நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒளிபரப்பான சிவப்பதிகாரம் திரைப்படம் பல சீரியல்களை விழுங்கிவிட்டது. கோலங்களும் அதில் அகப்பட்டுவிடுமோ என்று எண்ணிய நேரத்தில், சரியாக கோலங்கள் தொடங்கும் முன் திரைப்படம் முடிந்துவிட்டது. படம் நன்றாகவே இருந்தது, ஆனாலும் கொஞ்சம் ரமணா வாடை வீசியது. ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்துக்கட்டும் கதை. (ஊழல் அரசியல்வாதிகளை கதைகளில் மட்டும்தான் ஒழிக்க முடிகிறது)…..
அபியின் அலுவலக மீட்டிங் டேபிளில் அபி, கற்பகம், ஆர்த்தி எல்லோரும் அமர்ந்து மனோவை எதிர்பார்த்திருக்கிறார்கள். கம்பெனியின் ஜெனரல் பாடி மீட்டிங்கோ என்று நினைக்கத்தோன்றியது. காரணம் அவர்கள் எல்லோரும் கம்பெனியின் டைரக்டர்கள் (??). (அரசியலில் மட்டும் சொல்வார்கள், காலம் காலமாக கட்சிக்கு உழைத்தவர்களை புறந்தள்ளிவிட்டு குடும்பத்தாரை நுழைக்கிறார்கள் என்று. இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்?. அபியுடன் சேர்ந்து கம்பெனியை உருவாக்கிய உஷாவையும், இதுநாள்வரை கம்பெனியை தன் தோளில் சுமந்து வந்த தொல்காப்பியனையும் வெளியேற்றிவிட்டு, கம்பெனிக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காத கற்பகம், ஆர்த்தி, மனோ, ஆகியோர் கம்பெனியின் முக்கிய பங்குதாராகள்…!!!). ஆனால் இவர்களோடு ராஜேந்திரன், அனு, ராஜேஷ், சாரதா ஆகியோரும் இருப்பதால் இது ஏதோ வேறு விஷயம் என்று தோன்றுகிறது. உடல்நலம் தேறிவரும் ஆனந்தி வரவில்லை. மனோ வர தாமதவதைக் காரனம் காட்டி ஆர்த்தி பிரச்சினை பண்ண, அனுவுக்கும் ஆர்த்திக்கும் சிறிய மோதல். மனோ வந்ததும் மீண்டும் அவனுடனும் ஆர்த்தி சண்டைக்குப்போக, வந்த விஷயம் என்னவென்று சொல்லாமால் இவர்களை மோதவிட்டு அபி நேரம் கடத்துகிறாள், இடையிடையே ‘கொஞ்சம் ரென்டுபேரும் சும்மா இருக்கீங்களா’ என்று சின்ன அதட்டலுடன். விஷயம் என்னவென்று சொல்லும்படி எல்லோரும் வற்புறுத்த, கடைசியில் ஒண்ணுமில்லை, வெறும் புஸ்வாணம்.
அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட வேண்டுமாம், அதில் அப்பா தங்கள் அம்மாவுக்கு மீண்டும் தாலி கட்டி இவர்தான் முதல் மனைவி என்று கன்ஃபர்ம் பண்ணுவாராம். இதற்காக பெரிய கல்யாணமண்டபம் ஏற்பாடு செய்து தடபுடல் பண்ண்ப்போகிறாளாம். (தெரிந்ததுதானே?. இதை வீட்டில் வைத்தே பேசியிருக்கலாமே). அதற்கான செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக அபி சொல்ல, செலவை எல்லோரும் ஏற்பதுதான் சம்பிரதாயம் என்று சாரதா சொல்கிறாள். (இதற்கெல்லாம் கூடவா சம்பிரதாயம்?. சாரதாவாக வனிதா கிருஷ்ணசந்திரன் இருக்கும்போதுதான் எதற்கெடுத்தாலும் சாஸ்திரம் சம்பிரதாயம். சாரதாவாக குயிலி வந்ததில் இருந்து இதெல்லாம் கொஞ்சம் அடங்கி கிடந்தது. இப்போது மீண்டும் ஆரம்பிக்கிறது). செலவைப்பகிர்ந்துகொள்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையில்லை. ஆனால் இந்த பேச்சு துவங்கியதில் இருந்து அனுவின் முகபாவம் சரியில்லை. மற்றவர்கள்தான் சந்தோஷமாக இருந்தனர். சஷ்டியப்த பூர்த்தி விழா பற்றிய தகவல் ஆதியின் குடும்பத்துக்கு தெரியக்கூடாது என்று அபி சொன்னதும் அனுவுக்கு அதிர்ச்சி.
வீட்டுக்கு வந்ததும் மனோவுடன் சண்டைபோடுகிறாள். ஆயிரம்தான் ஆனாலும் காஞ்சனா தன்னை சொந்த மகள்போல வளர்த்த தாய் என்றும் அவளுக்கு தெரியாமல் இந்த விஷேசம் நடத்துவது சரியில்லை என்றும், அபி சொன்னதுக்காக மனோ தலையாட்டிவிட்டு வந்ததாகவும் பிரச்சினையைக்கிளப்ப, அதற்கு மனோ, அபியக்கா சொன்னதுக்காக மட்டும் சம்மதிக்கவில்லையென்றும், சட்டப்படி முதல் மனைவிக்குத்தான் அந்த விசேஷத்தில் பங்கேற்க உரிமையுள்லதால் தன்னுடைய அம்மாவுக்குத்தான் அந்த உரிமையென்றும் சத்தம்போட, சண்டைதுவஙியதுமே பக்கத்து வீட்டில் இருந்து ஓடி வந்து ஒட்டுக்கேட்கும் கலாவுக்கு விஷயம் தெரிந்து போகிறது. தன் வீட்டுக்குள் நுழையும் கலா, தன்னைக்கணடதும் ஆர்த்தியும் ராஜேஷும் பேச்சை நிறுத்துவதைக்கண்டு, ‘என்னைக்கண்டதும் ஏன் பேச்சை நிறுத்துறீங்க?. உங்க அப்பாவுடைய சஷ்டியப்த பூர்த்தி விழா பற்றித்தானே பேசினீங்க?’ என்று குண்டைத்தூக்கிப்போட இவர்களுக்கு அதிர்ச்சி, அதற்குள் எப்படி கலாவுக்கு தெரிந்தது என்று. மனோ – அனு இவர்கள் சண்டையில் விஷயம் வெளியானதாகச் சொல்லி, அதற்கான செலவில் இவர்கள் ஏன் பங்கேற்க வேண்டும், இவர்கள் செலவழிக்க அபி பேர் வாங்கிக்கொண்டு போவதற்கா என்றும் கேள்வியை எழுப்பி குட்டையைக் குழப்பி விட்டுப்போகிறாள்.
கலாவுக்கு தெரிந்தபின் அது பரவாமல் இருக்குமா?. நேராக அலமேலு, பாஸ்கர் இவர்களிடம் போய் வத்தி வைக்கிறாள். பாஸ்கர் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அலமேலு அப்படியில்லை. காஞ்சனாவுக்கும், ஆதிக்கும் தெரியாமல் இந்த விசேஷத்தை அபி நடத்தப்போகிறாள் என்ற விவரம் அறிந்ததும் அவள் மனம் பரபரக்கிறது. ஆக இன்றைக்கே அது ஆதியின் காதுக்குபோக வாய்ப்பிருக்கிறது.