-
இன்றைய ஸ்பெஷல் (10)
அன்று பிரபலமாய் ஒலித்த இன்னொரு சுறுசுறு பாடல். எல்லோர் நெஞ்சங்களிலும் குடிகொண்ட பாடல்.
'மழை மேகம்' படத்தில் அழகான ஒரு பாடல்
http://img.youtube.com/vi/RORk83QZVp0/mqdefault.jpg
அப்படி ஒரு படம் வந்தது பலருக்குத் தெரியாது. முத்துராமன், சாரதா இணை.
புலமைப்பித்தன் வரிகளுக்கு 'திரை இசைத் திலகம்' மியூசிக்.
யாரோ இளசுகள் ரெண்டு ஆடும் என்று நினைத்திருந்தால் கொஞ்சமும் எதிர்பாராமல் நம் முத்துராமனும், சாரதாவும் இளமை புத்துணர்ச்சியுடன் டூயட் பாடுகிறார்கள்.
முத்துராமன் பொதுவாக டூயட் பாடல்களில் 'எனக்கென்ன' என்று மசமசவென இருப்பார். இப்பாடலில் பரவாயில்லை. சாரதாவுடன் ஓடுகிறார்...துரத்துகிறார்... சாரதா நெஞ்சத்தில் வாசனை பிடிக்கிறார்.... குதிரையெல்லாம் ஓட்டி சாரதாவை ஓட்டுகிறார்.
நம் 'புவனேஷ்ஷ்.......வரி'க்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஸ்ரீகாந்திடம் ஏமாந்து போய் கண்ணீர் விடத்தான் மிகப் பொருத்தமானவர்.
கே.வி.எம்மிடம் ஒரு குறை. அவரது வாத்தியக் கருவிகளின் இசையைக் மிக ஈஸியாக கண்டு பிடித்துவிடலாம். 'வாணிராணி' 'வசந்தமாளிகை' 'எங்கள் தங்க ராஜா' படப்பாடல்களின் இடையிசை நமக்கு அப்படியே ஞாபகத்திற்கு வருகிறது. மனிதர் மாற்றவே மாட்டார். ஆனால் டியூனில் மட்டும் ஏமாற்றவே மாட்டார்.
வழக்கமான அதே சமயம் துறுதுறுப்பான சுலீலா, பாலாவின் வளமையான குரல்களின் பின்னணியில்.
இனி பாடல் வரிகளில் சங்கமிப்போம்.
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா.
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா.
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து
வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்கிடப் படித்து
பாடம் சொல்லக் கூடாதோ
பார்வை ஒன்று போதாதோ
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
எண்ணிரண்டு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடையென்னும் சிறையினில் பூட்டு
மங்கள இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு
மாலைத் தென்றல் தீயாக
காணும் இன்பம் நீராக
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா...ம்ம்ஹுஹும்...
பாடலில் பாலா பாடிக்கொண்டிருக்க அவரோடு சேர்ந்து சுசீலா ஹம்மிங்கில் இணைந்து இழைய, பின் சுசீலா பாட, அவரோடு சேர்ந்து பாலா ஹம்மிங் தர நாம் அனுபவிப்பது கோடைக்கால தென்றலின் சுகம்.
கிருஷ்ணா சார்,
'சிம்லா ஸ்பெஷல்' படத்தில் 'மெல்லிசை மன்னர்' இசையில் ஒலிக்கும்
'Look Love Me Dear
Lovely Figure
lasting colour
வெண்மேகமே ஓடிவா
என் உள்ளத்திலே வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடி வா'
பாடலின் டியூனும், 'ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது' பாட்டின் ஆரம்ப இசையும்' அப்படியே ஒன்றாக இருக்கும்.
மேல்கொண்டு எழுதினால் வம்பு வளப்பதற்கென்றே ஒரு கேஸ் அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு தீனி போட்டாற்போன்று ஆகிவிடும்.
பாடலை ஒருமுறை பார்த்து விடலாமா!
http://www.youtube.com/watch?feature...&v=RORk83QZVp0
-
மதுரகானங்களை வானொலியில் ரசிக்கும் மக்களின் நடிகர். (ரேடியோதானே)
http://i812.photobucket.com/albums/z...ps9063c9fe.jpg
-
மன்மத லீலை (4)
'நாதமென்னும் கோயிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்'
இதே பாலச்சந்தரின் படத்தில் வந்த 'ஏழு ஸ்வரங்களைத்' தொடர்ந்து வாணி ஜெயராமின் அதே மாதிரியான இன்னொரு மாஸ்ட்டர்பீஸ். அப்போது வாணியம்மா வாயிலிருந்து சிந்தியதெல்லாம் அமுதமாகவே வந்து விழுந்தது.
படத்தில் சுனந்தினி நன்றாகப் பாடக்கூடிய பாடகி. ஆனால் பாராட்டுவோர், சீராட்டுவோர் இல்லாமல் தவிப்பவள். அதனால் யாராவது ஒருத்தர் தன் பாடலைக்கேட்டு கைதட்டினால்கூட அதை பெரிதாக மதிப்பவள். இயல்புதானே. மன திருப்திக்காக பதிவுகள் இட்டாலும் அதை நாலுபேர் பாராட்டும்போது மனம் மகிழ்கிறது அல்லவா. ('ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' - நன்றி வாலி, டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர்).
இவ்வளவு அழகாக இனிமையாகப் பாடக்கூடிய பாடகியை பாராட்ட யாருமில்லைஎன்பது ஆச்சரியமே. வெறுமனே காச் மூச்சென்று கத்திய சில மேற்கத்திய பாடகர்களுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருந்தார்களாமே. ஆனால் நம் நாட்டில் உண்மையான திறமையாளர்களை எவன் மதித்தான்?. அதுதான் இந்தப்பெண்ணுக்கும்.
அதனால்தான் பாராட்டிய ஒரே ரசிகன் மீது இவளுக்கு அவ்வளவு ஈர்ப்பு. அவளை சந்தித்ததற்கு மனைவியிடம் மது சொல்லும் காரணம் "சும்மா அவள் பாட்டைக்கேக்கிறதுக்கு அவ வீட்டுக்குப் போவேன், அவ்வளவுதான்". "ஒருத்திக்கு பாடிக்காட்ட போவீங்க, இன்னொருத்திக்கு பாட்டைக்கேட்க போவீங்க, அப்படித்தானே?".
அவள் பாட ஆரம்பித்ததும் வீட்டின் பெரிய ஹாலில் படிப்படியாக கூட்டம் வந்து நிறைவதும், பின்னர் படிப்படியாக கூட்டம் குறைந்து ஹால் காலியாகி அவள் முகம் வாடுவதுமான கற்பனை கே.பி.போன்றவர்களால் மட்டுமே சிந்திக்க முடியும்.
நாதமென்னும் கோயிலிலே
ஞான விளகேற்றி வைத்தேன்
ஏற்றிவைத்த விளக்கினிலே
எண்ணெய்விட நீ கிடைத்தாய்
எனக்குக் கிடைத்த ஒரே ரசிகன் நீ உன்னை விடுவதாக இல்லை. அடி பேதைப்பெண்ணே, கிடைத்த அந்த ஒரு ரசிகன் எதை ரசிப்பவன் என்று தெரிந்தால் உன் மனம் என்னாகும். நீ பாடும்போது உன் குரலில், உன் வார்த்தைகளில் உள்ள வளைவு நெளிவுகளை ரசிப்பவன் அல்ல, உன் உடலில் உள்ள வளைவு நெளிவுகளை ரசிப்பவன்.
இசையும்...... எனக்கிசையும்....
உன் மனம்தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும்
நீ அசைத்தாய் நான் இசைத்தேன்
நாதமென்னும் கோயிலிலே
இணையே எனக்கிலையே இங்கு
வெறும் கதையானது கலையே
விலையே சொல்லி உனையே நான்
அணைத்தேன் உயிர் பிழைத்தேன்
(கிருஷ்ணாஜி, வரிகள் சரிதானா?. பாட்டை கேட்டு ரொம்பநாள் ஆச்சு)
இறைவன் என ஒருவன் என்
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில்
அவன்தான் உன்னைக்கொடுத்தான்
நாதமென்னும் கோயிலிலே....
பாடலை ஏற்கெனவே நண்பர் வினோத் காணொளி வடிவத்தில் தந்து விட்டார். காண்போம் களிப்போம்.
-
கார்த்திக் & கிருஷ்ணாஜி இருவரும் சேர்ந்து மன்மத லீலையை கலக்கோ கலக்கு என்று கலக்கி விட்டார்கள். வாசு சொன்னது போல் இது போன்ற வகை படங்களென்றால் வரிந்து கட்டிக் கொண்டு வரும் கோபாலும் சேர்ந்து கொள்ள அதகளம். [ஆமாம், ஒரு சந்தேகம். மதுர கானங்கள் திரிக்கும் சிறந்த தமிழ் படங்களின் லிஸ்டிற்கும் என்ன சம்பந்தம்]? கண்ணனும் வாசுவும் வேறு சேர்ந்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.
இங்கே பலரும் குறிப்பிட்டது போல் நானும் இந்த படத்தை பல தடவை ரசித்தவன். படம் வெளியானது 1976 பிப்ரவரி 27 வெள்ளிக்கிழமை. மறுநாள் சனிக்கிழமை பள்ளி விடுமுறை. காலைக்காட்சி 10.30 மணிக்கு. நண்பர்கள் யாராலும் கூட வரமுடியவில்லை நகரின் மையப் பகுதியில் இருந்த வீட்டிலிருந்து பஸ் பிடித்து கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸ்டாண்டிற்கு போய் இறங்கி சினிப்ரியா அரங்கிற்கு போய் சேர்ந்தபோது தியேட்டர் ஹவுஸ் புல் ஆகி விட்டது. எவ்வளவு முயற்சித்தும் டிக்கெட் கிடைக்காமல் அதே complex-ல் இருக்கும் மினிப்ரியா அரங்கில் அன்றுதான் வெளியாகியிருந்த Crazy Boys of the Games படத்திற்கு போய்விட்டு வீட்டிற்கு போனேன்
அன்று மாலை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஏ,வி. ரமணனின் Musiano குழுவினரின் மெல்லிசை கச்சேரி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நாங்கள் [எங்கள் உறவினர் ஒருவரும் வந்திருந்தார்] நிகழ்ச்சி முடிந்ததும் ரமணன் அவர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். கூட வந்திருந்த உறவினர் கர்நாடக சங்கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அங்கயற்கண்ணி சங்கீத சபா என்ற அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அந்த சபாவிற்கு வேண்டி ஒரு மெல்லிசை கச்சேரி நடத்தி தர முடியுமா என்று ரமணனை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சபாவின் சார்பில் இரண்டு வாரங்களுக்கு பிறகு கமல் அவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி மதுரையில் ஏற்பாடு செய்திருப்பதையும் ரமணனிடம் கூற அவர் நிகழ்ச்சி பெரும் வெற்றி பெறும். காரணம் மன்மத லீலை பெரிய ஹிட் ஆக மாறும் என்று கூறனார். நேற்றொரு மேனகை பாடலை மன்மத லீலை படத்தில் பாடிய அவர் [அன்றைய நிகழ்ச்சியிலும் பாடினார்] படத்தை பார்த்து விட்டதாகவும் மிக நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டி விட்டது.
மறுநாள் ஞாயிறு மதியக் காட்சிக்கு போய் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கியாகி விட்டது. படம் ரொம்பவே ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. படத்தை அதன் பிறகு 4,5 முறை பார்த்தேன். ஏற்கனவே சொன்ன மாதிரி மார்ச் 14 ஞாயிறு அன்று அந்த சபா சார்பில் தமுக்கம் மைதானத்தில் கமல் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. உறவினருடன் கமல் தங்கியிருந்த பாண்டியன் ஹோட்டலுக்கு சென்று அவரை சந்தித்தது புகைப்படம் எடுத்துக் கொண்டது [எங்கே போனது என்றே தெரியவில்லை] அவர் " கமல்ஹாசன் - அன்பை வணங்குபவன்" என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தது எல்லாம் பசுமரத்தாணியாய் நினைவில் நிற்கிறது. விழாவில் ஜெமினி அவர்களும் கலந்து கொள்ளவிருந்ததால் போதிய காவல்துறையின் பாதுகாப்பு இருக்கிறதா என்று கமல் கேட்டதும் நிழலாடுகிறது. அன்றைய நாட்களில் ஏறும் மேடைதோறும் controversial ஆக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஜெமினி. எனினும் அந்த நிகழ்ச்சி எந்த பிரச்சனையுமின்றி நடந்தது. ராங் நம்பர் Y.விஜயாவும், சுனந்தினியும் வந்திருந்தார்கள். எனக்கு முன்வரிசையில் இரண்டு பேரையும் இரண்டு பக்கம் இருத்திக் கொண்டு நடுவில் அமர்ந்து கைகளினால் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார் காதல் மன்னன்.
இனி படத்திற்கு வருவோம். படத்தின் பலமே குறும்பான இளமை கொப்புளிக்கும் வசனங்கள். அனைவரும் பிரித்து மேய்ந்து விட்டனர். அவர்கள் விட்டு வைத்தவற்றில் சில
இந்த பொண்ணை எப்படி பழக்கம்?
தொழில்முறையில்தான்.
உங்க தொழிலா அவ தொழிலா?
ஒருத்திக்கிட்டே பாட்டு பாடணும் ஒருத்திக்கிட்டே பாட்டு கேட்கணுமா
எல்லாம் ஒரு obligation தான்
முருகா சரணம்னா முடிந்தால் வரவும்னு அர்த்தம்
ஏம்ப்பா அவர் ஆட்டோவிலே எங்கே உட்கார்ந்து வந்தார்?
நீங்க உட்கார்ந்திருக்க மாதிரியே வலது பக்கம் ஓரத்திலே
அவ எங்கே உட்கார்ந்திருந்தா
அதே வலது பக்க ஓரத்திலே
எப்படிப்பா ஒரே இடத்திலே இரண்டு --------
இது என்ன கார் சீட்டிலே மல்லிகைப்பூ?
அது அந்த பத்மாவதியைதான் கேட்கணும்
யார் அது பத்மாவதி?
Mrs. வெங்கடாசலபதி!
சிரிக்காதீங்க வயிறு எரியுது
வயிறு எப்படி எரியும்? கன்னம்தானே எரியணும்
கன்னம் -- அப்போ நீங்க வந்தீங்களா?
மஞ்சளிலே வரலே மறைவா வந்தேன்
கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து என்ன செய்ய கூடாது தெரியுமா
இது தெரியாதா? கல்லெறியக் கூடாது
அதுதான் இல்லை! லைட்ஐ போட்டுக்கிட்டு கிஸ் பண்ணக்கூடாது ஏன்னா எல்லோரும் பார்பாங்களே
இப்படி டெலிபோனில் பாடினால் எல்லாரும் கேட்பாங்களே
பேர் என்ன உஷாவா?
இல்லை பார்கவி
நான் fan -ஐ கேட்டேன்
ஜப்பான், முன்னாடி நீ வேலை பார்த்த இடத்திலே உன்னை ஏண்டா வேலையை விட்டு துரத்தினாங்க?
அதுவா. ஒரு நாள் முதலாளியை பார்க்க ஒருத்தர் வந்தாரு. நான் போய் ஒரு ஆள் வந்திருக்கிறார்னு சொன்னேன், அப்படி சொல்லக் கூடாது மரியாதையா கஸ்டமர் வந்திருக்கிறார்னு சொல்லணும்னு சொன்னாங்க. மறுநாள் அவங்க சொன்னததான் சொன்னேன். என்னை வேலையை விட்டு துரத்திட்டாங்க
ஏன் என்ன ஆச்சு?
ஒருத்தர் வந்தாரு. நான் முதலாளி அம்மாகிட்டே போய் உங்க கஸ்டமர் வந்திருக்கிறார்னு சொன்னேன். அவ்வளவுதான்.
ஏன்னா எப்ப பார்த்தாலும் என் தலையெழுத்து என் கஷ்டம்னு சொல்லிண்டேயிருக்கேளே, நம்மனு சொல்லக் கூடாதா?
சொல்றேண்டி சொல்றேன். போய் நம்ம வேஷ்டியையும் நம்ம அண்டர்வேரையையும் எடுத்துண்டு வா.
ஏங்க இந்த பையனுக்கு உருப்படியா ஏதாவது சொல்லிக் கொடுங்களேன்
சொல்லிக் கொடுத்துட்டாப் போச்சு.
(சொல்லி விட்டு ஆலம் குளிக்க போக திரும்பி வரும் போது)
A பார் அனுபமா
B பார் பாமா
C பார் சந்திரா
D பார் தமயந்தி
E பார் எலிசபத்
F பார் பாத்திமா
S பார் செக்ஸ்
S E X - SEX
உடனே ஸீன் freeze ஆக, கதை வசனம் direction K. பாலச்சந்தர்.
மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன்
-
மன்மத லீலை வெளிவந்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும், நிறைய கல்லூரிகளில், கோர்ஸ் முடிந்து செல்லும் சீனியர் பேட்ச்களின் சோஷியல் பிரேக்-அப் பார்ட்டிகளில் இந்தப்படமே திரையிடப்பட்டது. அதற்குக் காரணம் இளசுகள் என்ஜாய் பண்ணி கலாட்டா செய்ய நிறைய கிளு கிளு காட்சிகள், நகைச்சுவை இணைப்போடு. கிளுகிளுப்பான சில இடங்கள்.......
புதிய செக்ரடரிப்பெண் (ரீனா) எதிர்சீட்டில் இருக்க, வேண்டுமென்றே பென்சிலை கீழே போட்டு அதை எடுப்பது போல, மேஜைக்கு கீழே அவளது வெறும் கால்களை ரசிப்பது.
அதே பெண் நின்றுகொண்டு நோட்ஸ் எடுக்கும்போது, அவளை பிரா, ஜட்டியுடன் கற்பனை செய்வது.
மனைவி ரேகா ஜாக்கெட் அணியும்போது 'அட்டாக்' என்று சொல்லி திகைக்க வைத்து, அவள் பிராவுடன் நிற்பதை ரசிப்பது, பின்னர் தலையணை அடிவாங்குவது.
டாக்டருடன் பேசிக்கொண்டே உள்ளே குனிந்து வேலை செய்துகொண்டிருக்கும் டாக்டரின் பெண் அசிஸ்டென்ட்டை ரசிப்பது, அவளை அருகில் வரவழைக்க திடீரென்று கத்துவது.
பாடகியின் திறந்த முதுகைப்பார்த்து, முன்பக்கம் திரும்பச்சொல்வது, அவள் சேலையுடன் திரும்புவதைப்பார்த்து வழிவது.
தன்னைக்கைவிட்டவன் பொறாமைப்படும்படி தன்னைக் கட்டிக்கொள்ளச்சொல்லும் ஜெயப்ரதாவை, அதுதான் சாக்கு என்று, 'பொறாமை பத்தலை' என்று மீண்டும் கட்டிக்கொள்வது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் அடிபட்டுக்கிடக்கும் ஜெயப்ரதாவையும், ராதாரவியையும் நெருங்கும்போது, ஒரு கம்பத்தில் மாட்டியிருக்கும் கிழிந்த சேலையைக்கூட தூக்கிப்பார்ப்பது, அதன்மூலம் அவர் கேரக்டருக்கு இயக்குனர் இன்னும் வலு சேர்ப்பது.
-
முரளி,
மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட mischievous மன்மதன் உங்களையும் ஈர்த்து ஓடி வர வைத்து விட்டான்.
நம் படங்களையும் இசையையும் பிரிக்கவே முடியாது.அதுதான் சம்பந்தம்.ஏதோ போகிறதென்று விடுவீர்களா,நோண்டி கொண்டு. அது சரி ,ரசித்தீர்களா?
-
முரளி சார் கார்த்திக் சார் ம்ம் மன்மத லீலை அலசல்கள் ப்ரமாதம்..
ஆனால் இந்தப் படத்தை ரிலீஸான போது எல்லாரும் போட்டுத் தாக்கியிருந்ததாக நினைவு..(இன்னொரு படம் நினைத்தாலே இனிக்கும்) இஸிண்ட் இட்?
-
கார்த்திக்,
தூங்க விடாமல் பண்ணியதற்கு,இந்தியா வரும் போது என்னை நேரில் பார்த்து ஒரு strip தூக்க மாத்திரைக்கான காசை கொடுத்து விடவும்.(தாமரை நெஞ்சம் அளவு வேண்டாம்) அப்படியாவது நேரில் தரிசிக்கலாமே. பம்மலார் புத்தக வெளியீட்டு விழாவில் நேரில் சந்திப்பதாக சொன்ன ஞாபகம். எப்போ கை கூடுமோ?
-
எஸ்.வீ சார்,
தாங்கள் வருத்த பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் சொன்ன கருத்து சரியென்றாலும் சொன்ன விதம் தவறு என்று அவர்கள் எடுத்துரைத்ததால்,நான் சொன்ன விதத்துக்காக தங்களிடம் மன்னிப்பை கோருகிறேன். தாங்கள் நிலை மறந்து ஒருமையில் விளித்தது ஒரு மூத்த சகோதரனின் உரிமையாய் எடுத்து ,நினைத்து மகிழ்கிறேன்.வருத்தம் எனக்கு இல்லை.
-
நாங்கள் எத்தனை பதிவுகள் இட்டாலும் எங்கள் முரளி சார் பதிவு இல்லாமல் எதுவும் நிறைவடையாது. அந்த வகையில் 'மன்மத லீலை' பார்த்த அனுபவங்கள் பற்றியும், அப்படத்தின் ஸ்பெஷல் டயலாக் மற்றும் காட்சிகள் பற்றியும் மிக அழகாக அருமையாக பதிவிட்டு 'முரளி முரளிதான்' என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
என்ன ஒன்று, இப்படிப்பட்ட அரிய பதிவுகளைப் பெற தவம் கிடக்க வேண்டியுள்ளது. அத்தி பூத்தாற்போல வருகிறீர்கள். வேலைப்பளு காரணமென்று நினைக்கிறோம். இருப்பினும் எங்களுக்கும் நேரம் ஒதுக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி...