எதிர்பார்த்தபடி ஆதி அம்மா காஞ்சனாவிடம் போய் தன் மனக்குமுறல்களைக் கொட்டுகிறான்.
‘கேட்டியாம்மா அவள் என்ன பண்ணியிருக்கான்னு?. என்னை எல்லார் முன்னாடியும் தலைகுனிய வைக்கிறதுக்காக என்னவெல்லாம் பண்ணுகிறாள் தெரியுமா? என்னால் தாங்க முடியலைம்மா’ ஆதியின் கூச்சலைக்கேட்ட காஞ்சனாவுக்கும் ரேகாவுக்கும் அந்த ‘அவள்’ யாரென்று புரியவில்லை. ஒருவேளை வழக்கம்போல அபியைப்பற்றித்தான் சொல்கிறானென்று நினைத்து ‘நீ யாரைப்பா சொல்றே?’ என்று கேட்க, ஆதியின் குமுறல் மேலும் வெடிக்கிறது. 'வேறு யார், உன் மருமகள் அந்த உஷாதான். நான் கட்டிய தாலியை தூக்கி எறிஞ்சதோடல்லாமல், என் எதிரியான அந்த தொல்காப்பியனோடு கைகோர்த்துக்கிட்டு சுத்துறாளாம். அதைப்பார்த்த பில்டர்ஸ் அசோஸியேஷன் மெம்பர்களெல்லாம் என்னைக் கையாலாகதவன், மனைவியை இப்படி ஊர்சுற்றவிட்டு விட்டு கண்டும் காணாமல் ஒதுங்கியிருப்பவன் என்றெல்லம் பேசுறாங்களாம். கிரி கேட்டுட்டு வந்து என்கிட்டே சொன்னான். அதைகேட்டதிலிருந்து எனக்கு எப்படியிருக்கு தெரியுமா?’ என்று வீடே ரெண்டுபடுவது போல் கத்த, அம்மா காஞ்சனா சமாதானம் சொல்கிறாள்.
‘அந்த கேடு கெட்டவள் எப்படிப்போனா உனக்கென்னடா?. அவளை நினைத்தெல்லாம் கவலைப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?. நீ மட்டும் சரின்னா இன்னைக்கே எத்தனையோ பணக்கார பெண்கள் உன்னைக் கல்யாணம் செய்ய போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க. கழிசடை ஒழிந்தாள் என்று நிம்மதியாக இருப்பதை விட்டுட்டு யாரோ எதையோ சொன்னதுக்காக நீ வருத்தம் அடையாதே’.
அம்மாவின் ஆறுதலான வார்த்தைகள் அவன் கோபத்தைதணிக்க, ‘ஸாரிம்மா, இதையெல்லாம் உங்க கிட்டே சொன்னதுனால என் மனப்பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு. இந்த கவலையில் நான் செய்ய வேண்டியதை மறந்திடுவேனோன்னு மட்டும் நினைக்காதீங்க. அந்த அபி நடத்தப்போகும் சஷ்டியப்த விழாவை நிச்சயம் நடக்க விட மாட்டேன்’ பேசிக்கொண்டே மாடிக்குபோகும் மகனை நிம்மதியோடு காஞ்சனா பார்க்கிறாள்.
ஆதி தேவராஜ பான்டியன், திருவேங்கடம் மூவரும் மதுவருந்திக்கொண்டிருக்க, கிரி அவர்களுக்கு ‘ஊற்றிக்கொடுக்கும்’ வேலையில் இருக்க, வழக்கம்போல திருவேங்கடத்தின் உளறல்கள். ‘நீங்க எம்.எல்.ஏ.ஆனதில் எங்க பாஸுக்கு என்ன லாபம்’ என்று கிரி கேட்க, ‘இதுவரை என்ன செய்யணும்னு ஆதி சொல்லவே இல்லையே, அது மட்டுமல்ல அவன் ஒருமுறை கூட என்னை சித்தப்பா என்று அழைத்ததும் இல்லை. சர் இப்ப என்ன செய்யணும்னு சொல்லு’ என்று திருப்பிக் கேட்க, ‘உஷாவின் கதையைச்சொல்ல கிரி முன்வரும்போது ஆதி அவனை அடக்குகிறான். உடனே கிரி பிளேட்டை மாற்றி, ‘அபி நடத்தப்போகும் விழாவை தடுக்க முடியுமா என்று கேட்க, அவரோ போதையில் உளறுகிறார். மொத்தத்தில் இரண்டாவது பகுதி சுத்த வேஸ்ட். நேரத்தைக்கடத்த தொல்ஸ் கையாளும் தந்திரம், நமக்கோ தலைவலி.
அபி அலுவலக மீட்டிங் அறையில் அமர்ந்து அழைப்பிதழ்களுக்கு பெயர் எழுதிக்கொண்டிருக்க, கிருஷ்ணன் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருகிறார். அப்போது கற்பகமும் சாரதாவும் அங்கு வர, அபி வேலையில் மும்முரமாக இருப்பதைக் கண்ட சாரதா, ‘கொஞ்ச வேலைகளை மற்றவர்களுக்கும் பிரித்துக்கொடுக்கலாமே. வெளி வேலைகளையெல்லாம் மனோவிடம் கொடுக்கக்கூடாதா?’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே மனோ, தன் மனைவி அனுவுடன் அங்கு நுழைகிறான் (விழாவை நிறுத்துவது பற்றிப் பேசும் நோக்கத்துடன்).
அவன் வந்த விவரம் தெரியாத அபி, மண்டபத்துக்கான அட்வான்ஸ் தொகையைக் கட்டிவிட்டு வருமாறு அவனிடம் நீட்ட, அவன் தயங்க, ‘ஏன் உனக்கு வேறு ஏதாவது வேலையிருக்கிறதா?’ என்று அபி கேட்க, அவன் பதில் சொல்லப்போகிறன் என்று பார்த்தால்.... அட அதற்குள் நேரம் முடிஞ்சு போச்சு.