Some people are lucky to watch Slurred Gibberish in Dolby.
Printable View
Some people are lucky to watch Slurred Gibberish in Dolby.
துரோகிகள் இருந்தார்கள் ,எதிரிகள் இருந்தார்கள் ஆனால்
போட்டியாளர்கள் யாருமில்லாமல்
தமிழ் திரை உலகை ஆண்டுவந்த
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
122 வது திரைக்காவியம் தில்லானா மோகனாம்பாள்
வெளியான நாள் இன்று.
தில்லானா மோகனாம்பாள் 27 யூலை 1968.
http://oi64.tinypic.com/b4hrmx.jpg
http://oi67.tinypic.com/sz7kli.jpg
சிக்கல் சண்முகசுந்தரம்.
27.07.1968 அன்று முதன் முறையாக திரையரங்கில் காட்சியளித்து இன்றுடன் (27.07.2017) 49 வருடங்களை நிறைவு செய்து 50-வது பொன்விழா பிறந்த நாள் காணும் சிக்கலாரைப் பற்றிய ஒரு சின்ன பதிவு,
தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.
பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.
அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.
முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.
முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு [மோகனா வரும்வரை ட்ரெயின்களை தவற விடுவார்]. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.
சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.
திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.
படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.
நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.
தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியைப் பற்றி சொல்ல வேண்டும். அதில் வாசிப்பு மற்றும் கத்திகுத்து முதலியவற்றை விட்டு விடுவோம். கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்பதை எங்கள் இணையதள மய்யத்தில் பிரபு என்ற நண்பர் அருமையாக எழுதியிருக்கிறார். ஆடல் முடிந்து மோகனா மயங்கி சரிந்தவுடன் அவருக்கு தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சி. பேச்சு வராமல் தயங்கி வார்த்தைகளை தேடி பேசுவார். மேடையில் எத்தனையோ கச்சேரி செய்த சண்முகத்திற்கு மேடை கூச்சமா என்று கேட்டால் ஆமாம் என்றே சொல்ல வேண்டும். காரணம் சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது. ஆகவே அந்த தடுமாற்றம். அந்த பாத்திரத்தை எத்துனை உள்வாங்கி கொண்டிருந்தால் இப்படி ஒரு வெளிப்படுத்துதல் சாத்தியம்? யோசித்துப் பார்த்தால் பிரமிப்புதான்.
ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.
நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.
மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.
கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.
தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.
( நன்றி: திரு. முரளி ஸ்ரீநிவாஸ்.)
"அடி ஆத்தி..!
நீங்களும் வாசிச்சு நானும் வாசிக்கவா..?
ஆரு கேப்பாக..?"
இன்று 49 வயதைப் பூர்த்தி செய்து 50க்குள் நுழைகிற நமது பேரன்பைப் பெற்ற பெருங்காவியமான " தில்லானா மோகனாம்பாள்"
குறித்து அய்யா முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதிய பிறகு நானும் எழுத முனைந்த போது,
ஆச்சி அவர்கள் நீட்டி முழக்கும் இந்த வசனமே
என் நினைவில் வந்து கேலி செய்தது.
இருந்தாலும் ஆசை யாரை விட்டது?
*****
எனதபிமான தில்லானாவுக்கு கிட்டத்தட்ட என் வயது. சொல்லப் போனால் என்னைக் காட்டிலும் வயசு கம்மி.
தில்லானாவைப் பார்க்கும் போதெல்லாம், ஏன்..
நினைத்தாலே எனக்கு மிகவும் பொறாமையாகவும், கோபமாகவும் இருக்கும்.
பிறகென்ன?
ஒரு பொட்டு நரையில்லாமல், ஐம்பது தொடப் போகிற அயர்ச்சியில்லாமல், பிறந்த தினம் தொட்டே யாவரும் தலையில் தூக்கி
வைத்துக் கொண்டாடும் அந்த உன்னத நிலை விட்டு ஒரு அங்குலம் கூட கீழிறங்காது, எல்லாக்
காலங்களிலும் எல்லோருக்கும் பிடித்தமானமானவனாயிருக்க மனிதப் பிறப்புக்
கொண்டு பூமிக்கு வந்த என்னால் முடியவில்லை.
மகாகலைஞன் ஒருவரை நாயகனாகக் கொண்டு
உலகிற்கு வந்த ஒரு கலைப் படைப்பு அத்தனையும் கொண்டிருந்தால்.. சாதாரண மனிதன் எனக்கு பொறாமையும், கோபமும் வராதா?
*****
தில்லானா ஒரு மகா வியப்பு.
புத்தகக் கதைகள் திரைப்பட வடிவம் பெற்று, கணிசமாய் வென்ற வரலாறுகளும் உண்டு.
ஆனால், தில்லானா போன்று திரையைப் புத்தகமாக்கி எக்காலத்திலும் இனிமைப் பக்கங்கள் படபடக்க விரியும் புதினம் வேறொன்று இல்லவே இல்லை.
அமரர் திரு. எம். ஜி. ஆர் அவர்கள் தமிழனின் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகிலுள்ளோர் உணர்ந்து கொள்ள தில்லானாவை சிபாரிசு செய்ததை இன்றளவும்
சொல்லிச் சொல்லி வியக்கின்றோம்.
தில்லானாவுக்குப் பிறகு அப்படிச் சொல்லிக்
கொள்வதற்கு வேறு நடிகர்களின் படங்கள் இன்றளவும் வரவில்லை என்பது தில்லானாவுக்கான தனிப் பெரும் பெருமை. சிறப்பு.
*****
அமரர் அய்யா கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்
சிருஷ்டித்த சிக்கல் சண்முக சுந்தரம் என்கிறவன்
ஒரு தெய்வீக இசைக் கலைஞன். வித்யா கர்வத்தையும், முன் கோபத்தையும் நாதஸ்வரத்தைப் போல தன் கூடவே வைத்திருக்கிறவன்.
தன்மானம் சீண்டப்படுகிற நிமிஷங்களில் ஒரு வெடிகுண்டாய் வெடிக்கிறவன். அது, தன்னையே
தாக்கும் போது துடிக்கிறவன்.
அழகான பெண்ணைக் காதலிக்கிற சராசரிகள்
"அறை" தேடுகிற அவல பூமியில், சுடுசொல் வீசிய
காதலிக்கு "அறை" கொடுக்கிற வித்தியாசன்.
அவனது பலம் என்பது இசையாக...
அவனது பலவீனங்கள் என்பது அவனை நம் வெறுப்புகளோடு இறுக்கிப் பொருத்தும் பசையாக...
அவன்... முரடும், மென்மையும் கலந்து பிசைந்த ஆச்சரியக் கலவை.
அந்தக் கதாபாத்திரத்தின் இத்தகைய குணாதிசயங்கள் ஒரு நாவலுக்குப் பொருந்துபவை.
அவற்றை அப்படியே திரைப்பட வடிவத்திற்கு மாற்றும் போது, அன்றைய தேதியில் (இன்றைக்கும், என்றைக்கும் என்பது வேறு விஷயம்) உலகம் மெச்சும் மிகப் பிரபலமான கதாநாயகனான நம் நடிகர் திலகம், அவற்றைக்
கொஞ்சமும் சிதைக்காமல், குறைக்காமல், மாற்றாமல், திரிக்காமல்... அப்படியே ஏற்றுக் கொண்டு கலை செய்ததால்தான் தில்லானா
நிமிர்ந்து நிற்கிறது.
*****
அவசரத்திலும், ஆத்திரத்திலும் தன்னை இழந்து
நெருப்பாய்த் தஹிக்கிற குணமுள்ளவர், தனக்கு வித்தை சொல்லித் தந்த ஆசானுக்கருகே நின்று, இடுப்புக்குத் துண்டு கொடுக்கிற பவ்யம்... நடிகர்
திலகமன்றி வேறு யார் செய்தாலும் அழகு பெறாது.
போட்டிக்கழைக்கும் காதலியைக் கண்டிக்க வார்த்தையின்றி, மறுபடி மறுபடி படுதா விலக்கி
வந்து கோபங்காட்டும் நடிப்பு.. ஈரேழு பதினாலு
லோகத்திலும் யாருக்கும் வராது.
நலந்தானாவுக்கூடே பெரியவர் பாலையா நெகிழ்வாய் மடி தடவ.. கண்கள் கசிய நாதஸ்வரம் வாசிக்கிறவர் நிஜமான இசைக் கலைஞரில்லை..
நடிகரென்ற நிஜம் மறப்போமே? அந்தக் கலை மயக்கம், நடிகர் திலகம் படமன்றி வேறு படம் தராது.
*****
காலம் வென்று சிரிக்கும் கதையாய், பாடலாய், இசையாய், வசனமாய், பளீரென்ற படப் பதிவாய்,
மற்ற நடிப்பு ஜாம்பவான்களின் அற்புதப் பங்களிப்பாய், இயக்குநரின் நேர்த்தியாய்...
தில்லானாவுக்குள் எண்ணற்ற அற்புதங்கள்
நிறைந்து கிடக்கின்றன.
ஆனாலும்...
பட்டென்று தலை தூக்கிய கோபத்தால் பாதியிலேயே கச்சேரியை முடித்து விட்டு, சிவப்பு நிறப் பட்டு அங்கவஸ்திரத்தைத் தோளின் மூலைக்குச் சுண்டி விட்டு மேடை விட்டிறங்கும்
ஒரு வித்வானாகவே நம் இதயம் பதிந்த நடிகர் திலகம் தாண்டி தில்லானாவைச் சிந்திக்க முடியவில்லை... என்னால்.
அதனால்தான் முன்பொருமுறை எழுதினேன்...
" நடிகர் திலகம் நாதஸ்வரம் போல. அவரின்றி
இந்தப் படமே இல்லை."
*****
( முரளி சார்... ஜில் ஜில் ரமாமணி போல நானும்
வாசித்து முடித்து விட்டேன்... உங்களுக்கு
நாதஸ்வரமே மறந்து விட்டதா... இல்லைதானே?)
மென்மனம் கொண்ட செம்மல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
115 வது திரைக்காவியம் திருவருட் செல்வர்
வெளியான நாள் இன்று.
திருவருட் செல்வர் 28 யூலை 1967.
http://www.nadigarthilagam.com/papercuttings/tvc2.jpg
https://i.ytimg.com/vi/ibynDVPlkqM/hqdefault.jpg
http://4.bp.blogspot.com/_tiSJ19mepq...0/2egfcp11.jpg
http://starmusiq.info/wp-content/upl...lvar-Songs.jpg
திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)
அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.
பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திரத்தை Meisner பள்ளியில் பாற்பட்ட பூரணத்துவம் கொண்ட நடிப்பின் சாதனையாகும்.
கடைசி காட்சியில் உடலை இழுத்து அவர் அனைத்து புலன்களும் மங்கி தளர்வு பெற்ற நிலையிலும் ,காளத்தி செல்ல எத்தனிக்கும் காட்சி நம்மை வேறு லகுக்கே கூட்டி சென்று தன்னிலை மறக்க செய்யும்.
Thank you for mail Mr. Siva sir.
Sekar Parasuram
திரையில் தமிழ்ச் சான்றோர்கள் போல நடித்ததோடு மட்டுமின்றி நிஜத்திலும் அவர்களுக்கு விழாக்கள் எடுத்து கொண்டாடியவர் எங்கள் நடிகர் திலகம் மட்டுமே
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a6&oe=5A373BD1