உண்மை உணரும் நேரம் - 3
ஒரு முன்னுரை
இனி நமது ஹப்பில் பதியப்பட்ட மற்றொரு "வரலாற்று" பதிவிற்கு வருகிறேன். அதற்கு முன்பு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். முதலில் நமது ஹப் அல்லது மய்யம் என்ற இந்த இணையதளத்தைப் பற்றிய செய்தி. இது தொடங்கப்பட்டது தமிழ் சினிமா இசையைப் பற்றிய ஒரு தகவல் பரிமாற்றம் மற்றும் பாடல்களின் சிறப்பை நினைவு கூர்தல் ஆகியவற்றுக்காக. முதலில் அதன் பெயரே TFM DF. Tamil Film Music Discussion Forum. பின்னர் அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு நாம் இன்று காணும் அமைப்பில் வந்து நிற்கிறது. இங்கே சூரியனுக்கு கிழே உள்ள எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். பல் வேறு துறைகளில் உள்ள ஆளுமைகளைப் பற்றி அது கலைத்துறையாக இருக்கலாம், இசைதுறையாக இருக்கலாம், திரைப்பட துறையாக இருக்கலாம், இன்னும் அரசியல், விளையாட்டு, இலக்கியம், கவிதைகள், படைப்புகள் என்று ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்ற ஆளுமைகளைப் பற்றி அவர்தம் படைப்புகளைப் பற்றி பதிவுகள் இடலாம், கருத்து பரிமாற்றம் மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் ஆகியவை இடம் பெறலாம். ஆனால் அவை அந்தந்த பிரிவில் கீழே வரும் தலைப்புகளில் இருக்க வேண்டும். அரசியல் பற்றி விவாதிக்க வேண்டுமானால் current topics பகுதிக்கு செல்ல வேண்டும். அவற்றை திரைப்படங்கள் பகுதியில் பதிவிடுவது சரியானது அல்ல. அதே போன்றே திரைப்படங்கள் பகுதியில் ஒரு திரைத்துறை ஆளுமைக்காக உருவாக்கப்பட்ட திரியில் தனிப்பட்ட மனிதர்களின் வீட்டில் நடைபெறும் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இன்ப சுற்றுலா போன்றவை இடம் பெறுவது சரியல்ல. அவற்றை பதிவு செய்ய வேண்டுமென்றால் Hubbers Lounge என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்.
இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பல்வேறு நேரங்களில் திரைப்படம் சம்பந்தப்பட்ட திரிகளில் அதற்கு தொடர்பே இல்லாமல் வேறு பல பதிவுகள் வருகின்றன. அதை தவிர்க்க சொல்லவே இந்த் முன்னுரை.
உண்மை உணரும் நேரம் - 3 (Part I)
சரி நாம் விட்ட இடத்திற்கு வருவோம். நடிகர் திலகம் திரியில் நாம் அரசியல் பதிவுகள் இடுவதில்லை. எப்போதேனும் சில விவாதங்கள் வரும்போது கூட அதை தவிர்க்க சொல்கிறோம். ஜூலை 15 அன்று மட்டும் நடிகர் திலகம் தன் வாழ்நாள் முழுக்க யாரை தலைவராக ஏற்றுக் கொண்டாரோ, யாரை நாமும் இன்று வரை போற்றுகிறோமோ அவரை அந்த பெருந்தலைவரைப் பற்றிய ஒரு நினைவு கூறல் அதுவும் அது பிறந்த நாளாக இருப்பதனால் செய்கிறோம். அந்த வகையில் இந்த வருடமும் ஜூலை 15 அன்று அவரை பற்றிய பதிவுகள் வந்தன. என்னுடைய பங்காக அவர் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தொழில்துறை சிறக்க அவர் எடுத்த முயற்சிகள், பங்களிப்புகள் பற்றிய ஒரு தகவல் குறிப்பாக செய்தேன்.
வழக்கம் போல் இதற்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஒரு பதிவு வெளிவந்தது. அவர்களின் அபிமானத்துக்குரியவரை பற்றிய புகழ் பாடல். அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதே பதிவில் பெருந்தலைவர் பற்றிய தவறான தகவல்களை சொல்லியிருந்தார்கள். அந்த தவறை சுட்டிக் காட்டவும் வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறவுமே இந்த பதிவு.
முதலில் பெருந்தலைவர் பதவியேற்று போது நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்லும்போது எழுதப்பட்ட பிழை.
1954 ஏப்ரல் 13 அன்று தமிழக முதல்வராக பெருந்தலைவர் பதவியேற்கிறார். அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. எனவே குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இதுவரை சரி.
அடுத்து என்ன சொல்கிறார்கள்? பெருந்தலைவர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு எதிராக திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல் அண்ணாதுரை பெருந்தன்மையாக நடந்துக் கொண்டார். திமுக போட்டியிடவில்லை என்பது உண்மை. அனால் அதற்கு காரணம் பெருந்தன்மையா? இல்லை. அப்படியென்றால் உண்மைக் காரணம் என்ன? சற்று வரலாற்றை பின்னோக்கி பார்ப்போம்.
திராவிடர் கழகத்தில் ஈ.வே.ரா. தலைமையில் செயல்பட்டு வந்தவர்கள்தான் சி.என்.ஏ., மதியழகன்,சம்பத் மற்றும் நெடுஞ்செழியன் போன்றவர்கள். இவர்கள்தான் 1949-ல் திராவிட கழகத்தை விட்டு வெளியேறினார்கள். கொள்கையில் கருத்து வேறுபாடா என்றால் இல்லை. ஈ.வே.ரா. தன்னை விட வயதில் மிக மிக இளையவரான மணியம்மையாரை திருமணம் செய்துக் கொண்டார். அதை எதிர்த்து வெளியேறிய இவர்களை கண்ணீர் துளிகள் என்று வர்ணித்தார் ஈ.வே.ரா.
பிரிந்து சென்றவர்கள் 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வட சென்னையில் ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்கள். மறுநாள் கட்சிகென்று சட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் முக்கியமான பிரிவு என்ன சொல்லியது என்றால் திராவிடர் கழகம் போல திராவிட முன்னேற்ற கழகமும் சமூக சீர்திருத்த இயக்கமாகவே செயல்படும் என்றும் அதனால் தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாது என்றும் சொல்லி அதை கட்சியின் விதிமுறையாக அமல்படுத்தப்பட்டது. அந்த பிரிவில் ஒரு உட்பிரிவாக ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டது. அது என்னவென்றால் இந்த முடிவை மாற்ற வேண்டுமென்று பின்னாட்களில் கட்சி முடிவெடுத்தால் அதை கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்து அதற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலே அதை செயல்படுத்த முடியும் என்பதும் கட்சியின் சட்டமாக்கப்பட்டது. கட்சியில் இப்படி ஒரு சட்ட பிரிவு இருந்ததனால்தான் 1952-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. அதே காரணத்தினால்தான் 1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக போட்டியிடவில்லை.
பதவியைப் பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர்வதையே தங்கள் வாழ்நாள் லட்சியமாக கொண்ட திராவிட இயக்கத்தினரால் ஒரு தேர்தலுக்கு மேல் பொறுக்க முடியவில்லை. 1956-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும் என்பதை தீர்மானமாக கொண்டு வந்து பெரும்பான்மை உறுப்பினர்கள் அதை ஆதரிக்கவே அதை ஏற்று அப்போது நடைபெற இருந்த 1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. [என் நினைவு சரியாக இருக்குமென்றால் இந்த மாநாட்டில்தான் அண்ணாதுரை அவர்கள் நெடுஞ்செழியனைப் பார்த்து தம்பி வா! தலைமையேற்க வா! என்று சொன்னதாக படித்திருக்கிறேன். இதைப் பற்றி உறுதியாக தெரிந்தவர்கள் சொல்லலாம்].
மீண்டும் நம் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு வருவோம். உண்மை என்ன? திமுக தானே வகுத்துக் கொண்ட சட்டதிட்டத்தின்படிதான் 1952-ம் பொதுதேர்தலிலும் போட்டியிடவில்லை. 1954-ம் ஆண்டு குடியாத்தம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிடவில்லையே தவிர இதற்கு பெருந்தன்மை காரணமில்லை. உண்மையிலே அப்படி பெருந்தலைவர் மீது மதிப்பும் மரியாதையும் இருந்திருக்குமானால் 1957 பொதுத்தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடாமல் பெருந்தன்மையை காட்டியிருக்கலாமே. 1962 தேர்தலிலும் 1957 தேர்தலிலும் ஏன் 1969-ம் ஆண்டு அவர் நாகர்கோவில் இடைத்தேர்தலில் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டபோது அதே பெருந்தன்மையை காட்டியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை?
இதுவும் தினமலர் வாரமலர் இதழில் தமிழக அரசியல் வரலாறு தெரியாத ஒருவர் அள்ளிவிட்ட கப்சா! இதை உண்மையா என்று கூட சரி பார்க்காமல் இங்கே பதிவு செய்தாகிவிட்டது. இதை யார் கேட்கப் போகிறார்கள்? கேட்டாலும் பதில் இருக்கவே இருக்கிறது அதாவது இந்தப் புத்தகத்தில் வந்தது என சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான் காரணம்.
நான் குறிப்பிட்டது போல வரலாற்று உண்மைகளை எல்லா காலங்களிலும் மறைக்க முடியாது. அவை வெளிவந்தே தீரும்.
(தொடரும்)
அன்புடன்