-
தீப ஒளித்திருநாளாம் இன்று நடிகர் திலகம் நம்மிடையே உயிருடன் இல்லையென்றாலும் அவர் நடித்த படங்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தீபாவளி என்றாலே இனிப்பு, புத்தாடை இவற்றுடன் நடிகர் திலகத்தின் புதுப்பட வெளியீடு என்பது தான் நமது கலாச்சாரம் என்றாகி விட்டது. இப்படி எத்தனை ஆண்டுகள். இன்றும் நாம் அவருடன் தீபாவளி கொண்டாடுவோமே
தாயெனும் செல்வங்கள்
தாலாட்டும் தீபம்
வைரங்கள் போலே ஒளி வீசட்டும்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு
நாள்தோறும் பரிமாற அன்னம் உண்டு
எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு
இல்லை என்றென்னாத உள்ளம் உண்டு
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
பாவங்கள் இல்லையென்று நீராடுங்கள்
பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள்
சமுதாயம் வாழ்கென்று இசை பாடுங்கள்
எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்
எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
நடிகர் திலகம் தீபாவளி கொண்டாடும் காட்சி
அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ராகவேந்திரன்
REQUEST TO THE MODERATOR: PLEASE EMBED THE ABOVE VIDEO HERE IF POSSIBLE. THANK YOU.
-
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தங்க மீன் என்ற இணையதள இதழில் வெளியான ஒரு கட்டுரை. நன்றி ஜோ!
எப்பவும் எனக்கு 'சிவாஜி அங்கிள்'தான்
மைதிலி தேவி
அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும் . என் தந்தையின் கைகளைப் பற்றியபடி விக்டோரியா அரங்க மேடையின் பின்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன் . 'அதுதான் அந்தச் சம்பவம்’ அரங்கேறிய மேடை . அங்கு கடுகடுப்பான முகத்தோடு ஒரு மனிதர் ஆழ்ந்த சிந்தனையில் நின்று கொண்டிருந்தார் . நான் 'ஆட்டோகிராப்ஃ' நோட்டை இறுகப் பற்றியவாறு அவரை நோக்கி நடந்து, அவரிடம் நோட்டை நீட்டினேன். அந்த மனிதர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
நடிப்பில் இமயம் . சிம்மக் குரலுக்குச் சொந்தக்காரர். அவர் பேசிய வசனங்கள் திரை அரங்குகளை அதிர வைத்து, வானையும் கிழித்துச் செல்லும் கரகோஷத்தைப் பெற்றுத் தரும் . அத்தகையவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். ஏதோ ஒரு ஆத்திரத்தில் சில வரிகளைக் கிறுக்கிவிட்டுப் புத்தகத்தை என் கைகளில் திணித்தார்.
எட்டே வயதான எனக்கு அந்த எரிச்சல் ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. எல்லாமே பிரமிப்பாக இருந்தது. ஆனால் , மீண்டும் நடிகர்திலகத்தை சந்தித்த போது , அவர் என்னை நினைவு கூர்ந்து மன்னிப்பு கேட்டார் . “ ஸாரிம்மா, இந்த 'மேக்கப்'பால் முகத்தில் ஒரே அரிப்பு.. எரிச்சல். அதோடு மேடையில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன் . அது என்னைப் பார்க்க சரியான நேரமில்லைம்மா ,” என்று கூறிப் புன்னகைத்தார். அந்த அன்பில், புன்னகையில், நான் வாயடைத்துப் போனேன்
வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் நம்முடன் இரத்த பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோர் யார் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான் . 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்று சொல்வார்கள். ஆனால் மிகவும் அரிய சந்தர்ப்பங்களில் , இரத்த சம்பந்தம் இல்லா விட்டாலும் , அத்தகைய உறவுகளை விதிவசமாக நாம் சந்தித்து அன்பு காட்டும் வாய்ப்பு கிட்டும் . அவர்கள் நம் மீது காட்டும் பாசத்தையும் நேசத்தையும் காண்கையில் , நம் உறவுகள் என்று கூறிக் கொள்வோர் கூட அவமானத்தில் தலை குனிவர் .
அப்பேற்பட்ட ஓர் அன்பு உள்ளத்தைச் சந்தித்த கௌரமும் பெருமையும் எனக்கு உண்டு. ஆமாம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் அவர் . . . நடிகர் என்ற அந்நிய மனிதனாக அல்லாமல், 'சிவாஜி அங்கிள்' என்று என்னால் உரிமையோடு அழைக்கப்படுபவர். எங்களுக்குள் இருந்த பரஸ்பர அன்புக்கும் சம்பாஷணைகளுக்கும் சான்றாகப் பற்பல சந்தர்ப்பங்கள் எழுந்திருக்கின்றன. அவருடைய அன்புக்குப் பெரும் சான்றாக, என் மனம் உருகிக் கண்கலங்க வைத்த ஒரு சம்பவம் குறிப்பாக உள்ளது.
அது தமிழகத்தில் நடந்த என்னுடைய திருமணம். அதற்காக நாங்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியா போயிருந்தோம். அது, என் தந்தை இல்லாத சமயம். என் குடும்பத்தில் எல்லோரும் அவர் இல்லாத வெறுமையை உணர்ந்தோம். ஆனால், சிவாஜி அங்கிள் அந்தக் குறையே தெரியாதவாறு எல்லா விசேஷங்களையும், தாலிப் படையலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு வரை, முன்நின்று செய்தார். திருமணத்தன்று, நடிகர் திலகம் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக நாற்காலியில் அமரவில்லை. குடும்பத்தில் ஒருவராகக் கல்யாண மேடையில் நின்றிருந்தார் . எனக்குப் பேச வார்த்தைகள் இல்லை.
அதையும் விட , நான் மறக்கவே இயலாதபடி ஒன்று நடந்தது. திருமணத்துக்கு மறுநாள் காலையில், நடிகர் திலகம் எங்கள் வீடு தேடி வந்து, ஒரு தந்தையின் அக்கறையோடு என்னிடம்,” சந்தோஷமாக இருக்கிறாயாம்மா ?“ என்று நலம் விசாரித்துச் சென்றதை என்னால் ஏழேழு ஜென்மங்களுக்கும் மறக்க இயலாது .
என் சொந்த பந்தங்கள்கூடச் சிங்கப்பூர் திரும்புவதில்தான் அதிகக் கவனத்துடனும் ஆர்வமாகவும் இருந்தார்கள் . இந்த சிவாஜி என்கிற இந்த அற்புத மனிதர் பெண் மனம் புரிந்து, அவருடைய முக்கிய அலுவல்களுக்கு மத்தியில் நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்று தெரிந்து கொள்வதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால், அவருடைய உயர்ந்த உள்ளத்தை என்னவென்று சொல்வது ? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - நடிப்பில் மட்டும் சிகரமல்ல, குணத்திலும்தான்! அவர் என்றைக்குமே எனக்குச் சிவாஜி அங்கிள்தான் - அவர் மீது நான் கொண்டுள்ள நேசம் அத்தகையது
http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=67
அன்புடன்
-
Dear Mr.Murali,
Thanks for your information, I am not control my tear (கண்ணீர்)after your message.
-
இரு மலர்கள் பாடல் காட்சியைப் பற்றிய எனது பதிவை பாராட்டிய சந்திரசேகர், சுவாமி, சாரதா, செந்தில், மகேஷ் மற்றும் ராதாவிற்கு நன்றி.
சாரதா,
அன்னமிட்ட கைகளுக்கு பாடல் பற்றிய தங்கள் பதிவு மறக்க கூடியதா என்ன? அதை இரு மலர்கள் படத்தைப் பற்றிய எனது விமர்சனத்திலும் சொல்லியிருந்தேனே!
இந்த திரியிலும் மற்றும் இந்த ஹப்பிலும் பங்கு பெறும் அனைத்து நல் இதயங்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்!
அன்புடன்
-
அன்னையின் ஆணை - Part I
தயாரிப்பு - பாரகன் பிக்சர்ஸ்
கதை,திரைக்கதை, இயக்கம் - Ch.நாராயணமூர்த்தி
வெளியான நாள் - 04.07.1958
முதல் காட்சி ஒரு மருத்துவமனை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண். ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என சொல்லும் டாக்டர். காட்சி மாற சிறைச்சாலை. கைதி சங்கர் தன் மனைவியை காண துடியாய் துடிக்கிறான். அனுமதி இல்லை. எனவே சிறையிலிருந்து தப்பிக்கிறான். போலீஸ் துரத்துகிறது. இறுதியில் மருத்துவமனையின் வாசலில் அவனை சுட்டு விட, அப்போதுதான் பிறந்த குழந்தையை பார்த்து விட்டு, தன் மனைவி தேவகியிடம் தன் மேல் விழுந்த களங்கத்தை தன் மகன் மூலமாக துடைக்க வேண்டும் என்று உறுதி வாங்கிக் கொண்டு இறந்து போகிறான் சங்கர்.
ஊரில் பெரிய மனிதர் பரோபகாரம். வெளியில் பெரிய மனிதர் வேடம் போட்டாலும் நிழல் வேலைகளில் ஈடுபடுபவர் என்பது அடுத்த காட்சியில் பதிவு செய்யப்படுகிறது. தொழிலில் தன் பங்கை கேட்கும் கூட்டாளியை கூசாமல் சுட்டுக் கொள்கிறார் பரோபகாரம். அவருக்கு மனைவி இல்லை. ஒரே மகள் பிரேமா. அவருக்கு மிகுந்த செல்லம்.
கணவன் இறந்த பிறகு தையல் தொழில் செய்து தன் மகனை படிக்க வைக்கிறாள் தாய். மேற்படிப்பிற்காக மதுரை செல்ல வேண்டும் என்ற நிலையில் போக மாட்டேன் என்று சொல்லும் மகனை அவனின் தந்தைக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் அதற்காக போயே தீர வேண்டும் என்று தாய் தேவகி சொல்ல மகன் கணேஷ் ஒத்துக் கொண்டு படிக்க போகிறான்.
இப்போது கதையில் ஒரு புதிய பாத்திரம். பெயர் பாலு. ஒரு அலுமினிய தொழிற்சாலையில் லீகல் அட்வைசர் வேலையில் இருக்கும் அவர் டான்ஸ் பள்ளி நடத்தும் சுந்தரி வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். சுந்தரியின் அண்ணன் அவளுடன் வசிக்கிறான். பாலுதான் பரோபகாரத்திற்கு வக்கீல். அது மட்டுமல்ல கொடுக்கல் வாங்கல் மற்றும் நிழலான தொழிலில் பாலுவிற்கு பங்கும் இருக்கிறது. ஆனால் மற்றவர்களை அதட்டி மிரட்டுவது போல் பரோபகாரத்தால் பாலுவை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனிடம் அமைதியாக நடந்துக் கொள்கிறார். அவரின் மகள் பிரேமா மேல் ஒரு கண் வைக்கிறான் பாலு.
பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி படிப்பு படிக்கும் போது கல்லூரி விழாவில் சாம்ராட் அசோகன் வேடத்தில் நடிக்கிறான் கணேஷ். விழாவிற்கு தலைமை தாங்கும் செல்வந்தர் கருணாகரன் கணேஷ் நடிப்பை பார்த்து பெரிதும் மனம் மகிழ்ந்து தன் வீட்டிற்கு அழைக்கிறார். அவர் வீட்டிற்கு செல்லும் கணேஷ் அங்கே தன் தந்தை சங்கரின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்த்து யாரென்று கேட்க, அவர் சொல்லும் விவரங்கள் மூலமாக காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிய தன் தந்தையின் வீடுதான் அது என்றும், செல்வந்தர் கருணாகரன் தன் தாத்தா என்பதையும் புரிந்துக் கொண்டு அவருக்கும் அதை வெளிப்படுத்துகிறான். அவர், கணேஷின் தாயை அழைத்து வர சொல்ல தாயை பார்க்க வரும் மகனுக்கு தாயின் நோயாளி கோலம் அதிர்ச்சியளிக்கிறது. தான் அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டோம் என்று உணரும் அன்னை தன் கணவன் சிறைக்கு எப்படி சதி செய்து அனுப்பப்பட்டான் என்பதை விவரிக்கிறாள்.
பரோபகாரத்திடம் வேலை செய்யும் சங்கரை அலுவலக வேலையாக வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு தனியே இருக்கும் அவன் மனைவியை காண வரும் பரோபகாரம், தன்னை காப்பாற்றிக் கொள்ள கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டும் தேவகி,பயந்து ஓடும் பரோபகாரம், ஊரிலிருந்து வந்தவுடன் நடந்ததை அறிந்து ஆவேசமாக பரோபகாரத்தை காண செல்லும் சங்கர், அங்கே ஏற்படும் தள்ளுமுள்ளு, சண்டையை விலக்கி விட வரும் கூர்காவை தானே சுட்டு கொலை செய்து விட்டு பழியை சங்கர் மேல் போடும் பரோபகாரம், நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு, அதனிடையில் வரும் பிரசவம், சங்கர் தப்பிக்க முயற்சி செய்து போலிசின் குண்டடிப்பட்டு இறப்பது, இவை அனைத்தும் பிளாஷ் பாக்-ல் நம் கண் முன்னே விரிகின்றன. மரண தருவாயில் அவன் தந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவனை பழி வாங்கிய பிறகே அவன் எந்த சுகத்தையும் தேட வேண்டும் என்று ஆணையிட்டு விட்டு உயிர் துறக்கிறாள் அவன் அன்னை தேவகி.
இதற்கிடையில் பரோபகாரத்தின் பெண் பிரேமா படிப்பை முடித்து விடுகிறாள். அவள் தாயில்லாப் பெண் என்பது முதலிலே சொல்லப்பட்டு அதன் காரணமாக அவள் மேல் அதிக பாசம் வைத்திருக்கிறார் அவள் தந்தை.அந்த ஊருக்கு வந்து சேரும் கணேஷ் வழியில் வைத்து பிரேமாவை கண்டு அறிமுகமாகிறான். பரோபகாரத்தை சென்று சந்திக்கும் கணேஷ் தன்னை ஒரு பிசினஸ்மானாக அறிமுகப்படுத்திக் கொள்கிறான். பரோபகாரத்தின் வீடு ஒன்றை அவரிடமிருந்து வாங்குகிறான்.இது பாலுவிற்கு பிடிக்கவில்லை. அதை பரோபகாரத்திடம் வெளிப்படுத்துகிறான்.
பிரேமாவிற்கு கணேஷை பற்றி மனதுக்குள் ஒரு காதல் எண்ணம் ஏற்படுத்துகிறது. கணேஷிற்கும் விருப்பம் இருந்தாலும் அன்னைக்கு செய்த சத்தியம் மனதில் இருப்பதனால் அதை கணேஷ் நிராகரிப்பது போல் நடந்து கொள்கிறான்.
இதற்கிடையில் பாலுவிடம் மனதை பறி கொடுத்த சுந்தரி தன்னை கல்யாணம் செய்துக் கொள்ள கேட்க அவளை அடைவதற்காக அவன் ஒப்புக் கொண்டு விட்டு ஆனால் சிறிது காலம் கழிந்த பிறகே திருமணம் என்று சொல்லி விடுகிறான்.
தன் பங்கு பணத்தை பற்றி பரோபகாரத்திடம் பேசும் பாலு அவர் மகள் பிரேமாவை கல்யாணம் செய்து தரும்படி பரோபகாரத்திடம் வற்புறுத்த அவர் மறுக்கிறார். அவன் அவரின் நிஜ முகத்தை உலகத்திற்கு அம்பலப்படுத்தி விடுவேன் என மிரட்டுகிறான்.
இந்நிலையில் கணேஷ் பரோபகாரத்திடம் போன் செய்து மாலை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கிறான். தானே நேரில் வந்து அழைத்து செல்வதாகவும் சொல்கிறான். சொன்னது போல் வந்து கூட்டி செல்கிறான். அங்கே சங்கர் மற்றும் தேவகி புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடையும் பரோபகாரம் அங்கிருந்து உடனே கிளம்ப முயற்சி செய்ய கணேஷ் தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறான். அத்துடன் பரோபகாரத்தை தன் வீட்டில் உள்ள பாதாள சிறையில் அடைக்கிறான். கணேஷ் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு ஊமை பெண்ணிற்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும். அவள்தான் சாப்பாடு கொடுப்பது போன்ற வேலைகளை செய்வது. தன்னை விட்டு விடும்படி கெஞ்சும் பரோபகாரத்திடம் தன் தந்தை சிறையில் அனுபவித்த அதே 7 வருட தண்டனை காலத்தை அவரும் அனுபவித்தே தீர வேண்டும் என்று சொல்கிறான் கணேஷ்.
தந்தையை காணாமல் தேடுகிறாள் பிரேமா. அவளுக்கு உதவி செய்வதாக வாக்களிக்கிறான் பாலு. ஆனாலும் துப்பு ஒன்றும் கிடைக்கவில்லை. தந்தையின் டயரியை தற்செயலாக பார்க்கும் பிரேமா, அதில் மாலை கணேஷ் வீட்டிற்கு போகப் போவதாக எழுதி வைத்திருப்பதை படிக்கிறாள். உடனே கணேஷ் வீட்டிற்கு செல்கிறாள். அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் கணேஷ் அவள் தந்தை தன் வீட்டிற்கு வரவே இல்லை என்று சாதித்து விடுகிறான். ஏமாற்றத்துடன் திரும்ப செல்லும் அவள் மீது முதன் முறையாக கணேஷிற்கு காதலுடன் கூடிய ஈர்ப்பு வருகிறது.
தந்தையை காணாமல் தவிக்கும் பிரேமாவிடம் பாலு அவள் தந்தை சட்டத்திற்கு புறம்பாக பல வேலைகள் செய்ததாகவும் அதன் காரணமாக போலீஸ் அவரை தேடுவதாகவும் தன்னால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும், அதற்கு பதிலாக தன்னை பிரேமா கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.
கல்யாணத்தன்று விஷயம் தெரிந்து பாலுவை தடுக்கும் சுந்தரியையும் அவள் அண்ணனையும் உதாசீனப்படுத்தி விட்டு கல்யாணத்திற்கு செல்கிறான் பாலு. விவரம் அறிந்து சுந்தரியையும் கூட்டிக் கொண்டு கல்யாண வீட்டிற்கு வரும் கணேஷ் நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதே மேடையில் பாலு சுந்தரி திருமணத்தை நடத்தி வைக்கிறான்.
தந்தையையும் காணவில்லை, திருமணமும் நின்று போய் விட்டது என கலங்கும் பிரேமாவை திருமணம் செய்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது கணேஷிற்கு. திருமணம் முடிந்து தன் வீட்டிற்கு அவளை அழைத்து வந்தாலும் தாயிடம் செய்த சத்தியம் காரணமாக உறவை தவிர்க்கிறான். அவள் இப்போது இருக்கும் மனநிலையில் தன்னால் அவளுக்கு தொந்தரவு ஏற்பட கூடாது என்று அதற்கு காரணமும் சொல்கிறான்.
பாதாள சிறையில் பரோபகாரத்தை தினசரி சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கும் கணேஷ் அவர் மகளை திருமணம் செய்தது பற்றி சொல்லாமல் மறைத்து விடுகிறான். மகளைப் பார்க்க ஏங்குகிறார் தந்தை.
வீட்டில் உள்ள ஒரு மேஜையை தற்செயலாக பிரேமா திறக்க அதில் காணாமல் போன அன்று அவள் தந்தை அணிந்திருந்த சட்டை மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து விடுகிறாள். இதை பற்றி கணவன் வந்தவுடன் அவனை ஆத்திரத்தில் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க கணேஷ் அவளை அடித்து விடுகிறான்.
அந்த வீட்டிற்கு வந்தது முதல் ஏதோ ஒரு மர்மமான சூழல் தன்னை சுற்றி நிகழ்வது போல் அவளுக்கு தோன்றுகிறது. வீட்டிலேயே சில இடங்களுக்கு தான் செல்ல விடாமல் தடுக்கப்படுவது, ஊமை பெண்ணின் நடவடிக்கைகள் அவளுக்கு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. தன் கணவனை பிரேமா சந்தேகப்பட தொடங்குகிறாள். பூட்டி வைத்திருக்கும் அறைக்கு பக்கத்தில் அவள் செல்வதை பார்க்கும் ஊமை வேலைக்காரி சண்டை போட மிகுந்த கோவமும் வருத்தமும் அடைகிறாள் பிரேமா.
இதற்கிடையில் தான் அடைப்பட்டிருக்கும் சிறையிலிருந்து தப்பித்து செல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் பரோபகாரம் ஒரு நாள் தப்பித்து சென்று விடுகிறார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் கணேஷை தேடி போலீஸ் வருகிறது. தன் தந்தையை காணவில்லை என்றும் அதற்கு காரணம் தன் கணவன்தான் என்று பிரேமா புகார் கொடுத்ததன் பேரில் கணேஷ் கைது செய்யப்படுகிறான். அவன் மேல் பரோபகாரத்தை கொலை செய்ததாக வழக்கு தொடுக்கப்படுகிறது.
பரோபகாரத்தை கடத்தி சென்று அடைத்து வைத்ததை ஒப்புக் கொள்ளும் கணேஷ் ஆனால் அவரை கொலை செய்யவில்லை என்று வாதிடுகிறான்.
தப்பித்து சென்ற பரோபகாரம் என்ன ஆனார்? உயிருடன் இருக்கிறாரா? அவரது சொத்துக்களை அபகரிக்க யாரவது கடத்தினார்களா? இதன் பின்னணியில் பாலுவின் பங்கு என்ன? தன் கணவன் உண்மையிலே நிரபராதியா? இதற்கு பதில் தேட புறப்படுகிறாள் பிரேமா. அந்த கேள்விகளுக்கான விடை வெள்ளித்திரையில்.
(தொடரும்)
அன்புடன்
-
அன்னையின் ஆணை- Part II
இதை ஒரு one dimension movie என்றே சொல்லலாம். revenge - பழி வாங்குதல் என்ற ஒரு உணர்ச்சியின் மேல் எழுப்பப்பட்ட ஒரு கதை-திரைக்கதை. இன்றைக்கு 52 வருடங்களுக்கு முன்பு இப்படிபட்ட one dimensional படங்கள் வெகு அபூர்வமாய் மட்டுமே வந்திருக்கின்றன. அன்றைய சூழலில் பல்வேறு உணர்ச்சிகளையும் உள்ளடக்கிய கதைகள் அமைந்த திரைப்படங்களே வெளிவந்துக் கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு கதையை படமாக்கியதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படும் உயர் தட்டு ரசிகர்கள் பலருக்கும் பிடித்த நடிகர் திலகத்தின் படம் இது என்றே சொல்லுவார்கள்.[ஆனால் நமக்கு நேரிடையான அனுபவம் மூலமாக நடிகர் திலகம் என்பவரை இந்த கிளாஸ் மட்டுமல்ல மாஸ் ஆடியன்ஸும் ஒரு போல ரசிப்பார்கள் என்பது தெரியும்].
இந்தப் படத்தில் இரண்டு வேடங்கள். அப்பா சங்கர், மகன் கணேஷ். அப்பாவின் ரோல் ஒரு சிறப்பு தோற்றம் என்ற அளவிற்கு மட்டுமே என்ற போதிலும் அதிலும் வித்தியாசம் காட்டியிருப்பார் நடிகர் திலகம். மனைவியிடம் தவாறாக நடந்தது கொள்ள முயற்சித்த முதலாளியிடம் ஆத்திரத்துடன் வந்து பேசும் காட்சியிலே அது தெரியும்.
மகன் கணேஷ் கதாபாத்திரம் படத்தின் உயிர் நாடி. முதலில் கல்லூரி மாணவனாக வரும் போது நார்மலாக இருக்கும் அவர் தன் தாயின் தவிப்பையும் செய்யாத தவறுக்காக தந்தை அனுபவித்த சிறை தண்டனையைப் பற்றி தெரிந்துக் கொண்டவுடன் அவர் முகத்திலும் அவர் உடல் மொழியிலும் வரும் மாற்றம், அந்த பழி வாங்கும் உணர்வின் தீவிரத்தை இறுதி வரை maintain செய்வதை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். ரங்காராவ் யார் தன் mission என்ன என்று தெரிந்தவுடன் அவர் முதலில் ரங்கராவிடம் காட்டும் மரியாதை, அவருக்கே உரித்தான அந்த பணக்கார கெத்து, ரங்காராவ் தன் மகளை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லும் போது அதை நாசூக்காய் தவிர்ப்பது, தன் வீட்டிற்கு சென்றவுடன் முதலில் இயல்பாக பேசிக் கொண்டிருந்து விட்டு அதன் பிறகு தன் தாய் தந்தை படங்களை பார்த்தவுடன் மிரள ஆரம்பிக்கும் ரங்காராவிடம் அவர் பேசும் தொனி கொஞ்சம் கொஞ்சமாக மாறும் இடத்தை சொல்வதா, ரங்காராவை பாதாள சிறையில் ஒவ்வொரு முறை சந்திக்கும் போது அந்த கண்களில் தெரியும் வெறி, வார்த்தைகளில் தெறிக்கும் குரூரம், இறுதி வரை அடங்காத ஆத்திரம் இவற்றை வர்ணிப்பதா இவை எல்லாமே நடிகர் திலகத்தின் வித்தியாசமான முகத்தைக் காட்டும்.
ரங்காராவுடன் அவரது interaction இப்படியென்றால், சாவித்திரியுடனான அவரது அணுகுமுறை blow hot blow cold என்று சொல்லுவார்களே, அது போல் இருக்கும். அவர்களின் முதல் சந்திப்பிலே ரிப்பேரான கார் சரியாவதற்கு உதவி செய்து விட்டு கிளம்பி சென்ற பிறகு மீண்டும் கார் ஹார்ன் அடிக்க ரிவர்சில் வந்து என்னவென்று கேட்க தேங்க்ஸ் சொல்லத்தான் அழைத்தேன் என்று சாவித்திரி சொல்லி விட்டு காரை கிளப்பிக் கொண்டு போக, what a mischievous girl என்று புன்னகைத்து விட்டு போகும் நடிகர் திலகம், பூவை பறிக்காதே என்று எழுதி வைத்திருக்கும் செடியிலிருந்து சாவித்திரி பூவை பறிக்க, Are you not educated என்று கோவத்தை காட்டும் நடிகர் திலகம், தந்தையை தேடி தன் வீட்டிற்கு வரும் சாவித்திரியிடம் திகைப்பை மறைத்துக் கொண்டு பேசும் நடிகர் திலகம், திருமணம் தன்னால் நின்று விட்டதே என்ற கழிவிரக்கத்தில் கல்யாணம் செய்து கொண்டு பிறகு தாயிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்கும் மனைவி மேல் வரும் காதலுக்கும் நடுவில் சிக்கி மனப் போராட்டத்தை சந்திக்கும் நடிகர் திலகம், தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு செல்லும் நடிகர் திலகம், மறு நாள் டைனிங் டேபிளில் முகத்தில் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் ஏன் அப்படி செய்தேன் என்று விளக்கும் நடிகர் திலகம், தன் மனைவிதான் போலீசை வரவழைத்தது என்று தெரிந்தவுடன் போலீசார் முன்னால் மனைவியை ஒரு விதமான வெறுமையாக பார்க்கும் நடிகர் திலகம். இப்படி பல காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஏராளமானவர்களுக்கு பிடித்த அந்த காட்சியைப் பற்றி தனியாக சொல்ல வேண்டும். தன் தந்தை காணாமல் போன அன்று அணிந்திருந்த சட்டையை டிரெஸ்ஸிங் டேபிளின் ட்ராயரில் பார்த்ததும் சாவித்திரி என் அப்பா எங்கே அவரை என்ன செய்தீர்கள் என்று உரத்தக் குரலில் சத்தம் போட்டு சிவாஜியை பிடித்து உலுக்கி அவரது நெஞ்சில் விரல்களால் பிராண்டி விட ஒரு வார்த்தை கூட பேசாமல் வழிகின்ற ரத்தத்தை வாஷ் பேசினில் சென்று கழுவி விட்டு டர்க்கி டவலால் அதை துடைத்துக் கொண்டே திரும்பி வந்து சாவித்திரியை அதே டவலால் மாறி மாறி அடிப்பார். வலி தாங்காமலும் தன் தவறை உணர்ந்தும் சாவித்திரி மன்னிப்பு கேட்க அப்போதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் சாவித்திரியை அனைத்துக் கொள்ளும் நடிகர் திலகம். அற்புதமான காட்சி, அற்புதமான நடிப்பு!.
படத்தில் முதலில் இடம் பெறும் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம். நடிகர் திலகத்தின் அடுக்கு மொழி வசனம் பேசும் திறமையை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை என்றாலும் ரத கஜ துரக பதாதிகள் என்ற வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று பெரும்பாலோருக்கு சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம். இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் போர்க்களத்தில் சந்திக்கும் புத்த பிட்சுவைப் பார்த்ததும் ஆந்தைகளும் வௌவால்களும் அலைந்து திரியும் என்று வசனம் பேச ஆரம்பிக்கும் போது நடிகர் திலகத்தின் வலது கண் புருவம் மட்டும் மேலே ஏறி இறங்கும். வெகு இயல்பாக வரும் அந்த gesture-க்கு தியேட்டரில் செம அப்ளாஸ் விழும்.
நடிகையர் திலகத்தை பொறுத்த வரை ஒரு சில காட்சிகள் தவிர மற்ற காட்சிகளெல்லாம் சோகம் இல்லை மர்மம் என்ற அளவிலேயே அமைந்திருக்கும். திருமணம் முடிந்த பிறகு தன்னை சுற்றி என்னவோ நடக்கிறது என்று சந்தேகப்படும் காட்சிகளிலும், மேலே குறிப்பிட்ட நடிகர் திலகத்தை உலுக்கி பிராண்டும் காட்சியிலும் நடிகையர் திலகம் என்ற பெயருக்கு ஏற்றப்படி செய்திருப்பார். அவரது உடலும் பின்னாளில் அமைந்தது போல் பருமனாக மாறாமல் சரியான அமைப்பில் அமைந்திருந்ததனால் பாடல் காட்சிகளில் அவரை ரசிக்க முடிந்தது. படத்தின் இறுதிக் கட்டத்தில் நாயகன் சிறையில் இருக்க கிளைமாக்ஸ் நாயகியின் கைகளில் வரும். அதை சாவித்திரி குறைவின்றி செய்வார்.
வில்லன் பரோபகாரமாக ரங்காராவ். முதலில் வில்லன் பிறகு பரிதாபத்திற்கு உரிய கைதி. இரண்டையுமே ராங்கராவ் அவருக்கே உரித்த பாணியில் அழகுற செய்திருப்பார்.
இன்னொரு வில்லன் பாலுவாக நம்பியார். ஒரு படித்த வில்லன். பிற்காலத்தில் நாம் பார்த்த நம்பியராக இல்லாமல் சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் வேலை. எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு செய்திருப்பார். நடன பள்ளி நடத்தும் சுந்தரியாக எம்.என்.ராஜம் அவரது அண்ணனாக குலதெய்வம் ராஜகோபால். கணேஷ் வீட்டு ஊமை வேலைக்காரியாக டி.பி.முத்துலட்சுமி கவனம் ஈர்ப்பார்.
முரசொலி மாறன் வசனம். மாமாவின் மொழியாற்றல் இவருக்கு இல்லை எனபது கண்கூடு. இருப்பினும் சாம்ராட் அசோகன் நாடகத்தில் அடுக்கு மொழியை முயற்சி செய்து பார்த்திருப்பார். சிவாஜிக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் அப்போதே பிரபலமடைந்து விட்டது என்பது இந்த படத்தின் வசனம் மூலமாக தெரிகிறது. சாம்ராட் அசோகன் நாடகத்தை பாராட்டி பேசும்போது தலைமை விருந்தினர் சொல்லும் வசனம் " தம்பி கணேஷின் நடிப்பாற்றலை பார்க்கும் போது அவருக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் மிக பொருத்தம். அறிஞர் சொன்னது போல இவர் மார்லன் பிராண்டோ போல் நடிக்க முடியுமா என்று கேட்பதை விட முயற்சி செய்தால் மார்லன் பிராண்டோ வேண்டுமானால் இவரைப் போல் நடிக்க முயற்சிகலாம்"
பழி வாங்கும் உணர்வை மட்டும் வைத்துக் கொண்டு வசனம் எழுதுவது சற்று கடினமான காரியம். குறிப்பிட்ட சில [கல்லூரி நண்பர்கள் தலைமை தாங்க போகிறவர் வித்தியாசமானவர் என்று சொல்லும் போது நடிகர் திலகம் கிண்டலாக வித்தியாசமானவர் என்று சொல்லிக் கொண்டே கை அசைவினால் உடல் குண்டாக இருப்பது மாதிரியும், தலையில் இரண்டு கொம்புகள் முளைத்திருக்கும் என்று சைகை காட்டுவது, வீட்டிற்கு வரும் ரங்காராவிடம் சிவாஜி, டி.பி. முத்துலட்சுமியை அறிமுகப்படுத்தும் போது "பேர் என்ன தெரியுமோ தேன் மொழி"] இடங்களை தவிர நகைச்சுவைக்கும் வாய்ப்பில்லை.
பாடல்களை மருதகாசி, கு.மா.பாலசுப்ரமணியன், கா.மு.ஷெரிப்,
கோபாலகிருஷ்ணன் [கே.எஸ்.ஜி?] எழுதியிருக்க இசையமைப்பு எஸ்.எம். சுப்பையா நாயுடு. பாடல்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத படம். இருப்பினும் சில நல்ல பாடல்கள் இருக்கிறது.
1.நீயே கதி ஈஸ்வரி - பண்டரிபாய் மகன் சிறுவனாக இருக்கும் போது பாடும் பாடல்.
2. கொல்லாதே இது போலே - தெருவில் யாசகம் கேட்டு பாடிக் கொண்டே வரும் தந்தையும் மகளும் பாடும் பாடல்
3. அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை- படத்தில் மிக பிரபலமான பாடல்களில் ஒன்று. தாய் இறந்தவுடன் அதிர்ச்சியில் உறையும் நடிகர் திலகம் - பின்னணியில் அசரீரியாய் டி.எம்.எஸ். குரலில் ஒலிக்கும் பாடல். ஒரு சோக உணர்வை மனதில் விதைக்கும் பாடல்.
4. உள்ளம் நிலை மறந்து - சாவித்திரி சந்தோஷமாக இருக்கும் போது வரும் பாடல். பியானோ வாசித்துக் கொண்டே பாடுவது. சுசீலா பாடுவதற்கு கேட்க வேண்டுமா?
5. வாங்க வாங்க மாப்பிளை - நடிகர் திலகத்திற்கும் நடிகையர் திலகத்திற்கும் திருமணம் முடிந்தவுடன் ரிஷப்ஷன் போன்ற சடங்கில் நடன பெண்மணிகள் ஆடி பாடும் பாடல்.
6. கனவின் மாயா லோகத்திலே- படத்தின் ஹைலைட்டான பாடல் மற்றும் காட்சியமைப்பு. கதையின் போக்குப்படி காதல் டூயட் இடம் பெற வழி இல்லாததால் நடிகர் திலகத்தின் கற்பனையில் தோன்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும். நடிகர் திலகம் ஸ்டைல் சக்ரவர்த்தியாக பிய்த்து உதறியிருப்பார். இந்த படம் வெளி வந்த அதே 1958 ம் ஆண்டு வெளியான உத்தம புத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி பாடலுக்கு எப்படி நடனம் ஆடினாரோ அது போல [இதிலும் ஹீராலால் தான் நடனம்] இந்த பாடலிலும் ஸ்டெப்ஸ் அமர்க்களமாக இருக்கும். பாடலின் ஆரம்பத்திலிருந்து அவர் சின்னதாக சில ஸ்டைலிஷ் ஸ்டெப்ஸ் போட்டு விட்டு நிறுத்தி விடுவார். இன்னும் கொஞ்சம் அதை extend பண்ண மாட்டாரா என்று ஏங்க வைக்கும் நடிகர் திலகம் பாடல் முடியும் நேரம், சில ஸ்டைலிஷ் ஸ்டெப்ஸ் போட்டு நடந்து ஒரு கை கொண்டு சாவித்திரியின் ஒரு கரம் பற்றி ஒரு கால் மடக்கி முழங்கால் அமர்ந்து போஸ் கொடுக்கும் போது தியேட்டரே அதிர்ந்து போகும்.
படத்தை இப்போது பார்க்கும் போது சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய வெற்றியையும் மற்ற ஊர்களில் ஒரு ஆவேரேஜ் வெற்றியையும் பெற்றிருக்கும் என்றே தோன்றும். ஆனால் சென்னை மாநகரில் படம் 50 நாட்கள் படமாக போனது. காரணம், நடிகர் திலகத்தின் அடுத்த படமும் 50 -வது படமும் ஆன சாரங்கதாராவிற்காக மாறிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் சேலத்தில் 70 நாட்களும், நடிகர் திலகத்தின் படங்களுக்கு என்றும் பேராதரவு கொடுக்க கூடிய மதுரையில்,கல்பனா திரையரங்கில் 70 நாட்களும் ஓடியது இந்த படம். இந்த படத்தைப் பொறுத்த வரை எங்கள் மதுரையையும் மிஞ்சியது திருச்சி. திருச்சி வெலிங்டன் திரையரங்கில் 84 நாட்கள் ஓடிய அன்னையின் ஆணை, அடுத்த அரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டு 100 நாட்களை கடந்தது.
நடிகர் திலகத்தின் பட வரிசையில் என்றுமே சிறப்பாக பேசப்படும் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை என்பதில் மாற்று கருத்தில்லை.
அன்புடன்
இந்த படத்தின் விமர்சனத்தை நான் எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்ட அன்பு சகோதரர் செந்தில் அவர்களுக்கு இதை dedicate செய்கிறேன்.
-
அன்னையின் ஆணை
முதல் வெளியீடு : 4.7.1958
லேட்டஸ்ட் வெளியீடு : 4.11.2010 [தீபாவளி ரிலீஸ்]
ஆம்! "அன்னையின் ஆணை"யை மறுவெளியீடாக, தீபாவளி ரிலீஸாக இத்திரியில் வெளியிட்ட முரளி சாருக்கு முத்தாய்ப்பான நன்றிகள்!
வழக்கம் போல் இந்தத் திறனாய்வு / கண்ணோட்டமும் அருமை, அபாரம், அற்புதம்.
பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!
[49வது திரைக்காவியமான "அன்னையின் ஆணை", 49வது பக்கத்தில் இடம்பெற்று தொடங்கியது 'ஆண்டவன் கட்டளை'யாலோ!]
அன்புடன்,
பம்மலார்.
-
அனைவருக்கும் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
-
தீபாவளியும் நடிகர் திலகமும்
தமிழ்த் திரைப்பட வரலாற்றில்,
தீபாவளி வெளியீடுகளாக 42 திரைக்காவியங்களையும்,
அவற்றில் 19 காவியங்களை 100 நாட்களுக்கு மேல் ஓடிய மாபெரும் வெற்றிக் காவியங்களாகவும்
கொடுத்த பெருமை தீபாவளி ஹீரோவான நடிகர் திலகத்துக்கு மட்டுமே சொந்தம்!
விவரங்களுக்கு : http://mayyam.com/hub/viewtopic.php?...asc&start=1065
அன்புடன்,
பம்மலார்.
-
hi everybody wishing you a happy diwali