Originally Posted by
Murali Srinivas
இன்றைய நாள் ஜூலை 27. 43 வருடங்களுக்கு முன்பு இதே நாள் [27-07-1968] ஒரு சனிக்கிழமை. முதலில் ஜூலை 13 வெளிவருவதாக இருந்து பின் 27-ந் தேதி வெளியானது. தந்தியில் வந்த விளம்பரம் இப்போதும் கண் முன்னே நிற்கிறது. சாதாரணமாக முழுப் பக்க விளம்பரங்கள் portrait சைசில் வெளியாகும். ஆனால் தில்லானா விளம்பரமோ Landscape பாணியில் நடிகர் திலகமும் குழுவினரும் தரையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிப்பது போல் வெளிவந்திருந்தது.
அப்போது எனக்கு மிக சிறு வயது. அந்தக் காலகட்டத்தில் சனிக்கிழமையன்று அரை நாள் பள்ளி நடக்கும். தில்லானா திரையிடப்பட்டிருந்த சிந்தாமணி அரங்கை தாண்டிதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். காலையில் அந்த வழியாக கடக்கும்போது இருந்த கூட்டத்தைப் பார்த்தால் அப்படியே பிரமித்து போனேன். அவ்வளவு கூட்டம், அடிதடி. எங்கள் சைக்கிள் ரிக்க்ஷா அந்த இடத்தை கடக்கவே 10 நிமிடங்கள் ஆனது. மதியம் பள்ளி முடிந்து வரும்போது மணி ஒன்றை தாண்டியிருக்கும். அப்போது நின்ற வரிசையைப் பார்த்து அசந்து போனேன். அரங்கின் இருபுறமும் உள்ள சின்ன சந்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசை நிற்கிறது. படத்தை வெளியான எட்டாவது நாள்தான் பார்க்க முடிந்தது. அப்போதும் அசாத்திய கூட்டம்.
படம் வெளிவருவதற்கு முன்னர் படத்தைப் பற்றி எத்தனை கேலி பேச்சு? படம் பிப்பீ என போய்விடும் என பேசியவர்கள் எல்லாம் ஓடி ஒளியும் வண்ணம் படம் சூப்பர் டூபர் வெற்றி பெற்றது. எங்கள் மதுரையில் சிந்தாமணி அரங்கில் 132 நாட்கள் ஓடியது. என் நினைவு சரியாக இருக்குமானால், ஓடிய அந்த 132 நாட்களில் ரூபாய் 3 ,47,000 சொச்சம் வசூல் செய்தது. அதே சிந்தாமணியில் கருப்பு வெள்ளைப் படங்களில் பாகப் பிரிவினை 216 நாட்கள் ஓடி சுமார் 3.36,000 ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தததோ அதே போல் சிந்தாமணியில் கலர் படங்களில் இந்த வசூல் ஒரு புதிய சாதனை. இன்னும் சொல்லப் போனால் அதே சிந்தாமணியில் தில்லானாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு, மிகப் பெரிய நிறுவனம் தயாரித்த மிகப் பெரிய படங்களின் வசூலை எல்லாம் முறியடித்தது [இதற்கும் கூடுதல் நாட்கள் ஒட்டப்பட்டும் கூட அரை லட்சம் ருபாய் குறைவு என்று நினைவு].
அந்த 1968 ம் ஆண்டு மதுரையைப் பொறுத்தவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலை எடுத்துக் கொண்டால் [பணமா பாசமாவை தவிர்த்து விட்டு பார்த்தால்- காரணம் அது தங்கத்தில் வெளியானது] முன்னணியில் நின்றது தில்லானாதான்.
டூயட் இல்லை, நாயகனுக்கு பாடல் இல்லை, சண்டை காட்சி இல்லை, ஏன், நாயகனுக்கு மீசை கூட கிடையாது. எந்த விதமான கவர்ச்சிகளும் இல்லாமல் வெளிவந்தது. இருப்பினும் மக்கள் அமோக வரவேற்பளித்தனர். அப்படிபட்ட ஒரு திரைக் காவியம் மறு வெளியீடு காணும் போதெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது.
தமிழ்ப் படங்களை பொறுத்த வரையில் வித்தகமும் வர்த்தகமும் கை கோர்த்து பெற்ற இமாலய வெற்றிகளில் தில்லானா என்றுமே முன்னணியில் நிலை கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.
நினைவுகளை ஆசை போட வாய்ப்பளித்ததற்கு நன்றி.
அன்புடன்