காஞ்சனா சொன்ன விஷயத்தைக்கேட்டு ஆதிக்கு அதிர்ச்சி. அழைப்பிதழ் அச்சடித்து ஊரை அழைத்து தன் அப்பாவுக்கும் அந்த கற்பகத்துக்கும் அறுபதாம் கல்யாணம் நடத்த்ப்போகிறாள் அந்த அபி, அதன்மூலம் தனக்கும் தன் அம்மாவுக்கும் இந்த சொஸைட்டியில் தலைகுனிவு ஏற்படுவது நிச்சயம் என்பதும், அபியின் அம்மா கற்பகம்தான் ஈஸ்வரனின் முதல் மனைவி என்று ஊரறிய விழா கொண்டாடினால் தன் அம்மா காஞ்சனா ஈஸ்வரனால் ஜஸ்ட் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண் என்பதும், தான் அப்படி சேர்த்துக்கொள்ளப்பட்டவளின் மகன் என்பதும் தனக்கு எப்படிப்பட்ட அவமானத்தைத் தேடித்தரும் என்பது உறைக்க ஆதியின் கோபம் உச்சந்தலையில் ஏறுகிறது.
என்ன இது சோதனை?. அந்த அபியால் ஒரே நாளில் இரண்டு பெரிய அவமானம்?. ‘பில்டர்ஸ் அசோஸியேஷன்’ தலைவர் பதவி தன்னிடம் இருந்து பறிபோவது அல்லாமல், தனது ஜென்ம விரோதியான அபி அந்த தலைவர் பதவியில் வந்து அமர்வதன் மூலம் தனது தொழில் துறையில் தீராத அவமானம், இன்னொரு பக்கம் தன் அம்மாவை ஒதுக்கி தன் அப்பா ஈஸ்வரனின் உண்மையான மனைவி கற்பகம்தான் என்று அபி பறைசாற்றுவதன் மூலம் தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் தனக்கு வரப்போகும் தீராத களங்கம், அதிலும் இந்த இரண்டுமே அபியின் மூலமே வரப்போகிறது என்று எண்ணியதும் ஆதித்யா எனும் சிங்கம் பிடரியை சிலிர்த்துக்கொண்டு எழுகிறது.
(பலே, எங்கள் பழைய அஜய்கபூர் வந்துவிட்டான். மகனே இதுதாண்டா உனக்கு அழகு. இதைவிட்டு, யாரோ ஒருத்தியின் பின்னால் கூனிக்குறுகி நின்றுகொண்டு ‘எஸ் மேடம்… எஸ் மேடம்’ என்று பின்னணி பாடிக்கொண்டு…. இனிமேல் அதெல்லாம் வேண்டாம். என்ன?).
‘உங்கள் பிள்ளை ஆதி இருக்கும்வரை நீங்கள் எதற்கும் கவலைப்படாதீங்கம்மா, என்ன விலை கொடுத்தாவது அபியின் இந்த சூழ்ச்சியை முறியடிப்பேன்’ என்று தாய்க்கு சமாதானம் கூறியவன், இந்த விழாவைத்தடுத்து நிறுத்த வேண்டுமானால், முதலில் தன் அப்பா ஈஸ்வரனை தன்னுடைய கஸ்டடியில் கொண்டு வரவேண்டும், அவரைக்கடத்திக்கொண்டுவந்து அபிக்குத்தெரியாமல் மறைத்துவிட்டால் எப்படி அவள் விழா நடத்த முடியும்?. அதற்கு முதலில் அவர் இருக்கும் இடம் தெரியவேண்டும். உடனே தன் எடுபிடியான கிரியை அழைத்து, இப்போதுமுதல் அவன் அபியை நிழலாக பின்தொடரவேண்டுமென்றும், அவன் அப்பா இருக்குமிடத்தைக் கண்டுபிடித்த மறுவினாடி அந்த விஷயத்தைத் தனக்கு தெரிவிக்க வேன்டுமென்றும் கூறி, இதில் தன்னுடைய தன்மானப்பிரச்சினை அடங்கியிருப்பதால் கொஞ்சம் கூட பிசகாமல் செய்யவேண்டுமென்றும் கிரிக்கு எச்சரிக்கை செய்து அனுப்புகிறான்.
எந்த ஆதிக்கு தெரியக்கூடாதென்று அபி நினைத்துக்கொண்டிருந்தாளோ, அந்த ஆதிக்கு அவள் மீட்டிங் போட்ட அன்றைக்கே தெரிந்துவிட்டது. மனோ – அனு சண்டைமூலம் கலாவுக்குத் தெரிய, கலாவின் மூலம் அலமேலுவுக்கு தெரிய, அலமேலு மூலம் காஞ்சனாவுக்கும் அவளிடமிருந்து ஆதிக்கும் தெரிய…… அடடா என்ன ஒரு வேகம்?. அடுத்தவர் வீழ்ச்சியைக்கண்டு ஆனந்தப்படுபவர்கள் முன்னால், நம்முடைய 'தகவல் தொழில்நுட்பத்துறை' எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். அபி வீட்டில் இன்றைக்கு சோற்றுக்கு என்ன குழம்பு என்பது அபி வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும் முன்னரே ஆதித்யாவுக்கு தெரிந்துவிடும் என்றிருக்கும்போது, இவ்வளவு பெரிய விஷயத்தை ஆதிக்கு தெரியாமல் மறைத்துவிடலாம் என்று அபி நினைப்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்…!!!.
அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கான அழைப்பிதழை வாங்க கிருஷணனுடன் அச்சகத்துக்குப்போகும் அபிக்கு இன்னொரு அதிர்ச்சி. அங்கே தொல்காப்பியனும் உஷாவும் அமர்ந்திருப்பதைப் பார்த்து குழப்பம். மூவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் கண்களைத் தாழ்த்திக்கொள்வதுமாக சிறிதுநேரம் ஓடுகிறது. இரண்டு குரூப்புமே ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் பார்வையில் புலப்படுகிறது. கிருஷ்ணன் கிசு கிசு குரலில் அபியிடம்…
‘பாத்தீங்களாம்மா, அவங்க ரெண்டுபேரும் புதுசா தொழில் தொடங்கப்போவதாக சொன்னேனில்லையா?. அதுக்கு அழைப்பிதழ் அச்சடிக்கத்தான் வந்திருக்காங்க’
‘அப்படீன்னு அவங்க உங்க கிட்டே சொன்னாங்களா கிருஷ்ணன்?’
‘இல்லேம்மா, பின்னே வேறு எதுக்கு வந்திருக்கப் போறாங்க?’
அந்தப்பக்கம் உஷா, தொஸிடம் கிசுகிசு குரலில்……
‘பாத்தீங்களா தொல்ஸ், நம்மோடு பேசும்படி அந்த கிருஷ்ணன் சொல்றார். அதுக்கு அபி வேண்டாம் என்று மறுக்கிறாள்’
‘அது எப்படி உஷா உங்களுக்கு தெரியும்?, அவங்க பேசுன ஒரு வார்த்தைகூட நமக்கு கேட்கலையே..’
‘இல்லீங்க தொல்ஸ், அவள் வாயசைவை வைத்தே கண்டுபிடிச்சிட்டேன்’.
மீண்டும் அமைதி…… மீண்டும் பார்வைப்பறிமாற்றங்கள்….. முதலில் அபியின் அழைப்பிதழ் ரெடியாகி அவளிடம் வழங்கப்பட, அவள் முதல் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வந்து உஷாவிடம் கொடுத்து, ‘உஷா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சஷ்டியப்த பூர்த்தி விழா நடத்துறோம், நீ கண்டிப்பாக வரணும்’.
‘நான் மட்டும்தான் வரணுமா?. பக்கத்தில் தொல்காப்பியன் இருப்பது நிஜமாவே உனக்கு தெரியலையா?. உறவுகள் எல்லாம் உன்னைத் தூக்கி எறிந்தபோது உன்னைக் கைதூக்கிவிட அவரது நட்பு தேவைப்பட்டது. இப்போ உறவுகள் எல்லாம் ஒண்ணுசேர்ந்ததும் அவர் நட்பைத் தூக்கி எறிஞ்சிட்டே அப்படித்தானே. இப்போ நீ எனக்கு பத்த்ரிகை தருவதைப்பார்க்கும்போது, உன்னுடைய திருமணத்தின்போது நீ நம்முடைய பழைய ஆஃபீஸில் எல்லோருக்கும் பத்திரிகை வைத்துவிட்டு தொல்ஸை மட்டும் புறக்கணித்தது நினைவுக்கு வருகிறது’
என்று உஷா சொல்ல, பழைய காட்சி ஃபிளாஷ்பேக்காக விரிகிறது. (நான் முன்பே சொன்னதுபோல, பழைய காட்சிகள் எந்தெந்த எபிசோட்களில் வந்தன என்று தேடிப்பிடிக்கவே ஒரு குழு வேலை செய்துகொண்டிருக்கும் போலும்).
அதில் தொல்காப்பியனிடம் தன் திருமண அழைப்பிதழைக்கொடுக்கும் அபி, ‘உஷாவின் வற்புறுத்தியதால்தான் உங்களுக்கு அழைப்பிதழ் தந்தேன், அதுக்காக திருமணத்துக்கு வந்துடாதீங்க’ என்று சொல்ல, ஃப்ளாஷ்பேக் காட்சி முடிய, மீண்டும் இறுக்கமான முகங்கள்…
அபி நீட்டிய பத்திரிகையை வாங்கமறுக்கும் உஷா, ‘தொல்காப்பியனுக்கு அழைப்பு இல்லாதபோது எனக்கு உன்னுடைய அழைப்பு தேவையுமில்லை, நான் விழாவுக்கு வரவும் மாட்டேன்’ என்று மறுக்க, மேற்கொண்டு சிறிது நேரம் இருவருக்கும் வாக்குவாதம் நடக்க அபி கிளம்புகிறாள். கடைசி வரை தொல்காப்பியனுக்கு அபி அழைப்பிதழ் கொடுக்கவுமில்லை, அபி கொடுத்த அழைப்பிதழை உஷா வாங்கவுமில்லை. நடந்தவற்றைப்பற்றி மற்றவர்களிடம் வத்திவைக்க வசதியாக ‘நரி’கிருஷ்ணன் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார். அச்சகத்திலிருந்து வெளியே வரும் அபி, பார்சலை கிருஷ்ணனிடம் கொடுத்து ஆட்டோவில் ஆஃபீஸுக்கு கொண்டுபோகும்படி சொல்லி, இரண்டு மூன்று அழைப்பிதழ்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு காரில் புறப்பட, பின்னால் கிரி பின்தொடர்கிறான். ஒரு சிக்னல் நிறுத்ததில் கார் நிற்கும்போது, யதார்த்தமாக பின்னால் திரும்பிப்பார்க்கும் அபி, இன்னொரு காரில் கிரி பின்தொடர்வதை அறிந்து திடுக்கிடுகிறாள்….
(ஆகா…. உதிரிக் கதாபாத்திரங்களான மேனகாவின் பழங்கதை, தோழரின் தத்துவங்கள், திருவேங்கடத்தின் கோமாளித்தனங்கள் இல்லாமல் கதை மெயின் ட்ராக்கில் போகும்போது என்ன சுறுசுறுப்பு… என்ன விறுவிறுப்பு. கொஞ்ச நாளைக்காவது இதையே மெயிண்டெய்ன் பண்ணுங்க தொல்ஸ்)