ராமன் எத்தனை ராமனடி
[html:3e6aa09546]
http://nadigarthilagamsivaji.com/Pho...00days/030.jpg[/html:3e6aa09546]
1969 இறுதியில் தீபாவளியன்று வந்த பிரமாண்ட படமான 'சிவந்தமண்'ணை அடுத்து 1970 பொங்கலன்று வெளியான 'எங்க மாமா' படம் பத்து வாரங்களைத்தொட்டு சுமார் வெற்றியடைந்தது. நாடகமாக வெற்றியைந்த 'வியட்நாம் வீடு' படம் படமாக்கப் பட்டபோதும் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி, 70-ம் ஆண்டில் நடிகர்திலகத்துக்கு முதல் வெற்றிப்படம் என்ற பெருமையைப்பெற்றது. நடிகர்திலகம், ஏ.பி.நாகராஜன், மகாதேவன் இணைந்த 'விளையாட்டுப்பிள்ளை' ரசிகர்களுக்கு நிறைவைத்தரவில்லை. முதல் முறையாக நடிகர்திலகமும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் இணைந்து உருவாக்கிய முதல் படமான (இறுதிப்படமும் அதுதான்), ரசிகர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'எதிரொலி' ஒரு வெற்றிப்படத்துக்குரிய எல்லா அம்சங்களும் நிறைந்திருந்தும் ஏன் மக்கள் மத்தில் அவ்வளவாகச்சென்றடையவில்லை என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. இந்நேரத்தில் ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம், நடிகர்திலகம் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான பாத்திரப் படைப்போடு வந்த படம்தான் 'ராமன் எத்தனை ராமனடி'.
முற்பாதியில் கள்ளம் கபடமற்ற, உருவத்தில் இளைஞனாகவும், உள்ளத்தில் குழந்தையாகவும், தன் வயதுக்குப்பொருத்தமில்லாத பள்ளிச்சிறுவர்களுடன் சுற்றித்திரியும் சாப்பாட்டு ராமனாகவும், பிற்பகுதியில் உலகமே மெச்சும் திரைப்பட நடிகராவும் இருவேறு பரிமாணங்களுடன் அற்புதமாகச்செய்திருப்பார். கிராமத்து அப்பாவி இளைஞன் எப்படி சென்னைக்குப்போய் பெரிய நடிகராகிறார் என்பதை ஒப்புக்கொள்ளும்படியான காரண காரியங்களுடன் சொல்லியிருப்பார்கள் கதாசிரியர் பாலமுருகனும், இயக்குனர் மாதவனும்.
பூங்குடி கிராமத்தில் உல்கமே அறியாமல், அந்த கிராமத்தின் எல்லைகள் மட்டுமே உலகம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் ராமன். தன் ஆயாவுக்கு கோயிலில் இருந்து சிதறு தேங்காய் பொறுக்கிக்கொடுப்பதும், ஆயா சுட்டுத்தரும் இட்லிகளை மூக்குப்பிடிக்க வெட்டுவதும், மற்ற நேரங்களில் பள்ளிக்கூட சிறுவர்கள் சிலருடன் சுற்றித்திரிவதும்தான் தன்னுடைய வேலை, அதைத்தாண்டி உலகத்தில் வேறெந்த விஷயமும் இல்லையென்ற ரீதியில் வாழ்ந்து வரும் இளைஞன். அவனுக்கும் ஒரு வீக்னஸ். ஆம், எதையாவது பார்த்து அதிர்ச்சியடைந்தால் காக்காவலிப்பு வந்து அவஸ்தைப்படுவான். அந்த கிராமத்தில் ஒரு மைனர். தனது பணக்கார திமிரில் கிராமத்து மக்கள் அனைவரையும் கிட்டத்தட்ட தனது அடிமையாக நடத்துபவன். அவனது தங்கை தேவகி நகரத்தில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு காரில் கிராமத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது, குளக்கரையில் காக்காவலிப்பு வந்து துடித்துக்கொண்டிருக்கும் ராமனை, தன் சாவிக்கொத்தைக்கொடுத்துக் காப்பாற்றுகிறாள். படித்துறையில் அவள் தலையிலிருந்து விழும் மல்லிகைப்பூவை ஏதோ புனிதப்பொருள்போல எடுத்து அணைத்துக்கொள்ளும் அவன், அந்த சம்பவத்தை தன் நண்பர்களான சில்லுண்டிகளிடம் சொல்லும்போது, அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். மறுநாள் அவர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது, தோழிகளுடன் அந்தப்பக்கமாக வரும் அவள் அவனைப்பார்த்து சிரித்து விட்டுப்போக, அந்த சந்தோஷத்தில் சிறுவர்களுடன் ஆடிப்பாடுகிறான். இன்னொருநாள் இரவில் வீட்டில் ஆயா இல்லாத நேரம், மழைக்காக அவன் வீட்டில் ஒதுங்கும் தேவகி ராமனிடம் கூழ் வாங்கி சாப்பிட்டுப்போகிறாள். இதையெல்லாம் சிறுவர்களிடம் அவன் சொன்னதும், அவர்கள் ஒட்டுமொத்தமாக, 'டேய் சாப்பாட்டு ராமா. தேவகியம்மா உன்னைக் காதலிக்கிறாங்கடா. நீயும் உன் காதலை அவங்க கிட்டே சொல்லிடு. சம்மதிச்சாங்கன்னா, வர்ர ஞாயத்துக்கிழமைதான் எங்களுக்கு ஸ்கூல் லீவு. அன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்லிடு' என்று அப்பாவித்தனமாக உசுப்பேத்திவிட, அதை நம்பிய அவனும் கொஞ்சமும் யோசனையில்லாமல் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருக்கும் தேவகி வீட்டு மாடி ஜன்னல் வழியாக உள்ளே குதித்து தன் காதலைச்சொல்ல, அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த ரெண்டுங்கேட்டானுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று எண்ணும் அவள், தனக்காக எதையும் செய்வதாகச்சொல்லும் அவனிடம் 'எங்கே எனக்காக இந்த மாடியிலிருந்து குதி' என்று சொல்ல, அவனும் எந்த யோசனையுமின்றி குதித்து விட அவள் அதிர்ச்சியடைகிறாள். இந்த களேபரத்தில் விழித்துக்கொள்ளும் மைனர், கால் உடைந்து கிடக்கும் ராமனை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான். ஆஸ்பத்திரியில் ராமனைப் பார்க்க வரும் தேவகியை ஆயா திட்டி அனுப்புகிறாள். ஆஸ்பத்திரியில் குண்மாகி வீட்டுக்குத்திரும்பும் ராமனை, மீண்டும் அரைடிக்கட்டுகள் சந்தித்து, தேவகிக்கு வேறிடத்தில் கல்யாண ஏற்பாடுகள் நடப்பதாகவும், அவன் நேராக மைனரிடம் போய் பெண் கேட்கும்படியும் ராமனைத் தூண்டிவிட, மைனரின் பங்களாவுக்குப்போகும் ராமன் பெரிய பணக்காரர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும் மைனரிடம் விஷயத்தைச்சொல்ல, அனைவரும் சேர்ந்து ராமனை அடித்து துவைக்கிறார்கள். மைனர் சவுக்கால் விளாசுகிறான். தன் தங்கையை கல்யாணம் செய்ய பெரிய பெரிய பணக்காரர்களெல்லாம் போட்டிபோடுகிறார்கள் என்று சொல்லும் மைனரிடம், தானும் பெரிய லட்சாதிபதியாக வந்து தேவகியை பெண் கேட்கப்போவதாக சவால் விடுகிறான். கடைசியாக மைனர் எட்டி உதைக்க, வாசலில் போய் விழும் ராமனுக்கு மீண்டும் காக்காவலிப்பு வர, காம்பவுண்டின் இரும்பு கேட்டை எட்டிப்பிடிக்கும் அவனது காக்காவலிப்பு நிற்கிறது.
'என்ன ஆயா, பணமாம் பெரிய பணம். நானும் பணக்காரனா வந்து அந்த மைனர்கிட்டே பொண்ணு கேட்கிறேனா இல்லையா பாரு' கொடியில் கிடக்கும் துணிகளை சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டே பேசும் ராமனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் ஆயா விழித்துக்கொண்டு நிற்க, அந்நேரம் அங்கு வரும் தேவகி, ராமன் பணக்காரணாக திரும்பி வரும் வரை அவனுக்காகக் காத்திருப்பதாகச் சொல்ல, ராமன் சென்னைக்கு ரயிலேறுகிறான். அங்கு கைவண்டி இழுத்து, ஒவ்வொரு பைசாவாகச்சேர்த்து வைக்கும் ராமனை ஒருநாள் இரவு சந்திக்கும் அவனது சிறுவர் பட்டாளத்தில் ஒருவனான மூக்குறுஞ்சி (மாஸ்டர் பிரபாகர்), தான் இப்போது சினிமாவில் நடிப்பதாகவும், ராமனையும் சினிமாவில் சேர்த்து விடுவதாகவும் சொல்லி ஸ்டுடியோவுக்கு அழைத்துப்போக, அங்குள்ள இயக்குனருக்கு ராமனின் அப்பாவித்தனம் பிடித்துப்போக, சினிமாவில் நடிக்க வைக்கிறார்.