வசந்த் தொலைக்காட்சியில் புதன்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடரில் தளபதி ராம்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி சொன்ன சில தகவல்கள்:
கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டனை விதித்த வெள்ளைக்கார ஜெனரல் பானர்மென் எழுதிய டைரி ஒன்று இன்றும் லண்டன் மியூஸியத்தில் வைத்துள்ளார்கள். அதில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட சம்பவம் குறித்து ஜெனரல் பானர்மென் எழுதியிருப்பவை நினைவுகூறத்தக்கவை. பானர்மென் சொல்கிறார். "கட்டபொம்மனுக்கு தூக்குத்தண்டனை விதித்ததோடு, தூக்கிலிடும்போது நான் அங்கிருந்தால் கட்டபொம்மன் பெரிய HERO ஆகிவிடுவான் என்பதால் அங்கிருந்து அகன்றுவிட்டேன். (இந்த இடத்தில் ராம்குமார் சொன்னது 'இவர் கடவுள் ஆகப்போகிறர் என்பது அவருக்குத்தெரியவில்லை'). பின்னர் என்ன நடந்தது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். கட்டபொம்மன் தூக்குமேடைக்குப் போகும்போது, இரண்டு பக்கத்திலும் நின்றிருந்த மற்ற பாளையக்காரர்களை கோபத்தோடு திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான். அவன் கண்கள் நெருப்பை உமிழ்ந்துகொண்டிருந்தன' என்று சொன்னார்கள்' என்று பானர்மென் எழுதியிருக்கிறார். அதைப்படித்தபின் கட்டபொம்மன் கிளைமாக்ஸ் என் கண்முன்னே தோன்றியது. அப்பாவிடம் கேட்டேன், உங்களிடம் பந்துலு அவர்கள் பானர்மென் டைரியைப்பற்றி எதுவும் சொன்னாரா? எப்படி அதே மாதிரி செஞ்சீங்க?' என்று. அவர் சொன்னார், 'அதெல்லாம் இல்லேப்பா. கட்டபொம்மன் தூக்குமேடைக்குப்போகும்போது எப்படிப் போயிப்பான்'ன்னு நானாகத்தான் கற்பனை செஞ்சு நடிச்சேன். இருநூறு வருஷத்துக்கு முந்தி பானர்மென் எழுதிய டைரி பத்தியெல்லாம் படம் வந்து இத்தனை வருஷம் கழிச்சு நீ சொல்லித்தான் எனக்கு தெரியுது' என்றார்.
ராம்குமார் சொன்ன இன்னொரு விஷயம்:
'கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட கயத்தாறில் நடிகர்திலகம் அவர்கள், கட்டபொம்மனுக்கு ஒரு சிலை நிறுவியது மட்டுமல்லாமல், அதைச்சுற்றியுள்ள சில ஏக்கர் இடங்களையும் நாங்கள் சொந்தமாக வாங்கி எங்கள் கஸ்ட்டடியில் வைத்து நாங்கள் பராமரித்து வந்தோம். நோட் பண்ணிக்குங்க. It is the own property of Sivaji Ganesan. அப்பா இறப்பதற்கு சில காலம் முன்பு அந்த இடத்தை தமிழ்நாடு அரசிடம் இலவசமாக ஒப்படைத்து, ‘இனி அரசு சார்பில் பராமரித்துக் கொள்ளுங்கள்'னு அப்பா ஒப்படைச்சிட்டார்'.
கெய்ரோவில் நடந்த கட்டபொம்மன் விருது விழா பற்றி பத்மினி சொன்னதாக ராம்குமார் சொன்ன விஷயம்:
'எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்பிரிக்க விருது விழாவுக்கு நாங்கள் (ராம்குமார் அல்ல, பத்மினி) போயிருந்தோம். வரிசையாக விருதுகள் அறிவித்துக்கொண்டே வர, ஒவ்வொருவரும் மேடைக்குச்சென்று விருதினைப் பெற்றுக்கொண்டு இருந்தனர். ஆசிய ஆப்பிரிக்க விருதின் சிறந்த நடிகையாக, ஒரு சீன நடிகை அறிவிக்கப்பட்டு விருது பெற்றார். அடுத்து சிறந்த நடிகராக 'சிவாஜி வி.சி.கணேசன்' என்று அறிவிக்க, கூட்டம் மொத்தமும் ஒரு ஐம்பது வயதான, ஆறடி உயரமுள்ள மனிதரை எதிர்நோக்கியிருக்க, சுமார் ஐந்தரை அடி உயரமும், முப்பத்தொரு வயதே நிரம்பியவருமான சிவாஜி எழுந்து மேடைக்குச்சென்றபோது அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். கைதட்டக்கூட மறந்தனர். ஆனால் அவர் மேடையில் ஏறியதும் மொத்தக்கூட்டமும் எழுந்து நின்று கைதட்ட துவங்கியவர்கள், அவர் பரிசினை வாங்கிக்கொண்டு திரும்பும்வரை கைதட்டிக்கொண்டே இருந்தனர்'.