Quote:
திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.
இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது.