் மூவரும் கூட, தங்கள் அறியாமையை நினைந்து சற்றே வெட்கி, இறைவனின் தீர்ப்பை ஒப்புக்கொள்கின்றனர். இறுதியில், அம்பிகை, வித்யாதரன், மாமல்லன் மூவருக்கும் அருள் வழங்கிச் செல்கின்றனர்.
தாவி பின்னோக்கி ஓடும் மனதை "அடச்சீ சும்மாயிரு" என்று அடக்கினாலும் கூட, சிவாஜி நடிப்பில் டி.எம்.எஸ் "கல்வியா செல்வமா வீரமா" என்று பாடிய பாடல் மனக்கண் முன் வந்து போகிறது.
"ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
...
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது அது
ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
...
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா"
என்று பாடலும் அதன் அர்த்தமிகு வரிகளும், இசையும், சிவாஜியும், இன்னும் ஏனையோரும் வந்து போகின்றனார்.
இப்பாடலை கண்டு மகிழ, கீழே சுட்டுங்கள்
http://www.youtube.com/watch?v=1yC2C3wdVjk
இறுதிக் காட்சியில், அரசியாய் அம்பிகை வீற்றிருக்க, பக்கத்தில் அரண்மணைப் புலவன் வித்யாதரனும், இன்னொரு புறம் தளபதியாய் மாமல்லனும் வீற்றிருக்கிறார்கள். எல்லாம் கலைவாணியின் அருள் என்று வித்யாதரன் சிரிக்க, ஏன் உமையவள் அருள் என்று சொல்லக்கூடாதா என்று மாமல்லன் கேலிக்க, திருமகளின் அருளன்றி வேறேது என்று நகைக்கிறாள் அம்பிகை. இக்கண்கொள்ளாக் காட்சியை கண்டு மகிழ்ந்திருக்கும் அமைச்சரும் "அடடா மறுபடியும் ஆரம்பித்துவிட்டதா" என்று கவலைப் பட
"இல்லையில்லை முடிந்துவிட்டது....அடுத்தது வேறொன்று ஆரம்பமாகும்" என்று அம்பிகை (டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நமக்குச் சொல்ல :P ) சொல்லவும் மூவரும் புன்னகைக்கின்றனர்
தூக்கிலிடுவதற்கு முன் மாமல்லன், வித்யாதரன், அம்பிகை மூவரும் உதிர்க்கும் வசனங்களை ரசிக்க முடிகிறது.
"நீ என்ன சிறுவயதிலா ஏட்டைப் பிடித்தாயா, கலைவாணியின் அருள் இடையில் கிடைக்கப் பெற்றவன் தானே" என்று வித்யாதரனை மாமல்லன் அவமதிக்க
"நீ மட்டும் அம்மாவின் வயிற்றிலேயே வாள் பிடித்தாயோ" என்று பதிலுரைக்கிறான் வித்யாதரன்.
இறைவனும் இறைவியும் மற்றோரும் பேசும் வசங்களும் பரவாயில்லை. நடுநடுவே தொன்று தொட்டு வழங்கி வரும், ஆண்கள் பெண்களிடம் அமைதி காப்பது போல் நடிப்பதும், "நல்லவேளை நான் பிரம்மச்சாரி" என்று நாரதர் பெருமூச்சுவிடுவதும், கேட்டுக் கேட்டுப் புளித்தப் போன நகைச்சுவைகள். சாமான்யர்கள் பேசும் வசனங்களையே தெய்வங்களையும் பேச வைத்தால் பல நேரம், சலிப்பு தட்டுகிறது. சில நேரம் புன்னகையும் மலர்கிறது.
வேறொரு கோணத்தில் பார்க்கும் போது, பெருமளவில் மக்கள் தொடரைப் பார்க்கும் போது பலரது மனநிலை, மனமுதிர்ச்சியை மனதில் கொண்டு வசனங்களை அமைத்திருக்கிறார்கள் என்று புரிகிறது. சில எளிய கருத்துக்களை எளியவர்க்கு சென்றடையும் நோக்கத்துடன் செயல்படும் போது, எளிய வழக்கும், பேச்சும் இருப்பது தான் சரி.
சுருக்கமாய் சொன்னால், நேற்றைய பகுதியில், சற்றே சுவாரஸ்யம் கூடியிருந்தது. இனி அடுத்தது என்ன என்ற ஆவலையும் தூண்டியுள்ளது.
'கூட்டாகச் சதி' செய்வது என்பது என்றைக்கும் எக்கால கட்டதிலும் எந்த யுகத்திலும் அரசியலுக்கு உகந்தது போலும். கூட்டணிகளும் மாறிக்கொண்டே இருக்கும். அரசியல் மட்டுமென்ன நடைமுறை வாழ்கைக்கு விதிவிலக்கா என்ன!? நம் அன்றாட அலுவலகக் கலகங்கள், குடும்ப மனப்பூசல்கள், நண்பர்கள் தகராறுகள் என எல்லாவற்றிலும் கூட்டுச் சதி, செயல்பாடு, பின் கட்சி மாறுவது என நவரச நாடகங்கள் எல்லா வீட்டிலும், ஏன் ஒவ்வொரு தனி மனிதனுக்குளேயும் கூட இருக்கத்தானே செய்கிறது! ஒரு போது ஒன்று நினைக்கிறோம் சிறிது நேரத்தில் நம் கண்ணோட்டம் மாறுகிறது. மாற்றங்கள் மட்டுமே நிலையானது. (கட்சி விட்டு கட்சி தாவுவதும் இப்படித் தான் என்பது முதிர்ந்த அரசியல் கூற்று!)
காட்சி அமைப்புக்கள் நன்றாக இருந்தது என்று நேற்று நான் எழுதியது, கண்பட்டு விட்டது போலும். இன்றைக்கு இருந்த தூக்கு மேடை காட்சியமைப்புகள் அத்தனையும் அட்டையில் செய்யபட்ட போலி அமைப்பு என்று குழந்தை கூட சொல்லிவிடும். இப்படிப் பட்ட அரிய காட்சிகளை படமெடுக்க சிரமம் இருப்பின், மிக்ஸிங் செய்யும் போது க்ரீன் ஸ்க்ரீன் / ப்ளூ ஸ்கீரீன் தொழில் நுட்பம் உபயோகித்து, ஏதேனும் ஒரு கல் மண்டபத்தின் காட்சியுடன் இணைத்திருக்கலாம்.
மிக்ஸிங் நுட்பங்கள் தெரிந்தோர்களுக்கு இந்த போலி காட்சியமைப்பு இன்னுமே உறுத்துகிறது. பள்ளி /கல்லூரிகளில் மேடை நாடகத்தில் வைக்கும் அமைப்பைப் போல் இருந்தது.
(நாளை வேறு விளையாடல் :) )